மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்ற வருடம் திருச்சூர் சென்றிருந்த போது ஆற்றூர் ரவிவர்மாவைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
ஆற்றூர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். சிறந்த தமிழ் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சுந்தர ராமசாமியின் நாவலை மொழிபெயர்ப்பு செய்ததற்காக மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார். சமகால தமிழ் படைப்புகள் அத்தனையும் வாசித்திருக்கிறார்.
நான் சந்திக்கச் சென்றிருந்த போது அவருக்கு நினைவாற்றல் குறைந்து கொண்டிருந்தது. யார் தன்னைச் சந்திக்க வந்திருப்பது என நாலைந்து முறை கேட்டு டயரியில் குறித்துக் கொண்டார். ஆனால் பேச்சில் தான் படித்த கவிதை நூல்கள். எழுத்தாளர்கள் பற்றி துல்லியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆற்றூர் ரவிவர்மாவை முன்னதாக இரண்டு முறை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அதை நினைவுபடுத்திய போது சரியாக எப்போது சந்தித்தோம் என்பதைச் சொன்னார். அவரது கவிதைத்தொகுப்பில் கையெழுத்து போட்டு எனக்கு அளித்தார்.
தமிழ் இலக்கியத்திற்கும் மலையாளத்திற்கும் இடையில் உறவுப்பாலமாக விளங்கிய அவரது மறைவு பேரிழப்பாகும்.