ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் புரிந்து கொள்வதற்கான சில அடிப்படைகளை உருவாக்கும்விதமாக. Shakespeare and the goddess of complete being என்ற புத்தகத்தைக் கவிஞர் டெட் ஹியூஸ் எழுதியிருக்கிறார்.
இதில் ஷேக்ஸ்பியரின் ஆரம்பகாலக் கவிதைகளான வீனஸ் அண்ட் அடோனிஸ் மற்றும் தி ரேப் ஆஃப் லுக்ரேஸைக் கொண்டு அவரது நாடகங்களை ஆராய்ந்திருப்பது முக்கியமானது.
இந்தக் கவிதைகளை அவரது நாடகங்களின் திறவுக்கோலாக டெட் ஹியூஸ் மதிப்பிடுகிறார். இரண்டு வேறுபட்ட காதல்நிலைகளை சித்தரிக்கும் இந்தக் கவிதைகளிலிருந்து அவரது நாடகங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன என்றும் வாதிடுகிறார்.
ஷேக்ஸ்பியர் தனது காலகட்டத்தில் நடந்த மதமோதல்கள் மற்றும் அதிகாரப்போட்டியை அடையாளப்படுத்தும் விதமாகவே நாடகங்கள் எழுதியிருக்கிறார். அவரது நாடகங்களுக்கு எனப் பொதுவான சட்டகம் இருக்கிறது. அதைத் திட்டமிட்டு ஷேக்ஸ்பியர் உருவாக்கியிருக்கிறார் என்கிறார் ஹியூஸ்
ஷேக்ஸ்பியரின் காலத்தில் இங்கிலாந்தில் கத்தோலிக்கச் சபைக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. சீர்திருத்த சபை செல்வாக்குப் பெறத்துவங்கியது. இந்தச் சூழலில் தனது கத்தோலிக்க நிலைப்பாட்டினை தனது நாடகங்களில் ஷேக்ஸ்பியர் அழுத்தமாக வெளிப்படுத்துகிறார் எனும் ஹியூஸ் இதற்கான ஆதாரங்களை அவரது நாடகங்களிலிருந்து காட்டுகிறார்
ஷேக்ஸ்பியரின் கவிதைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட ஹியூஸ் அதன் புதிய பதிப்பு ஒன்றைத் தொகுத்து அறிமுகவுரை எழுதியிருக்கிறார். ஷேக்ஸ்பியரின் பெண் கதாபாத்திரங்களை ஆராயும் ஹியூஸ் காதலின் வடிவமாக ஒரு நிலையிலும் ஆறாக்கோபம் கொண்டவர்களாக, அதிகார ஆசைமிக்கவராக மறுநிலையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரட்டை நிலை அவரது நாடகங்களில் தொடர்ந்து காணப்படுகிறது என்பதை லேடி மேக்பெத் மற்றும் டெஸ்டிமோனா போன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு ஆராய்கிறார்
தேவதை, கன்னி, தாய் மற்றும் நரகத்தின் தெய்வம் என மாறுபட்ட நிலைகளில் பெண் சித்தரிக்கப்படுவதும், அந்தச் சக்தியால் கொல்லப்பட்ட பன்றி மற்றும் பாம்பு மற்றும் பல விலங்கு வடிவங்களையும் முன்வைத்து. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை விளக்குவதும் புதுமையானது.
டெட் ஹியூஸின் விமர்சனத்தை முழுமையாக ஏற்க முடியாது. ஆனால் அவர் தனது மதிப்பீடுகளை உருவாக்கும் விதமும் ஷேக்ஸ்பியரை ஆழ்ந்து வாசித்துப் புரிந்து கொண்டிருக்கும் விதமும் சிறப்பானது. குறிப்பாகத் தொன்மங்களை ஷேக்ஸ்பியர் கையாளும் விதம் பற்றிய பார்வை மிகவும் தனித்துவமானது. ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் ஒளித்து வைத்துள்ள ரகசியங்களைக் கண்டறிந்து சொல்வது போலவே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
Frank Kermode எழுதியுள்ள Shakespeare’s language இது போலவே ஷேக்ஸ்பியரின் மொழியை ஆராயும் முக்கியமான புத்தகமாகும்.
இந்த இரண்டு புத்தகங்களையும் சேர்த்து வாசிக்கும் போது ஷேக்ஸ்பியர் பற்றிய புதிய பார்வையை நாம் அடைய இயலும்
••