நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்து பதினைந்து புத்தகங்களை வாங்கினேன், இந்த முறை அதிகமான கடைகள் இருக்கின்றன, ஆனால் மிக குறைவாகவே அரிய புத்தகங்கள் உள்ளன, புதிது புதிதாக நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை குவித்திருக்கிறார்கள், அதில் பாதிக்கு மேலான புத்தகங்கள் சந்தைக்கு உருவாக்கபட்ட மலினமான சரக்குகள்,
இரண்டு நாட்களிலும் அதிக கூட்டமில்லை, நாளையில் இருந்து அதிக கூட்டம் வரக்கூடும்,
இந்த இரண்டு நாட்களில் நான் தேர்வு செய்த முக்கியமான புத்தகங்கள்
1) ஒக்ககூரா காக்குஜோ எழுதிய ஜப்பானிய தேநீர்கலை பற்றிய புத்தகத்தின் புதிய வெளியீடு கலையை ரசித்தல் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பேராசிரியர் பெருமாள், வ.உ.சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது
2) சில இறகுகள், சில பறவைகள்- வண்ணதாசன் கடிதங்களின் புதிய தொகுப்பை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது
3) மரம் என்ற தொகுப்பை மதுமிதா தொகுத்திருக்கிறார், இயற்கை குறித்து பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரை தொகுப்பது, சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது
4) காமிக்ஸ் ரசிகர்களுக்கு பழைய காமிக்ஸ்கள் பத்து இருபது என ஒன்று சேர்த்து தனித்தனி தொகுப்புகளாக ரூ100 முதல் ரூ200 வரை கிடைக்கிறது, இப்புத்தகங்கள் தென்னிந்திய புத்தகநிறுவனம் என்ற கடையில் கிடைக்கிறது
5) பெனி எனும் சிறுவன் என்ற அல்பேனிய புத்தகத்தை யூமா வாசுகி மொழியாக்கம் செய்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது,
6) உயிர்மையில் அ. முத்துலிங்கத்தின் ஒன்றுக்கும் உதவாதவன், ஜெயகரனின் கறுப்பு கிறிஸ்துவமும் வெள்ளை சிங்கங்களும், மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது கவிதைதொகுப்பு போன்றவை முக்கியமானவை,
7) வம்சி பதிப்பகம் சார்பில் ஜெயமோகனின் அறம் சிறுகதைகளின் தொகுப்பு முக்கியமான ஒன்று
8) சாகித்ய அகாதமியில் பலமுக்கிய நாவல்கள் ஐம்பது சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன, குறிப்பாக வங்காள நாவலான பொம்மலாட்டம், தகழியின் கயிறு, அனிதா தேசாயின் மலைமேல் நெருப்பு, எம்.டி, வாசுதேவன்நாயரின் இரண்டாம் இடம், தாகூரின் கட்டுரைகள், கன்னட தலித் இலக்கியபடைப்புகள் போன்ற புகழ்பெற்ற புத்தகங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன
9) கூடங்குளம் பற்றி அ.முத்துகிருஷ்ணனின் சிறிய வெளியீடு முக்கிய கவனத்தை ஈர்க்கிறது.
10) மிக முக்கியமான கறுப்பிலக்கிய நாவலான சிலுவையில் தொங்கும் சாத்தான் முன்றில் கடையில் கிடைக்கிறது, இது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பதிப்பின் மீதமுள்ள பிரதி, இதே கடையில் மார்த்தா திரபாவின் நிழல்களின் உரையாடலும் கிடைக்கிறது
11) அன்னம் பதிப்பகம் மீ. மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலின் புதிய பதிப்பு வெளியிட்டிருக்கிறது, மிக அரிய வரலாற்று நூலிது
12) LeftWord Books ல் பகத்சிங்கின் ஜெயில் குறிப்புகள் தனிப்புத்தகமாக கிடைக்கிறது The Jail Notebook and Other Writings By: Bhagat Singh
13) ஷியாம் மனோகரின் மராத்தி நாடகமான கல்லீரல் தமிழில் விவேகானந்த கோபால் மொழியாக்கத்தில் வெளியாகி உள்ளது
14) Roberto Calasso வின் கட்டுரை தொகுதி The Forty–Nine Steps,
**
அன்னம் பதிப்பகத்தில் அக்ஞேயாவின் அரிய நாவலான நமக்குநாமே அந்நியர்கள் கிடைக்கிறது, அது போலவே பழனியப்பா பிரதர்ஸ் கடையில் மூழ்கிய நகரம் என்ற நல்ல மொழியாக்க புத்தகம் கிடைக்கிறது, இரண்டையும் சில வருசங்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன், பிரதிகள் விற்காமல் இருந்து கொண்டேயிருக்கின்றன
••
புத்தகக் கண்காட்சிக்கு நிறைய இளைஞர்கள் வருகிறார்கள், தேடித்தேடி அவர்கள் புத்தகங்களை வாங்குவது உத்வேகம் தருவதாக உள்ளது, மத்திய வயதுடையவர்கள் தான் குறைவாக கண்ணில் படுகிறார்கள்,
••
எனது புத்தனாவது சுலபம் சிறுகதை தொகுப்பை வாசித்து அதில் உள்ள ஒரு கதையை திரைப்படமாக்க முயற்சிப்பதாக ஒரு இயக்குனர் இன்று என்னை நேரில் சந்தித்து பேசினார், அவர் ஐந்து பிரதிகள் புத்தகம் வாங்கி தன் நண்பர்கள் அனைவருக்கும் தந்திருப்பதாக சொல்லி சிறுகதைத்தொகுப்பை சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார், தனது முதல்படத்தை எனது சிறுகதையை மையமாக கொண்டு உருவாக்க முயற்சிக்கும் அவரது கனவு மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது
••
புத்தக கண்காட்சியில் தினமும் ஐந்து பேராவது என்னைத்தேடி வந்து சினிமாவில் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று கேட்டு அரைமணி நேரம் பேசுகிறார்கள், விளக்கமாகப் பேசினாலும் அவர்களுக்குப் புரிவதில்லை, போதாது என்று தான் பார்த்த படங்களை பட்டியிலிட்டு சொல்லி இது போதாதா என்று வாதம் வேறு செய்கிறார்கள், இவர்களை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை, பேச மறுத்தால் கோபப்படுகிறார்கள், பேசினால் நம்மை கோபமாக்கிவிடுகிறார்கள், பயமாகத் தானிருக்கிறது
••
8ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை ஆறுமணிக்கு நான் புத்தக கண்காட்சியில் உள்ள எழுத்தாளர் வாசகர் சந்திப்பில் கலந்துரையாட இருக்கிறேன்
••