உலகக் கவிதையரங்கில் கொரியக்கவிஞர் கோ யுன் (Ko Un) மிகப்பெரும் கவியாக கொண்டாடப்படுகிறார். இரண்டு முறை இவரது பெயர் நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
அரசு எதிர்ப்பின் காரணமாக சிறையில் அடைக்கபட்ட கோ யுன் இருட்டறையில் வாழ்ந்த போது அவருக்குக்கிருந்த ஒரே துணை சூரிய வெளிச்சம் மட்டுமே. துளை வழியாக உள்ளே வரும் அந்த வெளிச்சத்தை கடலாகவே அவர் கருதினார். இதுவரை 155 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். கவிதையுலகில் இது பெரும்சாதனை. பதினைந்து மொழிகளில் இவரது கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
கோ யுன் ஒரு பௌத்த துறவி. இந்தியாவிற்கு இருமுறை வந்திருக்கிறார். ஹிமாலயா என்றொரு கவிதை தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். சிறையில் இருந்த நாட்களில் தான் விடுதலையாகி வெளியே வந்தவுடன் வாழ்நாளில் தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரைப்பற்றியும் ஒரு கவிதை எழுதிவிட வேண்டும் என முடிவு செய்து பத்தாயிரம் பேர்களை பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறார். அவை இருபது தொகுதிகளாக Maninbo (Ten Thousand Lives)என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மேலும் ஐந்து தொகுதிகள் வெளிவரவுள்ளதாக கூறுகிறார்கள்.
கவிதை வாசிப்பிற்காக உலகெங்கும் பயணம் செய்துவருகிறார் கோ யுன். அவரது கவிதைவாசிப்பு வீடியோக்களை சில நாட்களாகப் பார்த்து கிறங்கிக்கிடக்கிறேன். கவிதை வாசிப்பை எப்படி நிகழ்த்துவது என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள்.
கோ யுன்னின் கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு தனிநூலாக வெளிவர வேண்டும்.
Ko Un live at Aldeburgh Poetry Festival
Ko Un (with Richard Silberg) reading at the 2006 Dodge Poetry