சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஔவை மன்றத் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன்.

இந்நிகழ்வில் மாணவியர் எனது இடக்கை நாவலின் முக்கியப் பகுதியை நாடகமாக்கியிருந்தார்கள். மிகச்சிறப்பான நாடகமாக உருவாக்கபட்டிருந்தது.
குறிப்பாக ஔரங்கசீப்பாக நடித்துள்ள பெண் அபாரமாக நடித்தார். இடக்கை நாவலை ஆழ்ந்து படித்து உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்திருந்தார்கள். நாடகத்தை மானசி இயக்கியிருந்தார். நாடகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டினைத் தெரிவித்தேன்.
அவர்கள் இந்த நாடகத்தை வெளி அரங்கில் நிகழ்த்தினால் இன்னும் அதிக கவனமும் பாராட்டும் பெறும் என்பது நிச்சயம்
ஔவை மன்ற துவக்கவிழாவில் யாழ் இசையைக் கேட்டேன்.

யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்துள்ள தருண் சேகர் தனது URU குழுவோடு இசை நிகழ்ச்சியை நடத்தினார். மிக இனிமையான இசை. யாமம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இசை நிகழ்த்தினார்கள். தருண் மற்றும் அவரது குழுவினரை மனம் நிறைந்து பாராட்டினேன்.