மார்கழி மாதத்தில் ஆண்டாளின் பாசுரங்களைக் கேட்பதை விட உன்னதமானது இந்த உலகில் வேறு எதுவுமில்லை, மார்கழியை அவளைப் போல கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை.
மற்ற மாதங்கள் தங்களைப் பாடமால் விட்டுவிட்டாளே என்று ஆண்டாளிடம் வருத்தம் கொண்டிருக்கும், கொடுத்து வைத்தது மார்கழி மாதம், இப்போதெல்லாம் மார்கழியில் பனி அதிகம் பெய்வதில்லை, பூசணிப் பூக்கள் வைத்து கோலமிட்ட வீடுகளைக் காண்பது அரிதாக இருக்கிறது, கிணற்றடியும் ஈரவாளியும் கண்ணில் இருந்து மறைந்து போய்விட்டன, ஆனால் ஆண்டாள் எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிடுகிறாள்,
தன் பாடலின் வழியே அவள் பனியைப் படரவிடுகிறாள், குளிர்ச்சி அவளது சொல்லின் வழி கசிந்தோடுகிறது, ஆண்டாளின் பாடல்களுக்குள் உணர்ச்சிபூர்வமான நாடகம் ஒன்று ஒளிந்திருக்கிறது,
துயில் கலையாத பெண்கள், பனியோடு அவர்களை எழுப்பும் குரல், அந்த குரலில் வெளிப்படும் கேலி, பாசாங்கான கோபம், வியப்பு, அதற்குத் துணைசேர்க்கும் புள்ளினங்களின் சப்தம், எதற்காக துயில் எழுந்து நந்தகோபனைப் பாட வேண்டும் என்பதற்கு அவள் சொல்லும் வியப்பான காரணங்கள், நப்பின்னை மார்பில் உறங்கும் நாராயணனின் கோலம் என்று பாசுரங்கள் ஒரு வசீகர நாடகத்தின் தனித்தனிக் காட்சிகளைப் போலயிருக்கிறது
ஆண்டாளின் குரலுக்குள் ஒலிக்கும் கேலி மிக உயர்வானது, செல்லமாக கேலி செய்வது என்போமே அந்த வகை, அவளது தோழிகளில் ஒருத்தியாக இருந்தவர்கள் பாக்கியசாலிகள், அவர்களை ஆண்டாள் அல்லவா துயில் எழுப்புகிறாள், அன்றாட வாழ்வு எனும் பெருந்துயிலில் இருந்து நம்மை எழுப்பும் இந்தப் பாடல்களை தமிழ் கவிதையின் உச்சபட்ச சாதனை என்பேன்
ஆண்டாளின் தமிழ் பாலின் ருசியுடையது, தனக்கான பட்டைத் தறியில் தானே நெய்து கொள்வதைப் போல அவளுக்கான சொற்களை அவளே உருவாக்குகிறாள், சொல்லை அவள் பயன்படுத்தும் விதமும் அலாதியானது, உதாரணம் சொல்வதில் அவள் ஒரு மாயக்காரி, பருவப்பெண் என்றாலே மனதில் நிறைய பயம் இருக்கும் என்பார்கள், ஆண்டாள் மனதிலோ பயமேயில்லை, மாறாக கொண்டாட்டமும் ஞானமும் கூடியிருக்கின்றன
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்குச் சாத்துவதற்கு வெற்றிலையை ஒலையோடு மடக்கி பச்சைக்கிளி செய்வார்கள், அந்தக் கிளியை பார்த்திருக்கிறீர்களா, வெகுஅருமையாக இருக்கும், அதை எல்லோராலும் செய்துவிட முடியாது, அதற்கென தனிக்குடும்பங்கள் இருக்கின்றன, அக்கிளி பேரழகானது, அது தான் ஆண்டாளின் தோளில் இருக்கிறது, ஸ்ரீவில்லிபுத்தூரில் அக்கிளியை தத்தை என்று சொல்வார்கள்.
ஆண்டாளின் கிளி வேறு, மீனாட்சியின் கிளி வேறு, இரண்டும் மாறுபட்ட அழகுகள், ஆண்டாளின் கிளியும் அவள் அளவிற்குத் தமிழ் பேசும் என்பார்கள், அது சொல்லிக் கொடுத்துப் பேசும் கிளியில்லை, இயல்பாகப் பேசத்தெரிந்த கிளி, அந்தக் கிளியை குயிலுக்குத் தோழியாக்குவதாக ஒரு பாடலில் ஆண்டாள் சொல்கிறாள், எதற்காக தெரியுமா, ஏதாவது ஒரு குயில் தனக்கு விருப்பமான கண்ணனை கூவி அழைத்து வரவழைத்துவிட்டால் அந்தக் குயிலை கிளிக்கு தோழியாக்கிவிடுவாளாம்,
ஆண்டாள் புல்லினங்கள் மீது பேரன்பு கொண்டவள், அதன் ஒசைகளை அவள் வெகுவாக ரசிக்கிறாள், ஆனைச் சாத்தன் என்னும் வலியன் குருவியின் கீச்சு கீச்சு சப்தம், அவளுக்கு மிகவும் விருப்பமானது,
ஆண்டாள் மழையைப் பாடுகிறாள், அது எப்படி பெய்கிறது என்று நாராயணனின் சங்கு சக்கரங்களை உவமை சொல்லி வியந்து பாடுகிறாள், ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் என்ற அந்தப் பாடலில் கடலில் இருந்து வானிற்கு சென்ற தண்ணீர் எப்படி கருமுகிலாகி மழையாகப் பெய்கிறது என்ற அறிவியல் உண்மையும் சேர்ந்து வெளிப்படுகிறது
அவள் துயில் எழுப்பும் தோழிகள் எப்படிபட்டவர்கள் பாருங்கள், ஒருத்தியின் வீட்டில் கன்று ஈன்ற எருமையானது தனது இளம் கன்றின் பிரிவால் வருந்தி மடியில் உள்ள பாலைத் தானே சுரந்து விடுகிறதாம்,
அப்படி பால்கறை படிந்து சேறான தலைவனின் தங்கையே, உன்னைத் துயில் எழுப்ப நாங்கள் தலையில் பனிவிழக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறாள், தலையில் பனிவிழ நிற்கும் ஆண்டாளின் உருவம் பாடலின் வழியே பளீரெனத் தோன்றி மறைகிறது
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினையானை பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
ஆண்டாளுக்கு பிடித்த மிருகம் சிங்கம், அதை நேரில் பார்த்திருப்பாளா என்பது சந்தேகமே, ஆனால் சிங்கத்தைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறாள், சிங்கத்தை நினைத்து அவளுக்குப் பயமே கிடையாது, அவளைப் பொறுத்தவரை சிங்கம் என்பது நிகரற்ற கம்பீரம், சிங்கமாக இருப்பது உயர்வானது,
அதனால் தான்
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் என்றுபாடுகிறாள்,
இன்னொரு பாடலில் மழைக்காலத்தில் குகையில் உறங்கி கிடந்த சிங்கமானது விழித்தெழுந்து கண்களில் தீப்பொறி பறக்க, பிடரி மயிர் சிலிர்த்துக் கொள்ள, உடலை உதறி நிமிர்த்தி கர்ஜனையிட்டுக் கொண்டே குகையிலிருந்து வெளி வருவது போல நீயும் வெளிவந்து அருள வேண்டும் என்கிறாள்,
விழித்தெழும் சிங்கம் பற்றிய அக்காட்சி கவித்துவ மேன்மையுடையது
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத் திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.”
ஆண்டாளின் திருப்பாவையை தமிழ்கவித்துவத்தின் தனிப்பெரும் சாதனை என்றால் அதன் உச்ச நிலையே ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி, அதை வாசிக்காமல் இருந்தவர்கள் தமிழின் உன்னத கவிதையை அறியாமல் போனவர்களே.
நாச்சியார் திருமொழியில் வெளிப்படும் ஆண்டாளின் குரல் திருப்பாவையில் இருந்து பெரிதும் மாறுபட்டது, அக்குரலில் தனிமையும் ஏக்கமும் தீவிரமாக வெளிப்படுகின்றன. தன் ஆசையின் பாதையில் எவரைப் பற்றியும் பயமின்றி செல்லும் ஆண்டாளின் காதலை அறிய இந்த ஒரு பாடலைப்பாருங்கள்,
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
வெறுமனே உறங்கி எழுந்து மார்கழியைக் கடந்து விடாமல் இனிமையான ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களுடன் நாளைத் துவக்கிப் பாருங்கள், அது ஒரு தனி அனுபவமாக இருக்கும் , முயன்று பாருங்கள் ஆண்டாளின் கவித்துவ உன்னதம் உங்களுக்குத் தானே புரியும்.
••