அழகியும் அரக்கனும்

சமீபமாக புதிய படங்களை விடவும் பழைய படங்களை மறுபடி காண்பதில் தான் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறேன், முக்கியமான 50 உலகப்படங்களைத் தேர்வு செய்து ஒவ்வொன்றாக மீண்டும் பார்த்துவருகிறேன்

அதில் இரண்டு நாட்களுக்கு முன்பாக ழான் காக்தூவின் (Jean Cocteau) Beauty and the Beast பார்த்தேன்,  1946ம் ஆண்டு பிரெஞ்சில் வெளியாகி இன்றும் கறுப்புவெள்ளை காவியமாகவே இருக்கிறது, அழகியும் அரக்கனும் என்ற தேவதை கதையை மையமாக்க் கொண்டே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, இது பதினெட்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு வாய்மொழி கதை, 

சின்ட்ரெல்லா போலவே உலகெங்கும் இக்கதையின் மாறுபட்ட வடிவங்கள் காணப்படுகின்றன. தமிழில் கூட இதன் மாறுபட்ட மூன்று வடிவங்களை நானே கேட்டிருக்கிறேன், Beauty and the Beast பலமுறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது, குழந்தைகள் திரைப்படமாகவும் புத்தகமாகவும் வெளியாகி மிக பிரபலமானது

காக்தூ இந்தத் தேவதை கதையை திரைப்படத்திற்கு ஏற்ப உருமாற்றியிருக்கிறார் ,இன்றுள்ள தொழில் நுட்ப வசதிகள் எதுவும் கிடையாது, ஆனால் படம் அரங்க அமைப்பு, காட்சிபடுத்துதல், இசையின் வழியாக நம்மை மிரட்டுகிறது

அத்தோடு இன்று வரை வெற்றிகரமான பல காதல்கதைகளுக்கு இதுவே மூலப்படமாக இருக்கிறது, தீவிர சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படமிது

அழகான பெண் ஒருத்தி அரக்கதனம் உள்ள் ஒருவனிடம் மாட்டிக் கொள்கிறாள், அவளை அரக்கன் தீவிரமாகக் காதலிக்கிறான், அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான், அவளோ அரக்கனைக் கடுமையாக வெறுக்கிறாள். அந்தக் காதல் நிறைவேறியதா என்பது தான் கதையின் மையச்சரடு

அழகியும் அரக்கனும் என்று இரண்டே பிரதான கதாபாத்திரங்கள் ஆனால் அவர்களுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி மாற்றங்கள். அனுபவங்கள். படத்தின் முடிவில் அரக்கனை நாம் காதலின்  துயர வடிவமாகவே உணர்கிறோம் ,அது தான் இப்படத்தின் வெற்றி

படத்தின கதை இது தான்

வசதிபடைத்த ஒரு  வணிகனுக்கு மூன்று மகளிருக்கிறார்கள், அவன் திடீரென கடற்புயலால் கப்பல் முழ்கிப்போகவே தனது தொழிலில் வீழ்ச்சியடைகிறான், கைப்பொருளை இழந்து வறுமையில் வாழும் காலம் உருவாகிறது, பிள்ளைகளுடன் சிறிய பண்ணை வீட்டில் வசிக்கிறான்

சில வருசங்களுக்குப் பிறகு அவனது பொருள்களை ஏற்றிப்போன ஒரு கப்பல் திரும்பி வந்துள்ள தகவல் அறிந்து ஏதாவது பணம் கிடைக்குமா என்று தேடி துறைமுக நகரிற்குப் புறப்படுகிறான், திரும்பி வரும்போது என்ன பரிசு வேண்டும் என்று பிள்ளைகளிட்ம் கேட்கிறான்,

மூத்தவள் தனக்கு ஒரு முத்துமாலை வேண்டும் என்கிறாள். அடுத்தவள் தனக்கு பட்டு ஆடைகள். மரகதங்கள் வேண்டும் என்கிறாள். மூன்றாவது மகளோ அப்பா நலமாக திரும்பி வந்தால் அதுவே போதும், வேண்டுமானல் ஒரேயொரு ரோஜா பூவை பரிசாக்க் கொண்டுவாருங்கள் என்கிறாள்.  அவள் ரோஜா தோட்டமிடுவதில் அதிக ஈடுபாடு கொண்டவள்,

வணிகன் துறைமுகத்திற்குச் சென்ற போது அவனது கப்பலில் இருந்த பொருட்களை கடன்காரர்கள் அபகரித்து கொண்டதை  அறிகிறான், ஏமாற்றத்துடன் வெறுங்கையோடு வீடு திரும்பும் போது. வழி தவறி காட்டிற்குள் போய்விடுகிறான். அந்தக்காட்டில் ஒரு அரக்கன் வசிக்கிறான். அவனது அரண்மனையின் கதவைத்தள்ளி உள்ளே போகிறான் வணிகன். அங்கே யாருமேயில்லை. அது அச்சமூட்டும் இடமாக உள்ளது. ஆனால் ஒரு மாயக்கை விளக்கு ஏந்தி அவனுக்கு வழிகாட்டுகிறது

அவனது பசிக்கான உணவுகள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. யாருடைய வீடு அது எனத் தெரியவில்லை, அங்கிருந்து எந்த பொருளையும் எடுத்து கொண்டு செல்லக்கூடாது என்ற குறிப்பு உணவு மேஜையில் காணப்படுகிறது.

வணிகன் சாப்பிட்டுவிட்டு ஒய்வு எடுக்கிறான், அங்கிருந்து கிளம்பும் போது தன் கடைசி மகளுக்காக தோட்டத்தில் இருந்து ஒரு ரோஜாவைப்பறிக்கிறான். உடனே ஒரு அரக்கன் வணிகன் முன் தோன்றி உன்னை எதையும் பறிக்க கூடாது  என்று கட்டளையிட்டிருந்தேன். நீயோ அதை மறந்து ஒரு ரோஜாவைப் பறித்துவிட்டாய். ஆகவே உன்னைக் கொல்லப்போகிறேன் என்கிறான். தனது மகளுக்காகவே இதை பறித்தேன் என்று வணிகன் நடுங்கியபடியே சொல்கிறான்.

உன் மகளுக்கு உன் மீது அவ்வளவு பாசம் என்றால் அவளை உனக்கு பதிலாக என்னிடம் ஒப்படைத்துவிடு,.. உனை விட்டுவிடுகிறேன் என்கிறான், வணிகன் தயங்குகிறான், உன் மகள் கிடைக்கா விட்டால் உன்னை இப்போதே கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான் அரக்கன்

மகளை அங்கே அழைத்து  கொண்டு வருவதாக வாக்குறுதி தருகிறான் வணிகன், பரிசுகளோடு அரக்கன் வணிகனை அனுப்பிவைக்கிறான். இதற்கிடையில் வணிகனின் கடைசி மகள் பெல்லாவை அவளது சகோதரனின் நண்பன் ஆசைப்படுகிறான். பெல்லாவிற்கும் அவனை பிடித்திருக்கிறது.

வீடு திரும்பிய வணிகன் அரக்கன் கொடுத்த பரிசுப் பொருட்களை தன் பிள்ளைகளிடம் தந்து தான் உயிர்தப்பி வந்த கதையைச் சொல்கிறான்

மகள்கள் அப்பா திரும்பவும் அரக்கனைத் தேடி திரும்பி போக கூடாது என்று தடுக்கிறார்கள்.அவரும் அரக்கனை ஏமாற்ற விரும்புகிறார். ஆனால் அரக்கன் தனது மாயத்தால் மூத்த மகள் கழுத்தில் போட்டிருந்த நகையை தூக்கு கயிறாக்கி இறுக்குகிறான். அவளுக்கு மூச்சுமுட்டுகிறது. இதை கண்ட பெல்லா தான் அரக்கனை சந்திக்க அப்பாவோடு புறப்படத் தயார் என்று ஒத்துக்கொள்கிறாள்

வணிகன் தன் மகளை  அழைத்துக் கொண்டு மறுபடி காட்டிற்குள் போகிறார். அரக்கனின் அரண்மனைக்கு அவர்கள் போய் சேருகிறார்கள். உள்ளே நுழைந்த மறுநிமிசம் வணிகன மறைந்து போய்விடுகிறார். பெல்லாவை அரக்கன் வீட்டு கைதி போல பிடித்து வைத்துக் கொள்கிறான்.

தன்னை எதற்காக பிடித்து வைத்திருக்கிறாய் என்று பெல்லா கேட்கையில் தான் திருமணம் செய்ய ஒரு பெண்ணைத் தேடுவதாகவும் தன்னை கண்டால் எந்த பெண்ணும் பயந்து ஒடிவிடுவதால் பெண்ணே கிடைக்கவில்லை. அதனால் நீ என்னை திருமணம் செய்து கொள் என்கிறான்.

பெல்லா மறுக்கிறாள். அவனோ அவள் மனம் மாறும்வரை தான் காத்திருப்பதாக சொல்கிறான், அரண்மனை போன்ற வீட்டில் பெல்லாவிற்கு தனி அறை. விதவிதமான விருந்து, உடைகள் என்று அரக்கன் தனது அன்பை முழுமையாக்க் காட்டுகிறான்.

மெல்ல பெல்லாவின் மனது மாறுகிறது. அவள் அரக்கனை மாற்றத் துவங்குகிறாள். அவனுக்குள் உள்ள அன்பையும் வேதனையும் புரிந்து கொண்டு அவனை நேசிக்க ஆரம்பிக்கிறாள். ஆனாலும் அவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதில் பெல்லா உறுதியாக இருக்கிறாள்

அவளோடு ஒரு நண்பனாகப் பழக ஆரம்பித்த  அரக்கன் மெல்ல அவள் மீது தீராத காதல் கொண்டுவிடுகிறான். அதை அவள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்

இப்படியே நாட்கள் கடந்து போகின்றன அரக்கன் அவளுக்கு கதை சொல்கிறான். அவள் அரக்கனை நடனமாடச் செய்கிறாள். இருவரும் ஒடிவிளையாடுகிறார்கள். ஒன்றாக மனம் விட்டுப் பேசுகிறார்கள். அவளுக்குள் இருந்த பயம் போய்விடுகிறது

ஒரு நாள் பெல்லா, அரக்கன் ஒரு மானைக் கொன்று அதன் ரத்தம் குடிப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவனைத் திருத்தவே முடியாது என்று பயந்து ஒடுகிறாள். அரக்கன் அது தனது இயல்பு. காதலிப்பதால் மட்டும் வயிறு நிரம்பிவிடுமா என்ன என்று வருத்தம் தோயக் கேட்கிறான்

காலம் கடந்து செல்கிறது. ஒரு நாள் பெல்லா  தனது வீட்டு ஞாபகம் வந்துவிட்டது என்று சொல்லி ஒருவாரம் தனது குடும்பத்தோடு இருந்து திரும்பிவருகிறேன் என்று அனுமதி கேட்கிறான். அரக்கன் அதற்கு சம்மதித்து ஒருவேளை அவள் ஒருவாரத்தில் திரும்பிவராவிட்டால் இறந்துவிடுவேன் என்று தனது மாயப்பொருட்களை அவளிடம் தருகிறான்.

பெல்லா விலைமதிப்பில்லாத பொருட்களுடன் வீடு திரும்புகிறாள். சகோதரிகள் அவளைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். அப்பா அவள் இனி ஒருபோதும் திரும்பி போக வேண்டாம் என்கிறார்.  பெல்லா திரும்பி போக முடியாதபடி அவளது மாயமோதிரம் திருடப்படுகிறது. அவளோ வாக்கு தந்தபடி அரக்கனை தேடி போயே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறாள் முடிவில் அவள் அரக்கனை தேடி போகும் நாள் வருகிறது.  மாயமோதிரம் காணாமல் போனதால் அவளால் அரக்கனை தேடிப் போக முடியவில்லை. அரக்கன் அவளை நினைத்து நினைத்து காதலில் துயருற்று செத்துப் போகிறான்.

அரக்கன் உயிர் பிரிவதற்குள் அவனைத் தேடி வரும் பெல்லா  அவனது உண்மையான காதலை ஏற்றுக் கொண்டு கண்ணீர் விடுகிறாள்.  அரக்கன் இறந்து போகிறான் . அவன் உடலில் பெல்லாவின் கண்ணீர் துளி பட்டு ஒரு சாபத்தால் தான் அரக்கன் ஆனதாக சொல்லி மீட்சி பெற்ற ஒரு இளவரசன் அங்கே தோன்றுகிறான். முடிவில் அவன் பெல்லாவை திருமணம் செய்து கொள்கிறான்.

இந்த கதையின் பிரெஞ்சு வடிவத்தில் பெல்லாவின் காதலன் அரக்கனை கொல்ல திட்டமிட்டு ரகசியமாக அரண்மனைக்கு வந்து செய்யும் முயற்சிகளும் அவன் அரக்கனின் மாயசக்தியில் சிக்கி கொண்டு தவிக்கும் சாகச நிகழ்வுகளும் இருக்கின்றன. அதை காக்தூ தவிர்த்துவிட்டிருக்கிறார். அரசன் எப்படி சாபத்தால் ராட்சசன் ஆனான் என்பதற்கும் நிறைய காரணங்கள் சொல்லபடுகின்றன.

இந்த தேவதை கதையை காக்தூ படமாக்கியுள்ள விதம் அற்புதமானது. படத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக காக்தூவைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரெஞ்சு நவீன இலக்கிய உலகின் முக்கியக் கவிஞர். ஒவியர் இசைக்கலைஞர் என்று காக்தூ ஒரு கலகக்காரராக விளங்கினார். அவருக்கு கலையின் அத்தனை துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் அதில் வெற்றிகாணும் இயல்பும் இருந்தது. மிகச் சிறந்த ஒவியராக இருந்தார். சர்ரியலிச ஒவியக் கோட்பாடு உருவான காலத்தில் அதில் தீவிரமாக செயல்பட்டவர் காக்தூ .அவரும் பிகாசோவும் நல்ல நண்பர்கள்.

இருவரும் இணைந்து ஒவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார்கள். அத்துடன் காக்தூ இசையில் தனக்கு உள்ள விருப்பத்தினை காட்ட இசை நாடகம் ஒன்றினை நிகழ்த்தியிருக்கிறார். அதில் அவர் பாடும் குரலில்மேற்கொண்ட சோதனை முயற்சிகள் இன்றும் பேசப்படுகின்றன.

நாடகம், ஒவியம் கவிதை என்று ஒவ்வொரு துறையிலும் தனது முத்திரைகளைப் பதித்த அவர் திரைப்படத்திலும் ஈடுபட விரும்பினார். பரிசோதனைப் படங்களை உருவாக்கி வெற்றி கண்டார். அதன் தொடர்ச்சியாக அவர் உருவாக்கியதே இந்தப் படம்

ஒவியராக இருந்த காரணத்தால் காட்சியமைப்பும் கோணங்களிலும் விசேச கவனம் செலுத்தினார் காக்தூ. படத்தின் துவக்கத்தில் அரக்கனை காண வரும் வணிகன் காட்சி மிக விசித்திரமாக உள்ளது, அரண்மனை, அதன் உட்புறம். மாயவிளக்கு ஏந்திய கை.  தனியே மகளின் சித்திரங்களுடன் பேசும் வணிகனின் தனிமை என்று அந்த காட்சி சிறப்பாக உள்ளது, அது போலவே புதிர்பாதை ஒன்றில் ஒடிவிளையாடுவது. ஊஞ்சல் ஆடுவது. தன்னை அவள் காதலிக்கவில்லை என்று வருந்தும் அரக்கனின் பரிதாபககுரல் என்று மனம் லயத்து போகும் நிறைய காட்சிகள் உள்ளன

 காக்தூவிற்கு இசையில் இருந்த நாட்டம் காரணமாக படத்தின் பின்ணணி இசை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

இந்த யாவையும் விட என்னை மிகவும் கவர்ந்த ஒன்று படத்திற்கு எழுதப்பட்ட வசனங்கள். அரக்கன் மற்றும் பெல்லா இருவரது மனதில் உள்ள வெறுப்பு, அன்பு, துக்கம், வலி என்று அத்தனை உணர்ச்சிகளையும் அவர்களின் உரையாடல் வழியே உணரச் செய்வதே இதன் தனிச்சிறப்பு

படத்தின் துவக்கவரிகள் இவை

Children believe what we tell them.  They have complete faith in us.  They believe that a rose plucked  from a garden can bring drama to  a family. They believe that the  hands of a human beast will smoke  when he kills a victim, and that  this beast will be shamed when  confronted by a young girl. They  believe in a thousand other simple  things. I ask of you a little of  this childlike simplicity, and to  bring us luck let me speak four  truly magic words, childhood’s  Open Sesame:

முக்கிய வசனங்கள்

Beauty, I am your mirror; reflect in me; I will reflect for you.

Many men are more monstrous than you, but they  hide it well.

 One half of him is in constant struggle with the other. I think he is more cruel to himself than he is to others.

 I see his eyes, and they’re so sad that I turn away so as not to weep.

 Love can make a Beast of a man. It can also make an ugly man handsome.

 My night here is not the same as yours. It is night in my world, but it is morning in yours.

 சீரான எடிட்டிங். நேரடியான கதை சொல்லும் முறை. கவித்துவமான வசனங்கள். இயல்பான நடிப்பு. துயரமிக்க காதல் முடிவு என்று Beauty and the Beast எத்தனை முறை பார்த்தாலும் வியப்பாகவே இருக்கிறது.  

•••

0Shares
0