சமண நடை

மதுரையில் எனது புத்தக வெளியீட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, புத்தகக் கண்காட்சியில் நிறைய புதிய வாசகர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷம் தருவதாகயிருந்தது, சனிக்கிழமை மாலை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேவதச்சனின் புதிய கவிதை நூலான இரண்டு சூரியன் வெளியானது, அது குறித்து நான் பதினைந்து நிமிசங்கள் பேசினேன்,

நவீன கவிதையின் இன்றைய சவால்களும் சாதனைகளையும் பற்றி காலையில் கவிஞர்கள் தேவதச்சன், கலாப்ரியா. சமயவேல். மூவருடனும் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது உற்சாகமளிப்பதாகயிருந்தது.

எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து பசுமைநடை என்ற பெயரில் மாதம் ஒரு முறை, மதுரையைச்சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர்குகைகள், படுகைகள், கல்வெட்டுகள்,மற்றும் கலைச்செல்வங்களைப் பாதுகாக்கவும் மதுரையின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் பயண இயக்கம் ஒன்றை நடத்திவருகிறார்கள்

செப்டம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை மதுரையிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரிச்சியூரில் உள்ள தொன்மையான சமண குகைக் கோவிலைக் காணுவதற்கான பசுமை நடைக்குழுவின் பயணத்தில் நானும் கலந்து கொண்டேன்,

காலை ஆறுமணி அளவில் சிவகங்கை செல்லும் சாலையில் உள்ள ஆவின் பார்க் அருகில் விருப்பமான நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள், பலரும் தங்களது மனைவி குழந்தைகளுடன் கிரின்வாக்கில் கலந்து கொண்டது மகிழ்ச்சிதருவதாக இருந்தது,

கவிஞர் தேவதேவன். ஆவணப்பட இயக்குனர் இளங்கோவன், அவரது துணைவியார் கீதா இளங்கோவன். தமிழினி வசந்தகுமார். எழுத்தாளர் வேணுகோபால். எழுத்தாளர் அர்ஷியா. குறும்பட இயக்குனர் அருண்பிரசாத். பேராசியர் சுந்தர்காளி, கவிஞர் பாபு என நிறைய நண்பர்கள் அப்பயணத்தில் கலந்து கொண்டார்கள்,

மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் சமண குகைத்தளங்கள் காணப்படுகின்றன, குறிப்பாக வரிச்சியூர், கருங்காலக்குடி, கொங்கர்புளியங்குளம், மேட்டுப்பட்டி, மாங்குளம், நாகமலை, யானைமலை, பெருமாள்மலை, அரிட்டாப்பட்டி விக்கிரமங்கலம், கீழவளைவு, குரண்டி, அணைப்பட்டி, சித்தர்மலை, கீழகுயில்குடி திருப்பரங்குன்றம், திருவாதவூர், உத்தமபாளையம் போன்ற இடங்களில் சமணசின்னங்கள் காணப்படுகின்றன, அவற்றில் பல கவனிப்பாரற்றுப் போய் கல்குவாரிகளின் வெடிச்சிதறலால் அழியும் அபாயத்தில் இருக்கின்றன, ஆகவே இந்தப் பசுமைபயணம் ஒரு விழிப்புணர்வு இயக்கம் போலவே செயல்பட்டு வருகிறது

நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஒன்று சேர்ந்ததும் வரிச்சியூரை நோக்கிய பயணம் துவங்கியது, காரிலும் பைக்கிலுமாக புறப்பட்ட பயணம் வரிச்சியூரை அரைமணிநேரத்தில் அடைந்தது, வழிமுழுவதும் கிரனைட் தொழிற்சாலைகள், ஒருகாலத்தில் விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்த அத்தனை கிராமங்களிலும் இன்று மலையை உடைத்துப் பாறைகளை வெட்டி எடுப்பதே தொழிலாகிவிட்டிருக்கிறது, உடைக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட கற்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் போய்க் கொண்டிருந்தன, சாலையோரப் புளியமரங்கள் காற்று இல்லாமல் ஒடுங்கிப் புழுதியேறியிருந்தன, பறவைகளின் சப்தமேயில்லாத சாலையாக இருந்தது,

