மகாபாரதம் படிப்பது எப்படி

மகாபாரதம்  முழுமையாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதை எப்படித் துவங்குவது, என்ன புத்தகத்தை நீங்கள் சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார்,

இதே கேள்விகளை பல நேரங்களில் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறை பதில் சொல்லும் போது இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், இன்றைக்கு நண்பர் கேட்டதும் நான் பயின்ற வழிமுறைகளைத் தெரிவித்தேன்

மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் எதற்காகப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் அதைப்பொறுத்து தான் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும்

வெறும்கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஆறுமாத காலத்திற்குள் உங்களால் மகாபாரதத்தை வாசித்துவிட முடியும், ஆனால் மகாபாரதம் என்பது மாபெரும் இதிகாசம், அதன் நுண்மையான அம்சங்கள், கவித்துவ அழகு, அறச்சிந்தனைகள், ஊடாடும் பண்பாட்டு சிந்தனைகளை ஆழ்ந்து கற்க விரும்பினால் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகாலம் தேவைப்படும்,

காரணம் ஒவ்வொரு பருவத்தையும் புரிந்து கொள்ள மேலும் அதிகமாக வாசிக்க வேண்டியது வரும்,

என் வரையில் மகாபாரதம் என்பது வாழ்நாள் முழுவதும் வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டிய புத்தகம், அதை ஒரு போதும் வாசித்து முடிக்க இயலாது, ஒரு சிகரத்தைப் போல அதை ஏறுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நாம் முயற்சிக்க வேண்டும், அது தரும் வாசிப்பு அனுபவம் அலாதியான ஒன்று,

மகாபாரதம் பதினெட்டு பருவங்களைக் கொண்டது,மொத்தமாக பதிமூன்று ஆயிரத்தில் இருந்து பதினைந்தாயிரம் பக்கம் வரக்கூடியது, இதற்கு காரணம் சில பதிப்புகளில் கிளைகதைகள் துண்டிக்கபட்டிருக்கின்றன,  கிரேக்க காப்பியங்களை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம்,  மகாபாரத கதாபாத்திரங்களை அறிந்து கொள்வதற்காக  பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ள who is who in the Mahabharata-  subash Mazumdar என்ற சிறிய நூலை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்

ஆரம்பநிலையில் மகாபாரதம் படிக்க விரும்புகின்ற பலரும் ராஜாஜியின் வியாசர் விருந்தினைத் தேடி வாசிக்கிறார்கள், இது மிகவும் சுருக்கப்பட்ட மகாபாரதம், பிளாஸ்டிக்கில் செய்த தாஜ்மகால் பொம்மை போன்றது, ஒரிஜினல் மகாபாரதம் முழுமையாகத் தமிழில் வெளியாகி உள்ளது, அதைக் கும்பகோணம் பதிப்பு என்பார்கள், இந்தப் பதிப்பு வாசிக்க சற்றே சிரமம் தரக்கூடியது, காரணம் அதன் மணிப்பிரவாள நடை,

இதை வாசிப்பதற்கு முன்னதாக மகாபாரதம் வாசிப்பதற்கென சில எளிய வழிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்

மகாபாரத மூலப்பிரதியை வாசிப்பதற்கு அடிப்படையாக நான்கு முக்கிய வழிகளை கைக்கொள்ள வேண்டும்,

ஒன்று மகாபாரதம் சார்ந்த எளிய கதைசுருக்கங்களை, நாட்டார்கதைகளை வாசித்துவிடுவது,

இரண்டாவது மகாபாரதம் பற்றிய புனைகதைகள், நாவல்கள், மறுஉருவாக்கங்கள், நாடகங்களை வாசிப்பது,

மூன்றாவது மகாபாரதம் குறித்த ஆய்வுகள், விமர்சனக் கட்டுரைகள், தத்துவ உரைகள் போன்றவற்றை வாசிப்பது,

