அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான எழுத்தாளர் அசோகமித்ரன் இன்று (23.03.2017 ) காலமானார். சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை.

சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார்.

கணையாழியில் அவர் ஆசிரியராக இருந்த நாட்களில் நான் எழுதத் துவங்கினேன். எனது முதல்கதையைத் தேர்வு செய்து வெளியிட்டவர் அவரே. அதற்காக அவர் ஒரு தபால்அட்டையை எனக்கு அனுப்பிவைத்தார். மறக்கமுடியாத கடிதமது.

அமெரிக்க இலக்கியங்கள் குறித்து அவரளவிற்கு அறிந்தவர்கள் குறைவு. டால்ஸ்டாயை தனது ஆதர்சமாகக் கருதினார். ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்தும், அமெரிக்க எழுத்தாளர்கள் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் அபாரமானவை.

எளிமையும் கலைநேர்த்தியும் மிக்க சிறுகதைகளை எழுதியவர் அசோகமித்ரன். இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட விருட்சம் 100வது இதழ் வெளியிட்டு விழாவில் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது. தனது கஷ்டங்களை, வேதனைகளைக் கலையாக மாற்றத் தெரிந்த அற்புதமான படைப்பாளி.

அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பாகும்.

அவரது மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

0Shares
0