வஞ்சிக்கும் அழகு

Bitter Rice 1949ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். Giuseppe De Santis இயக்கியுள்ளார்

நேர்த்தியான ஒளிப்பதிவும் அழுத்தமான கதையும் சிறந்த நடிப்பும் கொண்ட இப்படம் காலத்தைக் கடந்து இன்றும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது.

இத்தாலியின் போ பள்ளத்தாக்குப் பகுதியில் நெல் அறுவடைக்கும் நடவு நடுவதற்கும் ஒரு ரயில் முழுவதும் பெண்களை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார்கள். அந்த வேலையாட்களுடன் வால்டர் என்ற திருடனின் காதலியான பிரான்செஸ்கா சேர்ந்து பயணிக்கிறாள். காவலர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவே அவள் அந்தக் குழுவில் சேர்ந்து கொள்கிறாள். அவளுக்குச் சில்வானா என்ற பெண் உதவி செய்கிறாள்

படம் ரயில் நிலையத்தில் தான் துவங்குகிறது. வைர நகையைக் கொள்ளையடித்த குற்றத்திற்காக வால்டர் தேடப்படுகிறான். காதலியோடு அவன் தப்பிப் போக முயற்சி செய்யும் போது காவலர்களால் சுற்றி வளைக்கப்படுகிறான். தப்பி ஓடும் போது நடனமாடும் சில்வானாவைச் சந்திக்கிறான். இருவரும் ஒன்றாக நடனமாடுகிறார்கள். அங்கும் போலீஸ் வந்துவிடவே வால்டர் தன் காதலியிடம் திருடிய நெக்லஸைக் கொடுத்து விவசாயக்குழுவோடு தப்பிப் போகச் சொல்கிறான். வேறு வழியின்றிப் பிரான்செஸ்கா ரயிலில் ஏறிக் கொள்கிறாள்

அறுவடை பணிகளுக்காக நூற்றுக்கணக்கான பெண்களை ரயிலில் அழைத்துக் கொண்டு போவது வியப்பாக உள்ளது. ஆனால் இது ஐம்பது வருஷங்களுக்கு முந்திய இத்தாலியின் இயல்பான நடைமுறை.

வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களுக்குக் கூலியாக  அரிசி அளந்து தருகிறார்கள். உணவும் இருப்பிடமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பண்ணையும் தனக்குத் தேவையான ஆட்களை இப்படித் தேர்வு செய்து கொள்கிறார்கள். நெல் வயல்களில் வேலை செய்ய முறையான அனுமதி வேண்டும்.

பிரான்செஸ்காவிடம் அப்படி அனுமதிச்சீட்டு இல்லை. ஆனால் சில்வானா அவர்களை அழைத்துச் செல்லும் ஆளிடம் ஆசைவார்த்தை பேசி அனுமதி வாங்குகிறாள். அவர்கள் ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள்.

போ பள்ளத்தாக்கு பகுதிக்கு அவர்கள் வந்து சேருகிறார்கள். ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். அங்கே பிரான்செஸ்காவிடமிருந்த நகையைத் திருடிக் கொண்டுவிடுகிறாள் சில்வானா. அத்தோடு முறையான அனுமதி வாங்காத அவளைப் போன்ற பெண்களை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்றும் குரல் எழுப்புகிறாள்

ஏமாற்றப்பட்ட பிரான்செஸ்கா அவளைப் போன்று அனுமதிச் சீட்டு இல்லாத பெண்களை ஒன்று திரட்டிப் போராடுகிறாள். வயலில் அந்தப் பெண்கள் ஒன்றாகப் பாட்டுபாடியபடியே வேலை செய்வதும், சில்வானாவின் பாடலுக்குப் பிரான்செஸ்கா எதிர்ப்பாட்டு பாடுவதும் அழகான காட்சி.

ஒரு நாள் வயலில் வேலை செய்யும் போது, சில்வானாவும் பிரான்செஸ்காவும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதைத் தடுக்க வருகிறான் சிப்பாய் மார்கோ, அவன் சில்வானா திருடிய நகையை மீட்டுப் பிரான்செஸ்காவிடம் தருகிறான். இதனால் சில்வானா ஆத்திரமடைகிறாள். எப்படியாவது பிரான்செஸ்காவை அங்கிருந்து துரத்திவிட வேண்டும் என்று முயல்கிறாள்

தனக்கு உதவி செய்த சிப்பாயைக் காதலிக்கத் துவங்குகிறாள் பிரான்செஸ்கா. அவனோ சில்வானாவின் அழகில் மயங்கி அவளை விரும்புகிறான்.

இந்த நிலையில் மழை துவங்குகிறது. வயலில் வேலை செய்யமுடியாத சூழலில் பெண்கள் மழை எப்போது வெறிக்கும் என்று காத்திருக்கிறார்கள். மழை விடவேயில்லை. இப்படியே மழை தொடர்ந்தால் தங்கள் ஊதியத்தில் பாதி கூடக் கிடைக்காது என உணர்ந்த பெண்கள் மழையோடும் வயலில் வேலை செய்யப் போகிறார்கள். அற்புதமான காட்சியது.

இதற்குள் வால்டர் அங்கே வந்துசேருகிறான். அரிசி குடோனில் ஒளிந்து கொண்டு பிரான்செஸ்காவை ரகசியமாகச் சந்திக்கிறான். அவள் திருடிவந்த வைரநெக்லஸை அவனிடமே ஒப்படைக்கிறாள். அது வெறும் டூப்ளிக்கேட். நாம் ஏமாந்துவிட்டோம் என்று கோபமடைகிறான் வால்டர். இனி நாம் உழைத்துச் சம்பாதித்து வாழலாம் என்கிறாள் பிரான்செஸ்கா. ஆனால் வால்டர் அங்கே புதிய கொள்ளை ஒன்றை நடத்தத் திட்டமிடுகிறான். அதைப் பிரான்செஸ்கா தடுக்கிறாள்

ஒளிந்து வாழும் வால்டரை கண்ட சில்வானா அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள். அவளைப் பயன்படுத்தி அரிசி மூட்டைகளைக் கொள்ளையிட வால்டர் முயற்சிக்கிறான். அதற்குச் சிலர் உதவி செய்கிறார்கள்

பல நூறு பெண்களின் உழைப்பிற்கு ஊதியமாகத் தரவேண்டிய அரிசியை அவன் கொள்ளையடித்துப் போவதை பிரான்செஸ்கா விரும்பவில்லை. அவள் சிப்பாய் மார்கோவுடன் இணைந்து அதைத் தடுக்கத் திட்டமிடுகிறாள்.

வால்டரின் திட்டம் என்னவானது என்பதே படத்தின் மீதக்கதை.

சில்வானா மிக முக்கியமான கதாபாத்திரம். அழகியான அவள் நன்றாக ஆடுகிறாள். வாழ்க்கையை சுகமாக அனுபவிக்க எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவள் வால்டருக்கு உதவி செய்வதும் அவன் திருடி வைத்திருக்கும் வைர நகைகளுக்காகவே.

இரண்டு பெண்களுக்குள் உருவாகும் நட்பும் பொறாமையும் கோபமும் சண்டையும் மிக யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரான்செஸ்காவின் முகத்திலுள்ள துயரத்தின் சாயலை அறிந்து கொண்ட மார்கோ அவள் ஒரு போதும் குற்றவாளியாக இருக்கமுடியாது என்கிறான்.

தன்னை ஏமாற்றியது போல வால்டர் உன்னையும் ஏமாற்றிவிடுவான் எனச் சில்வானாவை எச்சரிக்கை செய்கிறாள் பிரான்செஸ்கா. ஆனால் அவள் அதைக் கேட்டுக் கொள்ளவேயில்லை.

அடைமழையின் ஊடே பெண்கள் காத்திருப்பதும், மழைக்குள்ளாகவே வால்டரைத் தேடி சில்வானா போவதும். விவசாய வேலைக்கு வந்துள்ள பெண்கள் தங்கியுள்ள இடத்தின் அருகிலுள்ள மரங்களில் ஏறிக் கொண்டு உள்ளூர் இளைஞர்கள் காதல் மொழி பேசுவதும். மதகு திறந்து தண்ணீர் வயலில் பெருகியோடும் போது ஒடியோடி பெண்கள் அதைத் தடுப்பதும் மறக்கமுடியாத காட்சிகள்

திருடன் வால்டராக நடித்திருப்பவர் இத்தாலியின் புகழ்பெற்ற நடிகர் விட்டோரியோ காஸ்மேன். மார்கோவாக ராஃப் வலோன் நடித்திருக்கிறார். வால்டரும் மார்கோவும் நேர் எதிரான கதாபாத்திரங்கள். வால்டர் எதையும் செய்யத் தயங்காதவன். மோசடிப்பேர்வழி. பிரான்செஸ்காவை மயக்கி தன் திருட்டுவேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆனால் மார்கோ கள்ளமற்ற பிரான்செஸ்காவின் மனதைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவிகள் செய்கிறான்.

சில்வானா போன்ற பெண்கள் தன் அழகைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தெரிந்தே தவறான பாதையில் சென்று சிக்கிக் கொள்கிறார்கள். அவளுக்கு வால்டரைப் பற்றி நன்றாகவே தெரிகிறது. ஆனாலும் அவனையே விரும்புகிறாள். அறிந்தே சில தவறான முடிவுகளை ஒரு பெண் எடுக்கிறாள் என்பது புதிராகவே உள்ளது.

வால்டரால் ஏமாற்றப்பட்ட பிரான்செஸ்கா எப்படியாவது மீட்சி கிடைத்துவிடாதா என்று கவலைப்படுகிறாள். அவள் உழைக்க தயங்குவதேயில்லை.  மார்கோ செய்யும் சிறு உதவி கூட அவளுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றுகிறது. சில்வானா மீது அவளுக்குக் கோபமில்லை. கடைசி வரை நட்பாகவே இருக்கிறாள்

இந்த படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏனோ Days of Heaven திரைப்படம் நினைவில் வந்தபடியே இருந்தது. அதுவும் அறுவடைக்காக செல்லும் மனிதர்களின் கதையை தான் சொல்கிறது. டெரன்ஸ் மாலிக் இயக்கிய மிகச்சிறந்த படம். கொலை  செய்த ஒருவன் அதிலிருந்து தப்பித்து ஒளிந்துகொள்ள அறுவடை பணிகளுக்குச் செல்லும் விவசாயிகளுடன் இணைந்து கொண்டுவிடுகிறான். அவனது வாழ்க்கை கதையும் Bitter Rice படமும் ஒரே கதையின் இரண்டு வடிவங்களைப் போலவே தோன்றுகிறது.

1917 ஆம் ஆண்டில் பிறந்த சாண்டிஸ், இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர். ரோம் திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்றவர். சினிமா விமர்சகராக வாழ்க்கையைத் துவங்கி பின்பு இயக்குநராக மாறினார்.

சாண்டிஸ் ஒரு திரைப்பட விழாவிற்குச் சென்று திரும்பும் வழியில் மிலானோ சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயப் பணிகளுக்காகப் பெண்களின் கூட்டம் செல்லும் ஒரு ரயிலைக் கண்டார்.

யார் இந்தப் பெண்கள், எங்கே போகிறார்கள் என வியந்து உடனே அவரும் வட இத்தாலிக்குப் பயணம் செய்தார்.

இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ள அப்பெண்களின் வாழ்க்கையைக் கள ஆய்வு செய்தார். அந்த அனுபவத்திலிருந்தே இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

கடினமான விவசாயப் பணிகளைப் பெண்கள் செய்தபோதும் மாலை நேரத்தில் சந்தோஷமாக ஆடிப்பாடுவதும் காதலிப்பதும் புதிதாகத் திருமணம் செய்து கொள்வதையும் கண்ட சாண்டிஸ் அவற்றை அப்படியே தனது படத்திலும் காட்சிகளாக வைத்திருக்கிறார்.

இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் சாதனைப்படங்களில் இதுவும் ஒன்று.

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: