ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது

“A River Runs Through It” ராபர்ட் ரெட்போர்ட் இயக்கத்தில் வெளியான அற்புதமான திரைப்படம், 1992ல் வெளியானது, fly-fishing  எனும் மீன்பிடித்தலை முதன்மையாக கொண்டது, நார்மன் மெகலின் நாவலை ஒரு வாசகம் மாறாமல் படமாக்கியிருக்கிறார் ராபர்ட் ரெட்போர்ட், இவர் ஹாலிவுட்டின் சிறந்த நடிகர், இயக்குனராக இவர் உருவாக்கிய படங்கள் அத்தனையும் தனித்துவமிக்கவை, இப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் பரிசு பெற்றது.

இந்த நாவலை எழுதும் போது மெகலினுக்கு வயது எழுபது, ஆங்கிலப்பேராசிரியரான அவர் தனது பால்யகால நினைவுகளை பதிவு செய்யும் நோக்கில் எழுதிய நாவலிது,

என்றாவது ஒரு கதையை எழுத வேண்டும் என்று நினைத்தால் நமது குடும்பத்தின் கடந்தகாலத்தினை நினைத்துப்பார், அது ஒரு மறக்கமுடியாத கதை என்று கூறும் தந்தையின் வாசகங்களின் வழியே தான் படம் துவங்குகிறது,  நினைவு கொள்ளுதல் தான் படத்தின் திறவு கோல்,

இரண்டுவிஷயங்களை  கிரிக் ஷீபர் நினைவு கொள்கிறான், ஒன்று அவனது அப்பா எப்படி தேவாலய ஊழியராகவும் சிறந்த எறிதூண்டில் மீன்பிடிப்பவராகவும் இருந்தார் என்பது, மற்றொன்று தனது இளைய சகோதரன் பவுல் எப்படி தான் அதிசயக்கும் ஆளுமையாக வளர்ந்தான் என்பது,

படத்தின் அழகு கவித்துவமாக எழுதப்பட்ட உரையாடல்கள், நாவலின் வரிகள் பல அப்படியே படத்தில் பயன்படுத்தபட்டுள்ளன

In our family, there was no clear line between religion and fly fishing.

***

all good things come by grace.

And grace comes by art, and art does not come easy.

**

Eventually, all things merge into one, and a river runs through it. The river was cut by the world’s great flood and runs over rocks from the basement of time. On some of those rocks are timeless raindrops. Under the rocks are the words, and some of the words are theirs. I am haunted by waters

***

ஆறும் மீன்பிடித்தலும் ஜென் அடையாளங்களை போல உருவகமாக விளக்கபடுகின்றன, எறிதூண்டில் என்பது நம் வாழ்க்கை முறை எனவும், காத்திருத்தலும் கருணையுமே மீன்கிடைப்பதை தீர்மானிக்கிறது என்றும் மெகலின் கூறுகிறார்,

••

Quality என்பதை நாம் தரம், தன்மை, பண்பு என்று வரையறுக்கிறோம், உண்மையில் எந்த ஒன்றின் தன்மையையும் சரி தவறு என்று முழுமையாக நாம் வரையறுத்துவிடமுடியாது,   தரம், அல்லது பண்பு என்பது அரூபமான ஒன்று, அதை தத்துவார்த்தமாகவே விளக்கமுடியும் என்பார் ராபர்ட் பிரிசக், அதற்காக அவர் எழுதியதே Zen & the Art of Motorcycle Maintenance.

