மே 5ம் நாள் மும்பையில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் எனக்குத் தாகூர் விருது வழங்கப்பட்டது, இந்த விருதினை மராத்தியின் முக்கிய எழுத்தாளரும் இந்திய திட்டகமிஷன் உறுப்பினருமான நரேந்திர ஜாதவ் வழங்கினார், இவர் தாகூர் குறித்து முக்கியமான புத்தகங்களை மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார், தாகூரின் முக்கிய படைப்புகளை மராத்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர்களுடன் கொரிய அரசின் பன்னாட்டுஉறவுச் செயலர் Seo-hang Lee, சாகித்ய அகாதமியின் செயலாளர் திரு, அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி. பிரபலநாடக நடிகர் பரூக் ஷேக், நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்னின் மகள் நந்தனா சென் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்
ஞாயிற்றுகிழமை மும்பை தமிழ்சங்கத்தில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது, மிகுந்த அன்பும் நட்புமாக மும்பை தமிழ் எழுத்தாளர்கள். வாசகர்கள் ஒன்று சேர்ந்து நடத்தினார்கள்,
தாகூர் விருதினை பெற்றுக் கொண்டு சிறிய ஏற்புரை வழங்கினேன்
எல்லோருக்கும் வணக்கம்
எல்லாப் பெருமைகளுக்கும் காரணமாக உள்ள தமிழ் மொழியையும் அதன் இரண்டாயிர வருச இலக்கியப் பராம்பரியத்தினையும் இந்த தருணத்தில் வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த விருது எனது நாவல் யாமத்திற்குத் தரப்பட்டுள்ள போதும் இதை என் மொழிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன், முதல்முறையாக தமிழுக்கு இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த சாகித்ய அகாதமி மற்றும் சாம்சங் நிறுவனத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
வள்ளுவர். கம்பர். கபிலர். இளங்கோ. ஆண்டாள். பாரதி. புதுமைபித்தன். என பலமுக்கியமான தமிழ்படைப்பாளிகளை வாசித்து அதிலிருந்தே நான் உருவானவன், ஆகவே இந்த விருதினை என் முன்னோடிகளுக்கே நான் சமர்ப்பணம் செய்கிறேன்
சங்க காலக் கவிதை மரபில் பாணர் கூத்தர் என்று ஊர் ஊராகச் சென்று மக்களின் வாழ்வைப் பாடும் கலைஞர்க்ள் இருந்தார்கள், நான் அந்த மரபில் வருபவன்,
நவீன காலத்தில் பாணன் என்றே என்னை நான் கருதுகிறேன்,
நான் ஒரு அலைந்து திரியும் கதைசொல்லி. சுற்றியலைந்து மனிதர்களையும் இயற்கையையும் கதைகளாகச் சொல்வதே என் எழுத்து,
பள்ளிவயதில் எனக்கு நண்பனாக ஒரு நாய்க்குட்டி இருந்தது, அது ஒரு தெருநாய், பெயரில்லாதது, அந்த நாய்குட்டியிடமிருந்து தான் பசி எவ்வளவு உக்கிரமானது என்பதைக் கற்றுக் கொண்டேன்,
பசித்த நேரத்தில் அந்த நாய்க்குட்டி உணவு கிடைக்காமல் வீடு வீடாக அலைந்து காத்திருந்து தூக்கி எறியப்பட்ட மிச்சத்தை அவசரமாக விழுங்கிவிட்டு தீராத பசி கொண்ட கண்களுடன் நாவுதுடிக்க படுத்துக்கிடப்பதைக் கண்டிருக்கிறேன்,
பசித்த வயிறோடு மொழியற்றுப் போய் அடுத்தவரின் கருணைக்காக காத்திருப்பது மிகக் கொடுமையானது, அந்தத் துயரம் இன்றும் என்னை வாட்டுகிறது,
தனிமையின் அவஸ்தையையும். பசியின் உக்கிரத்தினையும். மனிதர்கள் எவ்வளவு சுயநலம் கொண்டவர்கள் என்பதையும் இந்த தெருநாயிடமிருந்தே கற்றுக் கொண்டேன்,
பல நேரங்களில் நானே அந்தத் தெருநாயின் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறேன்,
அவ்வகையில் அந்த நாய்க்குட்டியும் என் ஆசானே, அதற்கும் நான் இந்தத் தருணத்தில் நன்றிச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்
எழுத்தாளன் என்பவன் நினைவுகளின் சேகரிப்பாளன், மறதிக்கு எதிராக நினைவு மேற்கொள்ளும் கலகத்தை அவன் முன்னெடுத்துப் போகிறான்,
மறக்கப்பட்ட. மறக்கடிக்கப்பட்ட. அதிகாரம் அரசியலால் விலக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நினைவுகளை மீள்உருவாக்கம் செய்வதும். நினைவுகளின் வழியே மனிதர்களை காலம் தாண்டி நிலை பெறச் செய்வதுமே எழுத்தாளனின் வேலை
நினைவுகள் வீரியமிக்க விதைகளைப் போன்றவை, அவை உரிய இடத்தில் ஊன்றினால் முளைத்துக் கிளைத்து வளர்ந்துவிடும் என்பதை எழுத்தாளன் அறிந்திருக்கிறான், அந்த வகையில் அவனும் ஒரு விவசாயியே, இயற்கை ஒரு போதும் கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்பதையே எழுத்தாளன் சுட்டிக்காட்டுகிறான்,
மலையின் நிழல் ஆற்று நீரில் படரும் போது மலையை தான் வீழ்த்திவிட்டதாக ஆறு ஒரு போதும் நினைப்பதில்லை,
மாறாக மலையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வதாகவே கருதுகிறது, அப்படி தான் வாழ்வை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்கிறான் எழுத்தாளன்.
எழுத்தை நம்பி மட்டுமே வாழ்வது கடினம் என்று பலரும் எச்சரித்தனர், ஆனால் நான் முழுநேர எழுத்தாளானாக மட்டுமே வாழ்கிறேன், அதற்குக் காரணமாக உள்ள என் வாசகர்களுக்கும். பதிப்பகத்தினருக்கும் என் கதைகட்டுரைகளை வெளியிட்டுவரும் இதழ்களுக்கும், திரைப்படத்துறைக்கும். என் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுக்கும், வழிகாட்டும் ஆசான்களுக்கும். துணை நிற்கும் குடும்பத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
••
(இந்த உரையின் ஆங்கில வடிவம் அந்த நிகழ்வில் வாசிக்கப்பட்டது)