ஆறும் மலையும்

இரண்டு தமிழ்ப் படங்களைச் சமீபத்தில் பார்த்தேன். இப்படங்கள் சென்ற ஆண்டில் வெளியாகியிருந்தன. அப்போது பார்க்க இயலவில்லை. சில தினங்களுக்கு முன்பாக இணையத்தில் பார்த்தேன். இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன.

கமலி from நடுக்காவேரி – ராஜசேகர் துரைசாமி இயக்கியது. அவரது முதற்படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மென்மையான காதல்கதையைப் பார்த்து நீண்டகாலமாகிவிட்டது.

ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் ஆசையினை இயல்பாக, நுட்பமாக விவரித்துள்ளார்கள். படம் பார்க்கிறோம் என்ற உணர்வேயில்லை. பிளஸ் டூ படிக்கும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் வாழ்க்கையை அறிந்து கொள்கிறோம் என்பது போல நிஜமாக, உண்மை நிகழ்வுகளின் வெளிப்பாடு போலப் படம் விரிகிறது.

ஐஐடி பரிட்சைக்கு எப்படித் தயார் ஆவது. அந்தக் கனவினை அடைந்த பிறகான கேம்பஸ் வாழ்க்கை, வகுப்பறைகள். கமலியின் ரகசியக் காதல். க்விஸ் போட்டிக்குச் செல்லும் ரயில் பயணம். அதில் ஏற்படும் நட்பு எனப் படம் நேர்த்தியாகக் கமலியின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. கமலியாக நடித்துள்ள ஆனந்தி வெகு சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெகதீசனின் தேர்ந்த ஒளிப்பதிவு, இயல்பான நகைச்சுவை காட்சிகள். அழகம் பெருமாள். மற்றும் பிரதாப் போத்தனின் தேர்ந்த நடிப்பு. கமலியின் தோழியின் அசலான வெளிப்பாடுகள்,  எனப் படம் நிறைவான அனுபவத்தை அளிக்கிறது.

ஐஐடி கனவினையும் கவித்துவமான காதலையும் ஒன்றுசேர்ந்து தரமான திரைப்படத்தை இயக்கிய ராஜசேகருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

••••

தேன் படத்தின் துவக்ககாட்சி மெய்மறக்கச் செய்துவிட்டது. தமிழ்ப்படம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனா என்று வியந்து போனேன். படத்தின் முப்பது நிமிஷங்கள் அபாரமானவை. இதுவரை மலைப் பிரதேச வாழ்க்கையை யாரும் இப்படிக் காட்சிப்படுத்தியதில்லை. மலையை விட்டு கீழே இறங்கி மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்வதில் துவங்கி இறுதிக் காட்சி வரை படம் பிரச்சனைகளைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. அதிகாரத்தால் அலைக்கழிக்கப்படும் நாயகனின் வலியை அழுத்தமாகச் சொல்கிறது . மருத்துவமனையில் நடக்கும் நிகழ்வுகளும் மனைவியைக் காப்பாற்ற அவன் போராடும் இடங்களும் உணர்ச்சிப்பூர்வமானவை. படத்தின் முடிவு சமீபத்தில் ஊடகங்களில் நாம் கண்டறிந்த உண்மை நிகழ்வின் சாயலைக் கொண்டிருக்கிறது.

குரங்கனி மலையை ஒட்டிய குறிஞ்சுக்குடி கிராமத்தில் மலைத்தேன் எடுக்கிறான் வேலு. ஒரு நாள் வேலுவை தேடிவந்து பூங்கொடி தனது தந்தைக்காக தேன் கேட்கிறாள். அந்தக் காட்சியில் வீட்டுவாசலில் அவள் அமர்ந்து பேசுவதும். தேன் எடுத்துக் கொண்டுவரும் வேலு அவளது தந்தையைக் காணுவதும், வழியில் செல்லும் வேலுவை வழிமறித்துப் பூங்கொடி பேசுவதும் அழகான காட்சிகள்

.அவர்களின் திருமணம் மலைவாழ் மக்களின் நம்பிக்கையால் தடைபடுகிறது. அதை மீறித் திருமணம் செய்து கொள்கிறார்கள். சந்தோஷமான வாழ்க்கையின் நடுவில் ஒரு நாள் பூங்கொடி வயிற்றுவலியால் துடிக்கிறாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனபிறகு தான் அவளது உடல்நலக்குறைவின் உண்மை காரணம் வெளிப்படுகிறது. அவளை குணமாக்கப் போராடுகிறான் வேலு.

மலைவாழ் மக்களை அரசும் அதிகாரமும் எப்படி நடத்துகிறது என்பதை அறச்சீற்றத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

வேலுவாக நடித்துள்ள தருண்குமார், பூங்கொடியாக நடித்துள்ள அபர்ணதி இருவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தருண்குமாரின் தோற்றமும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் பாராட்டிற்குரியது. சுகுமாரின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் அழகை மாய ஒளியில் பூரணமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் உள்ள தொய்வான காட்சிகள். மிகை நடிப்பு மற்றும் சிறிய குறைகளைத் தவிர்த்தால் இது முக்கியமான படம் என்பேன்.

தனித்துவமான கதைக்களனைக் கொண்ட படத்தை உருவாக்கிய இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு மிகுந்த பாராட்டுகள்.

••

0Shares
0