குன்னத்தூர் மலை என்று அழைக்கபடும் இதில் உதயகிரி, அஸ்தகிரி என இரண்டு குகைக் கோவில்கள் காணப்படுகின்றன,  அதிகாலை வெயிலின் இதத்துடன் அதை நோக்கி நடக்கத் துவங்கினோம், பேச்சும் உற்சாகமுமாக யாவரும் நடந்தார்கள், வயதானவர்கள் சிலர் கூட இந்தப் பயணத்தில் ஆர்வத்துடன் வந்திருந்தார்கள்,

அதிகாலையில் கூட்டமாக மலையை நோக்கி நடந்து போவதைக் கண்ட ஊர்காரர்கள் என்ன சினிமா ஷீட்டிங்கா என்று ஆர்வமாக விசாரித்தார்கள், இல்லை மலையைப் பார்க்க போகிறோம் என்றதும் அங்கே என்ன இருக்கிறது பார்ப்பதற்கு என்று சலித்துக் கொண்டார்கள்,

கிழக்கு நோக்கியிருந்த சிறிய குடைவரைக் கோவில் ஒன்றின் முன்பாக ஒன்று கூடி நின்றோம், அங்கே பழமையான சிவலிங்கமும் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களும் காணப்பட்டது

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அந்த இடத்தின் தொன்மைகளைப் பற்றி விரிவாக விளக்கிப் பேசத்துவங்கினார், புகைப்படங்கள் எடுப்பதும் ஆர்வமாக மலையேறி பார்ப்பதுமாக பலரும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்

நான் மலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன், கண்கொள்ளமுடியாத கம்பீரம், காலை வெளிச்சம் உலகிலுள்ள எல்லாவற்றையும் அழகாக்கிவிடுகிறது, கல்லைக் கண்ணால் பார்த்தும் உடனே பழகிவிட முடியாது, மலையோடு நெருக்கம் கொள்வதற்கு நீண்டநாட்களும், பொறுமையும், திறந்த மனதும் தேவை, முதல்பரிச்சயத்தில் மலையின் பிரம்மாண்டம் மட்டுமே நமக்குத் தோன்றும், பின்பு அதன் கனத்த மௌனம், அதன்பின்பு அதன் அக இயக்கம், அதன்பிறகு உள்ளார்ந்த மலர்ச்சி என்று நமது ஈடுபாட்டிற்கு ஏற்ப மலை விரிந்து கொண்டே செல்லும்,

எந்த ஒன்றையும் கண்ணால் பார்த்துவிட்டாலே அதை முழுவதுமாக அறிந்துவிட்டதைப் போல நினைப்பது நமது முட்டாள்தனம், அது தான் இயற்கையை நெருங்கும் போது பெரும்பான்மையினரின் இயல்பாக இருக்கிறது

காலை நேரத்து சூரியன் என்றபோதும் அன்று சூடு அதிகமாகவே இருந்தது, இது மழை வந்திருக்க வேண்டிய காலம், ஆனால் மழை பெய்யவேயில்லை, செடி கொடிகள் பாறைகள் யாவும் உலர்ந்து போய் மழைக்காக காத்திருக்கின்றன, காற்றில்லாத வெக்கை பலரையும் அசதி கொள்ளச் செய்திருந்தது, மலையின் பின்பக்கமுள்ள சரிவில்  ஒரு மைனாவின் குரல் கேட்டது,

கைகால்கள் துண்டிக்கப்பட்ட மனிதனைப் போல மலையின் பாதி வெடிவைத்து தகர்க்கபட்டு கிரனைட் கற்களாக விற்கபட்டுவிட்டன, மதுரையைச் சுற்றி எங்கே போனாலும் கிரனைட் தொழிற்சாலைகள் முளைத்து பெருகியுள்ளன,

மூளியான மலைகளைக் காண்பது மனதை வருத்தம் கொள்ளச் செய்கிறது, மனிதர்கள் தங்களின் முழு ஆயுளைச் செலவிட்டால் கூட உடைந்த ஒரு கல்லை மலையோடு மறுபடி பொருத்திவிட முடியாது, அல்லது உடைந்த பாறையளவு மலையை மீண்டும் வளர்த்துவிடவும் முடியாது, அறிந்தே நாம் சுயலாபங்களுக்காக இயற்கையைச் சுரண்டிப் பிழைக்கிறோம், அதன் விளைவு நாம் எதிர்பாரத அளவிற்கு நிச்சயம் இருந்தே தீரும்,

மலையின் மீது நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் ஏறிக் கொண்டிருந்தான், அவனிடம் பயமேயில்லை, எந்தப் பிடிமானமும் இல்லாமல் அவன் பாறைகளைத் தாண்டி ஏறிக் கொண்டேயிருந்தான், பலநூற்றாண்டுகால மனித வாழ்வின்  சாட்சி போல மலை நிற்கிறது,

மலையின் மீது வெயில் வழிந்தோடிக் கொண்டிருந்த்து, வேலிப்புதர்கள் முளைத்துப்போன பாதையில் நடந்து குகைத்தளம் ஒன்றினை அடைந்தோம்

இரண்டாயிரம் வருசங்களின் முன்பே அங்கே  ஒரு காலத்தில் சமணதுறவிகள் தங்கிவாழ்ந்திருக்கிறார்கள், கல்லால் ஆன படுகைகள் காணப்படுகின்றன, உள்ளே தனியார் சிலர் காவியடித்து ஒரு கோவிலை கட்டி வழிபாடு நடத்திவருகிறார்கள், அங்கிருந்த பூசாரி உள்ளே சித்தர்கள் நடமாடுவதாகச் சொன்னார், அது சமணச் சித்தரா என்று கேட்டபோது சமணம் என்பது எல்லாம் பொய், இவர்கள் ஞானிகள் என்று சொல்லிவிட்டு ஊனக்கண்ணிற்கு அவர்கள் தெரியமாட்டார்கள் என்றார், இப்படி ஆளுக்கு ஒரு வரலாற்றை உருவாக்கி வைத்துக் கொள்கிறார்கள்,

வரலாற்றை உருவாக்குவது மனிதர்களின் சாதுர்யங்களில் ஒன்று, அதன்வழியே கேள்விகேட்பதும் உண்மையை விசாரிப்பதும் நிராகரிக்கபட்டுவிடுகிறது, ஆகவே வரலாற்றைத் தனக்கு ஏற்ப வளைத்துக்கொள்ளவும், திருத்திக் கொள்ளவுமே அதிகாரம் ஆசைப்படுகிறது, சாமான்யனும் அதற்கே ஆசைப்படுகிறான்.

கல்படுகைகளைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா, மனிதர்கள் வாழ்ந்த இடத்தின் வெதுவெதுப்பும் மிருதுவும் அந்த கல்லில் உறைந்து போயிருக்கிறது, குழிவாகியிருந்த அந்தக் கல்லில் தலைவைத்து கிடந்த சமணத்துறவி யாராக இருக்கும், அவர் கல்படுகையில் படுத்தபடியே ஏகாந்தமான காற்றை அனுபவித்துக் கொண்டு குகைதளத்தின் முகப்புவெளியை பார்த்தபடியே இருந்திருப்பார் என்று மனது தானே கற்பனை செய்யத் துவங்குகிறது

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அங்கிருந்த தமிழ்பிராமி கல்வெட்டுகளை வாசித்துக் காட்டினார், தொன்மையான மூன்று தமிழ்பிராமி கல்வெட்டுகள் அங்கே காணப்படுகிறது, வடக்கு நோக்கிய குகைத்தளத்தின் புருவப்  பகுதியிலும்,  கிழக்கு நோக்கியுள்ள உள்ள குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் மேலும் கீழும் அந்த மூன்று கல்வெட்டுகள் உள்ளன.  இதில் குகைத்தளம் அமைக்க ஒரு நூறு  கலம் நெல் கொடை வழங்கப்பட்ட செய்தி காணப்படுகிறது, அது போலவே இக் குகையைக் உருவாக்கியவன் இளந்தன் என்ற குறிப்பும் காணப்படுகிறது

கல்வெட்டு பற்றிய சேதிகளைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தர்காளி வரலாற்றை அறியும் இப் பயணத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்,

அதைத் தொடர்ந்து நான் சில நிமிசங்கள் வரலாற்றை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி உரையாற்றினேன், அதில் நாம் உலக வரலாற்றை அறிந்து கொள்வ்தில் காட்டும் ஆர்வத்தை உள்ளுர்வரலாற்றை அறிந்து கொள்ளுவதில் காட்டுவதில்லை, மக்கள் வரலாறு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, அது முறையாகத் தொகுக்கபடவேயில்லை,

நம்மைச் சுற்றிய வரலாற்றுச் சின்னங்களை நாம் அறிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் வேண்டியது நமது கடமை, இவற்றை ஒருமுறை பார்த்ததோடு நமது வேலை முடிந்துவிட்டது என்று நினைக்ககூடாது, இந்தப் பயணம் ஒரு துவக்கம், இனி தனித்தனியாக இது போன்ற இடங்களுக்குப் பயணம் செய்யுங்கள், அவற்றை எழுத்தில் பதிவு செய்யுங்கள், தமிழ்பிராமி கல்வெட்டுகள் பற்றி அடிப்படைகளை கற்றுக் கொண்டால் நீங்களே அதை வாசிக்க முடியும், கூடுதலாக தொல்லியல் துறையின் வெளியீடுகளை வாசித்தால் ஒரளவு அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்,

இது போன்ற பயணத்தின் வழியே தான் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது, சமணம் வெறும் மதம் மட்டுமில்லை, அது தமிழ் மொழியின் இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் நிறைய வளமை சேர்ந்திருக்கிறது, தமிழ் பண்பாட்டின்  சில முக்கிய கூறுகள் சமணம் உருவாக்கித் தந்தவையே, அதைப் புரிந்து கொள்ள சமணச் சின்னங்களையும் இலக்கியத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம், பள்ளி என்பதே சமணர்கள் உருவாக்கியது தான், தமிழ் இலக்கணத்தின் முன்னோடிப் பங்களிப்பு சமணம் தந்ததே, நற்காட்சி, நல்ஒழுக்கம் நல்லறிவு ஆகிய மூன்று அறநெறிகளைத் தந்தது சமணம், அதன் வாழ்வியல் நெறிகள் உயர்வானவை.ஆகவே வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல் நிகழ்காலத்தை புரிந்து கொள்ளமுடியாது, என்று பேசினேன்,

அதைத் தொடர்ந்து காலம் தோறும் தமிழ் எழுத்துரு எப்படி மாறிவந்திருக்கிறது என்பதைப்பற்றிய விபர அறிக்கை ஒன்று யாவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது, அத்துடன் அங்குள்ள கல்வெட்டுகளின் நகலும் அதைப் புரிந்து கொள்வதற்கான  குறிப்புதவியும் தரப்பட்டது, அது ஒரு நல்ல முயற்சி, அதன்வழியே உடனடியாக அங்குள்ள கல்வெட்டில் உள்ள எழுத்தையும் அதன் பொருளையும் பார்வையாளர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது

மலையின் மேற்கு பகுதியில் உள்ள கோவிலைக் காண்பதற்காக சென்றோம், வெயில் ஏறி மலை நிமிர்ந்து திமிறுவது போல இருந்தது, கல்குவாரிகளின் ஆக்ரமிப்பில் சிதறுண்டு போன அதன்வழிகளைக் கடந்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள கோவில் ஒன்றினை கண்டோம், வெள்ளை அடிக்கப்பட்ட அந்த சுவர் முகத்தில் அறைவது போலிருந்தது,

நிழலான ஒரு இடத்தில் யாவரும் ஒன்று கூடியதும் பயண அனுபவம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது, அதன்பிறகு வந்திருந்த அனைவருக்கும் காலை உணவு அளிக்கபட்டது, ஒன்றாக உணவருந்திய பிறகு மதுரையை நோக்கி திரும்பினேன்,

சாலையில் வெயில் முற்றிருந்தது, மதுரையின் புறவழிச்சாலைகளும் புதிதாக முளைத்துள்ள வணிகநிறுவனங்களும் பரபரப்பான அதன் பொருளாதார வளர்ச்சியும் வரலாற்றுப்பெருமை மிக்க நகரம் என்ற அடையாளத்தை விலக்கி நவீன மாநகரமாகிக் கொண்டுவருவதைக் காட்டியது

வரலாற்றை மறந்து போவது மக்களின் இயல்பு, அதை நினைவுபடுத்துவதும் மீட்டு எடுப்பதும் கலையின் வேலை என்பார்கள், பசுமை நடைப் பயணமும் அதையே மேற்கொண்டு வருகிறது.

••

0Shares
0