வில்ஹெம் ஹாமர்ஷோய் (Vilhelm Hammershøi. )டென்மார்க்கின் புகழ்பெற்ற ஓவியர். லண்டனில் இவரது ஓவியக்கண்காட்சி நடைபெற்ற போது அதன் தலைப்பாக The Poetry of Silence என வைத்திருந்தார்கள். மிகப் பொருத்தமான தலைப்பு.
பொருட்களால் நிரம்பிய நமது அன்றாட வாழ்க்கைக்கு மாற்றாகக் குறைவான பொருட்களுடன் வெற்றிடத்தின் அகன்ற கைகள் நம்மை அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே அவரது ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன.
இவரது ஓவியங்களில் முக்கியப் பொருளாகக் கதவும் சுவர்களும் இடம்பெறுகின்றன.
பெரும்பான்மை வீடுகளில் அலங்காரம் என்ற பெயரில் எதை எதையோ மாட்டியிருக்கிறார்கள். இந்த வெற்றுக்குப்பைகளை அகற்ற முடிந்தால் வீடு உண்மையான அழகுடன் ஒளிரும் என்கிறார். ஹாமர்ஷோய்
ஹாமர்ஷோய் ஓவியத்தில் காலியான அறைகளே முதன்மையாக இடம்பெறுகின்றன.. அகன்ற வெள்ளைச்சுவர்கள். திறந்து கிடக்கும் கதவுகள், அதன் ஓரத்தில் திரும்பி நிற்கும் கறுப்பு உடை அணிந்த இளம்பெண் என மினிமலிசக் கூறுகளுடன் ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
இவரது ஓவியத்திலுள்ள கதவுகளைக் காணும் போது இரண்டு மனிதர்கள் சந்தித்துக் கொண்டு உரையாடுவது போலிருக்கிறது. அதுவும் அந்த வெள்ளைக்கதவுகள் தன்னிடம் மறைக்க எதுவுமில்லை என்று காட்டும் மனதைப் போலவே வரையப்பட்டிருக்கின்றன.
ஜன்னல் வழியே பாயும் ஒளியும், சாம்பல் மற்றும் வெள்ளை நிழல்களும் தனிச்சிறப்பாகத் தோன்றுகின்றன.
எட்டு வயதிலே ஹாமர்ஷோய் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார். பின்பு ராயல் டேனிஷ் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் சேர்ந்து ஓவியம் பயின்றிருக்கிறார்.
அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்தவர் மனைவி இடா. சில ஓவியங்களில் அவரது தங்கையும் மாடலாக இருந்திருக்கிறார்.
இடா கடிதம் ஒன்றை வாசிக்கிறார் என்ற ஓவியத்தில் அவரது தோற்றம் மிகுந்த வசீகரத்துடன் வரையப்பட்டிருக்கிறது. படித்து முடிக்கப்படாத அந்தக் கடிதமும், திறந்து கிடக்கும் கதவும் காத்திருப்பின் அடையாளமாகத் தோன்றுகின்றன. கடிதத்தை வாசிக்கும் பெண்ணின் கூர்மையான நாசி அதிலுள்ள செய்தி அவர் விரும்பியது போல இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன.
இடாவின் கடிதம் வாசித்து முடிக்கப்படுவதில்லை. எங்கெல்லாம் நேசத்துடன் ஒரு பெண் காத்திருக்கிறாளோ அங்கே எல்லாம் இந்தக் காட்சி தொடர்கிறது. கவிதையில் இடம் பெறும் காட்சியைப் போலுள்ளது என்று கவிஞர் ரில்கே இதனைப் பாராட்டியிருக்கிறார்.
தனது சமகால ஒவியர்களைப் போலின்றி ஹாமர்ஷோய் எளிய தினசரி காட்சிகளை வரைவதற்கே பெரிதும் விரும்பினார். இதற்கு முக்கியக் காரணம் ஒவியர் வெர்மீர். அவரது ஒவியங்களில் அன்றாடக்காட்சிகளே பிரதானமாக வரையப்பட்டிருக்கின்றன. வீட்டுவேலை செய்யும் பெண்கள். சமையலறை காட்சிகள் என வீட்டிற்குள் நடக்கும் தினசரி நிகழ்வுகளை அசாதாரண நிகழ்வு போல வெர்மீர் மாற்றிக் காட்டுகிறார். பால்குவளையை ஏந்திய வெர்மீரின் பெண்ணும் ஹாமர்ஷோய் ஓவியத்தில் வரும் இடாவும் நெருக்கமானவர்களே.
ஹாமர்ஷோய் சாம்பல் நிறம் மற்றும் கருமை, வெள்ளை, இளநீலம் போன்ற வண்ணங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்
இவரது ஒவியங்களால் கவரப்பட்ட கவிஞர் ரில்கே ஹாமர்ஷோய் பற்றி ஒரு புத்தகம் எழுதும் நோக்கத்துடன் கோபன்ஹேகனுக்குப் பயணம் செய்தார். ஹாமர்ஷோய் அதனை விரும்பாத காரணத்தால் அந்தத் திட்டம் நடைபெறவில்லை.
பொருட்களால் உருவாக்கப்பட்டதில்லை நமது வாழ்க்கை. இவற்றுக்கு அப்பால் எளிமையும் நேரடித்தன்மையும் பிரகாசமும் கொண்டதாக வாழ்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை ஹாமர்ஷோய் ஓவியங்கள் கற்றுத் தருகின்றன என்கிறார் ரில்கே
ஹாமர்ஷோய் ஓவியங்களில் எப்போதும் சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் பெண்கள் ஆடை அணிந்திருக்கிறார்கள். அவர்களின் பின் புறத்தோற்றத்தையே வரைந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பின்னால் உள்ள சுவரும் பாதித் திறந்த கதவும், சரிந்து விழும் ஒளியும் ஓவியத்தை கனவுக்காட்சி போகலாக்குகின்றன.
வெற்றுச் சுவர்களை வரைவதன் வழியே தனிமையை அடையாளப்படுத்துகிறார். தனிமையின் காட்சி ரூபங்களே அவரது ஓவியங்கள். ஹாமர்ஷோய் வரைந்த வீடுகளில் அமைதி ததும்புகிறது. அது வெளிப்படுத்தப்படாத அன்பினையே அடையாளப்படுத்துகிறது
வீடு என்பது நிரந்தரமானதில்லை. அது தற்காலிகமான பாதுகாப்பின் அடையாளம் மட்டுமே என்கிறார்.
தனது வசதிக்காகப் பொருட்களைச் சேகரிக்கத் துவங்கி மனிதன் மெல்லத் தானே ஒரு பொருள் போலாகி விடுகிறான். உபயோகம் என்ற காரணம் மட்டுமே பொருட்களை உரிமையாக்கிக் கொள்ள வைக்கிறது. உபயோகமில்லாத பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. கைவிடப்படுகின்றன. இந்த நிலை மனிதனுக்கும் ஏற்படுகிறது. மனித உறவு என்பது இது போல உபயோகத்தால் உருவாக்கப்பட்டதில்லை. அது ஆழமானது. புதிரானது எனும் ஹாமர்ஷோய் இதை வெளிப்படுத்தும் விதமாகவே பெண்களின் முகத்தை நேரடியாகச் சித்தரிப்பதில்லை.
அனுமதிக்கப்படுவது, அனுமதிக்கப்படாதது என இரண்டு நிலைகளை கதவுகள் உணர்த்துகின்றன. இடா கடிதம் வாசிக்கும் ஓவியத்தில் அவள் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதன் வழியே அனுமதியைத் தருகிறாள்.
Støvkornenes dans i solstrålerne ஓவியத்தில் ஒளியின் நடனத்தை வரைந்திருக்கிறார். காலியான அறையில் ஜன்னல் வழியே ஒளியே பாய்கிறது, அழகான காட்சியது. இந்த ஒளி நமது இருப்பைத் தாண்டி உலகம் இயங்கிக் கொண்டேயிருக்கும் என்பதன் அடையாளம். பாயுமொளி நம்மைப் பரவசப்படுத்துகிறது. தொலைவும் அண்மையும் ஒன்று கலக்கும் இந்தத் தருணத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஹாமர்ஷோய்
கவிதையில் இடம் பெறும் வீடுகளில் குறைவான பொருட்களே இடம்பெறுகின்றன. உரைநடையைப் போலக் கவிதை எல்லாவற்றையும் சித்தரிக்க விரும்புவதில்லை. அது தேவையானவற்றைக் குறைவான சொற்களைக் கொண்டு காட்சிப்படுத்துகிறது. கவிதையில் இடம்பெறும் கண்ணாடி வெறும் கண்ணாடி மட்டுமில்லை. கவிதையில் இடம்பெறும் பூக்குவளை காலத்தின் அடையாளமாகிறது. கவிதையில் இடம்பெறும் படிக்கட்டுகள் வேறு எதையோ சொல்கின்றன. இந்த அனுபவத்தைத் தான் ஹாமர்ஷோய் தனது ஓவியங்களின் வழியாக உணர்த்துகிறார்.
கவிதை வாசிப்பதைப் போலவே அந்தரங்கமாக, ஆழமாக, திரும்பத் திரும்ப நெருக்கமாவதன் வழியே இவரது ஓவியங்களின் தனித்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
••