இதுவரை சீனாவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களில் மிக அதிகமான பொருட்செலவாக 100 மில்லியன் முதலீட்டில் உருவாக்கபட்டுள்ள ஷாங் யுமுவின் (Zhang Yimou ) புதியபடமான The Flowers of War யைப் பார்த்தேன்,
ஷாங் யுமு சீனாவின் முக்கிய இயக்குனர், இவரது Raise the Red Lantern.The Story of Qiu Ju, To Live, Not One Less,The Road Home, Riding Alone for Thousands of Miles போன்ற முந்தைய படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன்
ஹாலிவுட் சினிமா இவரை அழைத்து பங்காற்றச் செய்தபோது ஷாங் யுமு உருவாக்கிய Hero மற்றும் House of Flying Daggers வரலாற்றை பின்புலமாக கொண்ட சாகசப்படங்களாக இருந்தன,
இந்தப்படங்களில் வழக்கமாக காணப்படும் ஷாங் யுமுவின் கதை சொல்லும் முறையும், காட்சிகளின் எளிமையும் முற்றிலும் உருமாறி மிகப்பெரிய செட், கிராபிக் காட்சிகள், அதிசாகசச் சண்டைகள், அலங்காரமான ஆடைகள் என்று ஹாலிவுட்டின் வணிகசினிமாவிற்கான பிரம்மாண்டம் கொண்டதாக இருந்தன, ஆனாலும் இப்படங்களில் ஷாங் யுமுவின் கவித்துவமான தருணங்கள் சில இருக்கவே செய்தது,
அதிலிருந்து விலகி Riding Alone for Thousands of Miles படத்தை மீண்டும் இயக்கிய போது ஷாங்கின் கவித்துவ சினிமாவின் அடுத்த நிலை உருவாகிவிட்டது போலிருந்தது, அந்தபடம் சமகால உலகத்திரைப்படங்களில் முக்கியமான ஒன்று, இறந்து போன பையனின் இறுதி ஆசையை நிறைவேற்ற வயதான அப்பா அலைந்து திரிகிறார் என்பது முற்றிலும் புதியதொரு கதைக்களம்,
ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர் என்பதால் ஷாங் யுமு எப்போதுமே காட்சிகளை அற்புதமாக படமாக்குவார், அது போலவே அழுத்தமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்கிக் காட்டுவார், ஆகவே The Flowers of War பார்ப்பதற்கு முன்பாக நிறைய எதிர்பார்ப்பு எனக்குள் உருவாகியிருந்த்து,
இப்படம் 1937ல் சீனாவின் தென்பகுதி நகரமான நான்கிங்கை (Nanjing)யை ஜப்பானிய ராணுவம் எவ்வாறு ஆக்ரமித்து அங்குள்ள இரண்டு லட்சம் மக்களை கொன்று குவித்து இருபதாயிரம் பெண்களை வன்புணர்ச்சி செய்து படுகாயப்படுத்தி கொன்றது என்ற துயரசம்பவத்தை விவரிக்கிறது,
சீனவரலாற்றில் அதிகம் பேசப்பட்ட இந்தச் சம்பவம் குறித்த படத்தை ஷாங் யுமு உருவாக்க முயன்ற போது ஒட்டுமொத்த சீனாவும் மிகுந்த அக்கறையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது, டிசம்பர் 2011ல் படம் வெளியான போது அது வழக்கமான ஹாலிவுட் சினிமாவின் பாணியில் நான்கிங் படுகொலையை யுத்த சாகசப்படம் ஒன்றை போல உருவாக்கியிருக்கிறது என்ற கடுமையான விமர்சனம் எழத்துவங்கியது, ஜப்பானில் இப்பட்த்தை திரையிடக்கூடாது என்று கண்டனக்குரல்கள் எழுந்தன, ஆனால் சீனாவில் இப்படம் வசூலில் பெரிய சாதனையை நிகழ்த்தியது,
நான்கிங் படுகொலையை பற்றி Geling Yan எழுதிய நாவலான Flowers of Nanjing,யை ஷாங் யுமு படமாக்கியிருக்கிறார், படத்தின் மையம் நான்கிங் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றில் அடைக்கலமாகும் அமெரிக்கரான Christian Bale முக்கிய கதாபாத்திரம், அந்த தேவாலயத்தில் இளம்மாணவிகள் சிலர் முன்னதாகவே தஞ்சம் புகுந்திருக்கிறார்கள், தொடர்ந்த குண்டுமழையால் நகரின் புகழ்பெற்ற வேசையர் விடுதிகள் தாக்கபடவே அங்குள்ள இளம்வேசைகள் தேவாலயத்தில் அடைக்கலமாகிறார்கள், ஒரு பக்கம் மாணவிகள் மறுபக்கம் வேசைகள், இரண்டுக்கும் நடுவில் பாதிரி வேஷமிட்ட ஜான் மில்லர் என்ற கதாபாத்திரமான கிறிஸ்டியன் பேல், வெளியே ஜப்பானிய ராணுவத்தின் இடைவிடாத தாக்குதல் இந்த நெருக்கடியை ஒரு சட்டகமாகக் கொண்டு கதை விரிகிறது, அடைக்கலமாகியுள்ள பெண்களை நகரை விட்டு வெளியே அழைத்துச் சென்று காப்பாற்ற ஜான் மில்லர் என்ன முயற்சிகளைச் செய்கிறார் என்று கதை நகருகிறது,
தேவாலயத்தினை சுற்றிவளைக்கும் ஜப்பானிய ராணுவ தளபதி Hasegawa தான் தேவாலயத்தை ஒரு போதும் தாக்க மாட்டேன் என்று உறுதியளித்து அங்குள்ள இளம்மாணவிகளை கொண்டு ஜப்பானிய ராணுவத்தின் வெற்றிகீதத்தை சேர்ந்திசையாகப் பாடும்படி கட்டாயப்படுத்துகிறார், இதற்காக 13 மாணவிகளை ராணுவ முகாமிற்கு கொண்டு போகப்பட இருக்கிறார்கள், இதிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதே படத்தின் முடிவு,
Hotel Rwanda. Schindler’s List இரண்டு படங்களையும் அதிகம் நினைவூட்டுகிறது ஷாங் யுமுவின் இப்படம், ஆனால் ஹோட்ட்ல் ருவாண்டா தந்தது போன்ற அக நெகிழ்வை, அதிர்ச்சியை The Flowers of the War தரவில்லை, படுகொலை காட்சிகளை விரிவாக படமாக்கியுள்ள ஷாங் யுமு வேசைகளுக்கும் மாணவிகளுக்குமான விலகல் மற்றும் நெருக்கத்தை மேலோட்டமாகவே கடந்து போய்விடுகிறார், ஜான் மில்லர் கதாபாத்திரம் ஷிண்ட்லரின் மறுபதிப்பு போலவே காணப்படுகிறது,
ஹாலிவுட்டின் யுத்தபடங்களை விட சிறப்பாக ஜப்பானிய ராணுவத்தின் படுகொலை காட்சிகள் படமாக்கபட்டிருக்கின்றன, தேர்ந்த ஒளிப்பதிவும் அரங்க அமைப்பும், பேரழகியான வேசையாக நடித்துள்ள Ni Niயின் வசீகர நடிப்பும் படத்தின் முக்கிய பலம், ஆனாலும் படம் முடியும் போது ஒரு துயரசம்பவத்தின் ஆழ்ந்த வலியை அது பார்வையாளனுக்குள் ஏற்படுத்தவில்லை,
Not One Less படத்தின் எளிமையும் அழகும் போல ஒன்றை நூறு மில்லியன் செலவழித்தும் ஷாங் யுமு அடைய முடியவில்லை என்பது தான் நிஜம்
வணிக பிரம்மாண்டமில்லாத, எளிய கவித்துவமான படம் ஒன்றை ஷாங் யுமு மீண்டும் உருவாக்குவார் என்பதற்காக காத்திருக்கவே வேண்டியிருக்கிறது
••