கிரேசியா டெலடா

நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் கிரேசியா டெலடா (Grazia Deledda.) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது The Mother என்ற நாவலை தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மிக அற்புதமான நாவல்.

பாதிரியாக உள்ள தனது மகன் பால் ஒரு இளம்பெண்ணுடன் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்னையின் தவிப்பே நாவல்.

கைம்பெண்ணாகப் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த அன்னை, பால் மதகுருவாகப் பணியேற்றதும் மதகுருவின் தாய் என்ற புனித அடையாளத்தைப் பெறுகிறாள். ஆனால் திடீரெனத் தன் மகன் மனம் தடுமாறி இளம்பெண் ஒருத்தி வலையில் வீழ்த்திவிட்டானே என்ற ஆதங்கம் அவள் மனதை வாட்டுகிறது. கூடவே தனது புனிதம் போய்விடுமே என்ற பதைபதைப்பும் ஏற்படுகிறது. இந்த மனக்குழப்பத்தில் அவள் நடந்து கொள்ளும் விதமும் அன்னையைப் பால் எதிர்கொள்ளும் முறையை நாவலை அபாரமானதாக்குகிறது.

துணியில் பூவேலைப்பாடுகள் செய்யும் பெண்ணின் கைத்திறன் போல அத்தனை நுட்பமாக, அழகாக நாவலை கிரேசியா டெலடா எழுதியிருக்கிறார். சார்டின் தீவில் வசித்த கிரேசியா. வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வந்தார். சார்டின் தீவின் தேவதை என்றே அவளை டி.எச்.லாரன்ஸ் கொண்டாடுகிறார். பெண்ணின் மனத்தவிப்பை இந்த அளவு நுணுக்கமாக யாரும் எழுதியதில்லை என லாரன்ஸ் கொண்டாடுகிறார்.

கிரேசியா டெலடாவை ஜானகிராமன் ஏன் மொழிபெயர்ப்புச் செய்யத் தேர்வு செய்தார். இது அவரது தேர்வு எனத் தோன்றவில்லை. பதிப்பகம் நாவலை மொழியாக்கம் செய்து தரும்படி தூண்டியிருக்கிறது.

இந்த நாவல் ஜானகிராமனின் அகஉலகைக் கொண்டிருக்கிறது என்பதே ஆச்சரியம். அம்மா வந்தாள் நாவலில் வரும் அன்னையும் கிரேசியா டெலடாவில் வரும் அன்னையும் பொருத்திப் படித்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அது போலவே தான் அப்புவையும் பாலையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆழ்ந்து தோய்ந்து ஜானகிராமன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நாவலின் துவக்கத்தில் பால் இளம்பெண்ணைத் தேடிப் போனபிறகு வீட்டில் நிலைகொள்ள முடியாமல் இருந்த அன்னை தானும் அந்தப் பெண்ணின் வீட்டினைத் தேடிப் போகிறாள். இருட்டு, பாதை தெரியவில்லை. காற்று ஊளையிடுகிறது. தடுமாற்றத்துடன் நடந்து போகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டுக் கதவை தட்டி அழைக்கலாமா என யோசிக்கிறாள்.

பின்பு அவர்கள் பேசுவது ஏதாவது கேட்டுவிடாதா என வீட்டுசுவரில் காதை வைத்து கேட்டுப்பார்க்கிறாள். அந்த வீட்டிற்கு அவள் சின்ன வயதில் வந்த நினைவு பீறிடுகிறது.

ஊரே போற்றும் நல்லொழுக்கம் கொண்ட பால் ஏன் இப்படி மனம் தடுமாறிப் போனான். ஒரு பெண்ணின் வசீகரம் அத்தனை மகத்தானதா, அவளால் அந்த வீட்டின் முன்பாக நிற்கமுடியவில்லை. குழப்பத்தின் உச்சநிலையோடு வீடு திரும்புகிறாள்.

இரவில் பால் வீடு திரும்பியவுடன் அவனைக் கண்டிக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறாள். அப்போது அவளுக்கு ஒரு கனவு வருகிறது. அதில் பால் போலவே நெறிதவறி நடந்த பழைய பாதிரி வருகிறார். அவர் மனிதன் படைக்கபட்ட காரணமே சுகங்களை அனுபவிக்க மட்டும் தான் என வாதிடுகிறார்.

இரவில் காற்று நுழைவது போலச் சப்தமில்லாமல் பால் வீடு திரும்புகிறான். அவனிடம் அன்னை மன்றாடுகிறாள். இனி அந்தப் பெண் வீட்டிற்குப் போக மாட்டேன் எனச் சத்தியம் செய்து தந்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறுகிறான். அப்போது அன்னை பீறிட்டு அழுகிறாள்.

நாவலின் முக்கியமான இடமது.

அன்னை கேட்டது கிடைத்துவிட்டதே பின் ஏன் அழுகிறாள். தன் மகன் விரும்பியதை அடைய முடியாமல் தானே தடுக்கிறேன் என்றா. இல்லை தானும் இது போல விரும்பியதை அடையமுடியாமல் போன வாழ்க்கை கொண்டிருக்கிறோமே என்றா. மகனின் புனிதத்தைக் காப்பாற்றவும் அந்தபெண்ணைப் பாவத்தில் இருந்து ரட்சிக்கவுமே அப்படி நடந்து கொண்டதாகக் கருதுகிறாளா.

அவள் அழுவது பாலை சங்கடப்படுத்துகிறது. அந்த அழுகை அவன் குற்றவுணர்ச்சியை அதிகரிக்கிறது.

தியாகத்தின் வடிவமாக மட்டுமே கண்டு வந்த அன்னையிலிருந்து கிரேசியா உருவாக்கிய அன்னை மாறுபட்டவள். அன்னை என்றாலும் அவள் ஒரு பெண். அவளது தவிப்பும் ஆசைகளும் வெளியுலகால் புரிந்து கொள்ள முடியாதது. பாலின் செய்கை அவனை மட்டுமில்லை தன்னையும் தூற்ற செய்துவிடுமே என்றே அன்னை பயப்படுகிறாள்.

பால், அன்னை என இரண்டே முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களுக்குள் பேசிக் கொள்வது குறைவே. ஆனால் மனவோட்டத்தை எப்படி இவ்வளவு துல்லியமாகக் கிரேசியா டெலடா எழுதினார் என்பது வியப்பளிக்கிறது.

இரவின் வனப்பை வான்கோ வரைந்துள்ளதை கண்டு வியந்திருக்கிறேன். கிரேசியாவின் எழுத்தில் வெளிப்படும் இரவு வான்கோவிற்கு நிகரானது.

இந்த நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே மனதில் செல்மா லாகர்லெவ்வின் மதகுரு நாவல் வந்து கொண்டேயிருந்தது. பால், கெஸ்டா பெர்லிங் இருவரும் ஒருவரே. இருவரும் பாவத்தை விரும்புகிறார்கள். பாலை தடுத்து நிறுத்த ஒரு அன்னையிருக்கிறாள். ஆனால் கெஸ்டாவை தடுக்க யாருமில்லை.

உலக இலக்கியத்தில் கெஸ்டா பெர்லிங் அபூர்வமானதொரு கதாபாத்திரம். செல்மா லாகர்லெவ் ஸ்வீடனைச் சேர்ந்தவர். நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி. இவரது கதையுலகமும், கிரேசியா டெலடாவின் கதையுலகமும் ஒன்று போலவேயிருக்கிறது. பாவம் செய்வது சரியா, எது பாவம், ஏன் பாவமாகக் கருதப்படுகிறது என்ற கேள்வியைச் சுற்றியே இருவரும் எழுதுகிறார்கள். ஆனால் வேறுவேறு நிலைப்பாடு எடுக்கிறார்கள்.

மதம் உருவாக்கிய வைத்திருந்த ஒழுக்கக் கோட்பாடுகளை மீறும் மனிதர்களை இவர்கள் ஒதுக்குவதில்லை. அவர்களும் புனிதர்களே எனப் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் அடையாளப்படுத்துகிறார்கள்.

நாவலில் கெஸ்டா பெர்லிங் ஒரு சிறுமியை ஏமாற்றி அவளது மாவுமூட்டையை அபகரித்துப் போய்க் குடித்துவிடுகிறான். சூதாடுகிறான். முரட்டுதனமாக நடந்துகொள்கிறான். இப்படிக் கீழ்மையில் உழலும் கெஸ்டா உலகை கொண்டாட்டத்தின் விளைநிலமாகக் கருதுகிறான். பால் கெஸ்டா போல முரடனில்லை. ஆனால் கெஸ்டாவை விடத் தீவிரமாகப் பெண்ணைக் காதலிக்கிறான். அன்பு செலுத்துவது தவறா என்ற கேள்வியே இருவரது மூலமாகவும் வெளிப்படுகிறது.

அந்தக் காலத்தில் பாதிரிகள் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. ஆகவே அவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி மீது ஒரு மெல்லிய துணியைப் போட்டுக் கொண்டு அதன் வழியாகவே தன் முகம் பார்த்துச் சவரம் செய்து கொள்வார்கள். இந்த நாவலில் பால் நேரடியாகக் கண்ணாடியில் முகம் பார்த்துச் சீவிக் கொள்வதுடன் தன்னை அலங்காரமாக ஒப்பனை செய்து கொள்கிறான். நகங்களைக் கூட அழகுபடுத்திக் கொள்கிறான். அவனை உருமாற்றுவது காதல்.

தான் ஒரு பாதிரி என்பதை அவன் மறந்துவிடுகிறான். இரவு எப்போது வரும் எனக் காத்துக் கொண்டேயிருக்கிறேன். அந்தப் பெண்ணை அணைத்துக் கொள்ளும் போதெல்லாம் சந்தோஷத்தில் திளைக்கிறான். ஆனால் வீடு திரும்பி வரும்வழியில் அவன் மனம் குற்றவுணர்ச்சியில் தள்ளாடுகிறது. அவனால் தேவாலய கோபுரத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. சொந்த வீட்டிற்குள் திருடனைப் போல நுழைகிறான்.

கிரேசியா டெலடா பள்ளிக்கு சென்று முறையாகக் கல்வி பயிலவில்லை. தனி ஆசிரியர்கள் மூலமே கற்றுக் கொண்டார். சர்டினா தீவிலுள்ள விவசாயிகள். கூலிகள், ஏழை எளிய மக்கள் இவர்களுடன் பழகி அந்த அனுபவத்தையே அதிகம் எழுதியிருக்கிறார். தினமும் ஐந்து மணி நேரம் வீதம் ஆண்டுமுழுவதும் எழுதிக் கொண்டேயிருந்திருக்கிறார். வருடம் ஒரு நாவல் என்பது அவரது எழுத்துமுறை. 1926ம் ஆண்டு அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மார்பக புற்று நோயால் பாதிக்கபட்ட கிரேசியா தனது 64 வயதில் மரணமடைந்தார். அவரது கடைசி நாவல் மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்ட பெண்ணின் கதையாகவே எழுதப்பட்டிருக்கிறது.

கிரேசியா டெலடாவின் அன்னையும் செல்மா லாகர்லெவ்வின் மதகுருவும் ஒருசேர வாசிக்கபட வேண்டிய இரண்டு அற்புத நாவல்கள். இரண்டும் தமிழில் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் போதுமான கவனமும் வாசிப்பும் பெறவில்லை என்பது வருத்தமளிக்கவே செய்கிறது.

••

0Shares
0