மதுரை பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் கண்ணனை முதன்முறையாகச் சந்தித்தேன்
தீவிர இலக்கிய வாசகர். சமூகசிந்தனைகள் கொண்டவர். மதுரையில் நடைபெற்ற பெரும்பான்மை இலக்கியக்கூட்டங்கள், நாடகங்களில் அவரைச்சந்தித்திருக்கிறேன். உற்சாகமாக உரையாடுவார். சுதேசிகள் நாடகக்குழு எனது உருளும் பாறைகள் நாடகத்திற்கான ஒத்திகை நிகழ்த்திய போது தினமும் அவரைச்சந்தித்து பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.
குறைவாக பேசக்கூடியவர், எப்போதும் புன்சிரிப்புடன் பேசும் இயல்பு கொண்டவர்.
சென்னைக்கு அலுவலக வேலையாக வரும் போது என்னைத் தொடர்பு கொண்டு சந்தித்து உரையாடுவார்.
எளிமையும் நேசமும் கொண்ட அற்புதமான மனிதர்.
சென்றமுறை மதுரையில் நடைபெற்ற பசுமைநடை விழாவின் போது கண்ணனைச் சந்தித்தேன்.
திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனையின் நூலகராகப் பணியாற்றுவதாக கூறினார். தனது பணிச்சூழல் கடுமையான மனநெருக்கடியையும் உடல் நலிவையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி
தான் பணியிட மாறுதலுக்காக முயன்று வருவதாக கூறினார். ஆனால் மாறுதல் கிடைக்கவேயில்லை.
நேற்று அவரது மரணச்செய்தியை கேட்ட போது கண்ணீர் பொங்கி வழிய நிஜமா நிஜமா என திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தேன்.
கண்ணன் மிகச்சிறந்த மனிதர். அவரது இழப்பு தாங்க முடியாத வலி தருகிறது.
அவரது குடும்பத்தினருக்கும் மதுரை நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
