ஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்

கடந்த வாரத்தில் எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே பற்றிய இரண்டு திரைப்படங்களைப் பார்த்தேன்.

ஒன்று அவரது காதலைப் பற்றியது. மற்றொன்று அவரது நட்பை பற்றியது.

எழுத்தாளர்களில் ஹெமிவே பற்றிய அதிகமான நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கூடMrs. Hemingway என்ற நாவல் அவரது முதல் மனைவியைப் பற்றி வெளியாகியுள்ளது.

PAPA: HEMINGWAY IN CUBA என்ற திரைப்படம் ஹெமிங்வே கியூபாவில் வசித்த போது அவருக்கும் இளம் பத்திரிக்கையாளரான எட் மைர்ஸிற்கும் உருவான நட்பைப் பற்றியது. இரண்டும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கபட்ட திரைப்படங்களே. Denne Bart Petitclerc என்ற பத்திரிக்கையாளர் ஹெமிங்வேயுடன் மிகுந்த நட்புடன் பழகினார். அந்த நினைவுகளே இப்படத்தின் ஆதாரம்.

மியாமி குளோ பத்திரிக்கையில் பணியாற்றும் எட் மேயர்ஸ் ஹெமிங்வேயின் தீவிர ரசிகன். அநாதை இல்லத்தில் வளர்ந்தவன். பத்திரிக்கை அலுவலகத்தில் தனது எழுதும் மேஜையில் எப்போதும் ஹெமிங்வேயின் புத்தகம் ஒன்றை துணையாக வைத்திருக்கிறான்.

தனது நேசத்தை ஹெமிங்வேயிற்குத் தெரியப்படுத்தும் விதமாக ஒரு கடிதம் எழுதுகிறான் எட் மேயர்ஸ். ஆனால் அதை அனுப்புவதற்குத் தயக்கம் காட்டுகிறான். ஒரு நாள் அவனுடன் வேலை செய்யும் இளம்பெண் டெபி அந்தக் கடிதத்தை ஹெமிங்வேயிற்கு ரகசியமாக அனுப்பி விடுகிறாள். எதிர்பாரத விதமாக ஹெமிங்வேயிடமிருந்து பதில் கடிதம் வருகிறது.

எட் மேயர்ஸின் அன்பு தன்னை உத்வேகப்படுத்துவதாக நன்றி தெரிவித்து ஹெமிங்வே பதில் எழுதியிருக்கிறார். அவனால் நம்ப முடியவில்லை. இதைத் தொடர்ந்து மறுநாள் அவனது அலுவலகத்திற்கு ஒரு போன் வருகிறது. மறுமுனையில் ஹெமிங்வே பேசுகிறார். எட் மேயர்ஸால் பேசமுடியவில்லை. தடுமாறுகிறான். தொண்டை அடைத்துக் கொள்கிறது.

படத்தில் வரும் அற்புதமான காட்சியது. தன்னைச் சமாளித்துக் கொண்டு அவன் ஹெமிங்வேயிடம் அவரை எவ்வளவு பிடிக்கும் என்பதைப் பற்றித் தடுமாறியபடியே சொல்கிறான்.

கியூபாவிற்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி அழைப்பு விடுக்கிறார் ஹெமிங்வே. அவனது நீண்டநாள் கனவது.

ஆசையாகக் கியூபா கிளம்பிப் போகிறான். ஹெமிங்வே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார். படகில் ஹெமிங்வேயை சந்திக்கிறான். மீன்பிடிப்பது எப்படி என அவர் எட் மேயர்ஸிற்குக் கற்று தருகிறார். பலசாலியாக, பெருங்குடிகாரனாக, கொண்டாட்டத்தை விரும்பும் மனிதராக, சிறந்த நண்பராக என ஹெமிங்வேயின் பன்முகத்தை அறிகிறான் எட்மேயர்ஸ்.

அவனைத் தனது வீட்டிற்குள் அழைத்துப் போகிறார் ஹெமிங்வே. ஆடம்பர மாளிகை. அங்கே அவரது பழைய புகைப்படங்களைக் கண்டு வியக்கிறான்.

