காலைக்குறிப்புகள் 15 கனவெனும் நாடகம்.

கணிப்பொறி வந்தபிறகு கையால் எதையும் எழுதுவதேயில்லை. அரிதாக வெளியூர் பயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்கள் கையால் எழுதியிருக்கிறேன். மற்றபடி 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கணிப்பொறியில் தான் எழுதுகிறேன்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர்கள் பலரும் டைப்ரைட்டரில் எழுதினார்கள். பாப்லோ நெரூதா தலைமறைவாக ஒளிந்து வாழ்ந்த போது கூடத் தன் கையோடு ஒரு டைப்ரைட்டரை தூக்கிக் கொண்டே அலைந்தார்.

அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவிற்குக் கணிப்பொறியில் எழுதுவது என்றால் பயம். அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட கணிப்பொறியை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவேயில்லை.

எழுத்தாளர் சுஜாதாவைப் பார்க்கப் பெங்களூர் சென்றிருந்த போது அவர் தான் முதன்முதலாகக் கணிப்பொறியில் தமிழில் எழுதலாம் என்பதை அறிமுகப்படுத்தினார். எழுத்தாளர் இரா.முருகன் தான் முதன்முதலாகத் தமிழ் எழுத்துருக்களை ஒரு பிளாப்பி டிரைவில் காப்பிச் செய்து கொடுத்துப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். இன்று கம்ப்யூட்டர் இல்லாவிட்டால் ஒரு வேலையும் செய்யமுடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.

ஒரு காலத்தில் நானும் கோணங்கியும் விலை உயர்ந்த பாண்ட் பேப்பர் வாங்கி அதை ராயப்பேட்டையில் ஒரு கடையில் கொடுத்து அழகாகக் கலிக்கோ பைண்ட் செய்து வாங்குவோம். அதில் தான் நாவல் எழுத வேண்டும் என்று திட்டம். நான் அந்த நோட்டில் குறிப்புகள் மட்டுமே எழுதினேன். ஒரு வரி கூடக் கதை எழுதவில்லை. ஆனால் அந்த நோட்டு அத்தனை அழகாக இருக்கும். இப்போதும் விதவிதமான நோட்டுகளைக் குறிப்பு எழுதுவதற்காக வாங்குவேன். ஆனால் பேப்பரில் எழுதும் பழக்கம் கைவிட்டுப் போய்விட்டது.

புகழ்பெற்ற நாடக ஆசிரியரான  இயொனெஸ்கோ கையால் எழுதும் பழக்கத்தைத் திரும்பக் கடைப்பிடித்த போது அதற்கான காரணத்தை இப்படிச் சொல்கிறார். Painting retaught me the taste for writing by hand.

தனது கனவுகளிலிருந்தே தனது நாடகங்களை எழுதுவதாகச் சொல்கிறார் இயொனெஸ்கோ,. எழுதுவது போல அவருக்கு நிறையக் கனவுகள் வருமாம். நானே அப்படிச் சில கனவுகளை உணர்ந்திருக்கிறேன். முழுக்கதையும் கனவில் எழுதி முடிக்கப்பட்டு வாசிக்கப்படுவதைப் போல உணர்ந்திருக்கிறேன். காலையில் எழுந்து செய்யவேண்டியதெல்லாம் அந்தக் கதையைப் பிரதி எடுப்பது மட்டுமே. சில நேரம் கனவில் கதையின் தலைப்புகள் மட்டும் தோன்றுவதுண்டு. ஆனால் இயொனெஸ்கோவிற்கு அவரது கனவில் நாடகம் முழுமையாகத் தோன்றிவிடும் என்கிறார்.

அத்துடன் கனவு என்பதே ஒரு நாடகம் தான். அதில் என்ன நடக்கும். எப்படி நடக்கும் என்று தீர்மானிக்கவே முடியாது கனவு காணும்போது நாம் எப்போதும் ஒரு கதாபாத்திரமாகிவிடுகிறோம். என்றும் சொல்கிறார்.

