அவர்களின் திருமணம்.

தொழிலதிபரான தனது கணவனை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைத்த இளம் மனைவி ஒரு திட்டம் தீட்டுகிறாள். அதன்படி வேறு ஒரு பெண்ணுடன் அவர் ஹோட்டல் அறையில் இருப்பது போன்ற நாடகத்தை ஏற்பாடு செய்கிறாள். அதைக் காரணம் காட்டி மிரட்டி அவரது சொத்துகளை எழுதி வாங்கிவிட முயலுகிறாள்.

ஆசை மனைவியால் ஏமாற்றப்படுவதை அறிந்த ஃப்ரெடி மெல்ரோஸ் தடுமாறிப்போகிறார். அந்தப் பெண் ஒரு வக்கீலை அழைத்து வந்து அவள் பெயருக்கு எல்லாச் சொத்துகளையும் எழுதி வாங்கிவிட முயலுகிறாள். சொத்து கிடைத்தவுடன் அவரைப் பிரிந்து தனியே வசதியாக வாழப்போவதாகச் சொல்கிறாள். கணவருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.

இந்த நேரம் ஃப்ரெடி மெல்ரோஸிற்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் சென்ற ஆண்டு அவர் செய்து கொண்ட திருமணம் செல்லாது. அது முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே அந்தத் திருமணப் பந்தம் சட்டப்பூர்வமானதில்லை என அறிவிக்கபடுகிறது.

அந்தக் கடிதத்தைக் கண்டவுடன் ஃப்ரெடி மெல்ரோஸ் அடையும் சந்தோஷம் அளவில்லாதது. ஏமாற்ற முயன்ற மனைவியிடம் அந்தக் கடிதத்தைக் காட்டுகிறார். அவள் மயங்கி விழுகிறாள்.

இப்படித் திடீரெனத் தங்கள் திருமணம் செல்லாது என அறிவிக்கபட்ட ஐந்து தம்பதிகளின் கதையைச் சொல்கிறது We are not Married என்ற ஹாலிவுட் திரைப்படம். 1952 ல் வெளியான இப்படத்தை இயக்கியிருப்பவர் எட்மண்ட் கோல்டிங்.

திருமண உறவில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் காரணமாக விவாகரத்துச் செய்து கொள்ளும் தம்பதிகள் பற்றிய படங்களிலிருந்து மாறுபட்டுத் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும் என்ற முடிச்சை வைத்துக் கொண்டு சிறிய, அழகான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

நயாகராவில் வாழும் வயதான மெல்வின் புஷ் அரசில் உள்ள தனது செல்வாக்கின் காரணமாக நீதிபதியாக நியமிக்கபடுகிறார். அந்த நாட்களில் நீதிபதிக்குத் திருமணம் செய்து வைத்துச் சான்றிதழ் அளிக்கும் உரிமை இருந்தது.

ஆகவே அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கடிதம் வந்த நாளில் முதல் ஜோடிக்குத் திருமணம் நடத்தி வைக்கிறார். அதில் தான் படம் துவங்குகிறது. தனக்கு கிடைக்கும் கட்டணத்திற்காக அவர் அவசரமாக அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

தான் நீதிபதியாக பதவியேற்க வேண்டிய தேதிக்கு முன்னதாக அவர் ஆறு ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.

இதில் ஒரு ஜோடி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யும்போது புஷ்ஷின் தவறு தெரிய வருகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மீதமுள்ள ஐந்து ஜோடிகளுக்கு அவர்கள் உண்மையில் திருமணமானவர்கள் அல்ல என்று அரசாங்கம் கடிதம் அனுப்பித் தனது தரப்பை சரிசெய்துவிடுகிறது.

திடீரெனத் திருமணம் செல்லாது என அறிவிக்கபட்ட ஐந்து ஜோடிகளின் வாழ்க்கையைப் படம் நகைச்சுவையாக விவரிக்கிறது.

இதில் மர்லின் மன்றோ அன்னாபெல் என்ற இளம்பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படம் அவரது ஆரம்பக் காலப் படங்களில் ஒன்று. கைக்குழந்தையுள்ள அவர் திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் கலந்து கொள்கிறாள். அவளது கணவன் குழந்தையைக் கையில் ஏந்தியபடி போட்டியை வேடிக்கை பார்க்கிறான். திருமணம் செல்லாது என அறிவிக்கபட்டதும் அவள் மகிழ்ச்சியாகத் திருமணமாகாத பெண்களுக்கான பிரிவில் அழகிப்போட்டியில் கலந்து வெல்கிறாள்.

சிறந்த தம்பதிகளாக ரேடியோ நிகழ்ச்சி வழங்கும் ஸ்டீவ் ஜோடி கசப்பான திருமண உறவில் சண்டையிட்டு பிரிய நினைக்கிறார்கள். அந்த நேரம் இந்தக் கடிதம் வந்து சேருகிறது. ஆனால் வேலையில் செய்த ஒப்பந்தம் காரணமாக அவர்கள் ஒன்றாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர்கள் ரேடியோ நிகழ்ச்சி நடத்தும் விதமும் அதில் குழந்தையின் குரல் கொடுப்பவரின் செயல்களும் சிறப்பானவை.

போர் முனைக்குக் கிளம்புகிறான் இளம் சிப்பாள் வில்சன். அவனது மனைவி ரயில் நிலையத்திற்கு வழியனுப்ப வந்த போது தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறாள். ரயிலேறிய வில்சன் தனது திருமணம் செல்லாது என்ற கடிதத்தைப் படிக்கிறான். பிறக்கப்போகும் தனது மகன் முறைதவறிய பையனாக இருக்கக் கூடாது என நினைத்து உடனே மறு திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறான். இதற்காக அவர்கள் படும்பாடு நகைச்சுவையாக விவரிக்கபடுகிறது.

தான் செய்து வைத்த திருமணம் செல்லாது என்பதை விடவும் அதற்காக தான் வாங்கிய கட்டணத்தை திரும்ப தர வேண்டுமா என்பதே நீதிபதி புஷ்ஷின் முக்கிய கவலையாக உள்ளது.

ஒரு கடிதம் ஐந்து பேரின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. திருமணப் பந்தம் குறித்த கேள்வியினை எழுப்பும் இப்படம் நேர்த்தியான திரைக்கதையின் வழியே சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குகிறது.••

0Shares
0