-கண்ணன்.
நீதிக்காக மனிதர்கள் நடத்தும் நெடும்போராட்டத்தை தங்களின் இடக்கை நாவலில் நீங்கள் சிருஷ்டித்த விதம் அற்புதம் , இந்த மண்ணில் எதோ ஒரு காலத்தில் கதை நிகழ்கிறது என சொல்லமுடியாதபடி இன்றைய எதார்த்தத்திற்கு அவ்வளவு நெருக்கமான இன்னும் சொல்வதானால் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான கேள்விகளை நீதி குறித்த விசாரணையை,நீதிக்கான விளக்கத்தை சாமானியனுக்கு ஒரு விதமும் ஆள்பவருக்கு வேறுவிதமுமாக ஆளுக்கொரு நீதி கடைபிடிக்கப்படும் சூட்சமத்தை உங்கள் இடக்கை-யில் வாசித்துக் கடப்பது எளிதாக இருக்கவில்லை …
நீதிக்கு இருக்கும் இருபக்கங்களை போல இடக்கையில் இரண்டு தரப்பு வாழ்க்கையை என்னால் உணர முடிந்தது -ஒரு பக்கம்
அந்த சாமானியன் தூமகேது மட்டுமல்ல மாமன்னராக இருந்த ஒளரங்கசிப்பாக இருந்தாலும் மனநிம்மதி இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதையும் வாழ்க்கையின் நிரந்திரமின்மையும் இவ்வளதானா மொத்தத்திற்கும் என்கிற நிச்சயமின்மையும் அச்சமூட்டுகிறது …
நளா,அஜ்யாவில் தொடங்கி குவாலியரில் குலாபி,காதம்பரி என இதில் வரும் பெண்கதாபாத்திரங்கள் சந்திக்கும் நெருக்கடியும்,வேதனையும் சொல்லில் அடக்கமுடியாதவை ….
ஒரு நேரம் சிரிப்பையும் கூர்ந்து பார்க்கும் போது ஆழ்ந்த துக்கத்தையும் தரக்கூடியது பிஷாட மன்னனின் செயல்கள் -இன்றைய நம் ஆட்சியாளர்கள் பல நேரம் இந்த பிஷாட மன்னனாகத்தான் இன்றும் இருக்கிறார்கள் என்றே சொல்வேன் அன்றாடம் பத்திரிகையில் படிக்கும் பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தன ….
ஆனால் இடக்கையில் இடம் பெரும் ஜோயா என்னும் அந்த கிராமம் உண்மையில் இன்னொரு தளத்திற்கு அழைத்துச் செல்கிறது வாழ்க்கை எளியது என அதன் அர்த்தத்தை உணர்ந்த மக்களின் சொர்க்க பூமியாக அந்த கிராமம் இருக்கிறது ,ஏன் நீதி தேவை நீதிக்காக போராடி கடைசியில் என்ன பயன் என்கிற கேள்விக்கு விடை போல உள்ளது …
அதிலும் சுடரணி விழாவும் அதில் வரும் நூற்றுக்கணக்கான சுடர்கள் வானில் பறக்கும் காட்சியை மனக்கண்ணில் காணும் போதே நெழ்ச்சியாக இருந்தது …ஜோயாவை கண்டடைவதே வாழ்வின் இலக்காக இருக்கமுடியும் என எண்ணிக்கொண்டேன் ….
இறுதியாக ஜலீல் சொல்வதை போல “நீதியை மறைக்கலாம்,ஆனால் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது,என் கவிதை அவனுக்காக நீதி கேட்கும்,குரலற்றவர்களின் குரலாக அது இருக்கும் என்பதை போல -உங்கள் இடக்கையும் நீதி குறித்து வரைந்த சித்திரம் நேர்தியானது ,மனதில் உள் எழும் குரல் போல நீதி குறித்த கேள்விகள் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
••
