மோலியரின் காதல்

புகழ்பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியரான மோலியரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தைப் பார்த்தேன். லாரன்ட் டிரார்ட் இயக்கியுள்ளார் 1658 ஆம் ஆண்டில் கதை நடக்கிறது

பகடி நாடகங்களுக்குப் பிரபலமான மோலியர் அதை விடுத்து துன்பவியல் நாடகம் ஒன்றை நிகழ்த்த விரும்புகிறார். அவரது குழுவினர்கள் அதை விரும்புவதில்லை. மன்னரின் ஆதரவுடன் மோலியர் நாடகங்களை நிகழ்த்துகிறார். மன்னருக்கோ நகைச்சுவை நாடகங்கள் மட்டுமே பிடிக்கிறது. ஆகவே கட்டாயத்தின் பெயரில் நகைச்சுவை நாடகம் போட வேண்டிய நெருக்கடி உருவாகிறது. இந்தச் சூழலில் அவரது கடந்த கால வாழ்க்கை பின்னோக்கி நினைவு கொள்ளப்படுகிறது.

1645 ல் கடன் பாக்கி காரணமாக மோலியர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை மீட்கும் பணக்கார ஜோர்டெய்ன், மோலியர் தனக்கு நாடகம் கற்பிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கிறார்

பிரபுவான ஜோர்டெய்னுக்கு இரண்டு மகளிருக்கிறார்கள். மிகப்பெரிய மாளிகை ஒன்றில் வசிக்கிறார். ஆனால் விதவை செலிமினை ஒரு தலையாகக் காதலிக்கிறார். இதை அறிந்த தோரந்த் என்ற பிரபு அவரை ஏமாற்றி நம்ப வைத்துப் பணம் பறிக்கிறார்.

செலிமினை காதலிப்பதற்காக அவருக்காகத் தனி நாடகம் ஒன்றை நிகழ்த்த ஜோர்டெய்ன் விரும்புகிறார். அதற்காகவே மோலியருடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்

தன் மனைவி எல்மைராவுக்குத் தெரியாமல் இந்தக் காரியம் நடக்க வேண்டும் என்பதால் மோலியரை டார்டஃப் என்ற மதகுருவாக மாற்றி மகளின் ஆசிரியராக வீட்டிற்கு அழைத்து வருகிறார்

எல்மைராவிற்கு மோலியரைப் பிடிக்கவில்லை. இவர் ஒரு போலி மதகுரு என்று திட்டுகிறாள். எல்மைராவின் அழகில் மயங்கிய மோலியர் அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். இன்னொரு பக்கம் ஜோர்டெய்னுக்கு நடிப்புப் பயிற்சி தருகிறார். மிகவும் வேடிக்கையான காட்சியது. பல்வேறு குதிரைகளைப் போல மோலியர் நடித்துக் காட்டும் காட்சி பிரமாதம்

ஜோர்டெய்ன் நடிப்பு இசை ஓவியம் எனச் சகலமும் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறவர். ஆனால் அப்பாவி. அவரை நன்றாக ஏமாற்றுகிறார் தோரந்த்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக எல்மைராவின் அன்பைப் பெறும் மோலியர் அவளுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பிக்கிறார்.

செலிமின் வீட்டில் நாடகம் போடும் ஜோர்டெய்ன் அவமதிக்கப்படுகிறார். அவருக்கு உண்மைகளை விளக்குகிறார் மோலியர். இதனால் தோரந்த் மீது கடுமையான கோபம் கொள்கிறார் ஜோர்டெய்ன். ஆனால் தோரந்த் அவரது கள்ளக்காதலை அம்பலப்படுத்திவிடுவதாக மிரட்டி அவரது மகளைத் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க ஒத்துக் கொள்ள வைக்கிறார்

மகளோ வேறு ஒருவனைக் காதலிக்கிறாள். மகளின் ஆசையை நிறைவேற்ற எல்மைரா நேரடியாகத் தோரந்திடம் பேரம் பேசுகிறாள். அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயல்கிறாள்

இந்நிலையில் தன் மனைவி எல்மைராவிற்க்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பதை ஜோர்டெய்ன் கண்டுபிடித்துவிடுகிறார். குழப்பமான சூழ்நிலை உருவாகிறது.

எல்மைராவை அழைத்துக் கொண்டு அந்த மாளிகையை விட்டு வெளியேற முயலுகிறார் மோலியர். அவளோ வரமறுக்கிறாள். அத்தோடு கிராமம் கிராமமாகச் சென்று நாடகம் நடத்தி மக்களிடம் பெயர் வாங்குங்கள். அது தான் கலைஞனாக நீங்கள் செய்ய வேண்டிய கடமை என்று அறிவுரை வழங்குகிறாள்

மோலியர் எவ்வாறு ஜோர்டெயின் மகளின் திருமணத்தை நிறுத்துகிறார், அவரது நாடக வாழ்க்கை எப்படி வளர்ந்தது என்பதே மீதக்கதை

மோலியர் ஒரு சிறந்த நடிகர். ஆரம்பக் காட்சியில் அவர் தன்னைக் கைது செய்யவருபவர்களிடம் வேடிக்கையாக நடிக்கும் விதமும். மாளிகையில் எல்மைராவின் அழகில் மயங்கி அவளைக் காதலிப்பதிலும், ஜோர்டெயின் போலவே நடித்துக் காட்டுவதிலும், பணக்கார செலிமின் வீட்டிற்குப் போய் அவள் முன்னால் நடிப்பதிலும், இறுதிக்காட்சியில் எல்மைராவைச் சந்தித்துப் பேசுவதிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்

மோலியரின் வாழ்க்கை வரலாறு அவரது புகழ்பெற்ற நாடகமாக டார்டஃப்பிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

மோலியரின் பெரும்பான்மை நாடகங்கள் அவரது சொந்த அனுபவத்திலிருந்தே உருவாக்கப்பட்டிருக்கின்றன. காசநோய் பாதித்த மோலியர் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து போனார் என்கிறது அவரது வாழ்க்கை வரலாறு.

இந்தத் திரைப்படம் மோலியர் வாழ்க்கையின் சிறிய பகுதியை மட்டுமே முதன்மைப்படுத்தியிருக்கிறது

மோலியரின் இயற்பெயர் ஜீன் பாப்டிஸ்டே போக்லின் இவரது தந்தை ஒரு கைவினைக் கலைஞர். அரண்மனையில் மரவேலைகளைச் செய்து தருபவர். மோலியர் பாரீஸ் நகரில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்பு சட்டம் பயின்றார். சிறுவயதிலே நடிப்பில் ஆர்வம் கொண்ட மோலியர் மதகுருக்களின் நடையுடை பாவனைகளை நடித்துக் காட்டுவதில் வல்லவராக இருந்தார்.

1643-ஆம் ஆண்டுத் தனது நாடக நிறுவனத்தை மோலியர் துவக்கினார். நிதி நெருக்கடி காரணமாக இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தமுடியவில்லை. கடனாளியாக மாறினார். கடனிலிருந்து மீளுவதற்காகக் கிராமப்புறம் தோறும் சென்று நாடகங்களை நிகழ்த்தி புகழ்பெற்றார் மோலியர்

பின்பு 14ஆம் லூயி மன்னரது ஆதரவைப் பெற்று அரச சபை கலைஞராகத் திகழ்ந்தார். மோலியர் முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார்,

மதகுருக்களின் ஆடம்பர வாழ்க்கையை, போலித்தனத்தை, அதிகாரத்தை விமர்சனம் செய்யும் அவரது டார்டஃப் (TARTUFFE) நாடகம் மிகவும் புகழ்பெற்றது.

பணக்காரன் ஆவதற்கு எளிய வழி மதகுருவாக உருமாறுவதே என நினைத்து போலி மதகுருவாக மாறும் ஒரு இளைஞனின் கதையே இந்த நாடகம்.

கடவுளைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டால் உலகத்தின் கண்ணில் மண்ணைவாரிப் போடலாம்; திருடுவது, பொய் சொல்லுவது முதலிய கெட்ட செயல்களில் ஈடுபடுவதைவிட வேதத்தையும் ஒழுக்கத்தையும் ஒரு வியாபாரமாக நடத்தினால், உலகில் பெரும்பாலோரை ஏமாற்றிவிடலாம். அவ்விதம் ஏமாற்றப்படுவதாக அவர்கள் மனத்துயர் அடையவும் மாட்டார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்துதான் டார்ட்டுப் கடவுள் கட்சியில் சேர்ந்து கொண்டான். என்று இந்த நாடக சுருக்கத்தைப் புதுமைப்பித்தன் அறிமுகம் செய்கிறார்

மோலியரைப் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதியுள்ள குறிப்பு இது.

பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை – பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால், வளமுறைப்படி அந்திமக் கிரியைகள் கூட அனுமதிக்கப்பட மாட்டா. பவித்திர நிலத்தில் (கல்லறைத் தோட்டத்தில்) அவனைப் புதைக்க அனுமதிக்கமாட்டார்கள். சாத்தானின் குழந்தை என்று அவனைத் தண்ணீர் தெளித்து விட்டுவிடுவார்கள். இவ்வளவும் தெரிந்திருந்தும் ஜீன் – பாப்டிஸ்டே போக்லின் என்ற மோலியர் அந்தத் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டார். நடிகனாகவும் நாடகாசிரியனாகவும் வாழ்வைக் கழித்து ஒரு நாடகத்தில் நடிக்கும்போது திடீரென்று நோயுற்று, சில மணி நேரங்களில் மாண்டார்.

மோலியர் பிறப்பில் பாரிஸ்வாசி. அவருடைய நாடகக் கோஷ்டி முதலில் ட்யூக் ஆப் ஆர்லியான் ஆதரவில் நாடகம் போட்டு வந்தது. யுத்தத்தின் அழைப்பு ட்யூக்கை போர்க்களத்துக்கு அனுப்பிவிட நாடகக் கம்பெனி வறுமையுடன் தோழமை கொண்டது. பாரிஸிலிருந்து பிரான்ஸ் முழுமையும் சுற்றி வந்தது. வறுமையின் தோழமையை உதறித்தள்ள முடியவில்லை. பாரிஸுக்குத் திரும்பி வந்தபொழுது, மோலியருக்கு ராஜ ஆதரவு கிட்டியது. ‘நானே பிரான்ஸ்’ என்று மகா இடும்புடன் ஒரு முறை சொல்லிய பதினாலாவது லூயி நல்ல ரசிகன். மோலியருடன் தோழமை கொண்டான். அந்த ஆதரவிலே தழைத்த பெரும் நாடகங்கள் பல. கடைசி மூச்சு ஓடும்வரை மோலியர் நாடகக் கலைக்குச் சேவை செய்தார்.

உலகத்தின் பிரபல ஹாஸ்ய நாடகக் கர்த்தர்களில் இவரும் ஒருவர். இவரிடத்திலே ஷேக்ஸ்பியரின் மேதையை, கதை வளர்க்கும் திறமையைக் காண முடியாது. ரயிலுக்குப் போகும் அவசரத்தில் கட்டினதுபோல் வார்ப்பு இறுகியிராமல் உருக்குலைந்து கோணிக்கொண்டு நிற்கும். ஆனால் போலிகளை, விஷமிகளை நையாண்டி செய்வதில் அதிசமர்த்தர். அவரது சிரிப்பு சிந்தனையைக் கிளர்த்தி விட ஒரு வியாஜ்யம்.

மோலியரின் கஞ்சன் நாடகம் தமிழில் வெளியாகியுள்ளது.

A learned fool is more a fool than an ignorant fool. The duty of comedy is to correct men by amusing them என்கிறார் மோலியர்.

படித்தவனின் முட்டாள்தனத்தை, போலித்தனத்தைச் சுட்டிக்காட்டி நகைச்சுவையின் மூலம் சமூக மாற்றங்களை உருவாக்கவே மோலியரின் நாடகங்கள் முயன்றன. அதற்காகவே இன்றும் மோலியர் கொண்டாடப்படுகிறார்.

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: