நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி.

லா.ச.ராவின் அபிதா இருக்கிறதா என்று அவர் நூலகரிடம் கேட்டபோது நான் திரும்பிப் பார்த்தேன்.

பொதுவாக நூலகரிடம் லா.ச.ராவின் புத்தகங்களைக் கேட்பவர்கள் அரிது.

பெரும்பாலும் பொன்னியின் செல்வன். சிவகாமியின் சபதம் கடற்புறாவைத் தேடுபவர்கள் தான் அதிகம். ஆனால் அந்த மனிதர் லா.ச.ராமாமிருதம் எழுதிய அபிதா புத்தகத்தைக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நான் தான் அந்தப் புத்தகத்தை இரவல் எடுத்துப் போயிருந்தேன்.

ஆகவே நூலகர் என்னைச் சுட்டிக்காட்டி அவர் இன்னமும் திருப்பித் தரலை என்று சொன்னார்.

உடனே அந்த மனிதர் என்னிடம் வந்து “படிச்சிட்டா ரிடர்ன் பண்ணிடுங்க. என் மக படிக்கணும்னு ஆசைப்படுறா“ என்றார்.

அவரை எனக்குத் தெரியும். அவர் சைக்கிளில் பூ விற்பவர். பல இடங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன்.

“இன்னும் படிச்சி முடிக்கலை“ என்று சொன்னேன்.

“ரிடர்ன் பண்ணும் போது வேற யாரும் எடுத்துட்டு போயிடப்போறாங்க. எப்போ ரிடர்ன் பண்ணுவீங்கன்னு சொன்னா அப்போ நான் வர்றேன்“ என்றார்.

பூ விற்பவர் லா.ச.ராமாமிருதம் படிப்பது வியப்பாக இருந்தது.

“உங்களுக்கு லாசராவை அவ்வளவு பிடிக்குமா“ என்று கேட்டேன்.

“நான் ஒரு கைநாட்டு. படிக்கத் தெரியாது. ஆனா என் மகள் படிப்பா. கல்யாணமாகி ரைஸ்மில் தெருவில் தான் குடி இருக்கா. கைக்குழந்தையை வச்சிகிட்டு வீட்டில் இருக்கிறவள். அதான் பகல்ல புக் படிச்சிட்டு இருப்பா“ என்றார்.

லாசராவின் வாசகர்கள் அபூர்வமானவர்கள். தேர்ந்த ரசனை கொண்டவர்கள். சொல் எண்ணிப் படித்துச் சந்தோஷம் கொள்கிறவர்கள். அதிலும் அவரது ரசிகைகள் விசேசமானவர்கள். ஆழ்ந்து படித்து லா.ச.ரா மீது பிரேமை கொண்டவர்கள். கிருஷ்ண பக்தி என்பார்களே அது போன்ற பக்தியது. அவர்கள் பேச்சில் லா.ச.ராவின் மொழி அப்படியே வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். வியந்து வியந்து லா.ச.ராவைப் பற்றிப் பேசுவார்கள். சிலருக்கு பேசிக் கொண்டிருக்கும் போது கண்ணீர் கசிந்துவிடும். அந்த அளவு நெருக்கமாக உணர்ந்திருக்கிறார்கள்.

பூக்காரரின் மகளுக்கு லா.ச.ரா பிடிக்கும் என்பது சந்தோஷம் அளித்தது. அந்தப் பெண்ணின் பெயரையோ என்ன படித்திருக்கிறார் என்றோ நான் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அன்று மாலையே அபிதாவை நூலகத்தில் திருப்பிக் கொடுத்தேன்.

“நீங்க படிச்சிட்டீங்களா“ என்று பூக்காரர் சந்தேகத்துடன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“ஏற்கனவே படிச்சிருக்கேன். லா.ச.ரா திரும்பத் திரும்பப் படிக்க வேண்டியவர். பிடித்தமான சங்கீதத்தை அடிக்கடி கேட்பது போல எப்போதும் வாசித்துக் கொண்டேயிருக்கலாம்“ என்றேன்.

“என் மகளும் அப்படித்தான் சொல்றா. அவளுக்கு வேற புத்தகம் ஒன்ணும் பிடிக்கலை. லா.ச.ரா புக் மட்டும் தான் படிக்கிறா. மகளுக்குக் கூட ஜனனினு தான் பேர் வச்சிருக்கா. புதுசா ஏதாவது லா.ச.ரா புக் வந்துருக்கான்னு கேட்டுகிட்டே இருக்கா. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க தம்பி“ என்றார்.

அப்போது தினமணிக்கதிரில் லா.ச.ராவின் சிந்தாநதி தொடராக வந்து கொண்டிருந்தது. அவரிடம் அதைப்பற்றிச் சொன்னேன்.

“தினமணிக்கதிரை இரவல் தரமாட்டாங்களே“ என்று ஆதங்கமாகக் கேட்டார்

“ஒரு வாரம் முடிந்தபிறகு கேளுங்கள் தருவார்கள்“ என்றேன்

“நீங்க கொஞ்சம் லைப்ரரியன் கிட்ட சொல்லுங்க“ என்றார்

“நிச்சயம் சொல்கிறேன்“ என்றேன். அதன் பிறகு ஒரு வாரம் முடிந்தவுடன் பழைய தினமணிக்கதிர் இதழை அவர் வாங்கிக் கொண்டு போவார். மகள் படித்து முடித்தவுடன் திரும்பக் கொண்டு வந்து தருவார்.

சிந்தா நதி தொடருக்கு உமாபதி வரைந்த ஓவியங்கள்  மறக்கமுடியாதவை.

யாரோ ஒரு பெண் வீட்டில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இத்தனை ஆசையாக லா.ச.ராவைப் படிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இது தான் உண்மையான வாசிப்பு. அந்தத் தந்தையிடம் பணமில்லை. ஒருவேளை கையில் நிறையப் பணமிருந்தால் அவளுக்காக அத்தனை லா.ச.ரா புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்துவிடுவார். அவர்களைப் போன்றவர்களுக்குத் தான் நூலகம் கைகொடுத்தது .

அதன் பிறகான நாட்களில் அந்தப் பூவிற்பவர் தன் சைக்கிளை நூலக வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதைக் கண்டாலே நான் லாசரா வருவதைப் போலவே உணர ஆரம்பித்தேன்.

எழுத்தாளர்களில் பலரையும் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ஆனால் லா.ச.ராவை ஒரு கூட்டத்தில் பார்த்ததோடு சரி. அவர் வீட்டிற்குச் சென்றதில்லை. நெருங்கிப் பேசியதில்லை. அந்த ஏக்கம் இன்றும் இருக்கிறது.

ஆனால் லா.ச.ராவின் மகன் சப்தரிஷியைச் சந்தித்திருக்கிறேன். நல்ல நண்பர். அற்புதமான மனிதர். தேர்ந்த வாசகர். அவர் தந்தையின் நினைவுகளை மிக அழகாக எழுதுகிறார். நேரில் சந்திப்பதற்கு முன்பாக லா.ச.ரா எழுத்துக்களின் மூலம் சப்தரிஷி அறிமுகம் ஆகிவிட்டார். லா.ச.ராவின் கதைகள் வழியே அவரது குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் நெருக்கமான உறவினர்கள் போல ஆகியிருந்தார்கள். அவர்களின் குலதெய்வம் உள்ளிட்ட அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்டன.

லா.ச.ரா எழுத்துகளில் ஒரு துளி வெறுப்புக் கிடையாது. துவேஷம் கிடையாது. எவரையும் பற்றிய புகாரும் கிடையாது. எளிய சொற்களைக் கூட மந்திரங்களாக்கிய மகத்தான படைப்பாளி. வாழ்வின் உண்மைகளைக் கவித்துவமாக எழுதியவர். எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் எழுதிக் கொண்டிருந்தவர். உலக அளவில் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர்.

என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது. சங்கீதம், ஓவியம், எழுத்து போன்ற எல்லாக் கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன? மௌனத்தை நோக்கித்தான். மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும்போது இடையில் திடீரென்று பேச்சு நின்றுவிடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்து போவது போல் இருக்கும். அதே சமயம், என்ன நேரப் போகிறதோ என்ற பயமும் இருக்கும். ஆனால், அனேக நேரங்களில், மௌனத்தை நோக்கிப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, எழுத்தாளன் நிறையப் பேசுகிறான். நான் நிறையப் பேசுகிறேன். ஒருவர் மனதைத் தொட்டு, ‘அட இது எனக்கு நேர்ந்ததாச்சே; இதை ஏன் என்னால் எழுத முடியவில்லை. இந்த ஆள் எழுதியிருக்கிறானே! என் மனதில் ஓசையை எழுப்புகிறானே’ என்று வாசகன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள்… அது போலான எழுத்தைத்தான் நான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன். என்கிறார் லா.ச.ரா.

இதை அவரது வாசகர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். லா.ச.ராவின் ஜாடை அவரது வாசகர்கள் முகத்திலும் இருக்கவே செய்கிறது.

எப்போதும் நூலகத்திற்குப் புதிய நூல்கள் வருவது மிகத் தாமதமாகவே செய்கிறது ஆகவே புதிய புத்தகங்களை உடனே படிக்க முடியாத நிலை வாசகர்களுக்கு ஏற்படுகிறது. சில நல்ல புத்தகங்கள் நூலகத்தால் வாங்கப்படுவதேயில்லை. ஏன் என்று ஒரு காரணமும் கேட்க முடியாது.

ஒரு முறை அப்படி என் புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டன. உடனே நூலகத் தேர்வு கமிட்டியிடம் சண்டைபோட்டேன். நிராகரிக்கபட்டுவிட்டால் காரணம் சொல்ல தேவையில்லை என்றார் நூலக ஆணைக்குழு தலைவர்.

சாகித்திய அகாதமி விருது வாங்கிய எனது சஞ்சாரம் நாவல் கூட நூலகத்திற்காக வாங்கப்படவில்லை என்பது தான் அவலம்.

நூலகத்திற்குப் புத்தகம் வாங்குவதில் நடக்கும் முறைகேடுகள் சொல்லி முடியாதவை. மாபெரும் ஊழல் நடக்கிறது. ஆனால் பொதுவெளியில் அதைப் பற்றி ஒரு கவனமும் இல்லை. ஒரு நீதிமன்ற வழக்குக் கிடையாது.

அமெரிக்க நூலகங்களில் ஏதாவது புத்தகம் கிடைக்கவில்லை என்றால் அது தேவை என்று வாசகர்கள் நூலகரிடம் எழுதித் தருகிறார்கள். நூலகம் அந்தப் புத்தகத்தை உடனே வாங்கி வைத்துவிடுகிறது. அது போலவே நூலகத்தில் விருப்பமான நூல்களுக்கு முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. நூல்கள் மட்டுமின்றி இசைத்தட்டுகள் டிவிடி போன்றவற்றையும் நூலகத்திலிருந்தே இரவலாகப் பெற்றுக் கொள்ளலாம். மாதம் ஒருமுறை நூலகத்தில் பழைய புத்தங்களை மலிவு விலையில் விற்பனையும் செய்கிறார்கள். ஒரு டாலர் இரண்டு டாலருக்கு மிக நல்ல புத்தகங்களை வாங்கிக் கொள்ளமுடியும்.

ஆனால் நமது நூலகங்களில் வாசகர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. தேவையான தகவல்களைச் சொல்வதற்குக் கூட ஆட்கள் கிடையாது. அரிதாகவே நூலகப் பணியாளர்கள் அக்கறையுடன் உதவி செய்கிறார்கள். உடைந்த நாற்காலிகள். குறைவான மேஜைகள். பெஞ்சுகள். அழுக்கான சுவர்கள் தான் பெருமளவு காணப்படுகின்றன. புத்தகப் பராமரிப்பு கேட்கவே வேண்டாம். நூலகச் சுவர்களில் கவிதைகளுடன் ஓவியம் வரைந்து அழகாக வைத்துக் கொள்ளலாம் தானே.

புதிய நூற்கட்டுகளை அவிழ்த்துப் பதிவேட்டில் பதிந்து நூலக அடுக்கில் வைப்பதற்கு ஓராண்டுக்கும் மேலாகிவிடுகிறது. தேவையான புத்தக ரேக்குகள் இல்லை. பணியாளர்கள் குறைவு என்பதே காரணம். ஒவ்வொரு நூலகமும் இது போன்ற பணிகளுக்குக் கல்லூரிகளுடன் இணைந்து தன்னார்வ தொண்டர்களை உருவாக்க வேண்டும். புத்தகக் கொடைகளையும் உருவாக்க வேண்டும்.

லா.ச.ராவை விரும்பி வாசிக்கும் அந்தப் பெண் ஒரு முறை கூட நூலகத்திற்கு வந்ததே கிடையாது. சிறு நகரங்களில் பெண்கள் நூலகத்திற்கு வருவது குறைவே. வருபவர்களும் அமர்ந்து வாசிக்கத் தனி இருக்கைகள் கிடையாது. கேலி செய்யப்படுகிறார்கள்.

ஆனால் இன்று அந்த நிலை மெல்ல மாறி வருகிறது. பெரிய நகரங்களில் நிறைய இளம்பெண்கள் நூலகத்திற்கு வருகிறார்கள். விருப்பமான புத்தகங்களைத் தேர்வு செய்து எடுத்துப் போகிறார்கள். ஆன்லைன் புத்தக அங்காடிகளில் தேடித்தேடி வாங்குகிறார்கள். நல்லதொரு மாற்றமிது. ஆனால் சிறுநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இன்றும் நூலகம் ஆண்களுக்கான உலகமாகவே இருக்கிறது என்பதே உண்மை.

லா.ச.ரா யார் என்றே தெரியாத அந்தப் பூவிற்பவர் தன் மகள் மூலம் கேட்டுக் கேட்டு லா.ச.ராவை மிக உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டாடினார். உலகம் அறியாமல் வளர்ந்த ஒரு பெண்ணுக்கு நல்லாசிரியன் போல லா.ச.ரா வழிகாட்டியிருக்கிறார் என்பது மகத்தான விஷயம்.

ஒரு முறையாவது அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அப்படிச் சூழல் இடம் தந்திருக்காது. சந்தித்து இருந்தாலும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்க முடியாது. படித்த புத்தகம் பற்றிப் பொதுவெளியில் ஆணும் பெண்ணும் மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் சூழல் உருவாவது கூடக் கனவு தான் போலும்.

எப்போது லா.ச.ராவின் புத்தகத்தை கையில் எடுக்கும் போதும் அந்தப் பூக்காரரின் மகள் நினைவிற்கு வந்து விடுகிறாள். அந்தப் பெண்ணின் மகள் ஜனனி இப்போது வளர்ந்து பெரியவளாகியிருக்கக் கூடும். அவள் தான் ஒரு லா.ச.ராவின் நாயகி என்று உணர்ந்திருப்பாள் தானே.

லா.ச.ராவைச் சந்திக்காமல் போன குறையைப் போக்குவதற்காகச் சப்தரிஷி அவர்களை ஒருமுறை அவரது வீடு தேடிப்போய்ச் சந்திக்க வேண்டும். அவர் வாயால் லா.ச.ரா பற்றிக் கேட்க வேண்டும்.

“நெஞ்சில் சின்னதாய் அகல் விளக்கை ஏற்றி வெச்ச மாதிரியிருந்தது“ என்று லா.ச.ராவின் பாற்கடலில் ஒரு வரி வருகிறது. அவரைப் படிக்கும் போது எப்போதும் அது போலவே உணர்ந்திருக்கிறேன்.

பூக்காரரின் மகளும் நிச்சயம் இதை உணர்ந்திருப்பாள்.

••

0Shares
0