ஹைதராபாத்தில் வசித்த எஸ்.வி. ராமகிருஷ்ணன் தனது நினைவுகளைச் சுவைபட எழுதக்கூடியவர். சுங்கத்துறை கமிஷனராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். சொந்த ஊர் தாராபுரம். 2011ல் மறைந்தார்.

நிறைய முறை இவரோடு போனில் பேசியிருக்கிறேன். வரலாறு சார்ந்த நிறைய விஷயங்களை விருப்பமாகப் பேசுவார். அவரது கட்டுரைகள் வெளியாகும் போது அதை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி எனது அபிப்ராயங்களை அவசியம் தெரிந்து கொள்வார்.
இவரது கட்டுரைகள் 1940 களை ஒட்டிய தமிழ் வாழ்க்கையைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன. அது அந்தக் காலம் , வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள் என இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். இந்த சிறிய கட்டுரை ஒரு காலகட்டத்தில் மொட்டைக்கடுதாசி உருவாக்கிய பிரச்சனைகளை அழகாக விவரிக்கிறது.
இப்படி மொட்டைக்கடுதாசி எழுதும் நபர்கள் ஊருக்கு ஊர் இருந்தார்கள். பள்ளி ஆசிரியர்கள். அரசு அலுவலர்கள், இளம்பெண்கள் என பலரும் இவர்களைக் கண்டு பயந்தார்கள்.
மொட்டைகடுதாசியில் நலம்விரும்பி என்ற பெயர் சில நேரம் இடம்பெற்றிருக்கும். அந்த நலம்விரும்பி எழுதிய மொட்டைக்கடுதாசியை மையமாகக் கொண்டு பாமா விஜயம் படத்தில் நடக்கும் காட்சிகள் சிறப்பானவை.
••

மொட்டைக் கடுதாசி
– எஸ்.வி.ராமகிருஷ்ணன்
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் இன்ஸ்ட்டியூஷன் பின்னர்ப் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது.
ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பதில் இன்னும் வினோதமாக இருக்கிறது. காலம் என்ற பரிமாணமே காலங்காலமாக இருந்தாற்போல் இல்லையாம். காலமே அவசரக் கோலம் கொண்டு சுருங்கிவிட்டதாம். அதாவது எவருக்கும் நேரம் இல்லையாம். பொழுதைப் போக்க வழியில்லாமல் வம்பு பேசி மகிழ்த நாட்கள் போய் இப்போது யாருக்குமே அவகாசம் இல்லாமற் போய்விட்டதாம். மொட்டைக் கடுதாசிகள் தயாரிப்பதற்கு வேண்டிய ஓய்வோ அவகாசமோ இல்லாமற் போய்விட்டதாம். உலகமே அமெரிக்காவாகி இந்தியா முழுவதும் பம்பாய் ஆகிவிட்டதாம். இந்த நிலையில் மறைந்து வரும் மொட்டைக் கடுதாசியைப் பேணி வளர்ப்பதில் எவருக்கும் அக்கறை இல்லையென்றால் அதில் அதிசயமும் ஏமி லேது தான்.
நூறாண்டு முன் வந்த (அந்தக்காலத்தில் நவீனம் என்று அழைக்கப்பட்ட) தமிழ் நாவல்கள் பலவற்றிலும் – உதாரணம் : பத்மாவதி சரித்திரம் (1898 -1900)** – ஒரு சோப்ளாங்கி வில்லன் ஒரு மொட்டைக்கடிதம் மூலம் கதை வளர வித்திடுவான்.
ஐம்பது அறுபது ஆண்டுகள் முன்னால் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் மனோகர், நம்பியார் (அல்லது கள்ள பார்ட் நடராஜனாகக் கூட இருக்கலாம்) போன்ற வில்லன்கள் ‘டாண்’ என்று காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் காட்டும் முதல் கைவரிசை அநேகமாக மொட்டைக் கடிதம் எழுதுவதாகத்தானிருக்கும் சில சமயங்களில் அதற்கு நேரம் இல்லாமற் போனால் நேராக முகூர்த்ததில் ஆஜராகித் தாலிகட்டும் தருணத்தில் ‘நிறுத்து’ என்று கூச்சலிட்டுக்கொண்டு போய் வாய்வழியாக அபவாதம் ஏதேனும் சொல்லுவதும் உண்டு. ஆனால் மொட்டைக் கடுதாசி மாதிரி வராது, செலவும் குறைவு. விஷம் மாதிரி வேலை செய்யும். வைத்தவர்கள் பெயர் வெளியே தெரியாமலேயே இருக்கவும் முடியும்.
ஆமாம் அரையணா (3 பைசா) கூடப் போதும். மிஞ்சிப் போனால் ஒன்றரையணா (9 பைசா) கவர். இருப்பதையும் இல்லாததையும் எழுதி அடியில் ‘உண்மை விளம்பி’ ‘உன் நலம் நாடுபவன்’ என்று ஏதாவது எழுதினால் வேலை முடிந்து போகும்.
கும்பகோணத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் கோயம்புத்தூர் வந்து பெண்ணைப் பார்த்திருப்பார்கள். சம்பிரதாயமாகச் சொஜ்ஜி பஜ்ஜி தின்று சம்மதமும் சொல்லியிருப்பார்கள். பெண்ணுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் உள்ளூர்க்கார சோதா ஒருவன் – அவன் பெண்ணுக்கு முறைப் பையனாகவும் இருக்கக்கூடும் – பெண்ணின் நடத்தை சரியில்லை என்றும் அவளுடைய காதலன் ஒருவன் சேலத்தில் இருப்பதாகவும் அவனுக்குக் கொடுக்க இஷ்டப்படாத பெற்றோர்கள் அவசரமாக விவரம் அறியாத தூரதேசப் பார்ட்டியைத் தேடி திருமணம் நிச்சயத்திருப்பதாகவும் ஒரு போடு போடுவான்.
“தீர விசாரித்தால் உண்மை விளங்கும்” என்று வேறு சேர்த்திருப்பான். சம்பந்திமார்கள் குழம்பிப் போவார்கள். சரி நமக்கெதற்கு வம்பு? இவளை விட்டால் வேறு பெண் இல்லையா என்று பையனின் அம்மா அபிப்பிராயப் படுவாள். கடைசியில் அவ்வாறே தீர்மானிக்கப்பட்டு “எங்கள் குலதெய்வத்துக்கு முன் பூக்கட்டி பார்த்தோம் சரியாக வரவில்லை. மன்னிக்கவும்” என்று ஒரு புருடா விடப்படும். பெண்வீட்டார் நிலை குலைந்து போவார்கள். இரண்டு மூன்று முறை இப்படி நிச்சயமாகி நின்று போனால் அதற்கப்புறம் அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதே கஷ்டம்தான். ஏனென்றால் ஊராரே ‘கசமுச’ வென்று பேசத்தொடங்கி விடுவார்கள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை முடமுடியுமா?இந்த நிலையில், இதுவரை எட்டாத பழத்துக்கு ஏங்கிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த முறைப்பையனின் மடியிலேயே பழம் விழுவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு.
சுவாரசியமான ஒரு இன்ஸ்ட்டியூஷன் நம்மிடையில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. அது உண்மையில் இழப்புதானா என்பது வேறு விஷயம். முன்னாளில் கதாசிரியர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் ரெடியாக எப்போதும் கைவசம் இருந்த ஒரு ப்ளாட் கை நழுவிப்போனது என்னவோ உண்மை
***
நன்றி
அது அந்தக்காலம். எஸ்.வி.ராமகிருஷ்ணன்
உயிர்மை வெளியீடு