Miss Hokusai என்ற அனிமேஷன் படத்தைப் பார்த்தேன். ஜப்பானின் புகழ்பெற்ற ஓவியரான கட்சுஷிகா ஹொகுசாயின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை அவரது மகள் ஓயியின் பார்வையில் விவரித்திருக்கிறார்கள்.
ஹொகுசாய் குறித்து ஜப்பானில் வெளியான கறுப்பு வெள்ளை திரைப்படம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். ஹொகுசாயின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஜப்பானுக்குச் சென்ற போது நேரிலே பார்த்திருக்கிறேன்.
இந்த அனிமேஷன் படத்தின் தனிச்சிறப்பு அவரது ஓவியங்களை அப்படியே மறு உருவாக்கம் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது எளிதான வேலையில்லை. ஒட்டு மொத்த படமும் ஹொகுசாய் பாணியிலே உருவாக்கப்பட்டிருக்கிறது. வண்ணங்களும் கதாபாத்திரங்களின் உருவாக்கமும் மிகச்சிறப்பாகவுள்ளன.
இது 1814ல் கதை நடக்கிறது படத்தின் ஆரம்பக் காட்சியில் ஜப்பானின் தலைநகரான எடோவில் கிமோனோ உடையணிந்த இளம் பெண் ஓயி நெரிசலான பாலத்தின் குறுக்கே நடந்து செல்கிறாள். ஓரிடத்தில் நின்றபடியே தனது தந்தை ஹொகுசாய் பற்றி அவள் சொல்லத்துவங்குகிறாள்.
அப்போது ஓயிக்கு வயது 23 அவளது பெற்றோர் விவாகரத்துப் பெற்றவர்கள். ஆகவே அவள் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தந்தையோடு கழிக்கிறாள் அவளது தங்கை ஓ-நாவோ பார்வையற்றவள். காப்பகம் ஒன்றில் வளர்க்கப்படுகிறாள். அவளை ஒயி மிகவும் நேசிக்கிறாள்.
தந்தையிடமிருந்தே ஒயி ஓவியம் கற்றுக் கொள்கிறாள். தந்தையின் பாணியை அப்படியே பின்பற்றுவதால் அவளைச் சிறந்த ஓவியராக மற்றவர்கள் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அது அவளைக் கோபம் கொள்ள வைக்கிறது. தான் மிகச்சிறந்த ஓவியர் என்பதை உலகமறியச் செய்ய அவள் போராடுகிறாள். வீடு முழுவதும் வண்ணங்களும் தூரிகைகளையும் வரைந்து போட்ட ஓவியங்களுமாக. குப்பையாகக் கிடக்கும் சிறிய வீட்டிற்குள் அவளும் தந்தையும் நாளெல்லாம் ஓவியம் வரைகிறார்கள்.
இன்னொரு காட்சியில் வீட்டில் நாங்கள் சமைக்க மாட்டோம், சுத்தம் செய்ய மாட்டோம், வீடு மிகவும் அழுக்காகிவிட்டால், நாங்கள் வெளியே தங்கிக் கொள்வோம். எங்களிடமிருப்பது ”இரண்டு தூரிகைகள் மற்றும் நான்கு சாப்ஸ்டிக்ஸ் என்கிறாள் ஒயி.
இரவில் தந்தை குடிப்பதற்காக வெளியே செல்கிறார். பின்னிரவில் மிகுந்த போதையில் வீடு திரும்புகிறார். ஒயி காப்பகத்தில் வசிக்கும் பார்வையற்ற சகோதரியைப் பார்ப்பதற்காக அடிக்கடி வெளியே சென்று வருகிறாள். அப்போது ஒரு நாள் பாலத்தில் தற்செயலாக ஒரு ஓவியரைச் சந்திக்கிறாள். அவருடன் பழக ஆரம்பிக்கிறாள். வாழ்க்கை அனுபவத்திற்கும் கலைத்திறனுக்கும் இடையில் ஒயி அலைக்கழிக்கப்படுகிறாள். அந்த ஊசலாட்டமே படத்தின் மையப்புள்ளி.
ஹொகுசாய் தனித்த ஓவியங்கள்., நாவல்கள் மற்றும் கதைகளுக்கு வரைந்த சித்திரங்கள். கோட்டோவியங்கள். பாலின்ப புத்தகங்களுக்கு வரைந்த ஓவியங்கள், சிற்றின்ப ஓவியங்கள் என முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
சுய்கோ-காடன், என்ற நூலின் தொண்ணூறு தொகுதிகளுக்கும் அவர் படம் வரைந்திருப்பது ஒரு சாதனை.. ஓவியத்தின் எல்லாவித வெளிப்பாட்டு முறைகளையும் ஹொகுசாய் கையாண்டு பார்த்திருக்கிறார். இயற்கை ஓவியங்களை இவர் போல நுட்பமாக வரைந்தவர் அபூர்வம்.
ஹொகுசாய் 1760 இல் எடோவில் பிறந்தார் அவரது தந்தை ஒரு கண்ணாடி வடிவமைப்பாளர் ஈடோவிலிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஹொகுசாய். புத்தகங்களை வடிவமைப்புச் செய்வது மற்றும் கதைகளுக்குப் பொருத்தமான சித்திரங்கள் வரைவதே அவரது வேலை. அந்த நாட்களில் மரச்செதுக்கு முறையில் பிளாக் செய்யப்பட்டு அதைக் கொண்டே சித்திரங்கள் அச்சிடப்பட்டன.
ஆகவே ஹொகுசாய் மரச்செதுக்குக் கலையில் தீவிர ஆர்வம் கொண்டார். பதினெட்டு வயதிற்குள் அக்கலையின் தலைசிறந்த ஓவியராக விளங்கினார். அதன்பிறகு நாடகத்திற்கான உடைகள் மற்றும் அரங்கம் அமைப்பதில் சில காலம் பணியாற்றினார். நடிகர்களுக்கு ஏற்ற உடைகளையும் முகமூடிகளையும் அவர் உருவாக்கினார்.
1834- 1849க்கு இடையில் பூஜி மலையின் நூறு காட்சிகள் என்ற ஹொகுசாயின் ஓவியங்கள் வடிவமைக்கப்பட்டன, அவை வுட் பிளாக் முறையிலே அச்சிடப்பட்டன
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜப்பானிய “உக்கியோ-இ” வுட் பிளாக் அச்சோவியங்களை “மிதக்கும் உலகின் ஓவியங்கள் என்று அழைக்கிறார்கள். உட்கவா ஹிரோஷிகோ மற்றும் ஹொகுசாய் இருவரும் இக்கலையின் விற்பன்னர்களாக இருந்தார்கள். தட்சுடா ஆற்றில் மிதக்கும் சிவப்பு மேப்பிள் இலைகளை வரைவதற்காக ஹொகுசாய், ஒரு நீண்ட கோழியின் கால்களைச் சிவப்பு வண்ணத்தில் நனைத்து, தாளின் குறுக்கே ஓடச்செய்தார் என்கிறார்கள்.
ஹொகுசாய் முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களால் அறியப்படுகிறார். அக்காலத்து ஓவியர்களிடையே பல பெயர்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது, அன்றைய ஓவியர்கள் பலரையும் விட ஹொகுசாய் வைத்துக்கொண்ட பெயர்களின் எண்ணிக்கை அதிகம்
ஹொகுசாயின் மகள் கட்சுஷிகா தந்தையைப் போலவே சிறந்த ஓவியராக விளங்கினார். தந்தையும் மகளும் இணைந்தும் பணியாற்றினார்கள். குடி மற்றும் கடன் காரணமாக ஹொகுசாய் வறுமையில் வாழ்ந்தார். அசாத்தியமான ஒவியத்திறமை கொண்டிருந்த போதும் அன்றாட வாழ்விற்குப் பெரும் சிரமங்களைச் சந்தித்தார் ஹொகுசாய்.
இந்தப்படத்தின் ஒரு காட்சியில் அவர் டிராகன் ஓவியம் வரைந்து தருவதாக ஒருவருக்கு வாக்களித்துப் பணம் பெறுகிறார். இதற்காக டிராகன் வரைகிறார். அவர் வரைந்த ஓவியம் மகளின் எதிர்பாராத செயலால் எரிந்து போய்விடுகிறது. அது போல இன்னொரு டிராகன் ஓவியத்தை தன்னால் வரைய முடியாது என ஹொகுசாய் கைவிட்டுவிடுகிறார். ஆனால் ஒயி இரவோடு இரவாக அதே போன்ற டிராகன் ஒன்றை வரைந்து முடித்துவிடுகிறாள்.