அதே கருத்தின் இன்னொரு வடிவமே மெகலின் எழுதிய இந்நாவல், இதில் ஒழுக்கமாக இருப்பவன், அதை மீறுகிறவன் இருவரில் எவர் சரியானவர் என்ற கேள்வி எழுப்பபடுகிறது, அவர்களை மதிப்பிட மதம் உதவுவதில்லை, அது எளிதாக பேதம் பிரித்துவிடுகிறது, நாவலில் வீட்டிற்கு அடங்காத பவுலே வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாக இருக்கிறான், என்றால் எது தரமானது என்ற கேள்வியை நாவல் நமக்குள் எழுப்புகிறது,

••

மாண்டனா பகுதியில் வாழும் கிறிஸ்துசபை ஊழியர் மெகலினுக்கு இரண்டு பிள்ளைகள், மூத்தவன் கிரிக், இளையவன் பவுல், மெகலினின் ஒரே பொழுது போக்கு பிளாக்வுட் ஆற்றில் எறிதூண்டில் வீசி மீன்பிடிப்பது, அந்த மீன்பிடித்தலை ஒரு அரிய கலை என்று அவர் சொல்கிறார், மீன்பிடிப்பதற்கு கவனமும் பொறுமையான காத்திருத்தலும், இயற்கையின் கருணையும் தேவை, அவசரக்காரனால் ஒரு போதும் எறிதூண்டில் வீசி மீன்பிடிக்க முடியாது என்று நம்புகிறார், தனது பிள்ளைகளையும் சிறுவயது முதலே அவர் எறிதூண்டில் வீசி மீன்பிடிக்க பழக்குகிறார், கிரிக் அப்பாவை போல பொறுமைசாலி, ஆனால் பவுல் வீட்டிற்கு அடங்காதவன், முரடன், அவன் மீனை எப்படி வேண்டுமானாலும் பிடிக்கலாம், அதற்காக ஒரே இடத்தில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும் என்பது முக்கியமில்லை என்கிறான், அப்பா அதை ஒத்துக் கொள்வதில்லை.

படிப்பதில் ஆர்வமான மூத்தவன் கிரிக்கை அப்பா மேற்படிப்பிற்காக வெளியூர் அனுப்பி வைக்கிறார், தன்னை மட்டும் உள்ளுரில் படிக்க வைக்கிறார் என்று பவுலுக்கு கோபம், அவன் வீட்டிற்கு அடங்காத பையனாக வளர்கிறான்,  காலம் மாறுகிறது, படித்து முடித்து வீடு திரும்புகிறான் கிரிக், இதற்குள் ஒரு பத்திரிக்கையாளனாக வேலைக்கு சேர்ந்து துணிச்சலான தனது செய்திகளால் கவனம் பெற்ற மனிதனாக மாறியிருக்கிறான் பவுல்,

கோடை விடுமுறை ஒன்றினை சகோதரர்கள் இருவரும் ஒன்றாக கழிக்கிறார்கள், கிரிக் காதலிக்கும் பெண்ணின் உறவினர்களை சமாளிப்பதற்காக பவுல் பல்வேறு வேடிக்கையான வழிமுறைகளை கையாளுகிறான், அப்பா அவன் உருப்படாதவன் என்று உறுதியாக நம்புகிறார்,

கிரிக்கிற்கு தனது தம்பியை போல குடி, சீட்டாட்டம் என்று ஜாலியாக இருக்க முடியவில்லையே என்று உள்ளுற ஆதங்கமாக இருக்கிறது, சகோதரர்கள் இருவரும் ஒரு நாள் எறிதூண்டில் வீசி  மீன்பிடிக்கப்போகிறார்கள், அதில் மிகப்பெரிய மீன் ஒன்றினைப் போராடி பிடிக்கிறான் பவுல், அப்பா அதை நினைத்து உள்ளுறப் பெருமைப்படுகிறார், ஆனால் தனது அன்பை வெளிக்காட்டிக் கொள்வதில்லை,

பவுலும் அப்பாவின் அன்பிற்காக ஏங்குகிறான், ஆனால் காட்டிக் கொள்வதில்லை, படிக்கிற பையன் மட்டும் தான் நல்லவன் என்று அப்பா நம்புவதாக ஆதங்கப்படுகிறான், கிரிக் உன்னையும் அப்பா ஒருநாள் புரிந்து கொள்வார் என்று சமாதானம் செய்கிறான்,

ஒரு நாள் தனது செய்தி ஒன்றுக்காக பவுல் ரௌடிகளால் அடித்துக் கொல்லப்படுகிறான், அவனது மரணம் அப்பாவை உலுக்கிவிடுகிறது, கைவிரல்கள் முறிக்கபட்டு பவுல் செத்துப்போயிருக்கிறான் என்ற தகவல் அவன் உண்மையான  செய்தியை வெளியிட்டதற்காக கொல்லப்பட்டிருக்கிறான் என்பதை அடையாளம் காட்டுகிறது, இதுவரை மனதில் பூட்டி வைத்திருந்த அன்பை  எடுத்துச் சொல்லி பவுல் தன்னை போலவே இந்தான், தனது ஆசையின் மறுவடிவம் அவனே என்று அப்பா புலம்புகிறார்,

பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களின் வாழ்க்கைக்கு சாட்சியாக இருந்த ஆறு அப்போதும் அமைதியாக ஒடிக் கொண்டேயிருக்கிறது

முதுமையில் அதே ஆற்றில் தனி மனிதனாக  எறிதூண்டில் வீசி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறான் கிரிக், கடந்த காலம் அவனுக்குள் அழியாத ஒவியமாக உள்ளது, அவனது மனக்கொந்தளிப்பே கதையாக விரிவு கொள்கிறது

படத்தின் பலமாக நான் நினைப்பது உயிரோட்டமான அதன் கதை, அதை திரைக்கு ஏற்ப மாற்றிய வடிவம்,  எல்லா வீடுகளிலும் படிக்காதவனை வீடு எப்போதுமே இரண்டாம்பட்சமாக நடத்துகிறது, வீட்டின் ஒழுக்கங்கள் பிள்ளைகள் மீது கட்டாயமாக திணிக்கபடுகின்றன, அப்பாவிற்கும் மகனுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு எப்போதுமிருக்கிறது என கதை வாழ்வின் நுட்பமான சித்திரமாக உருக்கொள்வதே இதன் தனிச்சிறப்பு

பிராட்பிட் பவுலாக நடித்திருக்கிறார், அலட்சியமான நடையும், பேச்சும், மிதமிஞ்சிய உற்சாகமான நடவடிக்கைகளும அவனை மறக்கமுடியாத கதாபாத்திரமாக மாற்றுகிறது

இது சுயசரிதையின் மறுவடிவம் போல எழுதப்பட்ட நாவல் என்பதால் மெகலின் தனது கடந்தகாலத்தை மிகமிகத் துல்லியமாக எழுத்தில் பதிவு செய்திருப்பார், அதை ராபர்ட் ரெட்போர்ட் கவனமாக திரைமொழிக்கு மாற்றியிருக்கிறார், ஒரு நாவலை எவ்வளவு சிறப்பாக படமாக்கமுடியும் என்பதற்கு இப்படமே எடுத்துக்காட்டு

சலசலத்து ஒடும் ஆறு, அதில் மினுக்கும் சூரிய வெளிச்சம், எறிதூண்டில் வீசி காத்திருக்கும் இளைஞன், ஆற்றின் சீரான ஒட்டம், என்று  பேரழகான இயற்கை காட்சிகளை நாம் திரையில் காணும் போது மனம் குளிர்ந்து போகிறது, Philippe Rousselotவின் ஒளிப்பதிவு  இயற்கையான ஒளியை உள்வாங்கிய ஒளிப்பதிவாகும், படத்தின் கதை நகர்வுக்கு ஏற்ப மாறும் காட்சிக்கோணங்களும், கதையின் உணர்ச்சிபோக்கினை தனதாக்கி கொண்ட ஒளியமைப்பும் படத்தின் தனிப்பலம் என்றே சொல்வேன், இது போலவே படத்தின் பின்ணணி இசை தன்னிரகற்றது,  படம் முடிந்தபிறகும் இசை நமக்குள் ரீங்காரமிட்டபடியே இருக்கிறது

தோரூவின் இயற்கை குறித்த அவதானிப்புளை வாசிக்கையில் நாம் அடையும் புத்துணர்விற்கு நிகரானது இப்படம்.

***

0Shares
0