மும்பை இலக்கிய விழா

கடந்த மூன்று நாட்களாக மும்பை கேட்வே லிட்பெஸ்டிவலில் கலந்து கொண்டிருந்தேன். இந்தியா முழுவதுமிருந்து முக்கிய எழுத்தாளர்கள் பலரும் வந்திருந்தார்கள். இந்திய இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து நான்கு முக்கிய அமர்வுகள் நடைபெற்றன.

NCPA அரங்கம் மிக அழகானது. பல்வேறு நாடக அரங்குகளை ஒன்றாகக் கொண்ட வளாகமது. அமர்வில் விவாதித்ததை விடவும் அரங்கிற்கு வெளியே எழுத்தாளர்களுடன் கூடிப் பேசி ஒன்றாக நாளைக் கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்விற்கு வந்திருந்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து உரையாடினேன். மலையாள எழுத்தாளர் உண்ணி, பத்திரிக்கையாளர் சசிகுமார், ஏ.ஜே.தாமஸ், சித்தன்சு யஷ்ஷஸ்சந்திரா போன்றவர்களுடன் உரையாடியது மறக்கமுடியாதது.

இந்தியாவின் பிற மொழி இலக்கியங்களின் போக்கினையும், சமகால எழுத்துகளையும் அறியும் போது தமிழ் இலக்கியமும் சமகால எழுத்துகளும் மிக உயர்வான நிலையில் இருப்பதை உணர முடிந்தது.

நாம் பேசிக் கொண்டிருக்கின்ற சர்வதேச இலக்கியங்களை அவர்கள் அறிந்திருக்கவேயில்லை. ரஷ்ய இலக்கியங்களின் மீது நாம் காட்டும் ஈடுபாடு வேறு எந்த மொழியிலும் இவ்வளவு தீவிரமாக இல்லை.

தமிழின் நவீன கவிதைகள், சிறுகதைகளில் காணப்படும் பல்வேறுவிதமான இலக்கியப்போக்குகள். தனித்த ஆளுமைகள். புதிய கருப்பொருட்கள், பரிசோதனை முயற்சிகள் மற்ற மொழிகளில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நான் பேசிக் கொண்டிருந்த எழுத்தாளர்களில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர்களுக்கு மட்டுமே போர்ஹெஸ், மார்க்வெஸ், நெரூதா, எலியட், பாமுக், காப்கா, முரகாமி போன்ற சர்வதேச எழுத்தாளர்களைத் தெரிந்திருக்கிறது. அவர்களுக்கும் கூட மரியோ வர்கஸ் லோசா, இதாலோ கால்வினோ, எட்வர்தோ கலியானோ, மோ யான், கவாபத்தா, மிலன் குந்தேரா, கோ யுன், பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. இவர்கள் பெயர்களைக் கூட கேள்விபட்டதில்லை என்கிறார்கள். வேறு இந்திய மொழிப்படைப்புகளில் தாகூரையும், பிரேம்சந்தையும் பற்றியே இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் மொழியில் உலகக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு வெளியாகியுள்ளதா எனக் கேட்டபோது பலரும் இல்லை என்றே சொன்னார்கள்.   நாம் அஸ்ஸாமின் இந்திரா கோஸ்வாமி எழுதிய தென்காமரூபத்தின் கதையை வாசிக்கிறோம்.ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் என்ற ஜார்கண்ட்டினைச் சேர்ந்த ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் கதைகளை வாசிக்கிறோம். ஆனால் அஸ்ஸாமிய எழுத்தாளரோ, ஒடியா எழுத்தாளரோ எந்த தமிழ் எழுத்தாளரையும் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதே நிஜம்.

கன்னட எழுத்தாளர் H S சிவப்பிரகாஷ் சமகாலத் தமிழ் படைப்புகளை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். அவர் கண்ணகி பற்றி மூன்று நாடகங்களை எழுதியிருக்கிறார். சர்வதேச இலக்கியங்களை ஆழ்ந்து கற்றிருக்கிறார். இந்திய இலக்கியம் குறித்த அவரது பார்வைகள் மிகச்சிறப்பானவை. அரங்கில் அவரைச் சந்தித்து உரையாடியதும் அவருடன் ஒரே அமர்வில் பங்குபெற்றதும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது

மலையாளத்திலும் உருதுவிலும் நமக்கு இணையாக மொழியாக்கங்கள் வெளியாகின்றன. நாவல் மற்றும் நவீன கவிதையில் புதிய எழுத்துப் போக்குகள் உருவாகியுள்ளன.

நாம் 1970-80 களில் பேசிய, எழுதிய விஷயங்களைத் தான் ஒடியா, குஜராத்தி ராஜஸ்தானி, பஞ்சாபி, அஸ்ஸாமி போன்ற மொழிகளில் தற்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தமிழ் இலக்கியம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை இவர்களுடன் நடந்த உரையாடலில் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

குறிப்பாகத் தமிழின் நவீன கவிதை, மற்றும் சிறுகதை கடந்த ஐம்பது ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை, தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது.

ஆனால் அப்படைப்புகள் இந்திய அளவில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. வேறு இந்திய மொழிகளுக்கு அறிமுகமாகவில்லை. இன்றும் அவர்கள் பாரதியும் ஜெயகாந்தனையும் மட்டுமே அறிந்திருக்கிறார்கள்.

தமிழின் சங்க இலக்கியம் பற்றியோ, ப.சிங்காரம், தி.ஜானகிராமன் . கி. ராஜநாராயணன். கு. அழகிரிசாமி, வண்ணநிலவன், பூமணி, கோபி கிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன், பிரமீள், நகுலன் பற்றியோ, ஆத்மநாம், தேவதச்சன், சுகுமாரன், சங்கர ராம சுப்ரமணியன் குறித்தோ ஒரு வார்த்தையும் அறிந்திருக்கவில்லை.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் இந்தியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டால் எளிதாகப் பஞ்சாபி. குஜராத்தி, அஸ்ஸாமி, சிந்தி போன்ற மொழிகளுக்குச் சென்றுவிடும் என்று ஆலோசனை சொல்கிறார்கள்.

எனது அமர்வில் சமகால ஈழத்தமிழ் படைப்புகளில் போரின் பாதிப்புகள் மற்றும் அகதி வாழ்க்கை பற்றி மிகக் காத்திரமாக எழுதப்பட்டுள்ளது என்று தெரியப்படுத்திய போது இப்படி எல்லாம் எழுதுகிறார்களா என வியப்போடு கேட்டார் ஒரு இந்தி எழுத்தாளர்.

மராத்தியிலும் வங்காளத்திலும் மலையாளத்திலும் சுயசரிதை, அரசியல் கட்டுரைகள், நாடகங்கள், பயணநூல்கள் அதிகம் எழுதப்படுகின்றன. அது போன்ற படைப்புகள் தமிழில் குறைவாகவே உள்ளன. குறிப்பாகத் தலித் சுயசரிதைகள், நவீன நாடகங்கள் தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. பெருநகர வாழ்க்கை சார்ந்த படைப்புகள் தமிழில் குறைவாகவே உள்ளது. உலக அளவில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள். சமூகப்பிரச்சினைகள். இந்தியாவின் சமகாலப்பிரச்சனைகள் பற்றிய கட்டுரை நூல்கள் தமிழில் எழுதப்படுவதும் குறைவே.

இந்தியா முழுவதுமே சிறார் இலக்கியம் குறைவாகவே எழுதப்படுகிறது.. ஆங்கிலத்தில் எழுதும் சிறார் கதைகள் மட்டுமே பெருமளவு விற்பனையாகின்றன என்கிறார்கள் பதிப்பாளர்கள்

புத்தகங்களை விநியோகம் செய்வதிலும், கவனப்படுத்துவதிலும் மலையாள பதிப்பகங்கள், மலையாள எழுத்தாளர்கள் காட்டும் அக்கறை மற்றும் முயற்சிகள் வேறு எந்த இந்திய மொழியிலும் இல்லை.

ஒரு அமர்வில் தனது நாவலின் பகுதி ஒன்றை ஒரு எழுத்தாளர் வாசித்துக் காட்டினார். அதில் பேருந்தில் பயணம் செய்யும் இளம் பெண்ணை ஒருவன் இடிக்கிறான். அவள் தான் ரகசியமாக மறைத்து வைத்த ஊசியைக் கொண்டு அந்த ஆணை குத்துகிறாள். அவன் வலி தாங்க முடியாமல் அலறுகிறான். இந்த நாவலை மிக முக்கியமான பெமினிஸ்ட் நாவல் என்று புகழாரம் சூட்டுகிறார்கள். இதை விடக் காத்திரமாகப் பெண்கள் பிரச்சனையைப் பேசும் எத்தனையோ படைப்புகள் தமிழில் உள்ளன. ஆனால் அவர்கள் இந்திய இலக்கியத்தில் கொண்டாடப்படவில்லை

பதிப்புத்துறை சார்ந்த பிரச்சனைகளைப் பேசும் அமர்வில் எல்லா இந்திய மொழிகளிலும் தீவிரமான இலக்கியப்படைப்புகள் குறைவாகவே விற்பனை ஆகின்றன என்பதை அறிய முடிந்தது. மலையாளத்தில் மட்டுமே இலக்கிய நூல்களின் விற்பனை அதிகமாகவுள்ளது. மற்றபடி தமிழைப் போலவே ஒரு நாவல் ஒரு ஆண்டில் ஆயிரம் பிரதிகள் விற்பது பெரிய சவாலே.

இந்தியாவெங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதியின் மனைவி, பல்கலைக்கழகத் துணைவேந்தர், பிரபல தொழில் அதிபரின் மகள், தொலைக்காட்சி நடிகர் போன்றவர்கள் எவ்வித இலக்கியப் பரிச்சயமின்றித் திடீரென எழுத்தாளராக உருமாறி முக்கிய விருதுகளைத் தட்டிக் கொண்டு போகிறார்கள். இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு நான்கு நாவல் எழுதியிருக்கிறேன். இருபது விருதுகள் பெற்றிருக்கிறேன். இதுவரை 15 நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன் என்று கான்வென்ட் ஆங்கிலத்தில் பெருமை பேசுகிறார்கள். இந்திய இலக்கியம் இவர்கள் பிடியில் சிக்கித் தவிப்பது வேதனைக்குரியது.

எனது அமர்வில் நவீனத் தமிழ்க் கவிதை, சிறுகதை அடைந்துள்ள சிறப்பான வளர்ச்சி பற்றிப் பேசினேன். நாஜிக் கொடுமையால் யூத இனம் அழிக்கப்பட்டதன் நினைவாக எழுதப்படும் HOLOCAUST LITERATURE போல ஈழத்தமிழ் படைப்புகள் தனித்துவமிக்க இலக்கியமாக வளர்ந்து வருகிறது என்பதை விவரித்தேன்.

தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படும் இலக்கியமில்லை. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலக அளவில் தமிழர்களால் எழுதப்படும் இலக்கியமாகும். இவை நாளை ஒரே குடையின் கீழே ஒன்றாகிவிடும். அப்போது தமிழ் இலக்கியம் சர்வதேச இலக்கியத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் என்று கூறினேன்.

இது போலத் திருநங்கைகள் எழுதத் துவங்கியிருப்பதையும்,பேப்பர் பேனா அறியாத ஒரு இளந்தலைமுறை கணிணி, செல்போன் கீபோர்ட் வழியாக எழுத ஆரம்பித்து டிஜிட்டலில் புத்தகம் வெளியிடும் விதம் பற்றிப் பேசினேன்.

தமிழ் அடையாளம், பழந்தமிழ் இலக்கியங்கள், தமிழக வரலாறு பற்றி இன்று உருவாகி வரும் கவனம் குறித்தும், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சிகள், நூலகங்களில் நடைபெறும் புத்தக அறிமுக நிகழ்ச்சிகள் பற்றியும் எடுத்துச் சொன்னேன்.

இதிகாசங்களை ஏன் மீள் வாசிப்புச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மறைக்கப்பட்ட வரலாற்றை அறியச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கேள்விபதில் நிகழ்வில் பேசினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

என்னைத் தொடர்ந்து வாசிக்கிற இளைஞர்கள் பலரும் நிகழ்விற்கு வந்திருந்தார்கள். மும்பையிலுள்ள தமிழ் படைப்பாளிகள் எவரும் இந்த இலக்கிய விழாவிற்கு வரவில்லை. மொழிபெயர்ப்பாளர் எத்திராஜ் அகிலன் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது.

நவீனத் தமிழ் இலக்கியம் இந்தியாவின் பிறமொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். தொடர்ந்து அப்பணி நடைபெற்றால் உலக அளவில் தமிழ் இலக்கியம் பெரும் கவனம் பெரும் என்பதே நிஜம்.

17.2.20

0Shares
0