நூற்றாண்டுகால இந்திய சினிமாவில் குழந்தைகளின் உலகம் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது, பொதுவாக வெகுஜனத் திரைப்படங்களில் இடம் பெறும் குழந்தைகள் இரண்டுவிதமானவர்கள், ஒன்று பெரியவர்களைப் போல அலட்டிக் கொண்டு தன் இயல்பை மீறி மிகையாகப் பேசுகிறவர்கள், அர்த்தமற்றபடி பாட்டுபாடி ஆடுகின்றவர்கள், மற்றவர்கள் கைவிடப்பட்ட அநாதைகள், ஏழ்மையில் உழலும் பரிதாபமானவர்கள், ஒடிப்போனாவர்கள், குடும்ப பாரம் சுமப்பவர்கள், அவர்களின் கஷ்டமும் கண்ணீரும் வணிக திரைப்படங்களின் வியாபார உத்திக்கு சுவைகூட்டவே பயன்பட்டிருக்கிறது, டெம்பிளட் எனப்படும் வகைமாதிரிக்கு உட்பட்டே குழந்தைகள் திரைப்படங்களில் இடம் பெறுகிறார்கள்,
குழந்தைகள் சினிமா என்பதை நாம் குழந்தைகள் நடிக்கும் சினிமா எனத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம், குழந்தைகள் சினிமாவில் குழந்தைகள் நடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, அது குழந்தைகளின் மனஉலகை, விருப்பங்களை, கனவுகளைக் காட்சிபடுத்தியிருக்க வேண்டும், குழந்தைகளின் கண்களின் வழியே உலகம் எப்படி தென்படுகிறது என்பதை முதன்மைப் படுத்தியிருக்க வேண்டும், குழந்தைகள் உலகை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள், ஏன் அவர்களை பெரியவர்களின் உலகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, ஒரு பையனோ, பெண்ணோ புறச்சூழலின் பாதிப்பில் எப்படி தனது இயல்பான ஆசைகளை கைவிட நேர்கிறது, பெரியவர்களின் பிரச்சனைகள் சிறார் உலகை எப்படி பாதிக்கின்றன என்பதையே உலகெங்கும் குழந்தைகள் திரைப்படங்கள் பேசுகின்றன
இந்தியா போன்ற கதைகளின் தாயகத்தில் குழந்தைகளின் விநோத கற்பனைகளை விவரிக்கும் கதைகள் ஏராளம் இருக்கின்றன, குறிப்பாக நாட்டுபுறக்கதைகள், தேவதைகதைகள், அமானுஷ்ய கதைகள், நாடோடிக்கதைகள் போன்றவை இன்றும் குழந்தைகளால் விரும்பி படிக்கபடுகின்றன, ஆனால் இவற்றை மையமாகக் கொண்டு வெகு குறைவான படங்களே இந்தியாவில் வெளியாகி உள்ளன,
நமது குழந்தைகள் பார்த்து ரசிக்கும் படங்களில் எண்பது சதவீதம் ஹாலிவுட் தயாரிப்புகளே, அதிலும் குறிப்பாக வால்ட் டிஸ்னி மற்றும் பிக்சார் தயாரிப்பில் உருவான அனிமேஷன் படங்களே, ஜப்பானிய அனிமேஷன் படங்கள் கூட நமது குழந்தைகளுக்கு அறிமுகமாகவில்லை, உண்மையில் அமெரிக்க அனிமேஷன் படங்களை விட பலமடங்கு சிறப்பானது ஜப்பானிய அனிமேஷன் படங்கள், குறிப்பாக மியாஷகியின் படங்களைச் சொல்வேன், அவற்றை நமது குழந்தைகள் திரை அரங்குகளில் பார்ப்பதற்கு எந்த வசதியும் இதுவரை செய்யப்படவில்லை, இந்திய சினிமா சந்தையை ஏகபோகமாக அமெரிக்கா முடக்கி வைத்திருப்பதே இதற்கான முக்கிய காரணம்
தமிழ் திரைப்படங்கள் வணிகநோக்கங்களை மட்டுமே பிரதானமாக கொள்வதால் குழந்தைகளை யதார்த்தமாக சித்தரிக்கும் கலைப்படங்கள் கவனிக்கபடவேயில்லை, இந்தியாவின் மற்றமொழி திரைப்படங்களுக்கும் தமிழுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, அங்கே கலைப்படங்களுக்கு என தனியே இயக்குனர்களும், பார்வையாளர்களும் இருக்கிறார்கள், அரசே முன்வந்து இது போன்ற படங்களை நிதிஉதவி அளிக்கிறது, படங்களை வெளியிட சிறப்பு மானியம் தருகிறது, சிறிய முதலீட்டில் வெளியான குழந்தைகள் திரைப்படங்கள் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளுகின்றன, தமிழில் அந்தச் சாளரம் திறக்கபடவேயில்லை,
இந்த சூழலில் கடந்த நூறு வருஷங்களில் இந்திய அளவில் வந்த குழந்தைகள் படங்களில் சிறந்தவற்றை அறிய முற்பட்டால் நாம் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை, குழந்தைகள் படங்களைத் திரையிடுவதற்கு என தனி அரங்குகளோ, திரைப்பட விழாக்களோ நம்மிடமில்லை என்பதே, இந்தியாவில் தயாரிக்கபட்ட முக்கியமான குழந்தைகள் படங்கள் பலவும் திரை அரங்குகளில் வெளியாகவில்லை, அவை மிகச்சிறிய வட்டம் ஒன்றுக்குள் காட்டப்பட்டு பெட்டிக்குள் முடங்கிப்போயின,
இந்திய சினிமாவில் அனிமேஷன் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை, ஆரம்ப முயற்சிகள் மட்டுமே இங்கு நடைபெற்றுள்ளன, அவதார், லார்ட் ஆப் தி ரிங்ஸ், ஹாரி போட்ட்ர், நார்னியா போன்ற படங்களின் தொழில்நுட்ப சாத்தியங்களைக் காணும் போது குழந்தைகளுக்கான சிறந்த படங்களை இந்த தொழில்நுட்பம் வழியே நாம் எளிதாக சாதிக்க முடியும் என்றே தோன்றுகிறது, ஆனால் அதற்கான முனைப்புகள் நம்மிடம் குறைவாக உள்ளன
இந்திய அளவில் குழந்தைகளுக்கான திரைப்படங்களை உருவாக்குவதற்கு என தனியே சிஎப்சி என்ற திரைப்பட வளர்ச்சி கழகம் உள்ளது, அவர்கள் ஆண்டுதோறும நிதி உதவி செய்து குழந்தைகள் படங்களை உருவாக்குகிறார்கள், சென்னையிலும் அவர்களுக்கு அலுவலகம் இருக்கிறது, அப்படி இருந்தும் ஏன் தமிழில் குழந்தைகள் படங்கள் எடுக்கபடவில்லை என்பது புதிராகவே உள்ளது
இன்று புதிது புதிதாக மல்டிபிளெக்ஸ் அரங்குகள் வந்துள்ள சூழலில் சிறிய அரங்கிற்கான திரைப்படங்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது, இந்த சூழலில் குழந்தைகளுக்கான படங்கள் தரமானதாக உருவாக்கபட்டால் அவை பெரும் வெற்றியை பெறும் என்றே தோன்றுகிறது, அதற்கு ஒரு உதாரணம் சமீபமாக மராத்தியில் வெளியாகி வரும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள்,
இந்திய அளவில் குழந்தைகளை யதார்த்தமாக சினிமாவில் காட்டிய முக்கிய இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களாலும் கூட முழுமையாக குழந்தைகளுக்கு என முழுநீளபடத்தை உருவாக்க முடியவில்லை, காரணம் வணிக சந்தையின் கெடுபிடியான நிர்பந்தம்,
இன்று வரை நாம் குழந்தைகளை நமது விருப்பங்களின் வடிகாலாக மட்டுமே கருதுவதால் அவர்களுக்கு என தனியான புத்தகங்கள், நூலகங்கள், திரை அரங்குகள், திரைப்படங்கள், நாடகங்கள், என எதையும் உருவாக்கி தர மறுக்கிறோம், அந்த நிலையின் இன்னொரு வடிவமே குழந்தைகளுக்கான திரைப்படங்களை நாம் ஒதுக்கிவைத்திருப்பது
ஈரானிய சினிமாவைப் பார்க்கையில் குழந்தைகளுக்காக அவர்கள் எவ்வளவு தரமான படங்களை உருவாக்குகிறார்கள் என்று வியப்பாக உள்ளது, இது போலவே ஜப்பான், கொரியா, சீனமொழியிலும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நிறைய வெளியாகின்றன, ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள் ஹாலிவுட் படங்களை விட நூறு மடங்கு வசூலிலும் வெற்றி பெறுகின்றன, அந்த சந்தையை நாம் இன்னமும் பயன்படுத்திக் கொள்ளவேயில்லை
குழந்தைகள் சினிமாவில் மிக முக்கியமான பத்து படங்கள் என நான் கருதும் படங்கள் என் ரசனையில் மதிப்பிடப்பட்டவை, இவற்றிற்கு வெளியிலும் தரமான படங்கள் நான் காணாமலே இருக்ககூடும், நான் பார்த்து ரசித்த படங்களில் என் நினைவில் பசுமையாக உள்ள படங்களே இவை
1) நீலக்குடை –ஹிந்தி – விஷால் பரத்வாஜ்.
ஹிந்தி திரைப்பட உலகம் கடந்த சில ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய கதை சொல்லும் முறை, புதிது புதிதான இளம் இயக்குனர்கள். மாறுபட்ட பின்புலங்கள் என்று அதன் வளர்ச்சி உலக அளவில் விரிந்துள்ளது. ஹிந்தி திரைப்பட உலகில் எனக்குப் பிடித்த இயக்குனர் விஷால் பரத்வாஜ். இவர் ஒரு இசையமைப்பாளர்.
இவர் இயக்கிய முதல்படம் மக்தி. குழந்தைகளுக்கான திரைப்படம். படம் இரண்டு சிறார்களைப் பற்றியது. வட இந்திய கிராமம் ஒன்றில் கதை நடைபெறுகிறது, நூறு வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூன்யக்காரியிருக்கிறாள். அவளொரு பாழடைந்த வீட்டில் வசிக்கிறாள். அதன் உள்ளே போகும் எவரையும் அவள் விலங்காக உருமாற்றிவிடுவாள் என்றொரு நம்பிக்கையிருக்கிறது. அந்தக் கிராமத்தில் சூனி என்றொரு சிறுமி இருக்கிறாள். இவள் துடுக்கதனம் நிரம்பியவள். இவளுக்கு நேர் எதிர் அவளது சகோதரி முன்னி. அடக்கமானவள். ஒரு நாள் சூனியின் விளையாட்டுதனத்தால் முன்னி சூன்யக்காரியின் வீட்டிற்குள் போய்விடவே அவளை ஒரு கோழியாக மாற்றிவிடுகிறாள் சூனியக்காரி. முன்னியை திரும்பவும் உருமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக நூறு கோழிகளை கொண்டு வந்து தருவதாக வாக்கு தருகிறாள் சூனி . அதற்காக எப்படி அவதிபடுகிறாள் என்பதே கதை.
வேடிக்கையும் சிரிப்பும் சற்றே குழந்தைகளைப் பயம் கொள்ளச் செய்யும் சூன்யக்காரியுமாக அழகான குழந்தைகள் படமிது. இப்படத்தில் சூன்யக்காரியாக நடித்திருப்பவர் ஷப்னா ஆஸ்மி. கதை திரைக்கதை இயக்கத்தோடு இதை தயாரித்திருந்தார் விஷால் பரத்வாஜ்
இதன்பிறகு உருவாக்கிய படமே நீலக்குடை . ரஸ்கின் பாண்டின் குறுநாவலது. ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள மலையடிவாரத்தைச் சேர்ந்த சிறிய ஊர். அந்த ஊரில் வசிக்கும் பினியா என்ற சிறுமி, ஒரு நாள் வெளிநாட்டு பயணிகள் தங்கள் ஊரின் இயற்கை எழிலைக் காண சுற்றுலா வருவதைக் காண்கிறாள். அதில் ஒரு பயணியிடம் அதிசயமான நீலக்குடை ஒன்று இருப்பதை காண்கிறாள். அந்தக் குடையை தன்னிடம் உள்ள புலிநகம் ஒன்றைக் கொடுத்து அதற்கு மாற்றாக வாங்கிக் கொள்கிறாள்.
அந்தக் குடையை எல்லோரிடமும் காட்டிச் சந்தோஷம் கொள்கிறாள். ஆடிப்பாடுகிறாள். அந்த ஊரில் சிறிய பெட்டிக்கடை வைத்திருப்பவர் நந்தகிஷோர். அவர் நரித்தனம் கொண்டவர். எப்படியாவது ஏமாற்றி அந்த குடையைப் பறித்துக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் பினியா தருவதேயில்லை.
ஆத்திரமான நந்தகிஷோர் அதைத் திருடி ஒளித்து வைத்துக் கொள்கிறார். குடையைக் காணாமல் தேடி அலையும் பினியா அதை நந்தகிஷோர் தான் திருடியிருப்பார் என்று நம்புகிறாள். ஆனால் அதை மெய்பிக்க வழியில்லை. இந்த நிலையில் நந்தகிஷோர் அவளிடமிருந்தது போன்ற ஒரு சிவப்புக் குடை ஒன்றை வாங்கி வந்து பெருமையடிக்கிறான். அது திருடப்பட்ட பினியாவின் குடை தான் என்பதைக் கண்டுபிடித்து தன் குடையை மீட்கிறாள் பினியா.
படத்தின் துவக்க காட்சியில் வரும் சிறார்களின் விளையாட்டுதனமான பாடலும், பெட்டிக்கடைக்காரர் அறிமுகமாகும் காட்சியும், அந்தக் கடையில் வேலை செய்யும் சிறுவனின் குறும்பும், புதியதொரு அனுபவத்தை உருவாக்குகின்றன.
குடையோடு பினியா சுற்றியலையும் காட்சிகளும், அவளை ஏமாற்றி குடையைப் பறிக்க நந்து மேற்கொள்ளும் தந்திரங்களும் வேடிக்கையானவை. படத்தின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ள பனி பெய்யும் சாலையில் செல்லும் சிறுமியும் நந்துவும் தொடர்பான காட்சிகள் ருஷ்யத் திரைப்படங்களில் காணப்படும் அழகியலுக்கு நிகரானவை. அழகான குடை ஒரு சிறுமியின் வாழ்வை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பதை நேர்த்தியாக விவரிக்கிறது இப்படம். குடை ஒரு படிமம் போலவே படத்தில் பயன்படுத்தபட்டிருக்கிறது. ஹிமாசல்பிரதேசத்தின் சிற்றூர். பசுமையான புல்வெளிகள். நீரோடைகள். மலைப்பாதைகள். அதன் ஊடாக காற்றில் பறந்து செல்லும் குடை என்று கவித்துவமாக விவரிக்கிறது படம்.
குடையை இழந்த சிறுமியின் துயரம் பார்வையாளர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக் கொள்கிறது. இப்படத்தில் பாடல்களும் பிண்ணனி இசையும் அற்புதமானவை. அது போலவே சச்சின் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், பங்கஜ் கபூரின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவை.
சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் பவர்ரேஞ்சர் என்று பிம்பங்களின் பின்னால் செல்லும் குழந்தைகளுக்கு அவசியம் அறிமுகம் செய்ய வேண்டிய படமிது.
2)கும்மாட்டி, -Kummatty – : மறைந்த மலையாள இயக்குனர் அரவிந்தனின் படம், அரவிந்தன் கலை நேர்த்தி மிக்க படங்களை இயக்கியவர், இவரது படங்களில் யதார்த்தமும் மிகை கற்பனையும் தனித்து பிரிக்கமுடியாதபடி இழையோடி இருக்கும், கும்மாட்டியும் அப்படி ஒரு கதையே, 1979ல் எடுக்கப்பட்ட இப்படத்தை கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நான் பார்த்தேன்,
கும்மாட்டி ஒரு மாயக்கலைஞன், அவன் மழை முடிந்து வசந்த காலம் துவங்கும் போது ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து சேர்வான், கும்மாட்டி இயற்கையின் ஒரு அங்கம், அவன் குழந்தைகளுடன் ஆடிப்பாடி அவர்களை தனது மாயத்தால் உருமாற்றி சந்தோஷப்படுத்துவான், அப்படி அவனால் நாயாக உருமாற்றப்பட்ட ஒரு சிறுவன் மறுபடி தனது உருவம் மாறாமல் நாயாகவே ஆகிவிடுகிறான், அடுத்த ஆண்டு கும்மாட்டி மறுபடி வரும்வரை தான் நாயாகவே இருக்க வேண்டும் என்ற நிலை அவனுக்கு உருவாகிறது, அவனோடு பள்ளியில் படித்த மற்றசிறுவர்கள் பள்ளி திறந்து செல்ல துவங்குகையில் நாயாக மாறிய சிறுவன் அவர்கள் கூடவே போகிறான், மறுபடி கும்மாட்டியை சந்தித்து எப்படி அவன் சிறுவனாக உருமாற்றம் பெற்றான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார் அரவிந்தன், இது சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது
3) கூபி கானே பாகே பாய்னே Goopy Gyne Bagha Byne . சத்யஜித்ரே குழந்தைகளுக்காக உருவாக்கிய படமிது, ரேயின் தாத்தா குழந்தைகளுக்காக சந்தேஷ் என்ற இதழை நடத்தி வந்தார், அந்த இதழின் ஆசிரியராக பொறுப்பு ஏற்ற சத்யஜித்ரே குழந்தைகளுக்காக நிறைய கதைகள் எழுதியிருக்கிறார், அதில் பெலுடா சீரியஸ் எனப்படும் துப்பறியும் கதைகள் முக்கியமானவை, இந்த படத்தின் கதை ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ராய் எழுதியது,
கோபிநாத் காய்னே எனும் கூபி பாட்டு பாடுவதில் மிக ஆர்வமான சிறுவன், ஆனால் மிக மோசமாக பாடக்கூடியவன், மன்னர் சபையில் மோசமாக பாடினான் என்று அவனை காட்டிற்குள் துரத்திவிடுகிறார்கள், அங்கே தன்னை போலவே மோசமான மேளம் வாசித்த சிறுவனான பாகேவை சந்திக்கிறான், இவரும் இணைந்து தங்கள் திறமையை காட்டுகிறார்கள், இந்த இசையை காட்டில் உள்ள ஆவிகள் கேட்டு ரசிக்கின்றன, ஆவிகளின் அரசனுக்கு இந்த இசை பிடித்து போய்விடுகிறது, அவர்களுக்கு மூன்று வரங்களை பரிசாகத் தருகிறான், அதன்படி அவர்களுக்கு நினைத்த இடத்திற்கு பயணம் செய்ய மாயச்செருப்பு கிடைக்கிறது, கைதட்டினால் சாப்பாடு கிடைக்கும் சக்தி வருகிறது, இசையால் மக்களை கட்டிப்போடும் மாயசக்தி அவர்கள் வசமாகிறது,
இதை வைத்துக் கொண்டு அவர்கள் தங்கள் திறமையை எப்படி நிரூபணம் செய்கிறார்கள் என்பதை சாகசத்துடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் சத்யஜித் ரே, கூபி கானேயின் சிறப்பு தேர்ந்த இசை மற்றும் துள்ளல் நடனம், வேடிக்கையான உரையாடல்கள், நாட்டுபுற கதையின் மரபில் அமைந்த இக்கதையை ரே அழகாக படமாக்கியிருக்கிறார்
4)டோரா, (Tora)- Jahnu Barua அஸ்ஸாமிய மொழி படம், இயக்கியவர் ஜானு பரூவா, அஸ்ஸாமிய மொழியில் மிக்குறைவான திரைப்படங்களே தயாரிக்கபடுகின்றன, அஸ்ஸாமியரான ஜானு பரூவா பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்றவர், அவர் எடுத்த படங்கள் தேசிய அளவிலும் பன்னாட்டு திரைப்பட விழாக்களிலும் முக்கிய விருதுகளை பெற்றிருக்கின்றன,
அஸ்ஸாமிய கிராமம் ஒன்றில் வசிக்கும் இரண்டு குடும்பங்களும், அவர்களுக்கு இடையில் ஏற்படும் சச்சரவுகளும் அதனால் குழந்தைகள் எப்படி பாதிக்கபடுகிறார்கள் என்பதை டோரா என்ற ஏழுவயது சிறுமியின் வழியாக படமாக்கியிருக்கிறார் ஜானு பரூவா,
ஒரு துண்டு நிலத்திற்காக அடித்துக் கொள்ளும் பெரியவர்கள் ஒரு பக்கம், மறுபக்கம் அன்போடு பழகும் இரண்டு வீட்டு பிள்ளைகள், இந்த முரண்பாட்டின் வழியே குழந்தைகள் எப்படி பெரியவர்களின் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள் என்பதை படம் அழகாக வெளிப்படுத்துகிறது,
5)ஷாவாஸ் Shwaas மராத்தி படம், 2004ல் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படமிது, படத்தை இயக்கியவர் சந்தீப் சாவந்த்
முப்பது நாட்களில் படமாக்கபட்டது, ஆனால் படத்தை வெளியிடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் படம் ஒன்றரை ஆண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,
மும்பையில் உள்ள கண்மருத்துவமனை ஒன்றில் தனது பேரன் பரசுராமை சிகிட்சைக்காக அனுமதிக்கிறார் கிராமத்து மனிதரான விசாரே, எட்டுவயது சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள், அச்சிறுவனுக்கு ரெட்டினல் கேன்சர் இருப்பதால் அறுவை சிகிட்சை செய்து மட்டுமே குணப்படுத்த முடியும் என முடிவு செய்கிறார்கள், ஒருவேளை இந்த அறுவைச் சிகிட்சை தோற்றுப் போய் பார்வை முழுமையாக போய்விடவும் கூடும் என முன்னெச்சரிக்கை செய்த மருத்துவர்கள் இதற்கான அனுமதி விண்ணப்பங்களில் தாத்தாவிடம் கையெழுத்து வாங்குகிறார்கள், மனம் உடைந்து போன தாத்தா தனது பேரனுக்காக பிரார்த்தனை செய்கிறார், சிறுவன் ஆசைப்பட்டதற்காக அவனை அறுவைச் சிகிட்சைக்கு முன்பு மருத்துவமனைக்கு வெளியே ரகசியமாக அழைத்துப்போய் அவன் விரும்பிய படி உலகை அனுபவிக்க வைக்கிறார், இந்த அன்பும் அக்கறையும், நெகிழ்ச்சியும் கலந்த உறவே படத்தினை உன்னதமான அனுபவமாக மாற்றுகிறது, ஷாவாஸ் சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறது
6)தாரே ஜமீன் பர், –Taare Zameen Par-அமீர்கான் இயக்கியது, 2007ல் வெளியான திரைப்படமிது,
இஷான் என்ற எட்டுவயதுச் சிறுவனின் அகஉலகை மிக உண்மையாக, நுட்பமாக இப்படம் சித்தரித்துள்ளது, பிரபல ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசேவா பள்ளி நாட்களில் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தையாக இருந்திருக்கிறார், அவருக்குப் பள்ளியில் நடத்தப்படும் பாடங்கள் எதுவும் புரியாது,ஒவியம் வரைவதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார், இந்த சம்பவமே தாரே ஜமீன்பர் கதைக்கு ஆதாரக் கரு, இதை மையமாகக் கொண்டு டிஸ்லெக்சியாவால் பாதிக்கபட்ட குழந்தைகள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது,
இஷான் என்ற சிறுவன் கற்பனைத் திறன் மிக்கவன், அவனுக்கு ஒவியம் தான் உலகம், அவனை முட்டாள் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிகாசம் செய்கிறார்கள், அவனது திறமையைப் புரிந்து கொண்ட அவனது ஆசிரியர் எப்படி அவனை உற்சாகப்படுத்தி ஒவியத்திறமை வழியே சாதிக்க வைக்கிறார் என்பதை நெகிழ்ச்சியோடு சொன்னபடமிது, குழந்தையின் கண்கள் வழியாகவே உலகம் படமாக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்,
7)மைடியர் குட்டிசாத்தான், –My Dear Kuttichathan ஜிஜோ புன்னோஸ் இயக்கிய மலையாளப்படமிது, இது முதல் 3டி படமாகும், நவோதயா அப்பச்சன் தயாரிப்பில் உருவான இப்படம் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்ற ஒன்று, வழக்கமான பொழுது போக்கு அம்சங்கள் பிரதானமாக இருந்தபோது இது குழந்தைகளின் கற்பனை உலகை நேர்த்தியாக விவரித்து இருந்தது,
இரண்டு பையன்களும் ஒரு சிறுமியும் ஒரு குட்டிசாத்தான் உடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார்கள், வீட்டிற்கு அழைத்து வந்து குடிகார தந்தையை திருத்த முயற்சிக்கிறார்கள், மறுபக்க்ம் குட்டிசாத்தானை பயன்படுத்திப் புதையலை எடுக்க நினைக்கிறான் ஒரு மந்திரவாதி, இவர்களுக்குள் ஏற்படும் மோதல்களும் அதன் விளைவுகளுமே கதை,
குட்டிசாத்தான் கதாபாத்திரமும், அது செய்யும் மாயங்களும் முப்பரிமாணம் மூலம் திரையில் காணும் போது குழந்தைகள் அதிக சந்தோஷம் அடைந்தார்கள் அசோக்குமார் படத்தினை சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்,
8)மல்லி -சந்தோஷ் சிவன் இயக்கிய தமிழ் திரைப்படம், 1998ல் வெளியானது,
மல்லி என்ற சிறுமியை பற்றிய படம், மல்லி காட்டில் சுள்ளி பொறுக்கும் ஒரு சிறுமி, பெற்றோர்கள் வறுமையான சூழலில் வாழ்கிறார்கள், அவளுக்கு காது கேட்காத, ஊமையான நண்பன் ஒருவன் இருக்கிறான், மல்லிக்கு ஒரேயொரு ஆசையிருக்கிறது, அது பண்டிகை நாளில் தனக்கு அழகான ஒரு உடை வேண்டும் என்பது, அந்தக் கனவை மனதிற்குள் வளர்த்து வருகிறாள், இதற்கிடையில் அவளது நண்பனைப் பேசவைக்க ஒரு அதிசய நீலக்கல் இருக்கிறது, அதை கண்டுபிடித்து எடுத்தால் நண்பன் குணமாவாவன் என ஒரு கதை சொல்லி அடையாளம் காட்டுகிறான், அந்த நீலக்கல்லை தேடி அலைந்து முடிவில் கணடுபிடிக்கிறாள் மல்லி,
இப்படம் ஒரு சிறுமியின் கனவை கவித்துவமாக காட்சிபடுத்தியிருக்கிறது, இரண்டு தேசிய விருதுகளுடன் பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை பெற்றுள்ள சிறந்த படமிது
9) Baaja –A K Bir ஏகே பீர் இயக்கிய இப்படம் 2002 ல் வெளியானது, படத்தலைப்பின் பொருள் மவுத் ஆர்கன். சிபு என்ற சிறுவன் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று அவனது அம்மா நகரில் உள்ள மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள், நகரில் வந்தும் தனது இயல்பு மாறாமல் ஊர் சுற்றவும் வம்புச்சண்டை இழுக்கவும் செய்கிறான் சிபு, அதனால் வரும்பிரச்சனைகளுக்கான மாமாவும் அத்தையும் அவனை திட்டுகிறார்கள்,தனது செருப்புக்கடைக்கு உதவி ஆளாக சிபுவை அழைத்துக் கொண்டு போய் கூட வேலை பார்க்க வைக்கிறார் மாமா, இங்கே அவன் ஒரு எதிர்கொள்ளும் உலகம் தான் ஒரு சிறுவன் மட்டுமே என்பதை முழுமையாக உணர வைக்கிறது, ஏ கே பீர் இந்தியாவின் மிகசிறந்த ஒளிப்பதிவாளர், பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்றவர், பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர், இந்த படத்தின் சிறப்பு கவித்துவமாக அழகுடன் உருவாக்கபட்டிருப்பதாகும்
10) கர்மாதி கோட், Karamati Coat- Ajay Kartik Hindi/1993. அஜய் கார்த்திக் டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர், அவர் இயக்கிய குழந்தைகள் படமிது, பிராங்பெர்ட் திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது, ராஜு குப்பையில் கிடக்கும் காகிதங்களை பொறுக்கி விற்கும் சிறுவன், ஒரு நாள் அவனுக்கு அதிசயமான கோட் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது, இந்த கோட்டின் சிறப்பு அதன் பாக்கெட்டில் எப்போது கையைவிட்டாலும் அதற்குள் இருந்து பணம் கிடைக்கும் என்பதே, இந்த அதிசய கோட்டை அணிந்து கொண்டு கிடைக்கிற பணத்தை கொண்டு தனது நண்பர்களுடன் ஜாலியாக செலவு செய்கிறான் ராஜு, இந்த கோட்டினை அவனிடமிருந்து திருட முயற்சிக்கிறான் ஒரு சிறுவன், இதனால் பல புதிய பிரச்சனைகளை சந்திக்கிறான் ராஜு, சுலபமாக கிடைக்கும் பணம் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வரக்கூடியது என்பதை ராஜு புரிந்து கொள்வதே படத்தின் மையக்கதை, சாலையோரச் சிறுவர்களின் உலகையும், பணம் கிடைத்தவுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அழகாக சித்தரிக்கபட்டுள்ளன, எல்லா சிறுவர்களுக்கும் உள்ள ஒரு ஆசையை படமாக்கி நல்ல பாடம் ஒன்றினை கற்றுதருவதே இப்படத்தின் சிறப்பு
இந்திய அளவில் குழந்தைகளுக்கான சிறந்த படங்களை போல உலக அளவில் எனக்கு விருப்பமான குழந்தைகள் படங்களில் முக்கியமானவை இவையே 1) RED BALLOON . 2) MY LIFE AS A DOG 3) CHILDREN OF HEAVEN 4) CHARLIE AND THE CHOCOLATE FACTORY 5)MODERN TIMES 6) VIVA CUBA 7) PRINCESS MONO NOKE 8) WIZARD OF OZ 9) NOT ONE LESS 10) NOBODY KNOWS, JAPAN.
உலகெங்கும் குழந்தைகள் திரைப்படங்கள் மற்றும மாற்றுசினிமா முயற்சிகளுக்காக பிரத்யேக திரைஅரங்குகள் அரசின் உதவியோடு கட்டப்பட்டுள்ளன, அங்கே வழக்கமான வணிகத் திரைப்படங்கள் ஒரு போதும் திரையிடப்படுவதில்லை, அதற்கு மாறாக குறும்படங்கள், ஆவணப்படங்கள் குழந்தைகள் படங்கள், நாடகங்கள், மற்றும் மாற்றுகலைவடிவங்களுக்கான அரங்கமாக அது செயல்படுகிறது, அப்படியான மாற்று கலைஅரங்கு சென்னை மதுரை கோவை திருச்சி போன்ற பெருநகரங்களில் உருவாக்கபடுதல் அவசியம், அப்போது தான் குறைந்த முதலீட்டில் தயாரிக்கபடும் குழந்தைகள் படங்கள் மக்களைச் சென்றடைய முடியும், இல்லாவிட்டால் வணிக சந்தை எனும் சுறாமீனின் அகன்ற வாய்க்குள் மாட்டிக் கொண்டு குழந்தைகள் திரைப்படங்கள் விழுங்கபட்டுவிடும்,
இந்திய சினிமாவின் நூற்றாண்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணி குழந்தைகளுக்கான பிரத்யேகப் படங்களையும், சிறிய திரைஅரங்குகளையும் உருவாக்குவதாகும், கல்விநிலையங்களில் சினிமாவை ஒரு கலையாக கற்பிப்பது இன்னொரு முக்கியமான பணி,
இன்றுள்ள டிஜிட்டில் தொழில்நுட்பத்தை கொண்டு குறைந்தசெலவில் தரமான குழந்தைகள் படங்களை உருவாக்க ஆர்வமான இளைஞர்கள் முன்வர வேண்டும், பேட்மேனுக்கும் ஸ்பைடர்மேனுக்கும் மாற்றாக ஒரு சினிமாவை நாம் உருவாக்க வேண்டும் என்பதே இன்று நம் முன்னுள்ள சவால், அதை சாதிக்க வேண்டிய பொறுப்பு நல்ல சினிமா மீது நம்பிக்கை கொண்ட அனைவரது கையிலுமேயிருக்கிறது
•••