தேவதச்சனுக்கு விருது

தமிழ்நவீன கவிதையின் தனிப்பெரும் ஆளுமையான கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விளக்கு விருது வழங்கப்படுகிறது,

அமெரிக்காவில் இருந்து இயங்கும் விளக்கு அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விளக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது, இந்த விருதை நகுலன், விக்ரமாதித்யன், பூமணி. சி.மணி உள்ளிட்ட பல முக்கிய படைப்பாளிகள் பெற்றிருக்கிறார்கள், விருது வழங்கும் விழா ஜனவரியில் நடைபெற உள்ளது

தேவதச்சன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். ஆறுமுகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1952இல் பிறந்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற, ழ இதழ்களில் எழுதத் தொடங்கினார். ‘அவரவர் கைமணல்’ , ‘அத்துவானவேளை’  கடைசி டினோசர், ஹேம்ஸ் என்னும் காற்று, இரண்டு சூரியன்கள். அவரது முக்கியமான கவிதைத்தொகுதிகள்.

விருது பெறும் கவிஞர் தேவதச்சனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

••

தேவதச்சனின் கவிதைகள்

••

தப்பித்து

ஓடிக்கொண்டிருக்கிறது, ஆறு

பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து.

அதன் கரையோர நாணலில்

அமர்ந்திருக்கிறது

வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று.

அது இன்னும் இறந்து போகவில்லை

நமது நீண்ட திரைகளின் பின்னால்

அலைந்து திரிந்து களைத்திருக்கிறது

அதன் கண்கள் இன்னும் நம்மைப்

பார்த்துக் கொண்டிருக்கின்றன

பசியோடும் பசியோடும்

யாருமற்ற வெறுமையோடும்.

அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி

பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை.

அதன் சிறகுகளில் ஒளிரும்

மஞ்சள் வெளிச்சம்

காற்றின் அலைக்கழிவை

அமைதியாய் கடக்கிறது

நீ

திரும்பிப் போனால், இப்போதும் அது

அங்கு

அமர்ந்திருப்பதைக்

காணலாம். உன்னால்

திரும்பிச் செல்ல முடிந்தால்

****

பரிசு

என் கையில் இருந்த பரிசை

பிரிக்கவில்லை. பிரித்தால்

மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது

என் அருகில் இருந்தவன் அவசரமாய்

அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்

மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்

பரிசு அளித்தவனோடு

விருந்துண்ண அமர்ந்தோம்

உணவுகள் நடுவே

கண்ணாடி டம்ளரில்

ஒரு சொட்டு

தண்ணீரில்

மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்

**

அன்பின் எழுத்துகள்

எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை

யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று

வேண்டும் எனக்கு. சின்ன

குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு

உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்

எங்கு இருக்கிறது அது

எங்கும் இல்லை

என் நினைவுகளில் அது வளரட்டும் என்று

கடந்து செல்லும் அந்திக் காற்றில்

விட்டுவிடச் செல்கிறேன்

என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது

உன் நிழல்

வெளியே வெளியே தெரிந்தாலும்

நிழல்கள்

ஒளிந்திருப்பதற்கு

உடலைத் தவிர வேறு இடம்

ஏது

**

தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்

நிற்கிறாள் சிறுமி

கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது

மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்

சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன

அவள்

கண்ணுக்கு அடங்காமல்

கனரக வாகனங்கள் அவளைக்

கடந்து சென்றன

வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்

இன்னொரு பகலில் போய்க்

கொண்டிருக்கும் குண்டுப்பெண்

சிறுமியின் ஷூ லேஸ்

அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்

சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்

சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது

கொஞ்சம் புரியவில்லை.

*****

குனிந்து

எடுத்தேன்

வேப்பம்பூ என்னும்

பிரம்மாண்டமான கோட்டையை

வேறு எந்த

நெடியும்

உள்ளே புகமுடியாத

வீடு

அது.

வாசனை என்னும்

சுரங்கத்தின்

வெளிவழி நோக்கி

ராட்சசக் கழுகொன்று, என்னை

கவ்விக் கொண்டு பறக்கிறது.

கோட்டைக்குள்

பார்க்கவென்று

எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன

காதலின்

நடமாட்டம் ஒன்றைத் தவிர.

*****

0Shares
0