நான்காவது நிகழ்த்துகலைகளான நாடகம், கூத்து, சினிமா போன்றவற்றிலும், சடங்குகளிலும், ஒவியம் சிற்பம்  போன்ற நுண்கலைகளிலும் மகாபாரதம் எப்படி இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வது, இந்த நான்கு வழிகளில் ஊடாடித் தான் மூலநூலை வாசிக்க முடியும்

ஒருவேளை நீங்கள் நேரடியாக மூலநூலை வாசிக்க ஆரம்பித்தால் கூட மேற்சொன்ன வழிகள் உங்களுக்குப் பின்னால் தேவைப்படக்கூடும்

மகாபாரதம் படிப்பதற்கு முன்பு சில அடிப்படை எண்ணங்களை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்

1)       ஒரே மூச்சில் மகாபாரதம் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்,

2)       மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்

3)       மகாபாரதம் வாசிக்கையில் அது என்றோ நடந்த உண்மையா, அல்லது கற்பனையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டேயிருக்கும், அந்தக் கேள்விக்கான விடையைச் சற்று தூர வைத்துவிட்டு புத்தகத்தை படித்துக் கொண்டு செல்ல வேண்டும்

4)       மகாபாரதம் பண்டைய இந்தியாவில் நடைபெறும் கதை, ஆகவே அன்றுள்ள நிலவெளி, அதன் ஆறுகள், மலைகள், இனக்குழுக்களின் வரலாறு ஆகியவற்றின் எளிய அறிமுகம் அவசியம் தேவை

5)       மகாபாரதம் ஒரு புனித நூல் என்ற எண்ணத்துடன் படிக்க அணுக வேண்டாம், அது ஒரு மாபெரும் காப்பியம், இந்தியாவின் மாபெரும் நினைவுத்திரட்டு, ஒரு சமூகம் தனது நினைவுகளை கதைவடிவமாக மாற்றி வைத்திருக்கிறது, ஆகவே நாம் பல்வேறு நினைவுகளின் ஊடே சஞ்சாரம் செய்கிறோம் என்பதே வாசிப்பதற்கான தூண்டுதல்.  பகவத்கீதையை எப்போதுமே தனியாக வாசிப்பதே சிறந்த ஒன்று

6)       மகாபாரதம் படிப்பதை விடவும் வாசித்துக் கேட்பது முக்கியமானது, அதற்கு ஒரு ஆசான் தேவை, நான் அறிந்தவரை  வில்லிபுத்தூரார் பாரதத்தை கரைத்துக்குடித்தவர் பேராசிரியர் ஞானசம்பந்தம், அவரை நாம் நகைச்சுவை பேச்சாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர் சிறந்ததொரு மகாபாரத வல்லுனர், அவரைப் போல தேர்ந்த ஆசான் ஒருவர் வாசிப்பிற்கு துணை செய்ய அவசியம், அல்லது சமஸ்கிருதம் அறிந்த ஒரு அறிஞரின் துணை அவசியமானது

7)       மகாபாரதம் படிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது நாம் முன்பு கேட்டு அறிந்துள்ள அறைகுறையான மகாபாரதக் கதைகள் மற்றும் சம்பவங்கள், அந்தக் கதை இல்லையே, இந்தக் கதாபாத்திரம் அப்படி நடந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி சதா மனதிற்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும், அதையும் ஒரங்கட்டிச் செல்லுங்கள்

8)       மகாபாரதத்தை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டே போவது தான் சிறந்த வழி, அதற்கு முதலில் எளிமையாக ஒருமுறை அதன் கதையை வாசித்துவிடுங்கள், இது போன்ற எளிய அறிமுகத்திற்கு தேவதூத் பட்நாயக் எழுதிய ஜெயம் / விகடன் பிரசுர வெளியீடு, அமர் சித்ரா கதா காமிக்ஸ், மற்றும் பெரிய எழுத்து மகாபாரதக் கதை உதவக்கூடும்,

9)       அதன்பிறகு கே எம் முன்ஷி எழுதிய கிருஷ்ணா அவதார தொகுதிகள்

வாசிக்கலாம், இது எட்டு தொகுதிகள், பாரதிய வித்யாபவன் வெளியிட்டுள்ளது

Dr. K.M. Munshi – Krishnavatara I: The Magic Flute. Krishnavatara II: The Wrath of an Emperor Krishnavatara III: The Five Brothers,Krishnavatara IV: The Book of Bhima, Krishnavatara V: The Book of Satyabhama‘, Krishnavatara VI: The Book of Vedavyaasa The Master, Krishnavatara VII: The Book of Yudhishthira, Krishnavatara VIII: The Book of Kurukshetra (incomplete) இந்த தொகுதிகள் தமிழில் வெளியாகி உள்ளன

10)   அதன் பிறகு உரையுடன் கூடிய வில்லிபுத்தூரார் பாரதம், மற்றும் நல்லாம்பிள்ளை பாரதம் இரண்டினையும் வாசிக்க வேண்டும், நல்லாப்பிள்ளை பாரதம் கி.பி. 1888இல் வெளியானது, , 2007ல் புதிய மறுபதிப்பு வந்துள்ளது,  அரவான் களப்பலி வியாச பாரதத்தில் கிடையாது, ஆனால் நல்லாம்பிள்ளை மற்றும் வில்லிபாரத கதைகளில் உள்ளது, ஆகவே இது போன்ற தமிழகம் சார்ந்த கிளைக்கதைகளுக்காக இவை அவசியம் வாசிக்கப்பட வேண்டும், கூடுதலாக விருப்பமுள்ளவர்கள் பெரிய எழுத்து பவளக்கொடி, அல்லிஅரசாணி மாலை போன்ற நூல்களை வாசிக்கலாம்

11)   மகாபாரதத்தை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புகின்றவர்கள் Kisari Mohan Ganguli, பதிப்பை வாசிக்கலாம், இது பழமையான ஆஙகில மொழியாக்கம், ஆனால் மூலத்தோடு நெருக்கமாக உள்ளது, இந்த பதிப்பு முழுமையாக இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது, Mahabharata with commentary of Nilakantha – Gopal Narayan and Co., Bombay என இன்னொரு பதிப்பும் ஆங்கிலத்தில் உள்ளது , எளிமையான வாசிப்பிற்கு R. K. Narayan சுருக்கமாக வெளியிட்டுள்ள The Mahabharata வாசிக்கலாம். Dr. P. Lal  கவிதை நடையில் ஒரு மொழியாக்கம் செய்திருக்கிறார்.

12)   எம்.வி. வெங்கட்ராமின் “நித்யகன்னி, எஸ் எல் பைரப்பா எழுதிய கன்னட நாவலான பர்வா, காண்டேகரின் யயாதி, எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், பிகே பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், பிரதிபா ரேயின் யக்ஞசேனி, வங்காள நாவலான சாம்பன், இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, கிருஷ்ணா, சோ வின் மகாபாரதம்,  நா, பார்த்தசாரதியின் அறத்தின் குரல், சிவாஜி சாவந்தின் மிருத்யுஞ்சய் என்ற கர்ணன் நாவல். ஜெயமோகன் எழுதிய, பத்மவியூகம், வடக்கு முகம், பதுமை, சஷி தரூர் எழுதிய, Great Indian Novel,  பாலகுமாரன் எழுதிய பீஷ்மர், சித்ரா பானர்ஜி திவாகருனியின் The Palace Of Illusions, மற்றும்  பாஷனின் உறுபங்கம், தாகூரின் சித்ராங்கதா, பாரதி எழுதிய பாஞ்சாலி சபதம், பி எஸ் ராமையாவின் தேரோட்டி மகன், எம் வி வெங்கட்ராமின் மகாபாரத பெண்கள், இத்துடன் எனது நாவல் உப பாண்டவம் போன்றவற்றைப்  படிக்கலாம்

13)   கட்டுரைகளில் ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தா, குருசரண் தாஸ் எழுதிய The Difficulty of Being Good. Gender and Narrative in the Mahabharata,Brodbeck & B. Black (ed.): Routledge. Reflections and Variations on the Mahabharata, -T.R.S.Sharma, Sahitya Akademi. Great Golden Sacrifice of The Mahabharata– Maggi Lidchi Grassi . Rethinking the Mahabharata: A Reader’s Guide to the Education of the Dharma King by Alf Hiltebeitel.  The Questionable Historicity of the Mahabharata,  by SSN Murthy.  யட்சப் பிரசனம், விதுரநீதி, போன்றவற்றை படிக்கலாம்

14)   இதுபோலவே பீட்டர் புரூக்கின் மகாபாரதம் நான்குமணி நேரம் ஒடக்கூடிய திரைப்படம், இதற்குத் திரைக்கதை எழுதியவர் ஜீன் கிளாடே கேரியர், இது மகாபாரதம் பற்றிய நமது மரபான எண்ணங்களை மாற்றி அமைக்க கூடியது

15)   பதினெட்டு நாள் தெருக்கூத்தினை முழுமையாகப் பார்க்க முடிந்தால் மக்கள் மனதில் மகாபாரதம் எப்படி உள்ளது என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடியும், நான் தெருக்கூத்து குழுவோடு ஒன்றரை மாதம் உடன் தங்கி அலைந்திருக்கிறேன்,

16)   இது போலவே தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த பிஆர் சோப்ராவின் மகாபாரதம் வெங்கட் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகி உள்ளது, இது வாசிக்க சுவாரஸ்யமான புத்தகம், தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் Rahi Masoom Reza என்ற இஸ்லாமிய அறிஞர், கவித்துவமான உரையாடல்களை எழுதியிருக்கிறார்

17)   இதன் பிறகு மகாபாரத மூலநூலை வாசிக்க முயல வேண்டும், அதற்கு சிறந்த புத்தகம் கும்பகோணம்  ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு, இது நேரடியாக சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது,  இதை கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் மறு பதிப்புரிமை பெற்று  வெளியிட்டார். இந்த மொழி பெயர்ப்பு பதினெட்டு பாகங்களாக, பதினெட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன; 1. ஆதி பர்வம் 2. ஸபா பர்வம் 3. வன பருவம் 4.விராட பருவம் 5. உத்யோக பருவம் 6.பீஷ்ம பர்வம் 7.துரோண பருவம் 8. கர்ண பர்வம் 9. சல்ய பருவம் 10. சாந்தி பருவம் 11. அனுசாஸன பர்வம் 12. ஸ்த்ரீ பர்வம் 13.ஆச்வதிக பர்வம் 14 மௌஸலை பர்வம் 15 சௌப்திக பர்வம் 16. மஹாப்ரஸ்தானிக பர்வம் 17.ஆச்ரமவாஸிக பர்வம் 18. ஸ்வர்க்கா ரோஹண பர்வம்.

பெரும்பான்மையான மகாபாரத பர்வங்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் கும்பகோணம் ஸ்ரீநிவாஸாசாரியார் உத்யோக பர்வம் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரிகளாலும் விராடபருவம் கும்பகோணம் அ.வேங்கடசாசாரியாராலும். சாந்தி பர்வம் பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மகாபாரதம் வெளியிடுவதில் இராமானுஜாசாரியார் மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார், 1930களில் மகாபாரதம் வெளியிடுவதற்கு பதினைந்து ஆயிரம் பணத்தை இழந்திருக்கிறார், அன்று ஒருவரின் மாத சம்பளம் 60 ரூபாய், மகாபாரதத்திற்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர் இராமானுஜாசாரியார்

அன்று  மகாபாரதப் பதிப்புகள் முன்வெளியீட்டு திட்டத்தில் விற்கபட்டிருக்கின்றன, ஆகவே இன்றும் தஞ்சை, திருச்சி, கும்பகோணம் பகுதி பழைய புத்தக கடைகளில் மகாபாரத பதிப்புகள் பழைய புத்தகமாக கிடைக்கின்றன, நானும் கோணங்கியும் அப்படி தேடித்தேடி முழுமையான மகாபாரதத் தொகுதிகளை சேகரித்து வைத்திருக்கிறோம்

கும்பகோணம் மகாபாரதப் பதிப்பு இன்று  விற்பனைக்கு கிடைக்கின்றது

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

S.Venkataramanan

Sri Chakra Publications.

9/135 Nammalwar street, East tambaram, Chennai.

Ph: +91 9894661259

மொத்த விலை ரூ4500,

**

மனிதர்கள் தனக்கு உரிமையானதை விட்டுக் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை பல்வேறு நிலைகளில் விளக்குவதே ராமாயணம், விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்குவதே மகாபாரதம், இரண்டும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையே கவனப்படுத்துகின்றன

••

இதிகாசங்கள் பெருங்கடலைப் போன்றவை, அதன் வெளித்தோற்றம் ஒரு விதமாகவும் உள்கட்டுமானம் விரிந்து கொண்டே போவதாகவும் இருக்கும், இதிகாசங்களை புரிந்து கொள்ள கற்பனை மிக அவசியமானது,

••

ஒரு கதாபாத்திரம் கூட தேவையின்றி இடம் பெற்றிருக்காது, ஆகவே இதில் இடம் பெற்றுள்ள சிறுகதாபாத்திரங்கள் கூட தனித்து ஒளிரக்கூடியவர்களே

••

மகாபாரதம் எனும் கதைக்கு முதுகெலும்பாக இருப்பவர் பீஷ்மர், அவர் தான் கதையின் மையவிசை, அவர் ஒருவருக்குத் தான் சமமான எதிர்கதாபாத்திரம் கிடையாது,

••

நிறைய இடைச்செருகல்கள் கொண்டது மகாபாரதம் என்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதில் புதிது புதிதாக கிளைக்கதைகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன,

•••

மகாபாரதம்  வாசிக்க விரும்புகிறவர் ஒருமுறை கங்கையை முழுமையாக பார்த்து கடந்து வர வேண்டும், அப்போது தான் மகாபாரத நிலவியலை உள்வாங்கிக் கொள்ள முடியும்

••

திரைக்கதை ஆசிரியர்கள் தங்கள் கையிலே வைத்திருக்க வேண்டிய புத்தகம் மகாபாரதம் என்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர், காரணம் அத்தனை திரைக்கதை உத்திகள், முடிச்சுகள் உள்ளன, எம்டி வாசுதேவன் நாயர் வைஷாலி என மகாபாரத கிளைக்கதை ஒன்றினைத் திரைக்கதையாக எழுதியிருக்கிறார், சிறந்த படமது, கர்ணன், மாயாபஜார், வீர அபிமன்யூ, ஆகிய மூன்றும் மகாபாரதம் தொடர்புடைய தமிழ் படங்கள், மூன்றிலும் மிகை அதிகம்

••

ஷேக்ஸ்பியருக்கு புதிய பதிப்புகள் வருவது போல யாராவது முழுமையான ம்காபாரதத்தை புதிய மொழியில் அழகிய பதிப்பாக கொண்டுவந்தால் நிச்சயம் அது பெரிய வரவேற்பைப் பெறும்,  என் விருப்பம் இந்தப் பணியை எழுத்தாளர் பிரபஞ்சன் மேற்கொள்ள வேண்டும் என்பது. அதற்கு யாராவது முழுமையாக நிதிஉதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்

••

0Shares
0