படம் தந்தைக்கும் மகளுக்குமான உறவை மட்டுமின்றித் தனித்திறமைகள் கொண்ட இரண்டு ஓவியக்கலைஞர்களின் உறவையும் படைப்பாற்றலையும் விவரிப்பதாகவே உள்ளது
ஹொகுசாய் கடற்புறக்காட்சிகளையும் ஈடோ நகரின் பிரம்மாண்டமான தோற்றத்தையும் பாலத்தில் செல்லும் மனிதர்களையும் பேரலைகளையும் ப்யூஜி எரிமலையினையும் மிகச் சிறப்பாக வரைந்திருக்கிறார். அந்த ஓவியங்கள் அப்படியே உயிர்பெற்றுத் திரையில் ஒளிர்கின்றன.
பாலுறவு காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்களை ஹொகுசாய் வரைந்து கொடுத்து அதில் கிடைக்கும் காசில் வாழ்ந்து வந்தார். தந்தைக்கு உதவியாக மகளும் மஞ்சள் புத்தகத்திற்கான சிற்றின்ப ஓவியங்கள் வரைந்து கொடுக்கிறாள். ஆணின் உடல் பற்றி அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் வரைந்த பெண் உடல்களில் காணப்படும் காமத்தின் வெளிப்பாடு தன்னை விடச் சிறப்பாக உள்ளது என்கிறார் ஹொகுசாய்.
ஹெயின்கோ சுகியுரா மங்கா தொடரின் தழுவலாகவே இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் ஹொகுசாய் மிகப்பெரிய டிராகன் ஓவியத்தை வரைவதையும் நாம் காணுகிறோம். இன்னொரு பக்கம் அரிசியைக் கொத்து இரண்டு சிட்டுக்குருவிகளைப் பற்றிய சிறிய ஓவியத்தை வரைவதையும் காணுகிறோம். இரண்டிலும் அதே மேதைமை, அதே கவனம். அதே தனிச்சிறப்பைக் காணமுடிகிறது. அது தான் ஹொகுசாயின் படைப்பாளுமை..
ஹொகுசாய் ஒரு நாளிரவு தனது கைகள் தனது உடலை விட்டு வெளியேறி தனியே சென்ற நிகழ்வை விவரிக்கிறார். விசித்திரமான நிகழ்வது. கைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப் பௌத்த கோவிலில் பூஜை செய்து பச்சை குத்துவது போலப் புத்தரின் சித்திரத்தைக் கையில் வரைந்த பிறகே கை அவரை விட்டுப் பிரியவில்லை என்கிறார். இது ஜப்பானியப் பழங்கதை ஒன்றின் மறுவடிவம். அதை ஹொகுசாய் தனக்கு நடந்த விஷயமாகச் சொல்கிறார். உடலை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்வது எளிதில்லை என்பதை உணர்த்தவே அவர் இக்கதையை விவரிக்கிறார்.
ஓ-ஈயின் பார்வையற்ற தங்கை முதன்முறையாகப் பனிக்கட்டியினை எறிந்து விளையாடுவதும் படகில் பயணிப்பதும் மிக அழகான காட்சிகள். The Great Wave off Kanagawa” என்ற பேரலையின் சித்திரத்தை அனிமேஷன் காட்சியாக்கியது அபாரம். மிகச்சிறந்த கலையனுபவத்தைத் தந்திருக்கிறார்கள்.
ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள் ஹாலிவுட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதன் தனிச்சிறப்பு வண்ணங்களையும் காட்சிக் கோணங்களையும் பயன்படுத்தும் முறையாகும். சிறந்த இசைக்கோர்ப்பு. படத்தொகுப்பு. தேர்ந்த கலைநேர்த்தி என ஒளிரும் இந்தப்படம் ஜப்பானிய ஓவியங்களையும் ஹொகுசாயையும் அறிந்து கொள்ள உதவும் சிறந்த கலைப்படைப்பு என்பேன்
••