வெ சாமிநாத சர்மா தனது மனைவியின் மரணம் ஏற்படுத்திய இழப்பில் இருந்து மீள்வதற்காக அவரைப்பற்றிய தனது நினைவுகளை உணர்ச்சிபூர்வமான கடிதங்களாக எழுதியிருக்கிறார், சர்மாஜி, தனது நண்பர் அரு சொக்கலிங்கத்திற்கு எழுதிய இந்தக் கடிதங்களை தொகுத்துத் தனி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள், அவள் பிரிவு என்ற இந்நூலை பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது,
சர்மாவின் மனைவி மங்களம் அம்மையார் குறித்து உணர்ச்சிபூர்வமான சித்திரம் ஒன்றினை அவள் பிரிவு உருவாக்குகிறது, புத்தகத்தை படித்து முடிக்கையில் மனது கனத்துப் போய்விடுகிறது,
புகழ்பெற்ற எழுத்தாளர் C. S. Lewis எழுதிய A Grief Observed படித்த போது ஏற்பட்ட நெகிழ்வான அனுபவம் இந்தநூலை வாசிக்கையிலும் உருவானது, நார்னியா வரிசை நாவல்களை எழுதிய லூயிஸ் தனது மனைவியின் மரணம் உருவாக்கிய வலியை வாழ்வின் பிடிமானத்தை, சிறப்பாக எழுதியிருக்கிறார்
சர்மா தனது மனைவி குறித்து பகிர்ந்து கொள்ளும கடந்தகால நினைவுகள் வழியாக அந்தக் காலங்களில் நடைபெற்ற திருமணம், பெண்கல்வி, குடும்ப உறவுகள், மற்றும் பத்திரிக்கை உலகம் பற்றி பல அரிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது
தனது திருமணம் எத்தனை குழப்பங்களுக்கு இடையில் நடைபெற்றது என்பதையும், திருமணத்தின் பின்பு தானும் தனது மனைவியும் ஒன்றாக ஹிந்தி படித்து பரிட்சை எழுதியதையும், படித்த மருமகளை தனது தாய் எப்படி நடத்தினார் என்பதையும் சுவாரஸ்யமாக நினைவு கொள்கிறார் சாமிநாத சர்மா
ஜப்பான்காரன் ரங்கூனில் குண்டுமழை பொழிந்த போது பர்மாவில் இருந்து கால்நடையாக இந்தியாவிற்கு மனைவியோடு நடந்துவந்த நாட்களையும் அதில் தனது மனைவி காட்டிய மனஉறுதியையும் சர்மா வியந்து அடையாளம் காட்டுகிறார்
இந்த நூலில் சென்னை தியாகராய நகர் பற்றி ஒரு குறிப்பு வருகிறது, 1924ல் இருந்த தி நகரது, சாமிநாத சர்மா இப்படி எழுதுகிறார்
சென்னை தியாகராய நகரில் எனக்கென்று சொந்தமாக ஒரு மனை அமைத்துக் கொண்டு குடி வந்த போது சுற்றுமுற்றும் ஒரே வேல மரங்கள், எங்கும் ஒரே சகதி, மாலைநேரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கிவிடும், என் வீடு ஒற்றைமரம் போல தனித்திருக்கும், தேய்பிறைக்காலங்களில் காரிருள் சூழ்ந்து கொண்டு எப்பேர்பட்டவரையும் பயம் கொள்ளச் செய்யும், அப்போது நான் நவசக்தி இதழில் வேலை செய்து கொண்டிருந்தேன், வீடு திரும்பி வருவதற்கு இரவு பதினோரு மணிக்கு மேலாகிவிடும், என் மனைவி மட்டும் வீட்டில் தனியே இருப்பாள், நான் வீட்டுக்கு வந்த்தும் உனக்கு பயமாக இல்லையா என்று கேட்பேன், அதற்கு அவள் எனக்கென்ன பயம், வானத்தில் விண்மீன்கள் விட்டுவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன, அதோ கிழக்கே மவுண்ட் ரோட் பக்கம் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன ரெயில்கள் போகும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது தோட்டப்பயிர் செய்கிறவர்கள் தங்கள் அலுவல்களை முடித்துக் கொண்டு களைப்பு தீரபாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் இப்பொழுது தான் போனார்கள் என்று கூறுவாள்,
அந்தகாலத் தியாகராய நகரின் அழகிய சித்திரமும், மனஉறுதி கொண்ட மங்களம் அம்மாளின் தனிமையும் ஒருசேர நமது கண்களில் தோன்றி மறைகின்றன,
இது போன்ற அரிதான அனுபவத்தைப் பெறுவதற்கு நீங்கள் ஒரு முறை இந்தநூலை அவசியம் வாசிக்க வேண்டும்
•••