இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப் படங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பான்மை படங்கள் ஏமாற்றமே அளித்தன. எந்தப் படத்திற்கு விருது கிடைக்கும் என்பதை எளிதாக கண்டறிய முடிந்தது. இவை வழக்கமான ஹாலிவுட் சந்தைக்கான படங்கள் என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் கிடையாது. தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட காரணத்தால் அவை மிகச்சிறந்த படம் போலத் தோற்றமளிக்கின்றன.
International Feature Film, Feature Documentary என இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹனி லேண்ட் (Honeyland) நான் பார்த்த ஆஸ்கார் படங்களில் மிகவும் முக்கியமானது. சிறந்த டாகுமெண்டரி படமாக ஆஸ்கார் விருது பெற்ற American Factoryயை விடவும் Honeyland சிறந்த படமே.
ஹனி லேண்ட் வடக்கு மாசிடோனியாவின் பெக்கிர்லிஜா என்ற மலைக் கிராமத்தில் தேனீ வளர்ப்பவரான ஹடிடி முரடோவாவின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. இந்த ஆவணப்படத்தைத் தமாரா கோடெவ்ஸ்கா மற்றும் லுபோமிர் ஸ்டெபனோவ் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்
இந்த ஆவணப்படத்தை உருவாக்க மூன்று ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார்கள். நானூறு மணி நேரக்காட்சிகளைப் படமாக்கி அதிலிருந்து இந்தப்படத்தை வெட்டி தொகுத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்த இடத்தில் மின்சாரம் கிடையாது. ஆகவே இயற்கையான ஒளியினையும் மெழுகுவர்த்தி மற்றும் பந்த வெளிச்சத்தையும் பயன்படுத்தியே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அது படத்திற்குப் கவித்துவமான அழகினைத் தருகிறது. ரெம்பிராண்டின் ஓவியங்களை நினைவுபடுத்தும் ஒளியமைப்பு. சில காட்சிகளில் ரெம்பிராண்டின் ஓவியம் அப்படியே திரையில் உயிர்பெற்று வந்துவிட்டது போலவே நாம் உணருகிறோம்.
படம் தேனீ வளர்ப்பினை மட்டும் பேசுவதில்லை. 85 வயதான ஹடிடியின் அம்மாவிற்கும் அவளுக்குமான நெருக்கத்தை, அன்பைப் பேசுகிறது. மறுபுறம் பேராசையால் தேன் எடுப்பதை வெறும் வணிகமாகக் கருதிய இன்னொரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. சூழலியல் மாற்றத்தை, இயற்கையோடு மனிதர்கள் கொள்ள வேண்டிய உறவை எனப் பலதளங்களில் படம் இயங்குகிறது.
மாசிடோனியாவின் லோசோவா பகுதியிலுள்ள பெக்கிர்லிஜா கிராமத்தில் வசிக்கும் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த தேனீ வளர்ப்பவரான ஹடிடி மரபான முறையில் தேனீ வளர்க்கிறாள். கிடைக்கும் தேனில் பாதித் தேனீக்களுக்குப் பாதி மட்டுமே தனக்கு என்று சொல்கிறாள். தேனீக்களை அழைக்கப் பாட்டுப்பாடுகிறாள்.
சந்தையில் விற்பனை செய்யும் போதும் கூட நியாயமான விலையில் தேனை விற்கிறாள். கிடைத்த பணத்தில் அம்மாவிற்குத் தேவையான வாழைப்பழங்களையும் விசிறியையும் தலைமயிரை கறுப்பாக்கும் சாயத்தையும் வாங்கி வருகிறாள்.
வயதான தாயிற்காக அவள் மயிலிறகு விசிறி வாங்கும் போது கடைக்காரன் அதை இலவசமாக வைத்துக் கொள்ளும்படி தருகிறான். அது பண்பாட்டின் அடையாளம்.
காட்டுத்தேனீக்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் ஹடிடிக்கு நல்ல அனுபவமிருக்கிறது. தேனீக்களைக் கையாளுதல் மற்றும் தேனடையை வெட்டுதலில் அவள் தனித்துவம் பெற்றிருக்கிறாள். அவள் ஒரு போதும் தேனீக்களைக் கொல்வதில்லை. தேனீக்கள் பல்கிப் பெருக வேண்டும் என்றே விரும்புகிறாள்.
ஹடிடி தனது தாயிற்குத் தேனைப் புகட்டிவிடும் ஒரு காட்சி இருக்கிறது. எத்தனை அழகாகக் காட்சியது. ஒரு கண் பாதிக்கப்பட்ட 85 வயதான ஹடிடியின் அம்மா நாசிஃ படுக்கையிலே கிடக்கிறாள். அவள் முகத்தில் அரிதாகச் சந்தோஷம் வெளிப்படுகிறது.
இன்னொரு காட்சியில் தாயும் மகளும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். அது இரண்டு குழந்தைகளின் செயலைப் போலவேயிருக்கிறது.
ஹடிடி பூனைகளை நேசிக்கிறாள். குளிரில் பூனை நடுங்கும் போது அதைத் தன் மடியில் வைத்து அரவணைத்துக் கொள்கிறாள். பக்கத்து வீட்டிற்குப் புதிதாக வந்துள்ள குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் செய்கிறாள். அந்த வீட்டுச் சிறுமிக்குப் பூனைக்குட்டியைப் பரிசளிக்கிறாள்.
ஹடிடி ஒரு அபூர்வமான பெண். தனது கஷ்டங்களையும் தனிமையும் பற்றி அவள் புலம்புவதில்லை. தன்னை அறியாமல் எப்போதாவது கண்ணீர் விடுகிறாள். அவ்வளவு தான் அவளது வாழ்க்கை.
ஒரு நாள் பெரிய ட்ரெய்லருடன் ஹுசைன் சாமின் குடும்பம் வருகை தருகிறது. இதனால் ஹடிடியின் தனிமையும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாகச் சாமின் மனைவி லுட்வி, அவர்களின் ஏழு குழந்தைகள் மற்றும் விலங்குகளால் ஏற்படும் குழப்பங்கள் அவளை நிம்மதியற்ற நிலைக்குத் தள்ளுகின்றன.
ஹடிடி அவர்களுடன் நல்ல உறவையே பேண முற்படுகிறாள். சாமிற்கு மரபான தேனீ வளர்ப்பு முறைகளை அறிமுகம் செய்கிறாள். ஆனால். சாம் அவளது ஆலோசனையைப் புறக்கணித்து, முழுத் தேனையும் சேகரிக்கத் துவங்குகிறான் இயந்திரத்தைக் கொண்டு தேன் எடுக்கும் காட்சியும், தேனீக்களுக்காக மரத்தை இயந்திரத்தால் வெட்டும் காட்சியிலும் சாமின் பேராசை முழுமையாக வெளிப்படுகிறது
இந்த ஆவணப்படத்தில் ஹடிடி தனது தாயை எவ்வளவு அக்கறையோடு, கவனமாகப் பராமரிக்கிறாள் என்பதும் மறுபுறம் லுட்வி தனது பிள்ளைகளை வளர்ப்பதில் எவ்வளவு கவனமில்லாமல் நடந்து கொள்கிறாள் என்பதும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தேனீக்களை அழித்துத் தேன் எடுக்கக்கூடாது என்று ஹடிடி சண்டையிடுகிறாள். மரபான தேனீ வளர்க்கும் கலை எவ்வாறு அழிந்துவருகிறது என்பதை ஹடிடி வழியாகச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர்களான ஃபெஜ்மி டவுட் மற்றும் சமீர் லுமா இருவரும் கவித்துவமாக நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
தேனீக்கள் அதிகமிருப்பது இயற்கையின் சீரான ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது. தேனீக்களின் குரலை ஹடிடி காது கொடுத்துக் கேட்கிறாள். தண்ணீரில் விழுந்துவிட்ட தேனீ ஒன்றைக் காப்பாற்றிப் பறக்கவிடுகிறாள். ஒற்றை ஆளாக அவள் பனிப்பிரதேசத்தில் தனியே சுற்றியலைகிறாள். அடுத்த நாளை பற்றிய கவலைகள் அவளிடமில்லை. ஆனால் சாமின் வருகை இயற்கையை இப்படி அழிக்கிறார்களே என அவளை வருத்தப்பட வைக்கிறது.
படத்தில் ஹடிடி நம்மைக் கவர்ந்துவிடுகிறார். அவரது மஞ்சள் உடையும் கடின உழைப்பும் தேனீக்களை அழைக்க பாடும் முறையும் தாயின் மீது கொண்டுள்ள அன்பும் அவளை மறக்க முடியாத பெண்ணாக்கிவிடுகிறது
வழக்கமான ஆவணப்படம் போல இதில் வாய்ஸ்ஒவர் பயன்படுத்தப்படவில்லை. யாரும் கேமிராவைப் பார்த்து எதையும் சொல்வதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத அரூபமனிதன் போலவே கேமிரா அவர்களைச் சுற்றிவருகிறது. இயல்பான நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது.
சந்தையில் தேன் விற்கச் செல்லும் போது பலகடைகளில் தேன் என்ற பெயரில் சக்கரை கலந்து விற்கப்படுவதைப் பற்றி ஹடிடி வருத்தப்படுகிறாள். வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு விலையைக் குறைத்துத் தருகிறாள். அவளிடம் பேராசை இல்லை. இயற்கையாகத் தேன் சேகரமாகும் வரை காத்திருக்கிறாள். ஆனால் சாம் தேன் எடுப்பதைப் பணம் சம்பாதிக்க எளிய வழியாக நினைக்கிறான். இயற்கையைப் பற்றிய புரிதலே அவனிடமில்லை.
இன்னொரு காட்சியில் வீட்டின் முன்னால் ரேடியோ சிக்னலுக்காக உயரமான கம்பு ஒன்றில் ஒரு தட்டினை பொருத்தி அதைத் தூக்கிப்பிடித்தபடியே நிற்கிறாள் ஹடிடி. ரேடியோவில் பாட்டு ஒலிக்கிறது. அந்தப் பாட்டுக் கேட்கிறதா எனப் படுக்கையில் இருக்கும் தனது தாயிடம் கேட்கிறாள் ஹடிடி. அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு இடமே இல்லை. தாங்களாக இப்படி உருவாக்கிக் கொண்டால் தான் உண்டு.
ஹனி லேண்ட் ஆஸ்கார் விருது பெறவில்லை. ஆனால் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது.
ஹடிடியின் தேனீக்களை அழைக்கும் குரல் இயற்கையோடு நாம் கொள்ள வேண்டிய உறவை அடையாளப்படுத்துகிறது. அக்குரல் மந்திரம் போலவே ஒலிக்கிறது.
•••
