எழுத்தாளர் கந்தர்வன் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவரது சாசனம் என்ற சிறுகதையை இயக்குநர் மகேந்திரன் திரைப்படமாக்கியிருக்கிறார்.

ராமநாதபுர நினைவுகளையும் புதுக்கோட்டையைச் சுற்றிய செம்மண் நிலத்தின் வாழ்க்கையினையும் கந்தர்வன் அதிகம் எழுதியிருக்கிறார். அபூர்வமான கதாபாத்திரங்கள். வாழ்க்கைச் சூழல்களை விவரிக்கும் கதைகள். அரசு அலுவலகத்தில் நடக்கும் அதிகாரப்போட்டி. எளிய மனிதர்களின் போராட்டம், குடும்பத்தில் பெண்கள் படும் துயரம், வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்க்கை என கந்தர்வன் காட்டிய உலகம் அசலானது. நேர்மையாக எழுதப்பட்டது..

கந்தர்வனின் அரண்மனை நாய் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது.
மஹாராஜா ஒருவரின் வளர்ப்பு நாயைப் பற்றியது. கதை ஒரு பெட்டிக்கடைகாரனின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது.
மன்னர்களின் காலம் முடிந்து போய்ச் சிதிலமான அரண்மனையில், உடைந்து போன பல்லக்கு, கைவிடப்பட்ட குதிரைலாயம், தூசி படிந்த அறைகள் என வீழ்ச்சியின் இறுதி நிலை சித்தரிக்கபடுகிறது.. காரை பெயர்ந்து போன மண்டபத்தில் தனது துதிபாடிகளுடன் தர்பார் நடத்தும் அந்த மஹாராஜா சென்னையில் வசிக்கிறார்.
மஹாராஜாவிற்குப் பெரிய மீசை. கனமான உடம்பு. பூப்போட்ட ஜிப்பாவிற்கு மேல் கழுத்திலிருந்து வயிறு வரை தொங்கும் தங்க சங்கிலி, உள்ளங்கை அகலத்தில் ஒரு பதக்கம். அவரது காலடியில் ஒரு நாய் எப்போதும் அமர்ந்திருக்கிறது. அது தான் அரண்மனை நாய்.

மகாராஜாவிற்கு வாரிசு கிடையாது, அவ்வப்போது ஊருக்கு வருகை தந்து ஏதாவது ஒரு நிலத்தை விற்று பணமாக்கிக் கொண்டு நகரம் திரும்பி விடுவார். அந்தப் பணம் தீர்ந்தவுடன் திரும்ப ஊருக்கு வருவார். அவர் வரும்போது கூடவே அந்த நாயும் வந்து சேரும்.
அரண்மனை நாய் என்றால் சாதாரணமா
அந்த நாயிற்கு விசேச உணவுகள். அதை நடைப்பயிற்சிக்குக் கூட்டிச் செல்லும் சேவகன் மூச்சிரைக்கச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கூடவே ஓடுவான்
. காரில் மன்னருடன் தான் நாய் சவாரி செய்யும். அந்த நாயிற்கு ஒரு நாள் சாப்பிடப் பொறையைப் போட்டுவிடவே நாய் பெட்டிக்கடைக்காரனைப் பார்த்து பலமாகக் குரைத்தது. பொறை திங்கிற நாயா இது எனச் சேவகனும் கோவித்துக் கொண்டான்.
ஒரு நாய் மன்னர் இறந்து போகவே அந்த நாய் கைவிடப்படுகிறது. அதற்கு உணவு தர யாரும் தயாராகயில்லை. அரண்மனையிலிருந்து துரத்திவிடுகிறார்கள். அந்த நாய் பெட்டிக்கடைக்காரனின் வீட்டிற்கு வந்து சேருகிறது.
தன் வீடு தேடி வந்த நாயிற்கு என்ன தருவது என அவனுக்குத் தெரியவில்லை. அவன் மனைவி பழைய சோறும் கருவாட்டுக் குழம்பும் தருகிறாள். பசியில் நாய் வேகவேகமாக அதைச் சாப்பிடுகிறது. அந்த நன்றிக்காக அவர்களுக்கு வாலாட்டுகிறது.
ஒருவேளை சோற்றுக்காக இந்த நாய் தனக்கும் வாலாட்டுகிறதே என அவன் வியந்து பார்க்கிறான்.
அன்றிரவு அந்த நாய் அவனது பாயில் வந்து படுத்துக் கொள்கிறது. நாயின் அருகில் படுப்பதா என அவனுக்குக் கூச்சமாகியிருக்கிறது
மறுநாள் நாயை அரண்மனைக்குக் கூட்டிப்போகிறான்.
மகாராஜா நினைவாக நீயே அதை வைத்துக் கொள் என்கிறார்கள்.
அரண்மனை நாயை வேறு வழியில்லாமல் அவனே வளர்க்க வேண்டியதாகிறது.
அவன் பிள்ளைகள் அந்த நாயோடு ஆசையாக விளையாடுகிறார்கள். அதுவும் தான் ஒரு அரண்மனை நாய் என்பதை மறந்து அவர்கள் காலைச்சுற்றித் துள்ளுவதும் வாலை ஆட்டுவதுமாக இருக்கிறது
அரண்மனை நாய் வீடு வந்த சேர்ந்தவுடன் தங்கள் வீடே அரண்மனை ஆகிவிட்டது போலப் பிள்ளைகள் நினைக்கிறார்கள்
பெட்டிக்கடை செலவிற்கு வைத்திருந்த பணத்தில் அதற்கு மாட்டிறைச்சி வாங்கிப் போடுகிறான். நாய்க்குப் போடும் சோப். நாய் பிஸ்கட் என எல்லாமும் வாங்கி வந்து தருகிறான். இந்தச் செலவினால் அவன் கடனாளி ஆகிறான். நாளடைவில் அவனது பெட்டிக்கடை படுத்துவிடுகிறது. அவனும் நோயாளியாகிறான். ஆனால் நாயை விடவில்லை
அன்றாடம் பழைய கைலியோடு அவன் நாயைப் பிடித்துக் கொண்டு சாலையில் இருமிக் கொண்டு செல்வதைக் கண்ட பலரும் அவன் மீது இரக்கப்படுகிறார்கள்.
ஒரு நாள் அவன் மனைவி நாயைஅடித்துத் துரத்திவிடவே அவள் மீது கோபம் கொண்டு கைநீட்டி அடித்துவிடுகிறான். நாளுக்கு நாள் அந்த நாயை வைத்துச் சமாளிப்பது மிகவும் கஷ்டமாகிறது.
சரியான உணவு கிடைக்காமல் நாயும் மெலிந்து போகிறது. ஒரு நாள் மாருதி கார் ஒன்றில் வந்து சேரும் ஒரு ஆள் அந்த நாயைப் பார்த்து விலை விசாரிக்கிறான். கொடுப்பதா வேண்டாமா எனப் புரியாமல் அவன் நாயைப் பார்க்கிறான்.
நாயோ புதிதாகத் தன்னை வாங்க வந்துள்ளவனைப் பார்த்து வாலை ஆட்டுகிறது.
வாலாட்டுவது தனக்கா அல்லது வந்த ஆளுக்கா எனப்புரியாமல் அவன் திகைத்து நிற்பதுடன் கதை முடிகிறது

தமிழில் நாயைப் பற்றி அபூர்வமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆன்டன் செகாவின் பச்சோந்தி சிறுகதை நாயைப் பற்றி எழுதப்பட்ட கதைகளில் மிகவும் புகழ்பெற்றது. கு.அழகிரிசாமியின் வெறும் நாய் மறக்கமுடியாத கதை. அந்த வரிசையில் வைத்துப் பேச வேண்டிய கதையிது
மகாராஜாவின் செல்லநாய் கைவிடப்பட்டுப் பெட்டிக்கடைக்காரன் வீட்டிற்கு வந்து நிற்பதும் அதை அவன் பிள்ளைகள் ஆசையாக வளர்ப்பதும் மறக்கமுடியாத காட்சி.
கதையில் எத்தனை அடுக்குகள். மகாராஜாவின் கடந்தகாலப்பெருமை மற்றும் அவரது இன்றைய வாழ்க்கை. பெட்டிக்கடைகாரனின் வாழ்க்கை. அவனது அப்பா மகாராஜா மீது கொண்டிருந்த விசுவாசம். மகாராஜாவின் மரணத்தை ஒட்டி நடக்கும் நிகழ்வுகள். நடுராத்திரியில் வீடு தேடி வரும் நாயிற்குப் பெட்டிக்கடைகாரன் மனைவி பழைய சோறு போடும் விதம். நாயின் மாற்றம். அந்த நாயை வளர்க்க பெட்டிக்கடைகாரன் படும்பாடு. முடிவில் அந்த நாயும் அவனுடன் வீழ்ச்சி அடைவது. அரண்மனை நாயின் விசுவாசம் மாறிக் கொண்டேயிருப்பது என இதழ் இதழாகக் கதை விரிவு கொள்கிறது.
அரண்மனை நாயை வளர்ப்பதால் தானே மகாராஜா ஆகிவிட்டது போலப் பெட்டிக்கடைகாரன் உணருகிறான். அது முக்கியமான தருணம். மெல்ல நாய் அவனை இழுத்துக் கொண்டு போக ஆரம்பிக்கிறது. அதற்காகக் கடன் வாங்கிச் செலவு செய்கிறான். உடல் நலிவுற்றுப் போகிறான்.
காலமாற்றம் ஏற்படுத்திய வீழ்ச்சியின் பாடலை கதை மிக அழகாக ஒலிக்கிறது.
கந்தர்வன் இது போல அபூர்வமான சிறுகதைகளை நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் அவர் போதிய கவனமும் அங்கீகாரமும் பெறாமலே இறந்து போனது துரதிருஷ்டம்
கந்தர்வனுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். புதுக்கோட்டையில் அவர் வசித்த போது வீடு தேடிச் சென்று கோணங்கியும் நானும் பலமுறை சாப்பிட்டிருக்கிறோம். உரையாடி மகிழ்ந்திருக்கிறோம். எழுத்தாளர் சங்கம் நடத்திய இலக்கிய முகாமில் அவரும் ஷாஜகானும் சேர்ந்து இரவெல்லாம் சிரிக்க வைத்த நாளை எப்படி மறக்கமுடியும். கந்தர்வன் பற்றி கதாவிலாசத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
கு.அழகிரிசாமியின் வாரிசைப் போலவே கந்தர்வன் தனது சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அதே நேரம் புதுமைப்பித்தனிடம் காணப்படும் கேலியும் கிண்டலும் கந்தர்வனிடம் சரளமாக வெளிப்படுகிறது.
காடுவரை என்ற கதையில் வரும் பெஞ்சமின் என்ற ஆங்கிலோ இந்தியரை, விதிகளுக்கு அப்பால் கதையில் வரும் ராமன் சாரை. தராசு கதையில் பர்மாவிலிருந்து திரும்பி வரும் அப்பாவை எப்படி மறக்கமுடியும்.
மகத்தான ஒரு படைப்பாளியை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் என்பதே நிஜம்..
•••