வரலாற்றுப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கதைகள் ஹாலிவுட்டில் எப்போதும் வெற்றி பெற்றுள்ளன, அப்படியான ஒரு திரைப்படமே Anna and the King of Siam. 1946ல் வெளியானது சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.

மார்க்ரெட் லாண்டன் நாவலை மையமாகக் கொண்டது. இக்கதை அமெரிக்காவில் இசைநாடகமாக நிகழ்த்தப்பட்டுப் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. அந்த வரவேற்பே படம் உருவாக முக்கியக் காரணம்.
சயாம் என்பது இன்றைய தாய்லாந்து. கதை 1862ல் நடக்கிறது. ராமா IV என்றும் அழைக்கப்படும் சயாமின் மன்னர் மோங்கட் 1851 முதல் 1868 வரை ஆட்சி செய்தார். படத்தில் சித்தரிக்கப்பட்டது போல அவர் மேற்கத்தியக் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பிரிட்டன். பிரான்ஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தனது அரசாங்க உறவுகளை விரிவுபடுத்தினார்.

மன்னர் குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காக வருகிறாள் அன்னா ஓவன்ஸ். கணவனை இழந்த அன்னா தனது மகன் லூயிஸுடன் பாங்காக் வந்தடைகிறாள். துறைமுகத்தில் அவரை வரவேற்க வரும் அமைச்சர் அவள் அரண்மனைக்குள் தங்க வேண்டும் என்கிறார்.
மன்னர் தனக்குத் தனி வீடு ஒதுக்கித் தருவதாக வாக்குறுதி தந்திருப்பதாகச் சொல்லி அரண்மனைக்கு வர மறுக்கிறாள் அன்னா. காரணம் தன்னையும் அந்தப்புர பெண்ணாக மாற்றிவிடுவாரோ என்ற பயம்.
இதைக் கேட்ட அமைச்சர் கோவித்துக் கொண்டு போய்விடுகிறார். மறுநாள் அன்னா தானே அரண்மனைக்குச் செல்கிறாள். அமைச்சரிடம் மன்னிப்பு கேட்கிறாள். மன்னரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்கிறாள். அது உடனடியாக இயலாத காரணம் எனும் அமைச்சர் அவளை அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைக்கிறார்.
நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு மன்னரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. தர்பார் மண்டபத்திற்கு அவளை அழைத்துச் செல்லும் போது மன்னரின் முன்பாகச் சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும் என்பதில் துவங்கி மன்னரின் தலைக்கு மேலாக நமது தலை ஒரு போதும் உயர்ந்திருக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விளக்குகிறார்கள். அங்கே அவள் காணும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.
தன்னால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று அன்னா மறுக்கிறாள். அன்று மன்னர் எவரையும் சந்திக்க விரும்பவில்லை என்று அவளைத் தடுத்துவிடுகிறார்கள். ஆனால் அவள் வேகமாக மன்னரின் முன்பாகச் சென்று தான் ஆசிரியர் வேலைக்காக வந்துள்ளதாகச் சொல்கிறாள்.
அவளது தோற்றத்தைக் கண்டு சந்தேகம் கொண்ட மன்னர் அவளிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அன்னா துடுக்கு தனமாகப் பதில் சொல்கிறாள். அந்தப் பதில்கள் மன்னருக்குப் பிடித்துவிடுகின்றன.
அவளை உடனடியாக வேலையில் சேரும்படி சொல்கிறார். அவளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர உத்தரவிடுகிறார்.

அவள் தனக்குத் தனி வீடு ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாள். அதை மன்னர் ஏற்க மறுக்கிறார்
மன்னருக்கு நிறைய மனைவிகள். 67 பிள்ளைகள். அவர்களுக்குக் கல்வி கற்பிக்க அரண்மனைக்குள்ளே சிறிய பள்ளியைத் துவங்குகிறாள். ஆங்கிலம் பேசத் தெரிந்த ராணி தியாங் அவளுக்கு உதவி செய்கிறாள்.