அவன் கண்முன்னால் நீச்சல் குளத்தில் நிர்வாணமாக நீந்திக் குளிக்கிறார் ஹெமிங்வேயின் நான்காவது மனைவி மேரி. கூடவே தானும் நிர்வாணமாக நீந்துகிறார் ஹெமிங்வே. அந்த நிமிசம் தான் வேற்று மனிதன் இல்லை என உணருகிறான் எட். நீந்தும் முரட்டு மனிதனை வியப்போடு பார்த்தபடியே நிற்கிறான்.

வீட்டில் இரவு உணவின் போது அவன் எழுதிய கட்டுரைகளைப் பாராட்டுகிறார். நண்பர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்கிறார்.

எட் மேயர்ஸிற்கும் புதிய உறவு துவங்குகிறது. அதன் பிறகு அடிக்கடி அவன் ஹெமிங்வேயை தேடி கியூபா வர ஆரம்பிக்கிறான். ஹெமிங்வேயின் பிறந்தநாளை நண்பர்கள் ஒன்று கூடி சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

கியூபாவில் அரசியல் மாற்றம் உருவாக ஆரம்பிக்கிறது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் காஸ்ட்ரோவின் புரட்சிபடைகள் அதிபர் மாளிகையைத் தாக்குகின்றன. அந்தத் தருணத்தில் நேரடியாக அதைப் பார்வையிட ஹெமிங்வேயும் எட் மேயர்ஸிற்கும் செல்கிறார்கள்.

அக் காட்சியில் பத்திரிக்கையாளராக ஹெமிங்வே எவ்வளவு துணிச்சல் மிக்கவர் என்பது சிறப்பாக வெளிப்படுகிறது. இன்னொரு புறம் காஸ்ட்ரோவின் மீது அவருக்கு இருந்த பற்றுதலும் அடையாளப்படுத்தபடுகிறது. புரட்சிகரப் போராளிகள் கண்முன்னே கொல்லப்படுவதைக் கண்ட ஹெமிங்வே துடித்துப் போகிறார். அவர்களுக்காக மனம் வருந்துகிறார்

கியூபாவின் அரசியல் மாற்றங்கள் குறித்து எட்மேயர்ஸ் தனது பத்திரிக்கையில் தொடர்கட்டுரைகள் எழுதுகிறான். இதன் காரணமாக FBI அவனைப் பயன்படுத்திக் கியூபாவில் உளவு பார்க்க முயற்சிக்கிறது.

பெரும்புகழும் செல்வமும் ஆடம்பர வாழ்வும் கொண்ட ஹெமிங்வே மனச்சோர்வின் காரணமாக எழுத முடியாத நிலையில் இருக்கிறார். எவ்வளவு முயன்றும் அவரால் புதிதாக ஒரு வரி கூட எழுத முடியவில்லை.

புகழ் தன்னை வேதனைப்படுத்துகிறது. தன்னை ஒரு காட்சிப்பொருளாக மாற்றிவிட்டது. அதுவும் நோபல் பரிசு போன்ற பரிசுகள் எழுத்தாளனின் தனிமையை , சுதந்திரத்தை விழுங்ககூடியவை என்று கத்துகிறார்.

எங்கே போனாலும் அவரை வாசகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். கையெழுத்துக் கேட்கிறார்கள். தனது அகநெருக்கடியில் இருந்து மீள்வதற்காக ஹெமிங்வே குடித்துக் கொண்டேயிருக்கிறார். எழுத முடியாத ஒரு வாழ்க்கை தனக்கு எதற்காக எனத் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். இதை அறிந்த அவரது மனைவி எட் மேயர்ஸ் மூலம் அவரது கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறாள். இதனால் மனைவிக்கும் ஹெமிங்வேயிற்கும் சண்டை வருகிறது.

இதில் தலையிடும் எட் மேயர்ஸை அடித்துவிடுகிறார் ஹெமிங்வே. பின்பு தன்னை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்கிறார். படத்தின் மிக அழகான காட்சிகளில் அதுவும் ஒன்று

தன்னை ஹெமிங்வே அடித்துவிட்டார் என்பதால் மழையில் நனைந்தபடியே அவரது வீட்டுபடியில் போய் அமர்கிறான் எட் மேயர்ஸ். தனது தவற்றை உணர்ந்து தானும் மழையில் வந்து அமருகிறார் ஹெமிங்வே. அவனிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கிறார். ஒரு தந்தையிடம் பாசம் கொண்ட மகனைப் போலவே எட் மேயர்ஸ் நடந்து கொள்கிறான்.

கியூபாவில் புரட்சியாளர்களுக்கு உதவி செய்வதாக ஹெமிங்வேயை கைது செய்யச் சதி நடக்கிறது. அதில் எப்படித் தப்பிக்கிறார் என்பதோடு படம் நிறைவு பெறுகிறது

படத்தின் முக்கியக் காட்சிகள் யாவும் கியூபாவிலே படமாக்கபட்டுள்ளன. அதிலும் ஹெமிங்வே வசித்த வீடு இப்போது நினைவில்லமாக மாற்றப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிலே படத்தின் முக்கியக் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். கியூபாவில் ஹெமிங்வே செல்லும் மதுவிடுதிகள், உணவகங்கள் யாவும் உண்மையாக அவர் சென்று வந்த இடங்களே.

நோபல் பரிசு பெற்ற ஒரு எழுத்தாளருக்கும் இளம் பத்திரிக்கையாளருக்குமான நட்பு மிக அழகாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

தனக்கு எழுத கற்றுத்தந்த ஆசான் அவரே எனப் பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கொள்கிறான் எட். அதைக் கேட்ட ஹெமிங்வேயின் மனைவி வியப்படைகிறாள். அக்காட்சியில் ஹெமிங்வே அடையும் சந்தோஷம் அவரது கண்களில் பீறிடுகிறது

சாகசகாரனாக வாழ்க்கையைச் சந்தித்த ஹெமிங்வே 1961ல் மனவெறுமையில் தற்கொலை செய்து கொண்டார்.. ஹெமிங்வே குடும்பத்துடன் எட் மேயர்ஸ் இறுதிவரை நட்போடு இருந்ததாகப் படத்தின் கடைசிக் காட்சி தெரிவிக்கிறது.

எழுத்தாளனாக உலகம் வியந்து போற்றும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை. கோபதாபங்களை. வெறுமையை. சந்தோஷத்தை, துயரத்தை படம் அழகாக விளக்குகிறது

ஒரு காட்சியில் குளியல் அறையில் மனச்சோர்வுடன், கவலையுடன் ஹெமிங்வே ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறார். அதைக் காணும் போது பெயரும் புகழும் பணமும் இருந்துவிட்டால் மட்டும் சந்தோஷம் வந்துவிடாது என்பது துல்லியமாகப் புரிகிறது.

Bob Yari இயக்கியுள்ள இப்படத்தில் ஹெமிங்வேயாக நடித்திருப்பவர் Adrian Sparks. ஹெமிங்வேயின் உடல்மொழியை, உணர்ச்சி வெளிப்பாட்டினை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

Hemingway & Gellhorn என்ற படம் மார்த்தா கெல்ஹார்ன் என்ற பெண் பத்திரிக்கையாளருடன் ஹெமிங்வேயிற்கும் ஏற்பட்ட காதலைக் கூறுகிறது.

1936ல் ஒரு மதுவிடுதியில் தற்செயாலக ஹெமிங்வேயை சந்திக்கிறார் மார்த்தா, தான் பிடித்த பெரிய மீன் ஒன்றுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஹெமிங்வே அந்த மீனை முத்தமிடுகிறார். அதை வியப்போடு காணும் மார்த்தா ஹெமிங்வேயிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். அவளது அழகில் மயங்கிய ஹெமிங்வே அவளைத் தனது வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார்.

ஒரு நாள் மார்த்தா அவரது வீட்டிற்கு வருகிறாள். அங்கே ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் குறித்த ஆவணப்படம் ஒன்று திரையிடப்படுகிறது. இயக்குனர் ஜோரிஸ் இவான்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறார்.

அவர் ஸ்பெயினுக்கு வரும்படி ஹெமிங்வேயை அழைக்கிறார். உள்நாட்டு போரை பார்வையிட மார்த்தாவும் அழைக்கபடுகிறார். அவர்கள் ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

அந்தப் பயணத்தில் ஒரே விடுதியில் தங்குகிறார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கம் உருவாகிறது.

இரண்டு திருமணங்கள் செய்திருந்த ஹெமிங்வே தனது இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மார்த்தாவை 1940ல் திருமணம் செய்து கொள்கிறார். 1945 வரை இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். பத்திரிக்கையாளராக உலகம் முழுவதும் சுற்றுகிறாள் மார்த்தா.

1945ல் மார்த்தாவையும் ஹெமிங்வே விவாகரத்து செய்துவிட்டு மேரி என்ற இளம்பெண்ணைப் புதிதாகத் திருமணம் செய்து கொள்கிறார்

பத்திரிக்கையாளராக ஹெமிங்வே எப்படிப் புரட்சிகர இயக்கங்களுடன் நெருக்கம் கொண்டிருந்தார். களத்தில் அவரது செயல்பாடு எப்படியிருந்தது என்பதையே படம் பிரதானமாக விவரிக்கிறது. அதே நேரம் ஒரு காதலராக அவரது வேட்கையும் காமமும் அவரை வழிநடத்திய நிகழ்வுகளும் அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன.

கியூபாவில் ஹெமிங்வே படத்தோடு ஒப்பிட்டால் இது ஒரு சராசரியான படமே. கியூபாவில் ஹெமிங்வே படத்தில் ஹெமிங்வேயின் மனநிலை துல்லியமாக வெளிப்படுத்தபட்டிருந்தது. இதிலோ மார்த்தாவே முதன்மையாகச் சித்தரிக்கபடுகிறார். Philip Kaufman இயக்கியுள்ள இப்படம் இரண்டரை மணி நேரம் ஒடக்கூடியது. நிகோல் கிட்மென் மார்த்தாவாக நடித்திருக்கிறார். அவரது அழகு மயக்ககூடியது.

இரண்டு படங்களிலும் காணப்படும் பொது அம்சம் தனது நண்பர்களை ஹெமிங்வே நடத்தும் விதம். அவர்களுக்கு உதவி செய்யும் முறை. துணிச்சலாக யுத்த களத்தைத் தேடிச் செல்லும் தைரியம். பெண்களிடம் தனது ஆசைகளை நேரடியாக வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை என ஹெமிங்வேயின் ஆளுமை சிறப்பாக அடையாளப்படுத்தபட்டிருக்கிறது.

கியூபாவில் ஹெமிங்வே படத்தின் ஒரு காட்சியில் எட் மேயர்ஸிடம் ஒரு நம்பர் சொல்லு எனக் கேட்கிறார் ஹெமிங்வே. ஆறு என்று சொல்கிறான் எட்.

உடனே ஒரு காகிதத்தில் ஆறு எழுத்தில் ஒரு கதையை எழுதிக் காட்டுகிறார். திரைக்கதையில் இப்படி ஹெமிங்வேயின் வாழ்வில் நடந்தவற்றைக் கச்சிதமாகப் பொருத்தியிருந்தது மகிழ்ச்சி அளித்தது.

ஹெமிங்வேயின் வாழ்க்கையோடு ஒப்பிட்டால் வேறு எந்த எழுத்தாளருக்கும் இது போன்ற கொண்டாட்டமான, சாகசமான, வாழ்க்கை அமைந்திருக்காது. அதே நேரம் இந்தக் கொண்டாட்டங்களுக்கு , சாகசங்களுக்கு அப்பால் துயருற்ற மனிதராக, வெறுமையில் உழலும் மனிதராக ஹெமிங்வே வாழ்ந்திருக்கிறார். அவரது மிதமிஞ்சிய குடி. சாகசம் யாவும் தனது அகத்துயிரிலிருந்து விடுபட முடியாத தத்தளிப்பே எனப் புரியும் போது புகழும் செல்வமும் மட்டுமே ஒருவனை மகிழ்ச்சிப்படுத்திவிடாது என்பது தெளிவாகப் புரிகிறது.

எழுத்தாளர்கள் தன் எழுத்தின் வழியாக மட்டுமின்றி வாழ்வின் மூலமும் கற்றுத் தந்தபடி தானிருக்கிறார்கள்

••

0Shares
0