சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி படத்தில் அபு என்ற சிறுவனாக நடித்த சுபீர் பானர்ஜி பின்னாளில் என்னவானார். அவரது சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. ஏன் அவர் திரைத்துறையை விட்டு ஒதுங்கி வாழ்ந்தார் என்பதை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட வங்க மொழித் திரைப்படம் அபுர் பாஞ்சாலி( Apur Panchali )
இதனை இயக்கியிருப்பவர் கௌசிக் கங்குலி. சர்வதேச திரைப்படவிழாக்களில் முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள இப்படம் பதேர் பாஞ்சாலியின் பின்னால் மறைந்துள்ள அறியாக்கதையொன்றை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது
சுபீர் பானர்ஜி பதேர் பாஞ்சாலி படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அப்படத்தில் பெரும் புகழ் கிடைத்த போதும் அதன்பிறகு சொந்தவாழ்க்கையின் நெருக்கடியால் நடிப்பைத் தொடர முடியவில்லை.
பதேர் பாஞ்சாலியின் அபு என்ற முத்திரை சுபீர் மீது அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. ஆரம்ப நாட்களில் அந்தப் பிம்பம் அவருக்குச் சந்தோஷம் தந்தாலும் பின்பு அது தன் அடையாளமில்லை என உணரும்சுபீர், அந்தப் பிம்பத்தை வெறுத்தார். அதிலிருந்து விடுபடப் போராடினார். தன்னைத் தேடிவந்து பாராட்டுபவர்களிடம் தான் அபு இல்லை எனக் கோவித்துக் கொண்டு ஒதுங்கி வாழ்ந்து வந்தார்.
பதேர் பாஞ்சாலி திரைப்படம் விபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் நாவலை மையமாகக் கொண்டது. நாவலின் மையக்கருவை மட்டுமே ரே பயன்படுத்திக் கொண்டார். நாவலை முழுமையாக வாசித்தால் அது வங்ககிராமத்தை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதை உணர முடியும். விபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் வாழ்க்கை சரித்திரம் என்பது போலவே நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் வரும் கிராமத்தின் சித்தரிப்பு விபூதிபூஷனின் சொந்த ஊரின் விவரிப்பே.
அபு கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்விற்காக விருப்பமுள்ள சிறுவர்கள் நேரில் வந்து சந்திக்கும்படி ரே செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் நடிகர் தேர்வில் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவரையும் ரேயிற்குப் பிடிக்கவில்லை. ஒரு சிறுமிக்கு ஆண் வேடமிட்டு நடிக்க வைக்கலாமா என்ற யோசனை உருவானது. அந்த நேரத்தில் தான் ரேயின் மனைவி பிஜோயா வழியாகச் சுபீர் அறிமுகமானான். அவனை அபு கதாபாத்திரத்திற்கு ரே தேர்வு செய்தார்
சுபீர் படத்தில் நடிப்பது அவனது தந்தைக்குப் பிடிக்கவில்லை. இந்தப்படம் வெளியானால் உங்கள் பையனின் புகழ் வங்கம் முழுவதும் பரவிவிடும். அவன் பணமும் புகழும் அடைவான் என்று நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி அனுமதி வாங்கியிருக்கிறார்கள். 1952 ல் படப்பிடிப்புத் துவங்கியிருக்கிறது
பதேர் பாஞ்சாலியில் சுபீரின் நடிப்பு மறக்கமுடியாதது. அதுவும் துர்கா இறந்த பிறகு மழையில் குடை எடுக்க மறந்து போய்ப் பின்பு வீட்டிற்குள் போய்க் குடையோடு திரும்பி வந்து நடக்கும் காட்சியும், அக்கா தான் பாசிமாலையைத் திருடியவள் என்று தெரிந்து அதைக் குளத்தில் வீசி எறியும் போதும் மறக்கமுடியாத அபுவாக மனதில் பதிந்துவிடுகிறான்.
அபுர் பாஞ்சாலி திரைப்படம் அர்கா எனும் திரைக்கலை பயிலும் மாணவர் சுபீர் பானர்ஜியைத் தேடி கண்டறிவதில் துவங்குகிறது. முதுமையில், தனிமையில், குடியில் வாழ்ந்து வரும் சுபீரை ஒரு நாள் வீதியில் கண்டுபிடித்து அவரைப் பின்தொடர்கிறான் அர்கா.
அவர் தான் அபு இல்லையென எனத் துரத்திவிடுகிறார். அவனோ எப்படியாவது சுபீருடன் பழகவேண்டும் எனப் பின் தொடர்கிறான். இதனால் சுபீர் எரிச்சல் அடைகிறார். கோவித்துக் கொள்கிறார்.
கடந்தகால நினைவுகள் அவரது மனதில் எப்போதும் கொந்தளித்தபடியே இருக்கின்றன. சதா குடித்தபடியே இருக்கிறார். இப்போது அவருக்குத் துணையென யாருமில்லை.
ஜெர்மனியில் நடைபெறும் திரைப்படவிழா ஒன்றில் சினிமாவில் சித்தரிக்கபட்ட சிறுவர்களில் மிகச்சிறந்த கதாபாத்திரமாகப் பதேர் பாஞ்சாலியின் அபுவைத் தேர்வு செய்கிறார்கள். இதற்காகச் சுபீரை கௌரவப்படுத்த திரைப்படவிழா விரும்புகிறது.
இதற்கான கடிதத்தைச் சுபீரிடம் ஒப்படைக்க அர்கா முயற்சிக்கிறான். அவர் அதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அர்கா எப்படியாவது அவரைச் சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று பல்வேறு விதமாக முயற்சிக்கிறான்
முடிவில் ஒருநாள் அவனைத் தனது வீட்டிற்குள் அனுமதிக்கிறார். உரையாடுகிறார். படத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாகக் குடிக்கும் காட்சியும், இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அர்கா அனுமதி கேட்கும் காட்சியும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது
காலத்தின் முன்பின்னாகப் படம் நகர்ந்து செல்கிறது. தற்போதைய காட்சிகள் வண்ணத்திலும் கடந்த கால நிகழ்வுகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் படமாக்கப்பட்டுள்ளன.
சிறுவனாக ரேயின் திரைப்படத்தில் நடித்த போது சுபீருக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அதன்பின்பு சுபீரின் திருமண வாழ்க்கை, அவனது நட்பு வட்டம். கனவுகள், அவனுக்கு ஏற்பட்ட இழப்பு எனப் படம் சுபீரின் வாழ்க்கையையும் ரேயின் படத்தில் வரும் அபுவின் வாழ்க்கையையும் இடைவெட்டாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
ரேயின் பதேர்பாஞ்சாலி அபு சன்சார். அபராஜிதா ஆகிய மூன்று படங்களிலும் அபுவிற்கு என்னவெல்லாம் நடந்ததோ அதுவே சுபீரின் வாழ்க்கையிலும் எதிரொலித்தது என்பது போலவே காட்சிகள் மாறிமாறி வந்து போகின்றன.
ஜெர்மன் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்குச் சுபீர் ஒத்துக் கொள்கிறார். ஒரே நிபந்தனை அர்காவும் உடன் வர வேண்டும் என்பதே.
எதிர்பாராத இந்தச் சந்தோஷம் அர்காவை உற்சாகப்படுத்துகிறது. வாழ்வில் முதன்முறையாக விமானப்பயணம் மேற்கொள்கிறான் அர்கா.
அவர்கள் இருவரின் பயணமும் திரைப்படவிழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வும் நெருக்கமான நட்பை உருவாகிறது. சுபீரின் முழுமையான அன்பைப் பெறுகிறான் அர்கா.
அர்காவுக்குத் தனது வாழ்க்கைக் கதையை விவரிக்கிறார் சுபீர்.
அபு எதிர்பாராமல் திருமணம் செய்து கொள்வதும் இளம்மனைவியுடன் கல்கத்தா வருவதும் அவர்களின் குடும்ப வாழ்க்கையும் அப்படியே சுபீர் வாழ்வில் இடம்பெறுகிறது. அதை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் தனிச்சிறப்பு ரேயின் தனித்துவமிக்கக் காட்சிப்படுத்துதல் போலவே அபுர் பாஞ்சாலியும் உருவாக்கபட்டிருக்கிறது. கேமிரா கோணங்கள். நடிப்பு,. அரங்கு, இசை, அழகியல் என யாவும் சத்யஜித்ரேயின் படங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. ஒருவகையில் இப்படம் ரேயிற்குச் செலுத்தப்பட்ட காணிக்கை என்றே சொல்வேன்
பத்ரா பஞ்சாலிக்குப் பின்னர் எந்தப் படத்திலும் பானர்ஜி நடிக்கவில்லை. 1980 இந்தியா டுடே அவரைக் கண்டுபிடித்துச் சிறப்புக் கட்டுரை எழுதியது. மத்திய அரசில் ஒரு கிளார்க்காகப் பணியாற்றி ஒய்வு பெற்றார் என்று அவரைப்பற்றிய செய்தியை உலகம் அறியச் செய்தது. அபுவாக நடித்து இவ்வளவு புகழ்பெற்ற சுபீர் ஏன் சினிமாவை விட்டு ஒதுங்கினார் என்ற கேள்வி பலருக்கும் புதிராகவே இருந்தது. இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது
ரேயின் நினைவுகளைக் கொண்டாடுகிறார்கள் என்ற விதத்திலும், உலகின் கண்ணிலிருந்து ஒதுங்கி வாழ்ந்த சுபீர் பானர்ஜி மீண்டும் புகழ் வெளிச்சத்திற்குள் அடையாளப்படுத்தப்படுகிறார் என்ற விதத்திலும் இப்படம் முக்கியமானதே.
•••.

