இதிகாசங்களை வாசிப்பது எப்படி?

இதிகாசங்களை வாசிப்பது தனியானதொரு அனுபவம். ஒரு நாவல்,சிறுகதை, கவிதைப் புத்தகம் வாசிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக்கூடியது. பொதுவில் இதிகாசங்களை வாசிப்பது எளிதானதில்லை. அதற்கு வாசிக்கும் ஆர்வத்தை தாண்டிய சில அடிப்படைகள் தேவைப்படுகின்றன.


அந்த அடிப்படைகளில் பத்து விஷயங்கள் மிக முக்கியமானது


1) இதிகாசத்தை ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட வேண்டும். பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம்.


2) எந்த தேசத்தின் இதிகாசமாக இருந்தாலும் அதை வாசிப்பதற்கு மூலப்பிரதியைத் தவிர அதோடு தொடர்புள்ள புராணீகம். வரலாறு, பண்டைய சமூக, கலாச்சார வாழ்வு குறித்த அடிப்படைகள், மற்றும் மொழி நுட்பம், குறீயிட்டு பொருள்கள்  போன்றவற்றை  புரிந்து கொள்வது அவசியம்


3) இதிகாசத்தில் வெளிப்படும் அறம் மற்றும் நீதி கருத்துகள், தத்துவ விசாரம் குறித்து எளிய அறிமுகமாவது அவசியம் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு அதை இன்றைய கண்ணோட்டத்திலிருந்து விமர்சிக்கும், கண்டிக்கும் மனநிலையை சற்றே ஒதுக்கி வைத்துவிட வேண்டும்


4) இதிகாசங்கள் தன்னளவில் இயல்பும் அதீதமும் ஒன்று கலந்தவை. கடவுளும் மனிதனும் ஒன்று சேர்ந்து இயங்கும்  வெளியது. அதில் எது இயல்பு எது அதீதம் என்று பிரித்தெறிவது சுலபமானதில்லை.  இயல்பு, அதீதம் என்பது பற்றி இன்றுள்ள நமது அறிவும் புரிதலும் இதிகாசங்களை வாசிக்கையில் நிறைய மனத்தடைகளை உருவாக்ககூடும். ஆகவே அதையும் சற்றே விலக்கி விட்டு வாசிக்கத் துவங்க வேண்டும்


5) நாவல் போல சிறுகதை போல கதை சொல்லும் முறை ஒன்றிரண்டு மையங்களுக்குள்ளோ, முக்கியமான ஒற்றை சரடிலோ இதிகாசத்தில் இயங்குவதில்லை. ஆகவே பன்முகப்பட்ட கதையிழைகளும், சிறியதும் பெரியதுமான நிறைய கதாபாத்திரங்களும், முன்பின்னாக நகரும் நிகழ்வுகளும், குறியீடுகளும் சங்கேதங்களும், தத்துவ விசாரணைகளும், கவித்துவ உச்சநிலைகளும், அக தரிசனங்களும் உள்ளடக்கியது என்பதால் அவற்றை உள்வாங்கவும் நமக்குள் தொகுத்துக் கொள்ளவும் ஆழ்ந்த கவனம் தேவைபடுகிறது


6) இதிகாசத்தின் கட்டமைப்பு மிக முக்கியமானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும் போது விரிந்த அனுபவம் தரக்கூடியது. ஆகவே அந்தக் கட்டமைப்பின் ஆதாரப்புள்ளியை அறிந்து கொள்வது அவசியமானது. இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோன்றம் கொண்டது. அதற்கு நிறைய உள்அடுக்குள், ரகசிய வழிகள், சாளரங்கள் இருக்கின்றன. அதே நேரம் இந்த கட்டமைப்பு பெரிதும் மாயத்தன்மை கொண்டது என்பதால் எது நிஜம் எது பிம்பம் என்று கண்டறிவதில் குழப்பம் ஏற்படக்கூடும். ஆகவே இதிகாசம் துவங்கும் இடத்தில் கதை துவங்குவதில்லை. இதிகாசம் முடியும் இடத்தில் கதை முடிந்துவிடுவதில்லை.


