அஞ்சலி

பெருமதிப்பிற்குரிய தோழரும் மதுரைக்கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நன்மாறன் இன்று காலமானார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரை அறிவேன். எளிமையும் நேர்மையும் கொண்ட அற்புதமான தோழர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சார்பில் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் பதவியிலிருந்தார். அந்த நாட்களில் மதுரை மக்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.

நன்மாறனின் மேடைப்பேச்சில் நகைச்சுவையும் சிந்தனை தெறிப்பும் ஒன்று கலந்திருக்கும். அவரை மேடைக் கலைவாணர் என்று மக்கள் பாராட்டினார்கள்.

நல்ல இலக்கியங்களைத் தேடித்தேடிப் படித்தவர். பலமுறை எனது கட்டுரைகளை வாசித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். எனது புத்தக விழாக்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அவர் காட்டிய அன்பும் நேசமும் நிகரற்றவை.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த நாட்களிலும், பதவியில் இல்லாத போதும் அவர் மதுரைக்குள் டவுன் பஸ்ஸிலும் ஆட்டோவிலும் தான் பயணித்தார். எளிமையான உடை. இனிமையான பேச்சு. எவரையும் ஒரு சுடுசொல் சொன்னது கிடையாது. தேநீர்க் கடைகளில் அமர்ந்து மக்கள் குறை தீர்க்கும் பண்பு. எந்த இரவிலும் அவரைத்தேடி வந்து மதுரை மக்கள் தனது குறைகளைத் தெரிவிக்க முடியும். வெளியூருக்குப் பயணம் செய்யும் போதும் ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் மக்களோடு மக்களாகப் பயணம் செய்து எளிமையின் நாயகனாக விளங்கினார்.

நன்மாறன் தனக்கென எதையும் சேர்த்து வைக்கவில்லை. கடைசி வரை. வாடகை வீட்டில் தான் குடியிருந்து வந்தார். கஷ்டமான சூழலில் கூடத் தனக்காகவோ, தனது பிள்ளைகளுக்காகவோ எவரிடமும் எந்த உதவியினையும் அவர் எதிர்பார்த்துப் போனது கிடையாது. உடல் நலிவுற்ற நிலையிலும் மதுரை அரசுப்பொது மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றிருக்கிறார். இப்படி ஒரு அரசியல் தலைவர் இருக்கமுடியுமா எனத் தமிழகமே வியக்கும்படியாக இருந்தது அவரது வாழ்க்கை.

பொதுவாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதரின் மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

0Shares
0