இணைந்த கரங்கள்.

Made in Bangladesh என்ற பங்களாதேஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். டாக்காவிலுள்ள ஆயுத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களின் அவல வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

உலகின் இரண்டாவது பெரிய ஆயுத்த ஆடை ஏற்றுமதியாளராகப் பங்களாதேஷ் விளங்குகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், பங்களாதேஷின் ஆயுத்த ஆடைத் தொழில் 19 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தை ஆயுத்த ஆடை வணிகம் பெறுகிறது.

ஆயுத்த ஆடைத் தொழிலில் 4.4 மில்லியன் மக்கள் பணியாற்றுகிறார்கள். இதில் எண்பது சதவீதம் பெண்கள். சர்வதேச அளவில் பிரபலமான டி-ஷர்ட் பிராண்டுகள் டாக்காவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஆயுத்த ஆடை நிறுவனங்களில் ஏற்பட்ட விபத்தில் மட்டும் 1,200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்து போயிருக்கிறார்கள். விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றத் தவறியதற்காக ஆண்டிற்கு நூறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன.

ரூபாயத் ஹொசைன் இயக்கிய இந்தத் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்குபெற்றுள்ளது.

டி-ஷர்ட்ஸ் தயாரிக்கும் ஒரு ஆயுத்த ஆடை நிறுவனத்தில் தான் படம் துவங்குகிறது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிறுவனமது. படத்தின் துவக்கக் காட்சியிலே அந்நிறுவனத்தில் தீப்பற்றிக் கொள்கிறது. தையல் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அலறி ஓடுகிறார்கள். ஒரு பெண் விபத்தில் இறந்துவிடுகிறாள். தொழிற்சாலை மூடப்படுகிறது. இதனால் சம்பளம் கிடைக்காமல் பெண்கள் சிரமப்படுகிறார்கள். இந்நிலையில் பெண்ணுரிமை அமைப்பின் அபா மூலம் தொழிற்சாலையில் யூனியன் ஆரம்பிக்கும் முயற்சியைத் துவங்குகிறாள் ஷிமு.

அவள் கணவன் அதை விரும்பவில்லை. ஆனால் கூடுதல் நேரம் வேலை செய்ததற்குத் தங்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லை. இறந்து போன பெண்ணிற்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. நிறுவனம் தங்களைச் சுரண்டி வாழுகிறது என்பதைப் புரிந்து கொண்ட பெண்கள் யூனியன் துவங்க முன் வருகிறார்கள்

இளம் பெண்களின் தயக்கம். குடும்பச் சூழல். அவர்களின் ஒற்றுமை. பணியிடத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி. நைட் ஷிப்ட் வேலை செய்யும் பெண்கள் பணியிடத்திலே உறங்குவது. யூனியன் அமைக்கத் தொழிலாளர் நலத்துறையில் சந்திக்கும் பிரச்சனைகள். கார்மெண்ட் நிறுவனத்தின் மிரட்டல். வேலை இழந்து போன பெண்ணின் அவலம் என மிக உண்மையாக உழைக்கும் பெண்களின் பிரச்சனையைக் கையாண்டிருக்கிறார்கள்.

திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. நாமும் அந்தப் பெண்களுடன் இணைந்து கொள்கிறோம். அவர்கள் பிரச்சனைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஷிமு மறக்கமுடியாத கதாபாத்திரம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பதிமூன்று வயதான அவளை நாற்பது வயது ஆளுக்குத் திருமணம் பேசி முடிக்கிறார்கள். இதை விரும்பாமல் அப்பாவின் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு டாக்காவிற்கு ஒடி வந்துவிடுகிறாள். ஆரம்பத்தில் ஷு பேக்டரி ஒன்றில் வேலை செய்கிறாள். பிறகு வீட்டுவேலை செய்யும் பணிப்பெண்ணாக இருந்திருக்கிறாள். நான்கு ஆண்டுகளாக அவள் கார்மெண்ட் பேக்டரியில் பணியாற்றுகிறாள்.

வேலையில்லாத கணவன். வறுமையான சூழல். பணியிடத்தில் நெருக்கடி. இத்தனைக்கும் நடுவில் ஷிமுவின் மனவுறுதியும் போராடும் குணமும் நட்பும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒரேயொரு காட்சியில் தான் ஷிமு சந்தோஷமாக இருக்கிறாள். அது அவளது வீட்டு உரிமையாளர் மகள் திருமணத்தின் போது. அப்போது அழகான சேலை உடுத்தி சந்தோஷமாகத் திருமண வரவேற்பிற்குச் செல்கிறாள். விருந்து சாப்பிடுகிறாள். சந்தோஷமாக ஆடுகிறாள். இதைத் தவிரப் படம் முழுவதும் அவள் பிரச்சனைகளுக்குள்ளாகவே வாழுகிறாள்.

அவளது ஒற்றை அறை கொண்ட வீடு. அவளது தோழிகளின் வாழ்க்கை நிலை. ஒன்றாக அவர்கள் கடந்து செல்லும் டாக்கா வீதிகள். கார்மெண்ட் பேக்டரியின் நிலை. விடிகாலையில் அவர்கள் பேசிக்கொண்டு வீடு திரும்பும் காட்சி. அரசாங்க அலுவலகத்தின் அலைக்கழிப்பு எனக் காட்சிகள் யாவும் இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. கேமிரா அந்தப் பெண்களுடன் இணைந்து கூடவே பயணிக்கிறது. சபீன் லான்செலின் என்ற பெண் ஒளிப்பதிவாளர் மிகச்சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில் ஷிமு தன் இயலாமையைக் காட்டிக் கொள்ளச் சமையலுக்கு வாங்கி வந்த மீனைத் தரையில் அடித்துக் கொல்கிறாள். அது துள்ளிக் கொண்டேயிருக்கிறது. அவள் ஆத்திரப்பட்டு ஓங்கி ஒங்கி அடிக்கிறாள். மௌனமாக அவள் கணவன் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். அற்புதமான காட்சியது.

உழைக்கும் பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது. எத்தனை மிரட்டல்கள், நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை நிஜமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அபா கொடுத்த போனில் அவள் ரகசியமாகப் புகைப்படம் எடுப்பது. கணவன் அவளைச் சந்தேகப்பட்டுக் கேள்விகேட்கும் போது அழுதபடியே பதில் சொல்வது. பேக்டரியில் இரவு மின்விசிறியை நிறுத்தி சூப்ரவைசருடன் சண்டைபோடுவது. நசிமாவிடம் தயங்கித் தயங்கி கடன் கேட்பது. பேக்டரி பிரச்சனையால் கணவன் வீட்டில் அடைத்துப் போடும்போது ஆவேசமாகக் கிளம்பிப் போவது என ஷிமுவாக நடித்துள்ள ரிக்கிதா நந்தினி மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

ஷிமு வீட்டில் அவளது தோழிகள் நான்கு பேர் ஒன்றாகக் கூடிப் பேசி யூனியன் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடும் காட்சி மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.

யூனியன் வரக்கூடாது என்பதில் நிறுவனம் கறாராக இருக்கிறது. இதற்காக ஷிமுவின் கணவனைக் கூட மிரட்டுகிறார்கள். யூனியன் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்ட எல்லோரையும் வேலையை விட்டுத் தூக்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். மற்ற பெண்கள் பயப்படும் போது ஷிமு தொழிலாளர் நலச் சட்டப் புத்தகத்தைப் படித்துக் காட்டுகிறாள். உண்மையைப் பெண்களுக்கு உணர வைக்கிறாள். அவர்களுடன் ஒன்று சேர்த்து போராடுகிறாள்.

தொடர்ந்த நெருக்கடிகளின் வழியே ஷிமு தனது தைரியம் மற்றும் உறுதியான தன்மையைக் கண்டுபிடிக்கிறாள். படம் முழுவதும் அவள் காட்சியின் மையத்திலே இருக்கிறாள். அவள் தான் முன்னாடி நடக்கிறாள்.

பங்களாதேஷில் இது போல நூற்றுகணக்கான கார்மெண்ட் பேக்டரிகள் உள்ளன. அதன் உண்மையை நிலையை ஆய்வு செய்து படமாக்கியிருக்கிறார்கள்.

ரூபாயத் ஹொசைன் பங்களாதேஷின் முக்கியப் பெண் இயக்குநர். நியூயார்க்கில் சினிமா பயின்றவர். இவரது முதற்படமாக மெஹெர்ஜான் (2011) பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

கார்மெண்ட் பேக்டரி சூப்ரவைசருடன் நெருக்கமாகப் பழகினாள் என்று துரத்தப்படும் தோழியைத் தன் வீட்டிற்கு அழைத்துவரும் ஷிமு அங்கே கணவன் இடம் கிடையாது என்று அவளை வெளியே அனுப்பும் போது ஆவேசமாகிறாள். தன் தவறில்லை என்று தோழியிடம் உணர்த்த முயலுகிறாள். ஆனால் தோழி கோவித்துக் கொண்டு கிளம்பியதும் அவளை இரவிலும் தேடி அலைகிறாள். இன்னொரு காட்சியில் அதே தோழியினைச் சாலையில் வேறுவிதமாக அவள் சந்திப்பதும் அப்போது அவள் அலட்சியமாகக் கடந்து போவதும் சிறுகதை போல அத்தனை அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது

புதிய டி-ஷர்ட்டில் ஒரு துளிக் கறை படிந்திருந்தால் கூட உடனே அதைத் தூக்கி எறிந்து விடுவார்கள். அந்த ஆடையை ஒரு நிமிஷம் கவனித்தால் அது வேலை செய்யும் பெண்ணின் கண்ணீராக இருக்கக்கூடும் என்கிறார் இயக்குநர். அது மறுக்கமுடியாத உண்மையே.

••

நவம்பர் 20.2020

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: