கதைகளைத் தின்னும் ஆடு

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரை பற்றி எப்போது நினைக்கும் போது கூடவே தா.மணியின் நினைவும் சேர்ந்துதான் வருகிறது. ஒரு வேளை எனக்கு பஷீரை அறிமுகம் செய்து வைத்தவர் என்ற காரணமாக இருக்ககூடும். இன்னொன்று அவரைப் போல பஷீரை நேசித்தவர்கள் எவரையும் இன்று வரை நான் காணவில்லை என்பதும் காரணமாக இருக்ககூடும்

தா.மணி எழுத்தாளர் அல்ல. ஆனால் எழுத்தாளர் ஆவதற்கான அத்தனை குணங்களும் அவதானிப்புகளும் அவரிடமிருந்தன. விரும்பி எழுத்தாளர் ஆகாமல் இருந்தாரோ என்னவோ. தீவிரமான இலக்கிய வாசகர். தமிழிலும் ஆங்கிலத்திலும் தேடித்தேடி வாசித்தவர். சில காலம் க்ரியா பதிப்பகத்தில் வேலை செய்தவர். பின்பு கூட்டுறவு துறையில் பணியாற்றி வாழ்வின் இடர்பாடுகள், கசப்புகள் தாள முடியாமல் நோயுற்று சமீபத்தில் இறந்து போனார்.

வண்ணநிலவனின் எஸ்தர் தொகுதியின் முதல்பதிப்பை வாசித்தவர்கள் அவரது பெயரை அறிந்திருக்க கூடும். நுôலின் முன்னுரையாக விக்ரமாதித்யன், லயோனல், தா.மணி ஆகியோரின் உரையாடல் இடம் பெற்றிருக்கும். நானும் அந்த முன்னுரை வழியாகவே தா. மணி என்ற மணி அண்ணாச்சியின் அறிமுகம் பெற்றேன். கோணங்கி தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

தா.மணி அப்போது சங்கரன் கோவில் அருகே வேலை பார்த்து கொண்டிருந்தார். தென்காசியில் வீடு. நான் அப்போது கல்லுôரியில் படித்து கொண்டிருந்தேன். முதல் சந்திப்பில் அவரோடு நெடுநாள் பழகிய நெருக்கம் உருவானது. அவருக்கு ரொம்பவும் பிடித்தமான இடம் ஆரியங்காவு. நண்பர்கள் யார் வந்தாலும் ஆரியங்காவிற்கு அழைத்து போய்  ஒடும் ஆற்றின் கரையில் கிடக்கும் வெட்டி வீழ்த்தபட்ட பெருமரங்களின் மீது அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருப்பார்.

முதல் சந்திப்பில் தா.மணி எனக்கு பாத்துமாவுடைய ஆடு என்ற புத்தகத்தை தந்தார். பஷீரை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அன்றைக்கு ஆரியங்காவிற்கு  அழைத்து போய் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு ரஷ்ய இலக்கியங்கள், சுந்தர ராமசாமி கதைகள்,  அக்னி நதி நாவல் என்று சுற்றியது.  ஊர்வந்து சேர்ந்த இரவில்  புத்தகத்தில் இரண்டாவதாக இருந்த பால்யகால சகி என்ற குறுநாவலை வாசிக்க துவங்கினேன்.

பாதிக்கும் மேல் படிக்கமுடியாதபடியே மனது பெரும்பாரம் ஏறி விம்மத் துவங்கியது. கண்களில் அழுகை முட்டத்துவங்கியது. படித்து முடித்த இரவில் உறக்கமற்று தெருவின் இருண்ட பாலத்தில் தனியே அமர்ந்திருந்தேன்.  தண்ணீரில் முழ்காத தக்கையை போல மனது இருளுக்குள்ளும் அடங்க மறுத்தது. யாரோ மிக நெருக்கமான ஒருவரின் துயரத்தை பகிர்ந்து கண்டது போல மனது நடுங்கி கொண்டேயிருந்தது.

இந்நாள் வரை நான் படித்த காதல்கதைகளில் பால்யகால சகியே மிகவும் உயர்ந்தது என்று சொல்வேன். பால்யகால சகியின் தனிச்சிறப்பு அதன் எளிமையும் நேரடியான கதை சொல்லலும் கதையோடு பிரிக்க முடியாதபடி இழையாடும் மெல்லிய கேலியும் வாசித்து முடிக்கையில் ஏற்படும்  துக்கமுமேயாகும். 1944 வெளியான பால்யகால சகியை இப்போது வாசிக்கும் போது புத்தம் புதியதாகவே இருக்கிறது.

பஷீரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை பால்யகால சகியை வாசித்த நாளில் துவங்கியது. அதன் முன்பு வரை தீவிர இலக்கியம் என்பது தடிதடியான புத்தகங்களாகவும் நுôற்றுக்கணக்கான சம்பவங்களும் கொண்டதாகவும் இருக்க வேண்டும்  என்றே  அறிந்திருந்தேன். அதற்கு முக்கிய காரணம் ருஷ்ய இலக்கியங்கள். ஆனால் பஷீரின் குறுநாவல் இந்த எண்ணங்களை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் துடைத்தெறிந்தது.

அதன்பிறகு பால்யகாலசகி ஒரு தாவரத்தை போல என்னுள் வளர்ந்து கொண்டேயிருந்தது. பஷீரோடு அருகில் அமர்ந்திருப்பது போன்ற நெருக்கம் பால்யகால சகியை வாசிக்கும் போது உருவானது. நம் காலகட்டத்தின் ஆகச்சிறந்த கதைசொல்லி பஷீரே. அவரது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை என படைப்புகள் எங்கும் கதை சொல்வதன் உச்சபட்ச சாதனைகள் நிகழ்த்தபட்டிருக்கின்றன. R.E. Asher மொழிபெயர்ப்பில் பஷீரின் கதைகள் ஆங்கிலத்தில் வெளியாகி மூன்று முறை நோபல்பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. யுனெஸ்கோ கதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இன்று வரை நோபல் பரிசு பெற்றுள்ள எந்த எழுத்தாளருக்கும் நிகரானது பஷீரின் படைப்புகள்.

பாத்துமாவுடைய ஆடு குறுநாவலில் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் பணம் பணம் என்று பிடுங்கும் போது தன்னிடமிருந்த பணத்தை ஆடு தின்பதற்காக பஷீர் எடுத்து தருவார். ஆடு அதை மெதுவாக அசைபோட துவங்குவதாக ஒரு நிகழ்ச்சி இடம் பெறும். அதை வாசிக்கையில் குடும்ப இடர்பாடுகள் எந்த அளவு ஒரு மனிதனை நெருக்கடிக்கு உள்ளாக்க கூடியது என்பதை பகடியோடு புரிந்து கொள்ள முடியும். இன்னொரு கதையில் யானையின் வால் ரோமம் வேண்டும் என்று ஒரு சிறுவன் ஆற்றில் குளிக்கும் யானையின் வாலை கடித்து வைத்துவிடுவான்.யானை சப்தமிட்டு ஊரை கூட்டிவிடும். அது தான் பஷீர்.

குழந்தைகளின் மனவுலகம் பஷீரிடம் அப்படியே இருந்தது. அவரது படைப்புகில் மட்டுமே குழந்தைகள் தங்களின் வற்றாத கற்பனையோடும் உண்மையை மறைக்க தெரியாத வெளிப்படையான மொழியோடும் வலியை தாங்கிக் கொள்ளும் பக்குவத்துடனும் வெளிப்பட்டார்கள்.

தெருநாய்கள், பூனைகள், யானைகள், சிலந்தி, பாம்பு, தவளை என்று இயற்கையின் பிரிக்கபட முடியாத அத்தனை உயிர்களும் இணைந்த மனித வாழ்வின் நுட்பம் அவரது கதைகளில் வெகு நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தன்னை காதலிக்கச் சொல்லி கத்தியால் மிரட்டும் முரடர்களை அவரது கதைகளில் காணலாம். நேசமும் அன்புமே அவரது எல்லா படைப்புகளின் உள்ளாகவும் பீறட்டு கொண்டிருக்கின்றன.

அவரது எழுத்தில் துக்கம் தான் பரிகாசமாகிறது. எங்கெங்லாம் நாம் சிரிக்கிறோமோ அங்கே மறைக்கபட்ட வலியொன்று ஒளிந்திருக்கிறது. எளிய மனிதர்களின் மீதான பஷீரின் அக்கறை மிக முக்கியமானது. வேசைகள், பிச்சைகாரர்கள், மனநிலை தவறியவர்கள் மீது அவரது எழுத்து காட்டும் முக்கியத்துவம் தனித்துவமானது.

பஷீரை பார்ப்பதற்காக புறப்பட வேண்டும் என்ற யோசனை உண்டானதிலிருந்து அவரிடம் என்ன பேச வேண்டும் என்று  ஒத்திக்கை பார்த்து கொள்ளத் துவங்கினேன். அப்போது எனக்கு மலையாளம் வாசிக்க தெரியாது. பேசினால் புரிந்து கொள்ள முடியும். பஷீருக்கு தமிழ் தெரிந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பினேன். வீட்டிலிருந்து ஒரு வெள்ளிகிழமை இரவு கிளம்பி கோழிக்கோடு சென்று அங்கிருந்து பேப்பூர் செல்வது என்று திட்டமிட்டு இருந்தேன்.

பயணம் துவங்கியதுமே இரவு பேருந்தின் காலியான இருக்கையில் என் அருகில் பஷீர் அமர்ந்து பேசிக் கொண்டு வருவது போல உணர துவங்கினேன். அவ்வப்போது மெல்லிய வெளிச்சத்தின் ஊடாக பாத்துமாவுடைய ஆடு புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டி கண்களுக்கு நெருக்கமாக வைத்து கொண்டு பைபிள் படிப்பது போல முணுமுணுத்துக் கொள்வேன். பஷீரின் ஒவ்வொரு  சொல்லும் ஈரமானதும். களிமண்ணை போல பிசுபிசுப்போடு மனதில் ஒட்டிக் கொள்ளக்கூடியது.

விடிகாலையில் கோழிக்கோடு வந்து சேர்ந்து மலையாள எழுத்துகளை கண்ட போது மனது பரபரப்படைய துவங்கி விட்டது. ஒரு பக்கம் பஷீரை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் மறுபக்கம் படித்த போது ஏற்பட்ட நெருக்கம் போதுமே என்றும் மனது ஊசலாட துவங்கியது.

பஷீரை பார்ப்பதற்காக பேப்பூரில் இறங்கி நின்ற போது ஊரில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு அவரைத் தெரிந்திருந்தது. அந்த ஊரில் வசித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்வேன். காரணம் அவர்கள் பஷீரின் கதைகளில் ஒரு கதாபாத்திரமாக மாறி சாகாவரம் பெற்றுவிட்டார்கள் இல்லையா?

பேப்பூர் அழகிய கடற்கரை கொண்ட ஊர். ஒரு காலத்தில் அராபியர்களின் துறைமுகமாக இருந்தது என்றார்கள்.  கடற்கரையோரம் என்பதால் காலை வெயில் சற்றே வெம்மையோடு தெருவில் ஒடிக்கிடந்தது. நடந்து பஷீரின் வீட்டின் முன்பாக நின்றபோது  வானில் ஒரு கடற்குருவி கடந்து போனது. முப்பது வயதைக் கடந்த ஒரு ஆள் வெளியே வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். நான் தமிழ்நாட்டில் இருந்து பஷீரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். அவர் காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

வீட்டின் ஒரு பக்கம் பஷீரின் புகழ்பெற்ற மங்குஸ்தான் மரம் நிழல் விரித்திருந்தது.  மர நாற்காலியும் மலையாள பத்திரிக்கைகளும் கிடப்பது தெரிந்தது. பூனையிருக்கிறதா என்று உற்று பார்த்து கொண்டிருந்தேன்.  பத்திரிக்கைகாரரா என்று கேட்டுவரும்படியாக உள்ளேயிருந்து பஷீரின் குரல் கேட்டது. அந்த ஆள் வெளியே வந்த போது நான் கல்லுôரி மாணவன் என்று சொன்னேன். நல்லவேளை என்ற சப்தத்துடன் அவரது பின்னாலே பஷீர் வந்து நின்றிருந்தார்.

சட்டை அணியாத உடம்போடு ஒற்றைதட்டு வேஷ்டி அணிந்து கொண்டு வழுக்கை தலையும் ஹிட்லர் மீசையுமாக சிரிப்போடிய முகத்துடன் பஷீர் என் எதிரில் வந்து வணக்கம் சொன்னார். என்னால் நம்பமுடியவில்லை.  நடுங்கும் கைகளுடன் அவருக்கு வணக்கம் சொன்னேன். அவர் சிரித்து கொண்டே பத்திரிக்கை நிருபர் என்றால் சட்டை போட்டுக் கொண்டு வரவேண்டும், அத்தோடு நிறைய கேள்விகளோடு வேறு வந்திருப்பார்கள். நல்லவேளை நீங்கள் அப்படியில்லை என்று மலையாளத்தில் சொல்லி சிரித்தார்.

அவரை பார்த்தமாத்திரத்தில் பஷீரிடம் பேசுவதற்காக சேர்த்து வைத்திருந்த சொற்கள் யாவும் வடித்து போய்விட்டன. வெறுமனே பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவர் தனது வழக்கமான சாய்வு நாற்காலிக்கு போய் அமர்ந்து கொண்டார். அதன் எதிரில் ஒரு மரஸ்டுல் போடப்பட்டிருந்தது. அதில் நான் உட்கார்ந்து கொண்டேன். பஷீர் என்னை பார்த்து கொண்டேயிருந்தார்.

பாத்துமாவுடைய ஆடு, எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, உலகபிரசித்தி பெற்ற ஒரு மூக்கு, ஜென்மதினம், பூவன் பழம் என்று பஷீரின் ஒவ்வொரு கதையாக நினைவில் வந்து கொண்டேயிருந்தது. அவர் சாயா குடிக்கிறீர்களா என்று கேட்டார். தலையசைத்த போது நான் என்ன படிக்கிறேன் என்று கேட்டார். தடுமாறி பதில் சொல்ல துவங்கினேன்.

பஷீரின் கண்கள் என் தயக்கத்தை உணர்ந்ததை போல என்னிடம் உங்களுக்கு மலையாளம் வருமா என்று கேட்டார். பேசினால் புரிந்து கொள்வேன் என்றேன். எனக்கு அவ்வளவு தான் தமிழ் தெரியும் என்றபடியே தான் சென்னையில் ஜெயகேரளம் என்ற இதழில் சில காலம் வேலை பார்த்ததாக சொன்னார். என்னால்  தொடர்ந்து இயல்பாக பேச இயலவில்லை. திரும்பவும் மௌனம் எங்கள் இருவர் மீதும் கவிழ்ந்து கொண்டது.

கையில் கடுஞ்சாயாவை வைத்துக் கொண்டு அவரை பார்த்து கொண்டேயிருந்தேன். அங்கிருந்தவரிடம் பஷீர் என்னை காட்டி இவரை போலவே ஒரு ஆளை நான் பலவருசம் முன்னதாக பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒருவரை போலவே இருக்கிறார். எங்கே பார்த்தேன் என்று தான் தெரியவில்லை  என்று பஷீர் சொல்லியபடியே என்னிடம் சொந்த ஊர் எது என்று கேட்டார். பதில் சொன்னேன். மெல்ல பேச்சு சுரக்க துவங்கியது.

வழியில் உள்ள தெருநாய்கள் எதுவும் உங்களை கவனிக்கவில்லையா என்று கேட்டார். எதற்காக என்று கேட்டேன். பொதுவாக இங்குள்ள நாய்கள் என்னைப் பார்க்க வருகின்றவர்கள் அத்தனை பேரையும் வழியில் நிறுத்தி விசாரித்துவிட்டு தான் அனுப்பும். நானும் அதன் உரிமைகளில் தலையிடுவதில்லை என்று சொல்லியபடியே நம்முடைய வீட்டிலும் ஒருவன் இருக்கிறான். அவன் இன்றைக்கு மௌனவிரதம் இருக்கிறான் என்று நினைக்கிறேன். உங்களைப் பார்த்தும் குரைக்கவேயில்லையே என்றார்.

நான் பஷீரின் முன்னதாக இருக்கிறேன் என்பதை அப்போது தான் முழுமையாக உணர முடிந்தது.  அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். ஒவ்வொரு ஊரில் உள்ள தெருநாய்களுக்கும் தனித்தனியான சுபாவங்கள் இருக்கின்றன. அதன் அலட்சியம் மிக முக்கியமானது. பெரும்பாலும் தெருநாய்கள் தங்களை நாய் என்றே மறந்துவிடக்கூடியவை சில ரௌடிகளைப் போல.   அவர்களுக்கு தாங்கள் ரௌடி என்பது யாராவது சொன்னால் தான் தெரியும். எனக்கு  தெரிந்த ஒரு ரௌடி அப்படியிருந்தான். அவனிடம் யாராவது நீ ரௌடிதானே என்று நினைவூட்டும் நாட்களில் மட்டுமே  கூச்சலிட்டு அடிதடி சண்டை போடுவான். மற்ற நேரங்களில் கள்ளுக்கடை, துôக்கம் என்று தான் பொழுது போகும் என்றார்.

நான் எங்கள் ஊரின் அருகாமையில் வாழ்ந்த கள்ளர்களை பற்றி சொல்ல துவங்கினேன். பஷீரின் முகத்தில் விவரிக்க முடியாத ஆனந்தமும் கதை கேட்கும் உத்வேகமும் உண்டானது. மாடு திருடுகின்றவர்களை பற்றி சொல்லத் துவங்கியதும் அவர் குழந்தையை போல உற்சாகத்துடன் கேட்க துவங்கினார்.  இடையிட்டு சொன்னார்.

எல்லா ரௌடிகளுக்கும் ஏதாவது ஒரு பெரிய பலவீனம் இருக்கும். அத்தோடு ரௌடிகள் அதிகம் பேசுவும் மாட்டார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் பேசத்துவங்கினால் சில நிமிசங்களில் அவன் ஒரு முட்டாள் என்று நமக்கு தெரிந்து போய்விடும். பிறகு அவனை பார்த்து பயப்பட்டமாட்டார்கள் இல்லையா என்று சொல்லி சிரித்தபடியே பஷீர் பொம்பளை ரௌடிகளை பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டார்

இல்லை என்றதும் சென்னையில் அப்படியொரு பெண் ரௌடியை பார்த்திருக்கிறேன். அவள் சூளைமேட்டில் இருந்தாள். நிறைய பன்றி வளர்க்க கூடியவள். ஒரு நாள் அவள் தொடை தெரிய சேலையை துôக்கி கட்டியபடியே ஒரு ஆம்பளையோடு தெருவில் கட்டிபுரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்ததை பார்த்தேன். பயமாக இருந்தது. ஆனால் எந்த ஆம்பளையோடு அவள் தெருவில் சண்டை போட்டாளோ அதே ஆளோடு நாலைந்து நாட்களுக்கு பிறகு ரிக்ஷாவில் ஒன்றாக போய் கொண்டிருந்தாள். அப்போது தான் அவள் பெண் என்று எனக்கு தெரிந்தது என்றார்.

பஷீரிடம் எழுதித் தீராத கதைகள் இருந்தன. அவர் தன்னைச் சுற்றிய வாழ்க்கையை முற்றிலும் உள்வாங்கியிருக்கிறார். அத்தோடு அடித்தட்டு மக்களோடு சேர்ந்து வாழ்ந்த சூழல் எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்களை அவருக்கு  அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. பேச்சு மனசிதைவுற்றவர்களை பற்றியதாக திரும்பியது.

பஷீர் தீர்க்கமான குரலில் சொன்னார். உலகில் பைத்தியக்காரர்கள் மட்டுமே மிக சந்தோஷமாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் இருக்கிறார்கள். சில மனநலமற்றவர்களை காணும் போது அவர்கள் கண்களை நம்மால் தொடர்ந்து பார்க்க முடியாது. காரணம் அவர்களது கண்கள் எதையோ சொல்லக்கூடியது.

திருவனந்தபுரத்தில் ஒரு பைத்தியக்காரன் இருந்தான். அவனது ஒரே வேலை சாலையில் போகின்ற வருகின்றவர்களை மேல பாரு கிழே பாரு என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். ஒரு நாள் அவன் முன்னால் நின்றபடியே அவன் சொல்வது போல மேலேயும் கீழேயும் பார்த்தேன். ஒன்றுமேயில்லை. ஆனால் எனது செய்கையை கண்டு  அவன் கைதட்டி சிரித்தான். அவனது சிரிப்பு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவனை சிரிக்க வைப்பதற்காக அடிக்கடி அங்கே போய் அப்படி செய்யலாம் போலவும் இருந்தது என்று சொல்லிவிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்தில் பைத்தியக்காரர்கள் அதிகமிருக்கிறார்கள் என்று கேட்டார். நான் தெரியவில்லை என்று சொன்னேன்

எங்கள் பேச்சின் நடுவில் அவரை காண்பதற்காக ஒரு மலையாள பேராசிரியர் வந்திருப்பதாக சொன்னதும் பஷீர் எழுந்து போனார். அவரும் எங்களது உரையாடலில் வந்து கலந்து கொண்டார். பஷீர் அவரிடம் அதே கேள்வியை கேட்டார். பேராசிரியர் அப்படி எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்றதும் பஷீர் எதற்காக கணக்கெடுக்க வேண்டும் நிச்சயம் அது கேரளா தான் என்று சொல்லி சிரித்தார். பேராசிரியரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் பஷீர் . பேராசிரியர் எனது கல்லுôரி படிப்பு ஊர் என்று விசாரணை செய்து கொண்டிருந்த போது பஷீர் எழுந்து வெளியே சென்று விட்டார். பேச்சு எங்கோ சுற்ற துவங்கியது.

திரும்பி வந்த பஷீர் புன்சிரிப்போடு இந்த ஊரில் எனக்குத் தெரிந்த ஒரு விசித்திரமான நபர் இருக்கிறான். அவன் என் வீட்டிற்குள் வர மாட்டான். ஆனால் வாசலில் வந்து யார் என்னை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று எட்டி பார்ப்பான். நான் வெளியே போய் அவனை பார்த்தால் போதும் போய்விடுவான். என்னை பார்க்க எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்ற கணக்கு அவனிடம் தான் துல்லியமாக இருக்கிறது.  அவனுக்கு வருகின்றவர்களில் ஒருசிலர் கூட தன்னை பார்த்துவிட்டு போகவில்லையே என்ற கோபமிருக்க கூடும். இயல்பானது தான். அத்தோடு ஒழுங்காக பள்ளிக்கூடம் போகாத என்னைத் தேடி வந்து பேசுகிறார்களே அவர்கள் எவ்வளவு முட்டாளாக இருப்பார்கள் என்று பார்த்து போகக் கூட வந்திருக்க கூடும் என்று சொல்லி சிரித்தார்.

பஷீரிடம் பூனைகளை பற்றி கேட்கத் துவங்கினேன். அவர் பூனைகள் ஒரு விசித்திரமான பிராணி. அதை மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. மனிதர்களோடு வாழ்ந்த போதும் அவை மனிதர்களுடன் இணக்கமாக இருப்பதில்லை. சிலநேரம் பூனைகளை உற்று நோக்கினால் அதன் பார்வையில் ஒரு ஞானியின் ஜாடையை காண முடிகிறது என்று சொல்லிவிட்டு பூனைகள் பொதுவில் வீட்டிற்கு அடங்காதவை. பூனை பசி தாங்காதது. பூனைகள் அழக்கூடியது,   என்றார்.

பேராசிரியர் அதற்கு இடை மறித்து பூனைகளுக்கு சமாதி கட்டும் வழக்கம் கிரேக்கத்தில் இருப்பதாக சொன்னார். பஷீர் அவர் பேச்சில் அக்கறை கொள்ளவேயில்லை. மாறாக அவர் தனக்கு தெரிந்த ஏதோவொரு பூனையை பற்றியே  நினைத்து கொண்டிருந்தது போல முகபாவம் மாறியிருந்தது. பிறகு அவர் என்னிடம் பூனைகள் கடலில் நீந்துமா என்று கேட்டார். நான் தெரியாது என்று சொன்னேன். அவர் தன்னுடைய கனவு ஒன்றில் ஒரு பெரிய பூனை தோன்றி ஒருமுறை மிரட்டியிருப்பதாக சொல்லியபடியே தனக்கு நிறைய விசித்திரமான கனவுகள் வருகின்றன என்றார்.

நான் பஷீரிடம் அவரது பால்யகாலசகி  எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று  சொன்னேன். அவர் அப்படியா என்பதற்கு மேலாக வேறு எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.  பேராசிரியர் எது உங்களை எழுத வைத்தது என்று பஷீரிடம் கேட்டார். பஷீர் சற்றும் யோசிக்காமல் பசி என்று சொன்னார்.

பசித்த பொழுதுகளில் தன்னால் வேறு எதையும் செய்ய இயலாது. அத்தோடு தனது பசியை பற்றிய கவலையின்றி உலகம் இயங்கி கொண்டிருக்கிறது என்ற ஆதங்கமும் பசியை பகிர்ந்து கொள்ள முடியாத சூழலின் மீதான ஆத்திரமும்  எழுத வைத்தது என்றபடியே பசியை கடந்து செல்வது எளிதானதில்லை. எனது பெரும்பான்மைகதைகள் பசியோடு இருந்த நாட்களில் எழுதப்பட்டவை என்று   சொன்னார்.

ஆனால் பசியால் ஏற்பட்ட கோபம் பஷீரிடம் கேலியாகவும் மனித இயலாமையாவும் வெளிப்பட்டது. எழுத்தில் அவர் வெளிப்படுத்திய பேரன்பு வாழ்வில் அவருக்கு எவரிடமிருந்தும் கிடைக்கவில்லை.

நிர்தாட்சணயமற்று குதிங்காலில் அடித்து விரட்டுவது போல வாழ்க்கை அவரை ஒரு இடத்தில் தங்கவிடாது விரட்டிக் கொண்டேயிருந்திருக்கிறது. எளிமையான ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து குடும்ப வறுமையின் காரணமாக கஷ்டப்பட்டு முறையான பள்ளிக்கல்வியின்றி சிறுசிறு வேலைகள் செய்து நாடோடி போல இந்தியாவெங்கும் சுற்றியலைந்து, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று பின்பு விடுதலையாகி ஒரு எழுத்தாளராகி, அதன்பின்பும் நிலை கொள்ள முடியாத வாழ்க்கை போராட்டத்தில் சிக்குண்ட போதும் அவரது எழுத்தின் அன்பும் கருணையும் வற்றிப் போகவேயில்லை

பஷீரின் கதைகள் எளிய மனிதர்களின் வாழ்வை விவரிக்க கூடியவை. வேசைகள், சூதாடுபவர்கள், ரௌடிகள், பைத்தியங்கள், வீட்டை விட்டு ஒடி வந்தவர்கள், போக்கிடம் அற்று போனவர்கள்,வீழ்ச்சியடைந்து போன குடும்பங்கள் என அவரது உலகம் மனித அவலங்களின் பாடலையே முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

பஷீரின் எழுத்தின் எளிமை தற்செயலானதல்ல. அவர் தான் எழுதிய ஒவ்வொன்றையும் பலமுறை படித்து திருத்தி ஒழுங்கு செய்தே வெளியிட்டிருக்கிறார். புகழ்பெற்ற அவரது பால்யகாலசகியை முதலில் ஆங்கிலத்தில் எழுதி அது தனக்கு திருப்தியாக வராத காரணத்தால் அதை கிழித்து எறிந்துவிட்டு பிறகு மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.

என் எதிரில் அமர்ந்திருந்த பஷீரிடம்  அவர் அடைந்த வலியின் சுவடுகள் எதுவுமேயில்லை. எளிமையும் நகைச்சுவையும் எழுத்தில் மட்டுமல்லாது அவரோடும் கூடவேயிருந்தது. இரண்டு மூன்று மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவரிடமிருந்து விடைபெற்று வந்த பிறகும் அந்த நெருக்கம் கூடவே வந்து கொண்டிருந்தது.

அதை கேட்கவில்லையே இதை சொல்லவில்லையே என்று மனது ஆதங்கபட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் நான் பஷீரை பார்த்துவிட்டேன் என்று  உடனே மணி அண்ணாச்சியிடம் சொல்ல வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்தது.

இதற்காகவே மணி அண்ணாச்சியைப் பார்க்க சென்றேன். அவர் தன்னுடைய வீட்டின் மாடியில் படுத்துக் கொண்டு லவ் லெட்டர் என்ற பஷீரின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்து கொண்டிருந்தார். தற்செயலான ஆச்சரியம் அது. பஷீரின் வீட்டில் நடந்ததை அதன் பிறகு அவர் பத்து முறைக்கும் மேலாக நான் சொல்லி கேட்டிருப்பார். ஆனால் அவருக்கு பஷீரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றவேயில்லை

ஆனால் பஷீர் இறந்து போன 1994 ஆண்டின் ஜ÷லை 5ம் தேதி மாலையில் மணியண்ணாச்சியை திருநெல்வேலியில் சந்திக்க சேர்ந்தது. அவர் அதிகம் குடித்திருந்தார்.  பஷீரின் மரணம் அவரை உலுக்கியிருந்தது அவரது தோற்றத்திலே தெரிந்தது. என் கைகளை பிடித்துக் கொண்டு நாம் இப்போதே பஷீரை பார்க்க போக வேண்டும் என்று சொன்னார். அதற்கென்ன போகலாம் என்று சமாதானம் சொன்னேன்.

முதலில் ஆரியங்காவிற்கு போகலாம் என்றபடியே பஸ்பிடித்து அழைத்து போனார். ஆரியங்காவில் உள்ள சாராயக்கடையில் போதை உச்சமாகுமளவு குடித்தார். பிறகு என் கையை பிடித்து கொண்டு ஒரு குழந்தையை போல பஷீர் செத்து போயிட்டான். இனிமே நான் ஒரு ஆளையும் படிக்க மாட்டேன். பஷீர் செத்து போயிட்டான் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

வழக்கமான அமரும் இடங்களை தாண்டி சவுக்கு அடர்ந்த பாதையில் நடந்து போக துவங்கினார். அவர் பின்னாடியே நடந்து கொண்டிருந்தேன். யார்மீதோ கோபம் கொண்டவரை போல கிழேகிடந்த கல்லை எடுத்து எறிந்தார். அவரை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. அவரது துயரம் மேலோங்கி கொண்டேயிருந்தது.

மூன்று மணி நேரத்திற்கு பிறகு நாம் இப்போதே போய் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளலாம் என்று சொல்லி புறப்படச் சொன்னார். நாங்கள் கோழிக்கோட்டிற்கு வந்து இறங்கிய போது ஊரெங்கும் பஷீரின் மரணத்திற்கான துக்கம் படர்ந்திருந்தது. மணியண்ணாச்சி அங்கு வந்தபோதும் குடித்து கொண்டேயிருந்தார். அவருக்குள் வேதனை அடங்க மறுத்து பீறிட்டபடியே இருந்தது. ஆனால் அழவும் முடியவில்லை. பிறகு பஷீரை பார்க்க வேண்டாம் கிளம்பு என்று ஒரு மலையாள பேப்பரை வாங்கி அதிலிருந்த பஷீர் படத்தினை முத்தமிட்டபடியே போகலாம் என்று சொன்னார்.

பேருந்தில் தனியே ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். பேருந்தின் இருளுள் அவர் அழும் குரல் கேட்டது. அந்த சப்தம் கேட்டபோது தான் பஷீர் இறந்து போன துக்கம் எனக்குள் விஷமென தலைக்கு ஏறத் துவங்கியது. பேருந்தை விட்டு இறங்கும்வரை ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மணி அண்ணாச்சி வீட்டின் அருகில் வரை சென்று விட்டு  இன்னொரு பேருந்து ஏறி நான் புறப்பட்ட போது நெறி கட்டிக் கொண்டது போல தொண்டை வலித்தது.

ஒரு வார காலம் வீட்டிற்குள்ளாகவே இருந்தேன். அதன் பிறகு சில மாதங்கள் மணி அண்ணாச்சியை சந்திக்கவேயில்லை. திரும்பவும் மதுரை டவுன்ஹால் ரோடில் சந்தித்த போது அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதாக சொல்லி அறைக்கு அழைத்துக் கொண்டு போனார். அவரது கட்டிலின் மீது பால்யகால சகியும் பூவன் பழம் சிறுகதை தொகுப்பின் ஆங்கில பதிப்பும் இருந்தது. அவர் என் கையை பற்றிக் கொண்டு சொன்னார்.

பஷீரை போல ஒரேயொரு கதை எழுதுனா கூட போதும் புரியுதா ?

நான் தலையாட்டிக் கொண்டேன். அதன்பல வருடங்களுக்கு பிறகு தற்செயலாக ஒரு பேருந்தில் அவரை சந்தித்த போது தான் இப்போது எதையும் படிப்பதில்லை என்று சொல்லியபடியே முகம் கொடுத்து பேச கூட விரும்பாதவர் போல கடந்து போய்விட்டார். அதன்பிறகு அவரது மரண செய்தி மட்டுமே அறிய முடிந்தது.

முதன்முறையாக பஷீரை பார்த்துவிட்டு நான் புறப்படும் போது தற்செயலாக என்னிடம் பஷீர் நான் எழுதக்கூடியவனா என்று கேட்டார். ஒன்றிரண்டு கதைகள் வெளியாகி இருந்த போதும் எப்படி சொல்வது என்ற கூச்சத்தில் இல்லை வெறும் வாசகன் என்று சொன்னேன்.

பஷீர் உங்களால் எழுத முடியும் என்று சொல்லியபடியே சிரித்தார். சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியான இந்தியச் சிறுகதை தொகுதி ஒன்றில் பஷீரின் கதையோடு எனது கதையொன்றும் இடம் பெற்றிருந்தது. அதை பார்த்த நிமிசம் மணி அண்ணாச்சியின் நினைவு பீறிட்டது. அது போலவே ஒரு ஆசானின் முன்னால் தன் வித்தையை காட்டிவிட்டு பணிந்து நிற்கும் மாணவனை போன்ற மனநெருக்கமும் ஏற்பட்டது.

பஷீரின்  வீட்டிலிருந்து கிளம்பும் போது அங்கே வீழ்ந்துகிடந்த மங்குஸ்தான் மரத்தின் இலையொன்றை ரகசியமாக அவர் அறியாமல் எடுத்து பையில் போட்டுக் கொண்டேன். மரத்திலிருந்து அதன் இலை, பூ  கனி என எதையும்  கொண்டு போகாலம் ஆனால் மரத்தின் நிழலை மரத்திலிருந்து பிரித்து கொண்டு செல்லவே முடியாது என்று அந்த நிமிசம் உணர முடிந்தது. பஷீரும் அப்படியொரு ஆளுமை தானே.

**

(இது உயிர்மை வெளியீடாக வந்துள்ள எனது வாசகபர்வம் நூலின் ஒரு அத்யாயம்)

0Shares
0