சிங்கப்பூர் தேசிய நூலகம் வருடம் தோறும் Read Singapore என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. நல்ல இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் புதிய படைப்பியக்கத்தை உருவாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கெனத் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களை பரவலான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கும் தேசிய நூலகம் சிறப்பாக ஏற்பாடு செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்த ஆண்டு நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.
இதற்கென எனது எட்டு சிறுகதைகள் பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தலைப்பில் தனி நூலாக சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்படுகிறது. இப்படியொரு தமிழ் படைப்பாளியின் சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு தனிநூலாக Read Singapore நிகழ்வில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. அதற்காக சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த நிகழ்ச்சிக்காக ஜுலை மாதம் இரண்டாவது வாரத்தில் அநேகமாக 10 ம் தேதி முதல் 15 வரை சிங்கப்பூரில் இருப்பேன். பயண விபரம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை.
சிங்கப்பூரில் தேர்ந்த வாசகர்கள் அதிகமிருப்பதை அறிவேன். அவர்களைச் சந்திக்கவும் கலந்துரையாடல் செய்வதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருக்கிறேன்.
இது குறித்து தகவல்கள் அறிய இந்த சுட்டியை காணவும்.