கனவுகளிலிருந்து கிடைக்கும் பிம்பங்களை நான் நாடகத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன். காரணம் அவை அவை கனவின் வழியே என்னை வந்து சேர்ந்த உண்மைகள். கனவை மறுநாள் நினைவு கொள்வதும் ஒரு கலையே.

கனவை ஒரு நாடகமாக அவர் சொல்வது பிடித்திருக்கிறது. போர்ஹெஸ் ஒரு கட்டுரையில் நாம் கனவைப் பற்றிப் பேசவே முடியாது. நாம் பேசுவதெல்லாம் கனவைப் பற்றிய நினைவுகளைத் தான். அது முழுமையானதில்லை என்கிறார். உண்மை தானே.

Dreams are much more profound than what we call reality. The truth of the soul, our truth, the human truth, is found more in dreams. . என்ற இயொனெஸ்கோ பதில் முக்கியமானது.

உளவியல் அறிஞர் யூங் கனவில் கதாபாத்திரமும் அந்தக் கதாபாத்திரத்தை இயக்கும் சூத்திரதாரியும் ஒருவனே என்று சொல்கிறார். இயொனெஸ்கோவின் நாடகங்கள் யதார்த்தமானவையில்லை என்ற குற்றச்சாட்டிற்கு அவர் சொல்லும் பதில் யதார்த்தம் என்பதை எப்படி யார் வரையறை செய்வது. விஞ்ஞானிகளால் கூட இது தான் யதார்த்தம் என்று துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. யதார்த்தம் என்பது ஒரு கோணம். ஒரு சார்புநிலை அல்லது தோற்றத்தை முதன்மைப்படுத்தும் ஒரு கோணம். அவ்வளவே.

யதார்த்தத்திற்குள் விசித்திரங்கள் இருக்கின்றன. யதார்த்தம் கற்பனையைத் துணைக்குக் கொள்கிறது. யதார்த்தம் மாறிக் கொண்டேயிருக்கிறது. கவிஞர்கள் அன்றாட வாழ்க்கையைச் சார்ந்து அதிகம் எழுதுவதில்லை. காரணம் அவர்கள் யதார்த்தத்தை விடவும் கற்பனையைத் தான் அதிகம் துணை கொள்கிறார்கள். கற்பனையின் மூலமே யதார்த்தத்தைப் புரிந்து கொள்கிறார்கள். கவிஞர்கள் கற்பனையை எப்போதும் முன்னிறுத்துகிறார்கள், அவை நம் ஆன்மாவின் ஆழமான உண்மைகளாகும்

கனவினைப் போன்ற ஒரு மொழியைத் தான் தனது நாடகங்கள் வெளிப்படுத்துகின்றன. இதனால் கதாபாத்திரங்களின் இயல்பு மாறிக் கொண்டேயிருப்பதைத் தவிர்க்க முடியாது. கனவின் விசித்திர தன்மையைத் தான் எழுத முயல்கிறேன் என்கிறார் இயொனெஸ்கோ.

கனவிலிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள முடியும் என்றும் சொல்கிறார். பைபிளில் வரும் ஜோசப் கனவுகளின் வழியே எதிர்காலத்தை அறிந்து சொல்கிறான். கனவே அவனது வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கிறது.மனிதன் காண்கின்ற கனவுகளை ஆராய்வதும் ஒரு கலையே ஆயிரக்கணக்கான கனவுகளை ஆராய்ந்து சிக்மண்ட் பிராய்டு  கனவுகளின் விளக்கம் என்று அவர் ஒரு பெரிய நூல் எழுதியிருக்கிறார்.

we are rational in order to get hold of the irrational என்கிறார் மிலன் குந்தேரா. அது இயொனெஸ்கோவிற்கு மிகவும் பொருத்தமானது.

***

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: