இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது.


இரண்டு மாதங்களுக்கு முன் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்கத் துவங்கி அன்றிரவு முழுவதும் இளையராஜாவின் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தேன். அது போதாமல் மறுநாள் நண்பர்கள் வசமிருந்த இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் இருந்து 250 பாடல்கள் கொண்ட இரண்டு குறுந்தகடினை வாங்கி வந்து கேட்கத் துவங்கினேன். நாலைந்துநாட்கள் இளையராஜா மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்.ஜானகி, சித்ரா, ஜென்சி, பாலசுப்ரமணியம்,ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், இளையராஜா என்று மாறும் குரல்களும் இசையமைப்பின் வியப்பும் மேலிட இளையராஜாவின் அலுத்துபோகாத மேதமை இன்றும் அதீத உற்சாகம் தருவதாக இருந்தது.


இவ்வளவு திரையிசை பாடல்களை தொடர்ச்சியாக நான் கேட்டதேயில்லை.  எப்படியும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் கேட்டிருப்பேன்.


 
இதில் பகல் எல்லாம் பாட்டு கேட்பது, படுக்கையில் கிடந்தபடியே இரவெல்லாம் கேட்பது. விழித்து எழுந்தவுடன் சில மணி நேரம் கேட்பது என்று விருப்பமான மனிதரின் கையை பிடித்துக் கொண்டு சுற்றியலைவது போலகேட்டுக் கொண்டேயிருந்தேன். புத்தகங்கள் திரைப்படங்கள் எதிலும் நாட்டம் திரும்பவேயில்லை.


சிறுவயதில் பல பாடல்களை இசைதட்டில் கேட்கும்  போது ஏற்படும் நெருக்கம்  திரையில் பார்க்கும் போது ஏற்படாது. அதற்கு மாறாக சில பாடல்களைக் கேட்கும் போது நடிகர் நடிகைகளை மறந்து  கேட்க முடிவதேயில்லை. எல்லா ஊர்களிலும் அந்த காலத்தில் ஒரு டி.எம்.எஸ், ஒரு சுசிலா இருந்தார்கள். அவர்கள் சினிமா பாடல்களை அப்படியே அச்சு பிசகாமல் அதே குரலில் பாடி கைதட்டு வாங்குவார்கள்.


என் பள்ளியில் கூட ஒரு சுசிலா படித்தாள். அவளை தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்காகவே வைத்திருந்தார்கள். பள்ளிவிழா நாட்களில் அவள் சினிமாபாடல்களை பாடுவாள். அந்த பாடல்களை அத்தனையும் சிறப்பானவை. எப்படி அதை தேர்வு செய்து அந்த பாடல்வரிகளை நினைவில் வைத்திருந்து பாடுகிறாள் என்று வியப்பாக இருக்கும்


அது எம்எஸ்விஸ்வநாதன் காலம். ஒருமுறை எம்.எஸ்வி கச்சேரிக்காக விருதுநகர் வந்திருந்தார். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே எங்கே நிம்மதி கேட்டோம். அந்த நாட்களில் திரையிசை பாடல்கள் மட்டுமே வெகுமக்களின் பிரதான ரசனையாக இருந்தது. எல்லா வீட்டில் அந்த பாடல்கள் முணுமுணுக்கபட்டன. விசேச நாட்களில் காலை துவங்கி இரவு வரை ரிக்கார்ட் போட்டார்கள்.


அந்த நினைவில் பாடல் என்றாலே உரத்தசப்தத்தில் கேட்க வேண்டும் என்று உள்ளுற பதிந்து போயிருக்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்கு பல வருசங்கள் ஆகிப்போனது. என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். அவருக்காகவே படம் பார்த்தார்கள். அப்போது தான் டூ இன் ஒன் அறிமுகமானது. ஆகவே பாடல்களை ரிக்காடிங் சென்டரில் போய் பதிந்து கொண்டு வந்து கேட்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது.


உதிரிப்பூக்கள் முள்ளும் மலரும் கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் என்று இளையராஜாவை பற்றி பேசாத  நாட்களே இல்லை. அது வளர்ந்து எண்பதுகளின் உச்சத்தை அடைந்த போது நாளைக்கு ஒரு படம் பார்க்கும் ஆளாகியிருந்தேன். ஏதாவது ஒரு படத்தை இரவுக்காட்சி பார்ப்பது என்பது பல வருடமாக எனது வழக்கம். அப்படி படம்பார்த்துவிட்டு திரும்பும் பின்னிரவில் ஆள் அரவம் அற்றுப்போன தெருவில் சைக்கிளை நிறுத்தி சாய்ந்து கொண்டு இளையராஜாவை பற்றி பேசிக் கொண்டிருப்போம்.


  எல்லா ஊரிலும் பின்னிரவிற்கு என்றே ஒரு  டீக்கடை  திறந்திருக்கும். அங்கே நிச்சயம் இளையராஜாவின் பாடல் ஒன்றை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ப்ரியா பாடல் வந்த புதிதில் அதை ஒரு நாளைக்கு ஐம்பது தடவை கேட்ட நண்பர்கள் என்னோடு இருந்தார்கள். அது ஒரு மயக்கம். சினிமாவை மீறிய பாடல்களை கேட்கவும் பின்னால் அலையவும் செய்த நாட்கள் அது. 


இளையராஜாவின் திருவாசகம் வெளியான நாட்களில் நானும் இயக்குனர் ஜீவாவும் ஒரு நாளிரவு காரில் மகாபலிபுரத்திற்கு சென்றிருந்தோம் வழி முழுவதும் , காரில் திருவாசகம் ஒலித்தபடியே வந்தது. முதன்முறையாக கேட்டபோது அதை மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. முக்கிய காரணம் அந்த பாடல்களை ஒதுவார்கள் பாடி கேட்டிருக்கிறேன். அது மனதில் அழியாமல் ஒலித்தபடியே இருந்தது.


ஆனால் அன்றைய இரவில் கடற்கரை அருகில் நல்ல இருளில் மணல்வெளியில் அமர்ந்தபடியே திருவாசகம் கேட்ட போது புற்றில் வாழ் அரவம் வேண்டேன் என்ற வரிகளும் இசையும் மனதை பாரம் போல அழுத்த துவங்கி முன்னறியாத துயரும் விம்மலும் உருவாகியது.


கடலின் மீது தொலைவில் தெரியும் ஆகாசத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. வீதிகளை , வீடுகளை துயில் கொள்ள செய்திருந்தது இருள் . யாவையும் விழுங்கியபடியே திருவாசகம் மெல்ல ஒரு அலை காலடியில் உள்ள மணலை இழுத்து போவது போல மனதை கொஞ்சம் கொஞ்சமாக தன்வசமாக்கி கொண்டிருந்தது. பரவசமும் தத்தளிப்பும் கூடிய அப்படியான மனநிலை சில தருணங்களிலே தான் ஏற்படுகிறது.


எங்கோ அந்த இருளினுள் புன்னகையுடன் இளையராஜா அமர்ந்திருப்பது போன்ற நெருக்கம் உண்டானது


பால்யவயதிலிருந்து கேட்டிருந்த தேவாரம் திருவாசகம் மனதில் ஏற்படுத்தியிருந்த அத்தனை திரைகளையும் விலக்கி இன்னொரு தளத்தில் திருவாசகம் ஒலிக்கிறது. அது ஆன்மீக அனுபவமல்ல. மாறாக தன்னிருப்பின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புதமான தருணம். இசை உயர்கிறது. குரல் ஆழந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. மனது நிலை கொள்ள மறுத்து நழுவுகிறது. காற்றில் படபடக்கும் ஈரத்துணியின் சில்லிடலைப் போல ஏதோவொரு சில்லிடலை தருகிறது இசை .


இதே போன்ற ஒரு அனுபவத்தை திருச்சுழி கோவிலில் ஒரு முறை அனுபவித்திருக்கிறேன். பிரகாரத்தில் நடந்து வரும் போது எங்கிருந்தோ நாதஸ்வரத்தின் மயக்கும் இசை மிதந்து வந்தது. கல்படியில் அமர்ந்திருந்தேன். யானையின் காது அசைவது போல, தன்னியல்பாக விரிந்து அசைந்து கொண்டிருந்தது இசை. பிரகாரத்தில் யாருமில்லை. நூற்றாண்டுகளாக உறைந்துகிடந்த கற்சிற்பங்களில் கூட நெகிழ்வு கூடி கண்கள் சொருகியிருப்பது போன்று தோன்றியது. நாதஸ்வர இசையென்பது தாழம் பூவின் அடர்மணம் போன்றது. தனியானதொரு சுகந்தம்.


யார் வாசிக்கிறார்கள் என்று எழுந்து போய் பார்க்க தோன்றவில்லை. ஆனால் இசை நின்ற போது கண்ணுக்கு தெரியாத குளிர்ச்சி அந்த மண்டபம் எங்கும் படர்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.


யாரோ முகம் தெரியாத ஒரு இசைக்கலைஞன் தன் நூற்றாண்டு கால துயரத்தை நாதஸ்வரத்தின் வழியே வழிய விட்டிருக்கிறான்.


அரக்கினை போல பிசுபிசுப்பாக உடலில் ஒட்டுகிறது இசை.  என்ன அனுபவமது. உடலின் நரம்புகள் நடுங்க துவங்கியிருந்தன, கைரோமங்கள் குத்தியிட்டு நின்றன.


சிவனின் மீது விழுந்த பிரம்படி ஊரில் இருந்த யாவர் முதுகிலும் விழுந்தது என்ற புராண கதையைப் போன்று கோவிலின் பூஜைக்கு வாசிக்கபட்ட இசை,  பிரகாரம் தாண்டி, சிற்பங்கள், தாண்டி கல் மண்டபம் தாண்டி தெப்பம் கடந்து  திறந்த காதுள்ள யாவருக்குள்ளும் நிரம்பி வலியும் சந்தோஷமும் ஒருங்கே தருவதாகயிருந்தது.


கிட்டதட்ட அதற்கு நிகரான ஒரு அனுபவத்தை திருவாசகம் கேட்கும் போது உணர்ந்தேன். அதன்பிறகு ஒரு வார காலத்திற்கு வேறு எதையும் கேட்கவில்லை. கேட்க தேவையிருப்பதாகவும் மனம்உணரவில்லை. நல்லிசையின் சுபாவம் அது தானில்லையா. 


***

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: