ஹோமரின் முடிசூட்டுவிழா

கிரேக்க கவிஞர் ஹோமருக்கு முடிசூட்டு விழா நடப்பதாக ஓவியர் ஜீன் அகஸ்டே டொமினிக் இங்க்ரெஸ் 1827ல் The Apotheosis of Homer என்ற ஓவியத்தை வரைந்திருக்கிறார்.

நிகரற்ற கிரேக்க இதிகாசங்களை எழுதிய ஹோமர் பார்வையற்றவர். ஓவியத்தின் மையமாக அவர் அமர்ந்திருக்கிறார். உலகின் சிறந்த கவிகள். ஓவியர்கள், சிற்பிகள் நாடக ஆசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அவரைச் சுற்றிலும் இடம்பெற்றிருக்கிறார்கள். அதில் ஒருவராக ஷேக்ஸ்பியர் இடம் பெற்றிருக்கிறார். ஹோமருக்கு இணையான படைப்பாளி என்பதால் அவரையும் இங்க்ரெஸ் வரைந்திருக்கிறார்.

தாந்தே, ஈசாப். மோலியர், ஹோரேஸ் விர்ஜில் ரபேல். சாபோ சோஃபோகிள்ஸ் எஸ்கிலஸ் ஹெரோடோடஸ் பிண்டார் சாக்ரடீஸ் பிளாட்டோ அரிஸ்டாட்டில் மைக்கேலேஞ்சலோ மொசார்ட் எனப் பலரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அவரது இலியட் ஓடிஸி என்ற இரண்டு இதிகாசங்களும் இரண்டு பெண்களாக அவரது காலடியில் அமர்ந்திருக்கிறார்கள். வரலாற்றறிஞா் ஹெரோடோடஸ் தூபத்தை எரிக்கிறார். வானுலகின் தேவதை முடிசூட்டுகிறது.

ஹோமரின் வாழ்க்கையைப் பற்றி விரிவான பதிவுகள் கிடைக்கவில்லை. ஹெரோடோடஸ், ஹோமர் தனது காலத்திற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்

ஹோமர் எப்போதும் வயதானவராகவே சித்தரிக்கபடுகிறார். அடர்ந்த தாடியுடன் வளைந்த முதுகுடனே காணப்படுகிறார்.  ஹோமரின் தோற்றம் பொதுவாக புத்திசாலித்தனம், நிதானம், உயர்வான ஞானம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. , ஹோமர் பார்வையற்றவர் அல்ல. பழைய கிரேக்க ஆதாரங்களில் அப்படி குறிப்பிடப்படவில்லை.  துசிடிடிஸ் ஹோமரின் பார்வையின்மை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பிற்காலதில் இப்படியான ஒரு கதை உருவானது என்கிறார்கள். கிமு5ம் நூற்றாண்டில் ஹோமர் உருவம் முதன்முறையாக சித்தரிக்கபட்டிருக்கிறது. அதில் பார்வையற்றவராகவே ஹோமர் காணப்படுகிறார்.

ரபேல் வரைந்த School of Athens ஓவியத்தின் பாதிப்பில் இங்க்ரெஸ் இதனை உருவாக்கியிருக்கிறார். ஆகவே தான் ரபேலும் ஹோமரைப் பாராட்டும் கலைஞர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கிறார். ஏதென்ஸ் பள்ளி ஓவியத்தின் மையத்தில் பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் உள்ளனர்.

தனக்கு முடிசூட்டப்படுவது குறித்த மகிழ்ச்சி ஹோமரிடம் காணப்படவில்லை. ஆனால் அவரைச் சுற்றிய கலைஞர்கள் மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள். ஹோமரின் தாக்கம் அவரது காலகட்டத்தில் மட்டுமின்றி உலக அளவில் இன்றும் தொடர்கிறது.

அப்போதியோசிஸ் விழாவின் மூலம் ஹோமரும் கடவுளாக மாறுகிறார். கிரேக்கத்தில் இது போன்ற விழாக்கள் மன்னர்களுக்கு நடப்பது வழக்கம். இங்கே மகா கவியான ஹோமருக்கு முடிசூட்டிக் கடவுளாக்குகிறார்கள்..

இந்த ஓவியத்திலுள்ள ஹோமரின் பாதங்களைப் பாருங்கள். மடங்கிய விரல்களும் வெடித்த பாதமும் நகங்களின் நேர்த்தியும் அற்புதமாக வரையப்பட்டிருக்கிறது.

0Shares
0