அன்னா ஏன் தற்கொலை செய்தாள்?

ஆர்.அபிலாஷ்

(21-11-11 அன்று ரஷ்ய  கலாச்சார மையத்தில்  அன்னா கரீனினா  நாவல் பற்றி  எஸ்.ரா. ஆற்றிய உரை குறித்த ஒரு பதிவு )

எஸ்.ரா. தன்  பேச்சில் அன்னா கரீனினாவின் சமகால தேவையை வலியுறுத்தினார். இன்றும் திருமணத்துக்கு வெளியே உறவு நாடி அவதிக்குள்ளாகும் பெண்கள் உள்ளார்கள். இது முகநூல் யுகத்தில் இன்னும் தீவிரமாகிப் போவதைச் சொன்னார். இது ஏன் நிகழ்கிறது? குடும்பம் எனும் அமைப்பின் தேவை என்ன? அதன் வரையறைகளை மீறி உடைத்துக் கொண்டு ஒருவன் ஏன் வெளியேறுகிறான்? இத்தகைய கேள்விகளுடன் அவர் பேச்சைத் துவங்கினார்.

குடும்பம் சீர்குலையும்போது தனிமனிதனின் ஆதார அமைதியையும் சேர்த்து அது அழிக்கிறது. குடும்பம் மனிதன் சமூகமாக வாழ்ந்த காலம் தொட்டே உள்ளது. குடும்பத்தின் அவசியம், அது மனிதனை மேம்படுத்த அவசியம் என்பதே. குடும்பத்துக்குள்ளும் மனிதனுக்கு அந்தரங்கமும் தனிமையும் தேவையுள்ளது. குடும்பத்துக்குள் தனது தேவை நிறைவேற்றப்படாது போகும்போது ஒருவர் வெளியேறுகிறார். இதன் காரணங்களை, விளைவுகளை அன்னா கரீனினா விசாரிக்கிறது.

தல்ஸ்தோய் எங்குமே அன்னா மீது தீர்ப்பெழுதுவதில்லை. அவளுக்குப் பிரதியில் முழுசுதந்திரம் அளிக்கிறார் என்றார். இது எஸ்.ரா செய்த ஒரு முக்கியமான அவதானிப்பு. ஏன் எனில் அன்னா கரீனினா தற்கொலை செய்தது தல்ஸ்தோயின் ஒரு ஒழுக்கவியல் தீர்ப்பு என்ற வகையில் ஒரு வாசிப்பு பொதுவாக உள்ளது. கதையில் அன்னா தன் கணவன் கரீனினாவை விட்டுப் பிரிந்து விரான்ஸ்கி எனும் இளைஞருடன் சேர்ந்து வாழ்கிறாள். எஸ்.ரா. சொல்லும் முதல் விசயம், அவளுக்குக் குற்றவுணர்வே இல்லை என்பது. காதலனுடன் அவள் ஆரம்ப கட்டத்தில் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலும் பின்னர் மெல்ல மெல்ல அவ்வாழ்வு அவளுக்குக் கசக்கத் தொடங்குகிறது. அவள் விரான்ஸ்கியை அனாவசியமாக கட்டுப்படுத்த முயன்று சந்தேகித்து அவன் மீது வெறுப்பை வளர்க்கிறாள். வெறுப்பின் உச்சத்தில் மனம் கசந்து தொடர்ந்து வாழும் நம்பிக்கை இழந்து தற்கொலை புரிகிறாள். மேற்கத்திய கிறித்துவ மரபில் மனிதனுக்கு உள்ளதாய் சொல்லப்படும் “ஒழுக்கத் தேர்வு சுதந்திரம்” (ஏவாள் ஆப்பிளைத் தின்னலாமா கூடாதா?) தொடர்ந்து அவர்களது நவீன இலக்கியங்களில் விவாதிக்கப்பட்டு வந்துள்ள ஒன்று. அன்னா கரீனினாவிலும் அவ்வாறே.

ஆனால் அன்னா  ஒழுக்க விழுமியங்களைக் கடந்த  ஒரு பெண்ணாகத் தன்னைக் கருதுவதாக  எஸ்.ரா. கூறுகிறார். அவள் காதல்  கள்ளக்காதல் அல்ல, ஏனெனில்  அவள் பொதுப்படையாகத் தன் கணவன்  இருக்கையில் காதலனை வரவழைத்து  அவனுடன் இருக்கிறாள். அவள் மீது அளப்பரிய பிரியம் கொண்ட ஆனால் குறைவான காம ஈடுபாடு கொண்ட, கணவன் இதைப் பொறுத்துக்கொள்ளத் தயார்தான். ஆனால் தன் சமூக அந்தஸ்து பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கிறான். அன்னா தன்னை இப்படியே ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும் என்று கேட்கிறாள், அதன் வழி தன் வாழ்வில் இருந்து பாலியல் ஒழுக்க விழுமியங்களை முற்றிலுமாக நிராகரித்து விடுகிறாள். ஆக அன்னாவுக்கு, ஒழுக்கக் குற்றவுணர்வோ சமூக அங்கீகாரமின்மையோ முக்கியமில்லை. இந்த எளிய வாசிப்பு நிலையைக் கடந்து ஒரு ஆழமான உளவியல் வாசிப்புக்கு எஸ்.ரா. நம்மை அழைத்துப் போகிறார். உண்மையில் ஒழுக்கங்களை நாம் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறோமோ அந்தளவுக்குப் பல தீவிரமான மனநிலைகளில் அவற்றைப் புறமொதுக்கவும் தயாராக உள்ளோம். ஒழுக்கமும் அறமும் அன்றாட வாழ்வனுபவத்தின் சாரத்தில் இல்லை. நாம் நமக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்து செய்கிறோம். செய்யும் நொடியில் அது ஒழுக்கரீதியானதா அறவழியிலானதா என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஆக, அன்னா ஏன் வாழ்வில் கசப்படைகிறாள்? நமது செயல்களின் விளைவான துயரம் அல்லது இழப்பையும் நாம் இதேபோல் நாடியே அடைகிறோம் என்ற பதில் மூலம் இந்த விசாரணையை மேலும் நுட்பமாக எஸ்.ரா. தனது உரையில் தொடர்ந்தார்.

அன்னாவுக்கு உடல்நலமில்லாமல் போய் மரண  விளிம்பில் இருக்கிறாள். அப்போது  அவளது கணவன் தன் மனைவியை  நாடி சற்றும் குறையாத அன்புடன் வருகிறான். இங்கு எஸ்.ரா. குறிப்பிடாத  ஒரு விசயம், கரீனினாவின் மத ஈடுபாடு. அவனது அன்பு கிறித்துவம்  போதிக்கும் அனைத்தையும் மன்னித்து ஏற்கும் தயாளனின் அன்பு. ஆரம்பத்தில் ஓடிப் போக விழையும் அன்னாவைக் கற்பழிக்க முயன்று அதன் வழியாவது தன் மேலாதிக்கத்தை தக்க வைக்க முயலும் கணவன் கரீனினா பின்னர் மிகுந்த ஆன்மீக அமைதி பொருந்தியவனாகப் பரிணமிக்கிறான். அவனது இந்த குணத்திற்கு மாறாக அவனுக்கு ஆன்மீகம் போதிக்கும் ஒரு சீமாட்டி வருகிறாள். அன்னாவுக்குப் பின் அவள்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். இவளோ கடுமையான மத ஈடுபாடு இருந்தும் பொறாமையும் வெறுப்பும் மிக்கவளாக இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அன்னாவை, தன் குழந்தையைச் சந்திக்க கூட இவள் அனுமதி மறுக்கிறாள். இவ்வாறு மதத்துக்குள் இருந்தபடியே எந்தவித மீட்புக்கும் சாத்தியமில்லாத ஒரு பாத்திரத்தையும் தல்ஸ்தோய் வரைந்துள்ளார். ஆனால் நகைமுரணாக கரீனினா இவள் வழியாக ஒரு ஆன்மீக மனவிரிவை அடைகிறான்.

நோயுற்ற அன்னாவை  நாடி வரும் அவன் அவளை மட்டுமல்ல, காதலன் விரோன்ஸ்கியைக் கூட மன்னித்து ஏற்கத் தயாராக உள்ளான். ஆனால் விரோன்ஸ்கி குற்றவுணர்வு காரணமாக கரீனினாவின் முகத்தை எதிர்நோக்கவே தயங்குகிறான். பின்னர் இதே குற்றவுணர்வு காரணமாகத் தற்கொலைக்கு முயன்று தோற்கிறான். அவனுக்கும் விரோன்ஸிக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. விரோன்ஸ்கி ஒழுக்கத்தை மீறினாலும் அதனை நேர்மையாக எதிர்ப்பவன் அல்ல, அவன் ஒழுக்கத்துடன் வாழ்வின் இருண்மையுடன் ஒரு விட்டில் போல் விளையாட மட்டுமே விரும்புபவன். அதனாலே தல்ஸ்தோய் அவனைக் குற்றவுணர்வில் வாடுபவனாகக் காட்டுகிறார். அன்னா துணிந்து தீமைக்குள் நுழைகிறாள். ஆக, அவள் மனம் அன்பினால் நிறைகிறது. ஆனால் அவளுக்கு ஒரு ஆவேச வாழ்வின், தீமையின், உக்கிரம் தாங்கும் ஆன்ம வலு இல்லை. அதுதான் பிரச்சினை.

நோயில் இருந்து  எழுந்த அன்னாவின் மனநிலை கணிசமாக மாறுகிறது. காமத்தை தல்ஸ்தோய் ஒரு புயலுடன் ஒப்பிடுகிறார். அதன் உக்கிரத்துடன் இணையும்போது சிலவேளை அவள் அபரிமிதமான இன்பம் அனுபவித்தாலும் “ஒரு கிறித்துவ சாத்தானை”ப் போல் இறுதியில் அது அவளைப் பலி வாங்கிக் கொள்கிறது.

கிறித்துவ இறையியலுக்கு அப்பால் கூட  ஒரு தூய-மிருக நிலை என்ற அளவில் காமத்தின் தன்மை  இதுவாகத்தான் உள்ளது. காமத்தைப் போல் ஆவேசமான உணர்வுநிலைகளை நேரடியாகத் தொடர்ந்து சந்திக்க மனிதனால் முடிவதில்லை. காமத்தைப் பதுங்கியும் ஆவேசமாய் எதிர்கொண்டும்தான் இருநிலைகளில் நம்மால் ஓரளவு அதனைச் சந்திக்க முடிகிறது. காமத்தின் மற்றொரு பக்கமாகத் துயரம் உள்ளது. இரண்டையும் சுவைக்கவே மனித மனம் காமத்தை நாடுகிறது என்றார் எஸ்.ரா. உலக இலக்கியத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படுள்ள வினா இது: “ஏன் காமமும் மரணமும் அருகருகிலேயே உள்ளது?” நமது காப்பியங்கள் காமத்தினால் விளையும் மாபெரும் போர்களைப் பேசுகின்றன. காமம் ஒரு தப்பிக்க முடியாத அவஸ்தையாக, வலியாக உள்ளதை நவீன நாவல்கள் விவாதிக்கின்றன. எஸ்.ரா. சுட்டியது மனித மனதின் இந்த சிக்கலைத்தான். நாம் ஏன் காமத்தின் வழியாக மரணத்தின் வாயிலில் கால் எடுத்து வைக்கிறோம்? இது மனித மனதின் தீர்க்க முடியாத புதிர். இதற்கு விடையை மதத்திலோ சட்டங்களிலோ தேடக் கூடாது என்று தல்ஸ்தோய் கருதியதாகச் சொன்னார் எஸ்.ரா.

அன்னா மெல்ல  மெல்ல உளவியல் ரீதியாக  சிதைவுற்று முழு மனநோயாளியாக  மாறுவதை எஸ்.ரா. விவரித்தார். அதேவேளை அவள் தன் சீரழிவின் வழியாக ஒரு ஆன்மீக மீட்சியையும் அடைகிறாள். தனது வாழ்வு முழுமையாக அதன் ஒளியை இழந்து விட்டதாக நினைக்கிறாள்; வேட்கையின் உச்சத்தோடு பெரும் கசப்பையும் அறிந்து விட்ட பின் தனக்கு இனி வாழ்வில் எந்த அர்த்தமும் தெரியவில்லை என்று உணர்கிறாள். தனது வாழ்வு, அணையும் முன்பான ஒரு மெழுகுவர்த்தியை கவியும் இருளை போன்றது என கற்பிக்கிறாள். இருள் முழுக்க மூடுவதுதான் மரணம். அதற்கு மேல் ஒன்று இல்லை என்றால் மரணத்தை ஏன் பயக்கவோ தவிர்க்கவோ வேண்டும். ஆனால் நிராசை அல்லது குற்றவுணர்வு அல்ல, வாழ்வின் பொருளின்மை குறித்த எண்ணம் தான் அன்னாவை தற்கொலைக்கு நகர்த்துகிறது.

சாகும்முன் அவள் தூங்கும் விரோன்ஸ்கியைப் பார்த்து அவன் மீது அளப்பரிய அன்பை உணர்கிற காட்சியை எஸ்.ரா. அற்புதமாக விளக்கினார். அவள் மிக அதிகமாய் வெறுக்கும் விரான்ஸ்கியை தான் மிக அதிகமாக நேசிக்கவும் செய்கிறாள். அவள் பிரச்சினை அதுதான். அதன் ஒரே தீர்வு மரணம் என்று முடிவு செய்கிறாள். வாழ்வின் இந்த மிக உக்கிரமான ஒரு மனநிலையை அன்னா அடைந்துள்ளதைச் சுட்டுவதே எஸ்.ரா.வின் உரையின் மையமாக இருந்தது. இந்நாவலை ஆழமாகப் படிக்க இதன் வழி எஸ்.ரா. ஒரு வாயிலை நம் முன் திறந்துள்ளார். வேறுபல சுவாரஸ்யமான கூர்மையான கருத்துக்களையும் இந்நாவல் குறித்து அவர் முன்வைத்து தன் உரையை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றினார்

நன்றி : உயிரோசை

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: