36 புகைப்படங்கள்

The Last Roll Of Kodachrome என்ற ஆவணப்படம் பிரபல புகைப்படக்கலைஞரான ‘ஸ்டீவ் மெக்குரி’ கடைசிக் கோடக்குரோம் படச்சுருளைப் பயன்படுத்தி 36 புகைப்படங்களை எடுப்பதை ஆவணப்படுத்தியிருக்கிறது

படச்சுருள் தயாரிப்பில் கோடக் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. டிஜிட்டில் கேமிரா வந்தபிறகு படச்சுருளின் தேவை வெகுவாகக் குறைந்து போனதால் அந்நிறுவனம் தனது படச்சுருள் தயாரிப்பை 2009 ஜுன் 22ல் கைவிட்டது. கடைசியாக இருந்த ஒரு படச்சுருளை ஸ்டீவ் மெக்குரியிடம் கொடுத்து அவர் விரும்பும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னது நிறுவனம்.

கடைசி ரோலில் எந்த 36 காட்சிகளைப் படம் பிடிப்பது என்பது அவர் முன்னிருந்த பெரிய சவால். கோடக்குரோம் படச்சுருளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் புகைப்படங்களை எடுத்தவர் மெக்குரி. அதுவும் நேஷனல் ஜியோகிராபி இதழில் வெளியான அவரது புகழ்பெற்ற புகைப்படங்கள் கோடக்குரோமில் படம்பிடிக்கப்பட்டவையே

உண்மையில் ஒரு புகைப்படக்கலைஞருக்கு இது ஒரு அரிய பரிசு.

ஸ்டீவ் எதைத் தேர்வு செய்து படம்பிடிக்கப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள அவருடன் ஒரு படக்குழுவும் பயணம் செய்ய ஆரம்பிக்கிறது. இந்த 36 புகைப்படங்களை எடுப்பதற்காக 30,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறார்.

அவர் தேர்வு செய்து எடுத்த புகைப்படங்களுக்குப் பின்னால் அவரது கடந்தகாலம் ஒளிந்திருக்கிறது. அது தான் என்னை அதிகம் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய நினைவில் எவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறான். மீண்டும் புகைப்படம் எடுக்கச் சொன்னால் எதைத் தேர்வு செய்வான். அதன் காரணம் என்னவென்பது எளிதில் விளக்கிச் சொல்ல முடியாத புதிரே

இந்த ஆவணப்படத்தில் ஸ்டீவ் மெக்குரி தான் எடுப்பது கடைசி 36 படங்கள் என்ற அழுத்தம் இல்லாமல் இயல்பாகப் புகைப்படங்கள் எடுக்கிறார். இந்தப் புகைப்படப் பயணத்தில் அவர் எடுத்த முதல் புகைப்படம் ஹாலிவுட் நட்சத்திரம் ராபர்ட் டி நீரோ. அவரை ஐந்து புகைப்படங்கள் எடுக்கிறார். உலகின் சிறந்த புகைப்படக்கலைஞராக இருந்த போதும் ஒரு கிளிக் போதும் என்று முடிவு செய்யவில்லை. சரியான கோணத்தில் இரண்டுமுறை ஒரே காட்சியைப் பதிவு செய்கிறார்

புகைப்படக்கலைஞர்களுக்கு இந்தியா காட்சிகளின் மாயநிலம். இதன் மனிதர்களும் இயற்கையும் பெருநகர வாழ்க்கையும் வியப்பூட்டுபவை. ஸ்டீவ் மெக்குரி இயற்கைக் காட்சியைப் பதிவு செய்ய முற்படவில்லை.

அவருக்குப் பிடித்தமான இந்தியாவிற்கு வருகை தந்து அமிதாப்பச்சன், அமீர்கான், நந்திதா தாஸ் , சேகர் கபூர் போன்ற திரை ஆளுமைகளைப் படம் எடுக்கிறார். இந்தத் தேர்வுகளுக்கு அவர் சரியான காரணம் சொல்வதில்லை. தாராவியில் ஒரு புகைப்படமும் ராஜஸ்தானிலுள்ள ராப்ரி பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழுவினரையும் படம் பிடிக்கிறார். வித்தியாசமான முகங்கள் தான் அவரைக் கவருகின்றன.

தனது 36வது புகைப்படத்தைப் பார்சனஸில் உள்ள உள்நாட்டு யுத்தத்தில் இறந்தவர்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் எடுத்திருக்கிறார்.

யோசித்துப் பார்த்தால் இந்த 36 புகைப்படங்களை எடுப்பதற்கு அவர் செலவு செய்துள்ள தொகை மிகப்பெரியது. கோடக் படச்சுருளில் அவர் எடுத்த 36 புகைப்படங்களும் டெவெலப் ஆகி வந்ததும் அதன் தனித்துவ அழகில் மயங்கி, டிஜிட்டிலை விடவும் தான் படச்சுருளில் படமாக்கவே விரும்புகிறேன் என்கிறார் மெக்குரி.

இந்த ஆவணப்படத்தின் பின்னே ஒரு திரைப்படத்திற்கான கதைக்கரு ஒளிந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சிறுநகரில் ஸ்டுடியோ நடத்தும் ஒரு வயதான போட்டோகிராபர் இது போலத் தனது கடைசி படச்சுருளில் யாரைப் படம் பிடித்தார். அதற்காக எங்கே பயணம் செய்தார் என்பதை ஒரு திரைக்கதையாக எழுதினால் அழகான படம் ஒன்றை உருவாக்க முடியும். மலையாளத்தில் இப்படியான கதைகள் தான் படமாக்கப்படுகின்றன

0Shares
0