ஆரஞ்சு தோட்டக் குரங்குகள்
செசானின் நிலக்காட்சி ஓவியங்களைத் தியானம் என்று அழைத்தால் ரூசோவின் வனவாழ்வைச் சித்தரிக்கும் ஓவியங்களை மௌனவிழிப்புணர்வு என்று அழைக்கலாம். கையில் ஆரஞ்சு பழங்களுடன் உள்ள குரங்குகளை ஹென்றி ரூசோ மிக அழகாக வரைந்திருக்கிறார். ஆரஞ்சு தோட்டத்திலுள்ள அந்தக் குரங்குகளின் ஒளிரும் கண்களும் விநோத முகபாவமும் கனவுலகின் காட்சி போல உணரச் செய்கின்றன. சுயமாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்டவர் ரூசோ. ஒவியப்பள்ளிகளில் பயிலாத ஓவியர்களைப் பிரெஞ்சு அகாதமி ஒதுக்கி வைத்திருந்த காலமது. ஆகவே ரூசோவின் ஓவியங்களை அகாதமி அங்கீகரிக்கவில்லை. …