அன்பு வந்தது

சுடரும் சூறாவளியும் படத்தில் இடம்பெற்ற அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடல் எனக்கு பிடித்தமானது. இந்த பாடல் இருமுறை படத்தில் இடம்பெறுகிறது.தாயினை இழந்த பிள்ளைகளை தந்தை ஆறுதல்படுத்திப் பாடும் பாடல்

ஜெமினி நடித்த இப்படத்தின் இசை எம்.எஸ்.வி பாடலை எழுதியவர் கண்ணதாசன். எஸ்பிபி பாடிய அன்பு வந்தது பாடலை எப்போது கேட்டாலும் மனது கரைந்துவிடுகிறது. அருமையான பாடல். எஸ்பிபியின் குரல் அமிர்தமாக இனிக்கிறது.


கண் இரண்டில் கலக்கம் இன்றி
அமைதி காணலாம்
காலம் வெல்லும் வெல்லும் என்று
உறுதி கொள்ளலாம் உறவு கொள்ளலாம்
தாயில்லாத பிள்ளை தன்னை
நான் விடமாட்டேன்
நானில்லாத போது
தேவன் கைவிட மாட்டான்

என்ற வரிகளை ஏனோ திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இதில் தேவன் என்ற சொல்லைப் பயன்படுத்தியது தான் கவியரசரின் தனித்துவம்.

பாடலில் வரும் சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்பு இதே பாடல் டி.எம்.சௌந்தரராஜன் – எஸ்.ஜானகி குரல்களில் திரும்ப ஒலிக்கிறது

அதில்

ஆற்று வெள்ளம் போன பின்பு
ஆற்று மண்ணிலே
வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து
உறவு கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்

தெய்வம் பார்த்த பிள்ளை போலே
தங்கையை பார்ப்பேன்
செல்வம் பார்த்த ஏழை போல
நிம்மதி காண்பேன்

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் கதைக்குப் பொருத்தமான அந்த வரிகள் படத்தைத் தாண்டி நமக்கான வரிகளாக மாறி நெருக்கம் கொள்வதே இதன் சிறப்பு.

=

0Shares
0