அரண்மனை வாழ்க்கை என்பது தங்கக் கூண்டில் வசிப்பது போலிருக்கிறது. தனக்குத் தனி வீடு வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறாள். இது மன்னருக்கு எரிச்சலை உருவாக்குகிறது.. மீன் விற்கும் சந்தையில் மோசமான ஒரு வீட்டை ஒதுக்கித் தருகிறார். அதற்கு அரண்மனையே பரவாயில்லை என்று அன்னா அங்கேயே தங்கிக் கொள்கிறாள்.
சயாம் மன்னர் மோங்கட் அறிவியலில் ஆர்வம் கொண்டவர். உலக மாற்றங்கள் யாவையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். நிறையப் படிக்கக் கூடியவர். அவர் தான் படித்த விஷயங்கள் குறித்து அன்னாவிடம் விவாதிக்கிறார். அவள் தைரியமாக மன்னரோடு உரையாடுகிறாள். அவருக்குப் பிடிக்காத விஷயங்களைக் கூட வெளிப்படையாகப் பேசுகிறாள்.ஒரு நாள் அரண்மனையில் அடிமைப்பெண் ஒருத்தி சங்கிலியால் கட்டப்பட்டுத் தண்டிக்கப்படுவதை அன்னா காணுகிறாள். அடிமைப் பெண்ணை விடுவிக்க வேண்டி மன்னரிடம் மன்றாடுகிறாள். அவளை விடுவிக்கக் கூடாது என்று இளையராணி உத்தரவிடுகிறாள். தனது குடும்பப் பிரச்சனையில் அன்னா தலையிடக் கூடாது என்று மன்னரும் கோவித்துக் கொள்கிறார்.
அது அன்னாவினை வேதனைப்படுத்துகிறது. தான் வேலையை விட்டு நின்று விடப்போவதாகச் சொல்கிறாள். மன்னர் அவளது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொண்டு அடிமைப் பெண்ணை விடுதலை செய்கிறார்
சயாம் மன்னர் மோங்கட் நாகரீகமற்றவர். மோசமான ஆட்சி நடத்துகிறவர் என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. தான் அப்படியானவர் இல்லை என்று நிரூபிக்க அரண்மனையில் பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
அதற்காகப் பிரிட்டனிலிருந்து ஆங்கிலக் கனவான்களை அழைக்கிறார். அந்தப்புரத்திலுள்ள தனது மனைவிகளை ஐரோப்பிய பாணியில் ஆடை அணியச் செய்து, மேலைநாட்டுப் பழக்க வழக்கங்களைக் கற்றுத் தரும்படி அன்னாவிற்கு உத்தரவிடுகிறார்அந்த விருந்தில் மன்னர் மிகவும் பதற்றமாக நடந்து கொள்கிறார். எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். முள்கரண்டி கத்தி வைத்துச் சாப்பிடுவதற்கு அவர் பழகும் காட்சி வேடிக்கையானது
அன்று சயாம் வரலாற்றுப் பெருமை கொண்ட நாடு, பண்பாட்டில் சிறந்த மன்னர் ஆட்சி செய்கிறார் என்பதை விருந்தினர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
விருந்து வெற்றியடைய முக்கியக் காரணமாக இருந்த அன்னா அதன்பிறகு மன்னரின் ஆலோசகர் போலச் செயல்படத் துவங்குகிறாள். ஒரு நாள் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவில் சண்டை போட யானைகள் கிடையாது என்று சொல்கிறாள்
உடனே மன்னர் தனது நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு யானைகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லி ஆபிரகாம் லிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அவரது அன்பைப் புரிந்து கொண்டு லிங்கனிடமிருந்து நன்றி கடிதம் வருகிறது
தாமஸ் ஆர் டிரவுட்மன் யானைகளும் அரசர்களும் என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார்.( Elephants and Kings: An Environmental History- Trautmann) இந்தியாவில் ஏன் யானைகள் இவ்வளவு புகழ்பெற்றிருக்கின்றன என்பதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம். படத்தில் மோங்கட் அமெரிக்காவிற்கு யானைக்குட்டிகளை அனுப்பி வைக்க நினைக்கும் காட்சியைப் பார்த்தபோது இந்தப் புத்தகமே நினைவிற்கு வந்தது. உண்மையில் படித்தில் வரும் கடிதம் லிங்கனுக்கு எழுதப்பட்டதில்லை. படத்தில் லிங்கன் சொல்வது போன்று வரும் வசனமும் அவர் சொன்னதில்லை.
இளையராணி துப்திம் தனது பழைய காதலனுடன் இப்போதும் நெருங்கிப் பழகுகிறாள் என்பதை அறிந்து கொண்ட மன்னர் அவளைத் தண்டிக்கிறார். அதை அன்னாவால் ஏற்க முடியவில்லை. துப்திமிற்காகப் பரிந்து பேசி மன்னரின் கோபத்திற்கு ஆளாகிறாள். இந்தப் பிரச்சனையில் அவள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது.
தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை யாரும் உண்மையாகத் தன்னிடம் தெரிவிப்பதில்லை. அன்னா ஒருத்தியே உண்மையாக நடந்து கொள்கிறாள் என்பதை இறுதியில் மன்னர் உணர்ந்து கொள்கிறார்.
அரங்க அமைப்பும் உடைகளும் அரண்மனை வாசிகளின் இயல்பும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ராணி தியாங் தனது வாழ்க்கையை அடையாளப்படுத்தும் ஓவியங்களை அன்னாவிடம் காட்டி விளக்கும் காட்சி சிறப்பானது.

படத்தில் நம்மைப் பெரிதும் கவருபவர் மன்னர் மோங்கட். அவரது உடை, நடத்தை, பேசும்விதம், செயல்கள் நிஜமான மன்னர் இப்படித்தான் நடந்திருப்பார் என்பது போலிருக்கிறது. Rex Harrison சிறப்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக நள்ளிரவில் அவர் அன்னாவை அழைத்துப் பைபிளில் உள்ள விஷயம் பற்றிய சந்தேகத்தைக் கேட்பது. அமைச்சருடன் தேசத்தின் எதிர்காலம் பற்றி விவாதிப்பது. தான் இறுதியாக அன்னாவின் முன்பு தனது மனதிலுள்ளதை வெளிப்படையாகச் சொல்வது என மன்னர் மோங்கட் மறக்க முடியாத கதாபாத்திரமாக ஒளிருகிறார்.
உண்மை சம்பவத்திலிருந்து இந்த நாவலை மார்க்ரெட் லாண்டன் எழுதியிருக்கிறார். நிஜமான அன்னா இந்தியாவைச் சேர்ந்தவர். ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண். படத்தில் அவள் இங்கிலாந்தைச் சேர்ந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். வரலாற்று நிகழ்வுகளுடன் நிறையப் புனைவை சேர்த்துப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
The King and I என்ற பெயரில் இதே படம் 1958ல் மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது. 2018ல் The King and I என்று புதிய வடிவில் Gary Halvorson& Bartlett Sher இயக்கத்தில் இசை நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல இடங்களில் பிரிட்டிஷ் மகாராணி மற்றும் இங்கிலாந்தின் பண்பாடு குறித்து பெருமை பேசுகிறது படம். உலகிற்கே பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவர்கள் தாங்கள் என்று பிரிட்டிஷ்காரர்கள் நினைக்கிறார்கள். அது அன்னா வழியாக நிறையவே வெளிப்படுகிறது.
கறுப்பு வெள்ளைப்படங்களுக்கே உரித்தான அழகுடன் சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர்தர் மில்லர் அது போலவே அரண்மனை, தர்பார் மண்டபம். சந்தை என அரங்க அமைப்புகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன.
வழக்கமான கதை போல மன்னருக்கும் அன்னாவிற்கும் இடையில் காதல் ஏற்படவில்லை. அவள் கடைசி வரை பள்ளி ஆசிரியராகவே இருக்கிறாள். மன்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுகிறார் முடிவில் அவளிடம் மன்னிப்பு கேட்கிறார். இதுவரை யாரிடமும் எதற்காகவும் மன்னர் மன்னிப்பு கேட்டதில்லை என்கிறார் அமைச்சர். அது தான் அன்னாவின் வெற்றி.