7) இதிகாசம் கவிதையின் உச்சநிலை. ஆகவே உன்னதமான கவித்துவ எழுச்சியும் உத்வேகமும்  அதிகம் காணமுடியும். கதாபாத்திரங்களின் உணர்ச்சிநிலைகளையே இதிகாசம் முக்கியம் கொள்கிறது. அதிலும் இயற்கையும் கதாபாத்திரங்களின் மனநிலைகளும் பிரிக்க முடியாதவை. ஆகவே இயற்கையை பற்றிய விவரிப்புகள் மிக முக்கியமானவை.


8) இதிகாசத்தின் பின்னால் இயங்குவது ஒரு நாடோடி மனம். அது எண்ணிக்கையற்ற பாடல்களால் நிரம்பியது. மனிதர்கள் அறிந்த கதையை அவர்கள் அறியாத வண்ணம் சொல்கிறது. அதன் குரல் புராதனமானது. ஆகவே கதை சொல்பவன் ஆழ்ந்த பெருமூச்சுடன் சில நேரங்களில் கதையை விவரிக்கிறான். சில நேரங்களில் உன்மத்தம் ஏறிக் கதையை சொல்கிறான். சில வேளைகளில் சந்நதம் கண்டவன் போல துள்ளுகிறான். சில தருணங்களில் அவன் குரல் பைத்தியநிலையை எட்டுகிறது. இந்த பன்முகப்பட்ட குரல்கள் தான் இதிகாசத்தின் தனிச்சிறப்பு. அதை நுட்பமாக உணர்ந்து கொள்ள வேண்டும்


9) இதிகாசத்திற்கு உடல் இருக்கிறது. அதன் கண் எது, காது எது, எது இதயம், எது கைகால்கள் என்பதை வாசிப்பின் மூலம் ஒரு தேர்ந்த வாசகன் கண்டுபிடித்துவிட முடியும். இதை தான் பலவருடமாக இதிகாசம் வாசிப்பவர்கள் அறிந்திருக்கிறார்கள்.


10) இதிகாசங்கள் மதப்பிரதிகள் அல்ல. அவை மதம், மெய்தேடல், உயர்தத்துவ விசாரணை போன்றவற்றை விவரித்தாலும் அவை ஒரு சமூகத்தின் நினைவு தொகுப்புகள் என்றே சொல்வேன். இதிகாசம் நிறைய கிளைகள் கொண்டது. அதில் ஒன்று தான் மதம். ஆகவே இதிகாசத்தை புனித பொருளாக கருத வேண்டியதில்லை.


**
இவ்வளவு பீடிகைகளுடன் எதற்காக இதிகாசங்கள் படிக்கப் பட வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பானது. காரணம் நமது புத்தக வாசிப்பு பழக்கம் என்பது ஒரு மணி நேரமோ அல்லது சுவாரஸ்யமாக இருந்தால் சில மணி நேரங்களுக்குள்ளே முடிந்து போய்விடக்கூடியது. இதிகாசங்களோ பல நூறு பக்கங்கள் கொண்டதாக இருக்கின்றன. வாசிக்க நிறைய நாட்கள் தேவைப்படுகின்றன. அத்தோடு அவற்றால் நமக்கு என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது என்ற எண்ணம் உருவாவது இயல்பு தான்.


எளிமையாக சொல்வதாயின் நமது அன்றாட வாசிப்பு குளத்தில் நீந்துவது போன்றது. இதிகாசம் கடலில் நீந்தும் அனுபவம். கடலில் நீந்தும்போது நாம் எல்லையற்ற பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை உணர்வோம். அதே நேரம் நாம் நீந்தும் கடலின் அடியாழத்தில் எத்தனையோ மலைகள் புதையுண்டு இருக்கின்றன. கோடானகோடி உயிர் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது . அப்படி பட்டது தான் இதிகாசங்களை வாசிப்பதும்.


எல்லா இதிகாசங்களும் மக்களின் நினைவு தொகுப்புகளே. ஒட்டுமொத்தமான மனப்பதிவுகளின் ஒரு சேகரம் என்று கூட சொல்லலாம். இந்திய சமூகத்தின் ஆதிநினைவுகள் இதிகாசங்களில் பதிவாகியிருக்கின்றன. இந்திய மனது கொண்ட எழுச்சியும் தடைகளும் அதில் காணக்கிடைக்கின்றன. அதேநேரம் நமது கதை சொல்லும் மரபின் உச்சபட்ச சாதனையாகவும் அது திகழ்கிறது.


மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சூதர்களால் பாடப்பட்டு தான் இலக்கியவடிவம் பெற்றிருக்கின்றன.  சூதர்கள் பாடிய மகாபாரதத்தின் பெயர் ஜெயா. அதாவது வெற்றி. வெற்றியை பாடுகின்ற பாடல். ஆனால் வெற்றியை மட்டும் அது கவனம் கொள்ளவில்லை. இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், நகரங்கள் உருவாக்கபட்டதையும், கானகம் எரிக்கபட்டு வனகுடிகள் துரத்தபட்டதையும், அரசாட்சியில் ஏற்பட்ட உள்குழப்பங்கள். மாற்றங்களையும் சேர்ந்தே விவரிக்கிறது.


மகாபாரதத்தை முழுமையாக ஒரு முறை வாசித்து தெரிந்து கொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு தேவைப்படும். நம்மில் பெரும்பாலோர் வாசித்துள்ள மகாபாரதம் மிகவும் சுருக்கப்பட்ட பிரதியாகும். அது தண்ணீரில் பார்க்கும் நிலவின் தோற்றம் எனலாம்.


ஆதிபர்வம், சபா பர்வம், ஆரண்ய பர்வம், விராட பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லிய பர்வம், சப்திக பர்வம், ஸ்ரீபர்வம், சாந்தி பர்வம், அனுசாசன பர்வம், அஸ்வமேதிக பர்வம், ஆச்ரமவாச பர்வம், மௌசால பர்வம், மகாபிரதஸ்தானிக பர்வம், சொர்க்கரோக பர்வம். என்று பதினெட்டு பருவங்களாக கிட்டதட்ட பதினைந்தாயிரம் பக்கங்கள் கொண்ட மகாபாரதப் பிரதி ஐம்பது வருடங்களுக்கு  முன்பாகவே தமிழில் வெளியாகியிருக்கிறது. கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. தற்போது புதிய வெளியீடாக ஆறு தொகுதிகள் கடைகளில் கிடைக்கின்றன.


நான் பழைய பதிப்பை முழுமையாக சேகரம் செய்ததே மிகப்பெரிய கதை. அதற்காக  நாலைந்து வருசம் அலைந்து திரிந்திருக்கிறேன். கிராமப்புறங்களில் மகாபாரதத்தை வீட்டில் வைத்து படிக்கக் கூடாது என்று நம்பிக்கையிருக்கிறது. காரணம் அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்துவிடுமாம். அதைப்பற்றிய கவலையின்றி நான் மகாபாரதத்தை சேகரித்து வீட்டில் வைத்து படிக்க துவங்கிய போது கதையைத் தாண்டி அதை எப்படி புரிந்து கொள்வது என்பது சிக்கலாக இருந்தது.


பொதுவில் இதிகாசங்களை நேரடியாக நாமே வாசிப்பதை விடவும் ஒருவர் வாசித்து பொருள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்வது எளிய வழி. அதன் பிறகு நாமாக படிக்க துவங்கலாம். ஆனால் இதற்கு ஒரு ஆசான் தேவை. அவர் இதிகாசத்தில் ஊறித்திளைத்தவராக இருத்தல் வேண்டும்.
அப்படி மகாபாரத்தில் ஊறித்திளைத்தவர்கள் நூற்றுக்கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள். மகாபாரதத்தை மட்டுமே ஆய்வு செய்வதற்கு பூனாவில் தனியான ஆய்வு நிறுவனமே இருக்கிறது.  மகாபாரதத்தில்  மிகுந்த நுட்பமான வாசிப்பு திறன் கொண்ட  பேராசிரியர்கள், அறிஞர்கள்  பலரை நான் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.


மகாபாரதத்தின் தமிழாக்கம் மிகவும் சமஸ்கிருதமயமானது. ஆகவே நிறைய சமஸ்கிருத சொற்களுக்கு பொருள் கொள்ள உதவி தேவைப்படுகிறது. அப்படி முயன்று சில ஆசான்களின் உதவியோடு இரண்டரை ஆண்டுகளில் மகாபாரதம் வாசித்து முடித்தேன். அதன்பிறகு தான் உபபாண்டவம் எழுதும் எண்ணம் உருவானது.


இந்தியாவிலும்  ஒவ்வொரு மாநிலத்திலும் மகாபாரதம் அங்கே தான் நடைபெற்றது என்ற நம்பிக்கையும் சில நினைவிடங்களும் உள்ளன. அது போல நாட்டார் மகாபாரத வடிவங்களும் இருக்கின்றன. இதில் கிளைக்கதைகளில் நிறைய மாற்றங்கள் உள்ளன. ஒரு முறை நாட்டார்வழக்காற்றியல் அறிஞர் ஏ.கே. ராமானுஜத்திடம் இந்தியாவில் எத்தனை விதமான மகாபாரதங்கள் இருக்கின்றன என்ற கேள்விக்கு எவ்வளவு இந்தியர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு மகாபாரதங்கள் இருக்கின்றன என்று பதில் தந்தார். அது தான் உண்மை.


தொடர்ந்து மகாபாரதம் குறித்த தேடுதலில் அலைந்து திரிந்து இமயமலையின் அடிவாரம் வரை சென்று வந்தபிறகு மகாபாரதம் ஒரு பிரதி என்பது மறைந்து அது இந்திய மனதின் நீண்ட நினைவு படிவம் என்பது புரிந்தது. இந்திய சமூகத்தின் நினைவுகள் ஒன்றாக தொகுக்கபட்டு இதிகாசம் வடிவம் கொண்டிருக்கிறது என்றே சொல்வேன்.


நமக்கு பரிச்சயமான நிலவியல், புராணீகம், கதையாடல் கொண்டிருந்த மகாபாரதத்தை வாசிப்பதற்கே இவ்வளவு மெனக்கெடல் வேண்டியிருக்கிறது என்றால் கிரேக்க இதிகாசங்களை வாசிப்பதற்கு நிச்சயம் அதைவிடவும் அதிகமான உழைப்பு தேவைப்படுகிறது.


**


கிரேக்க இதிகாசங்களை வாசிப்பது மிக உயர்வான அனுபவம். ஆனால் அது எளிதில் சாத்தியமாகாது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹோமரின் ஒடிஸியை வாசிப்பதற்கு முயன்றேன். கிறிஸ்துவிற்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட புத்தகம். ஹோமரின் மிகச்சிறந்த புத்தகம் என்று அதை பற்றிய பிரமிப்புகளுடன் கையில் எடுத்த போது பத்து பக்கங்களைக் கடந்து செல்ல முடியவில்லை. இவ்வளவிற்கும் கிரேக்க இலக்கியம் மற்றும் தத்துவங்கள் குறித்து ஒரளவு வாசித்திருக்கிறேன். ஆனாலும்  ஒடிஸியை வாசிப்பது எளிதானதாகயில்லை.


ஒடிஸியின் கதை எனக்கு தெரியும். ஆனாலும் கவிதையின் வழியாக அதைப் புரிந்து கொள்ள முற்படுவது எளிதானதாகயில்லை. அதற்கு இயல்பான வாசிப்பிற்கும் மேலாக சில தேவைகள் இருப்பதை அறிந்து கொண்டேன். இதிகாசத்தை வாசிப்பதற்கான முன்தயாரிப்பு மேற்கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன். ஒரு வருசத்திற்குள் இரண்டு கிரேக்க இதிகாசங்களையும் வாசித்து முடிக்கலாம் என்ற எண்ணம் உருவானது.


ஹோமரின் இலியட் ஒடிஸி போன்ற கிரேக்க இதிகாசங்கள் வெறும் கற்பனை பிரதிகள் மட்டுமில்லை. மாறாக அந்தப் பிரதியின் ஊடாக கிரேக்க சமூகத்தின் பண்டைய நிலை அதன் அரசியல் நெருக்கடி மற்றும் கிரேக்க கடவுள்கள் மீதான பயம் மற்றும் அதிநம்பிக்கை, பெண்களின் மீதான அதீத இச்சைகள், அடிமை வணிகம், முடிவற்ற யுத்தங்கள், நாடு பிடிக்கும் ஆசை அதிகாரத்திற்காக நடைபெற்ற கொலைகள் என்று தொல் நினைவுகள் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.


ஆகவே கிரேக்க இதிகாசங்களை படிப்பதற்கு அடிப்படையாக கிரேக்க வரலாறு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழில் கிரேக்க வரலாறு வாசிப்பதற்கு சாமிநாத சர்மாவின் புத்தகங்கள்     உதவி செய்யக்கூடியவை. அது போலவே கிரேக்க புராணம் மற்றும் கடவுள்கள், கிரேக்க தத்துவங்கள் பற்றியும் தமிழில் பத்து பதினைந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன. 


நான் கிரேக்க வரலாற்றையும் தத்துவத்தையும் கிரேக்க புராணங்களையும்  ஆங்கிலத்தின் வழியே வாசிப்பதற்காக இருபது புத்தகங்களை தேர்வு செய்து கொண்டேன். அவை  


1)Gods and Heroes of Classical Antiquity.   Aghion  C. Barbillon. 2) The Greek Myths – Robert Graves 3) Greek Gods: Human Lives. Mary  Lefkowitz,. New Haven, CT: Yale University Press, 4) The Complete World of Greek Mythology – Richard Buxton  5) Gods and Heroes in Greek Mythology:  – Panaghiotis Christou  6) Early Greek Philosophy – Jonathan Barnes  7) History of Greek Philosophy – W. K. C. Guthrie  8) Meet The Philosophers Of Ancient Greece – Patricia F. O`Grady  9) The Trojan War  – Olivia Coolidge,  10) Archaeology and the Illiad – Eric H. Cline  11) The Trojan War – Barry Strauss 12) Inside the Walls of Troy – C. McLaren 13) Homer – Barry B. Powell 14) Ancient Greece  – Sarah B. Pomeroy 15) Helen of Troy – Margaret George  16) Helen –  Bettany Hughes 17) In Search of the Trojan War – Michael Wood18) The Essential Homer – Stanley Lombardo 19) Ancient Greek War and Weapons – Haydn Middleton  20 ) The Heroes of the Greeks – Simpson


இந்த பட்டியல் ஒரு நாளில் உருவாகிவிடவில்லை. நண்பர்களின் ஆலோசனைபடியும், என் கைவசமிருந்த புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இரவல் பெற்றும், பழைய புத்தககடைகளில் தேடியும் இந்த புத்தகங்களைப் பெற்றேன். இதை ஒரே நேரத்தில் படிப்பது என்பது சாத்தியமற்றது என்பதால் மாதம் ஐந்து ஐந்து புத்தகங்களாக வாசிக்க ஆரம்பித்தேன்.


எவ்விதமான குறிப்புகளும் எடுத்துக் கொள்ளாமல் மனம் விரும்பியபடி வாசிக்க ஆரம்பித்தேன். நிறைய நேரங்களில் ஒரு புத்தகத்திலிருந்து வெளிவருவதற்கே சில வாரங்கள் ஆகிப்போயிருந்தன. சில புத்தகங்களை இரண்டு இரவில் வாசித்து முடித்தேன். இடையில் ஹோமரின் இலியட்டை எடுத்து சில அத்தியாயங்கள் வாசிப்பேன். வைத்துவிடுவேன். இப்படியாக இலக்கற்ற வாசிப்பு நடந்தது.



பரிட்சைக்குப் படிப்பது போல வாசிக்கத் துவங்கினால் விருப்பம் போய்விடும். ஆகவே எப்போது விருப்பம் இருக்கிறதோ அப்படி வாசிக்கலாம். அப்படிதான் மேற்குறிப்பிட்ட புத்தகங்களை வாசித்து முடித்தேன்.


அதன் பிறகு மனதில் கிரேக்க கடவுள்களும் நகரங்களும் நிரம்பியிருந்தனர். பல கிரேக்க கடவுள்களின் பெயர்கள் உள்ளுர் குலசாமிகளின் பெயர்கள் போல எளிதில் நாவில் நின்றன. அது போலவே கிரேக்க நகரங்கள், யார் யாருடைய மகன், எந்த கடவுளுக்கும் எந்த கடவுளுக்கும் தகராறு. எந்த பெண்கடவுள் யாரைக் காதலித்தார் என்பது போன்றவை மிக சுவாரஸ்யமாக மனதில் ஏறிக் கொண்டன.


அந்த நாட்களில் போர்ஹேயும் கூடவே வாசித்துக் கொண்டிருந்தேன். போர்ஹே எல்லாவற்றிற்கும் கலைக்களஞ்சியங்களை தேடிப் புரட்டி பார்க்க கூடியவர் என்பதை அறிந்து நானும் கிரேக்க புராணங்களுக்கான கலைக்களஞ்சியம் ஒன்றை விலை கொடுத்து வாங்கினேன். படங்களோடு உள்ள மிக அழகான பதிப்பு. அதில் உள்ள சித்திரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன். அலங்கார குவளைகளில் தீட்டப்பட்டிருந்த கிரேக்க ஒவியங்களின் மீது அப்போது அதிக ஆர்வம் உண்டானது. அந்த சித்திரங்கள் அற்புதமானவை.


பின்பு ஒரு மழைக்காலத்தில் ஹோமரை வாசிக்க துவங்கினேன்


முன்பு இருந்த சிரமங்கள் எதுவும் இப்போது இல்லை. ஹோமரின் மேதமை அவரது முதல்வரியிலே துவங்கிவிடுகிறது. இலியட் என்ற இதிகாசத்தின் முதல்வார்த்தை nis,, அதாவது பெருங்கோபம் அல்லது சீற்றம். அது தான் இதிகாசத்தை நெய்து கொண்டு போகும் நூலிழை.கோபம் தான் ஹோமரின் இதிகாசத்தின் முக்கிய உணர்ச்சிநிலை. அக்கிலஸின் கோபம் நான் இதிகாசத்தின் பிரதான வெளிப்பாடு. எதற்காக அக்கிலஸ் கோபப்படுகிறான். அக்கிலஸ் யார். அவன் கோபம் என்ன செய்தது என்பதன் ஊடாகவே இதிகாசம் விரிவடைகிறது.



கிரேக்க கதையுலகம் கடவுள்களும் மனிதர்களும் ஒன்று கலந்தது. மனிதர்களின் விருப்பு வெறுப்புகள் கடவுளால் தீர்மானிக்கபடுகிறது. அதே நேரம் மனிதர்கள் போல கடவுள்களும் காதல் காமம், வீரம் என்று இச்சையின் பாதையில் அலைந்து திரிந்தனர். கிரேக்க கடவுள் உலகில் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு கடவுள் இருக்கிறார்கள்.


மழைக்கு ஒரு கடவுள், இடிக்கு ஒரு கடவுள். ஆகாசத்திற்கு ஒரு கடவுள், இரவிற்கு ஒரு கடவுள், காதலுக்கு ஒரு கடவுள் என்று நூற்றுக்கணக்கில் கடவுள்கள். அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள். அதில் பந்தாடப்படும் மனிதர்களின் வாழ்க்கை என்று கடவுளும் மனிதனும் சேர்ந்து செய்த நிகழ்வுகளே கதைகளாக விவரிக்கபடுகின்றன.


பண்டைய கிரேக்க சமூகத்தில் ஆரக்கிள் எனப்படும் தெய்வீக குரலுக்கு மிக முக்கிய இடமிருந்தது. எல்லா காரியங்களும் இந்த தெய்வவாக்கு கேட்டே முடிவு செய்யப்படும். அதுபோலவே கடவுள்கள் உக்கிரமான கோபம் கொண்டவர்கள் என்பதால் அவர்களை சமாதானம் செய்ய உயிர்பலி கொடுப்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. தங்களை கடவுள்கள் கண்காணித்து கொண்டிருப்பதாக சாமான்யர் முதல் அரசர் வரை நம்பியிருந்த காலமது. ஆகவே கடவுளை பரிகசரிப்பதோ, அல்லது மறுப்பதோ மிக கடுமையான குற்றங்களில் ஒன்றாக கருதப்பட்டது.


அதே போல அடிமை வணிகம் அங்கீகரிக்கபட்டிருந்தது. உயர்குடியை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வைத்திருந்தனர். பெண் அடிமைகள் பாலியல் இச்சையை போக்கி கொள்ளவும், சேவகத்திற்காவும் பயன்படுத்தபட்டு கொல்லப்படுவார்கள். சிறிய சிறியதாக சிதறிக்கிடந்த நிலப்பரப்பை ஆண்ட கிரேக்கர்கள் தங்களது ராஜ்ஜியத்தை விஸ்தாரணம் செய்ய போருக்கு எப்போதும் தயராக இருந்தார்கள். அது  போலவே அண்டைய நாடுகள் மீது படையெடுத்து ஆக்ரமிப்பதும் கொள்ளையடிப்பதும். அங்கு பிடிபடும் மக்கள் அடிமைகளாக விற்கபடுவதும் இயல்பாக நடந்து கொண்டிருந்தது.


கடவுளின் கோபம் தான் பிளேக் நோயாக வெளிப்படுகிறது என்று மக்கள் பயந்தார்கள். கடவுளை சாந்தி செய்வதற்கு சாமியாடிகள் இருந்தார்கள். அவர்கள் மிக உயர்ந்த அதிகாரம் கொண்டிருந்தார்கள். இசை நாடகம் தத்துவம் போன்ற துறைகளில் கிரேக்கர்களுக்கு அதிக ஆர்வமிருந்தது. கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அது போலவே யுத்தகலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.


**
ஹோமரின் இதிகாசமான இலியட்  15,693 வரிகள் கொண்டது. அக்கிலிஸ் முக்கிய பாத்திரமாக கொண்டது.  ஹோமர் யார் என்பது இன்றளவும் சர்ச்சைக்கு உள்ளாகியே வருகிறது. ஹோமர் ஒரு நிஜமான ஆளின்பெயர் என்றும் இல்லை அது ஒரு புனைப்பெயர் என்றும் இருவிதமான கருத்துகள் உள்ளன. ஹோமரின் கவிதைகள் நாடோடிகளின் பாடல்கள் அவை தொகுக்கபட்டிருக்கின்றன என்கிறார்கள் ஒரு சாரார். ஆனால் ஹோமர் என்பது கிரேக்கச் சொல்.
அந்த சொல் வழிகாட்டுபவர் என்ற பொருள் கொண்டது. ஹோமர் பார்வையற்றவர். எப்போதும் அவரை ஒருவர் வழிநடத்தி கூட்டி வருவார். அதனால் அந்த பெயர் வந்தது என்கிறார்கள். ஹோமர் பார்வையற்றவர் என்பதற்கும் நேரடியான குறிப்புகள் இல்லை. ஆனால் பொதுவில் அவர் பார்வையற்றவர் என்றே பலராலும் குறிப்பிடப்படுகிறார். ஹோமர் பற்றி போர்ஹே ஒரு சிறப்பான கட்டுரை  எழுதியிருக்கிறார்.



ஹோமரின் இதிகாசங்கள் கிரேக்க வெற்றியின் பாடலாகவே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக டிராய் நகரை அவர்கள் வெற்றி கொண்ட கதையை தான் இலியட் பாடுகிறது.


ஏன் டிராய் நகரின் மீது படையெடுத்து போனார்கள் என்ற முன்கதையை இதிகாசம் தெரிவிப்பதில்லை. அது போலவே டிராய் நகரம் தீ வைத்து அழிக்கபட்டது, அக்கிலஸ் கொல்லபட்டது  போன்ற சம்பவங்கள் எதையும் விவரிக்கவில்லை.


டிராய் நகரை முற்றுகையிட்டு பத்து வருசங்களாக நகரை கைப்பற்ற முடியாமல் தவிக்கிறார்கள் கிரேக்கர்கள். அந்த முற்றுகையின் போது கிரேக்க படையை தலைமை  ஏற்றிருந்த அகமனான் என்ற மன்னருக்கும் படைபிரிவின் ஒரு தளபதி போன்று விளங்கிய அக்கிலஸிற்கும் பிரிசெஸ் என்ற பெண்ணின் காரணமாக மனஸ்தாபம் உருவாகிறது.


டிராய் அரசவம்சத்தை சேர்ந்த பிரசெஸ் கிரேக்க வீரர்கள் கைப்பற்றி அக்கிலஸின் வீரத்திற்கு பரிசாக அளிக்கிறார்கள். அவள் மிக வசீகரமான அழகி. அவளை ரகசியமாக தூக்கிக் கொண்டு போய்விடுகிறார் மன்னர் அகமனான். இதனால் ஆத்திரமான அக்கிலஸ் அவருக்கு எதிராக கோபம் அடைகிறான். அவர் சாகும்வரை தான் யுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்று முடிவு செய்கிறான்.



அக்கிலஸ் யுத்தத்தில் பங்கேற்ற மறுத்த நிகழ்விலிருந்தே இலியட் துவங்குகிறது. அதின்பிறகு நடக்கும் யுத்த முயற்சிகள், அதில் இறந்து போன வீரர்கள், அவர்கள் சண்டையிட்ட விதம்,பயன்படுத்தபட்ட ஆயுதம், போர்களத்தின் உயிரோசை, ஹெக்டாரின் வீரம், அவன் அக்கிலஸின் உறவினனை கொல்வது என்ற மிக  விரிவாக எழுதப்பட்டுள்ளது இலியட்.


***
எதற்காக டிராய் யுத்தம் என்ற கதையை தெரிந்து கொண்டால் தான் இதிகாசத்தை தொடர்வது எளிதாக இருக்கும்.


ஸ்பார்டா தேசத்தின் ராணி ஹெலன். அவள் உலக அழகி. கடவுளின் அருளால் பிறந்தவள். நிலவை ஒத்த பிரகாசம் கொண்டவள் என்பதால் ஹெலன் என்று அழைக்கபட்டாள். அவளது சுயவரத்திற்கு பலநாட்டு மன்னர்கள் வந்திருந்தார்கள். அவள் ஸ்பார்டா தேச மன்னரான மெனலெûஸ திருமணம் செய்து கொள்கிறாள்.


ஒருமுறை டிரோஜன் இளவரசனான பாரீஸ் ஸ்பார்டாவிற்கு வருகை தருகிறான். அவன் ஹெலன் அழகில் மயங்கி அவளை காதலிக்க துவங்குகிறான். உலகிலே மிக வசீகரமான ஆண் என்று கொண்டாடப்படும் பாரீஸ் மீது ஹெலனும் காதல் கொள்கிறாள். இந்த நிலையில் மெனலெஸ் ஸ்பார்ட்டாவை  விட்டு  அவசர வேலை காரணமாக பயணம் மேற்கொள்ளவே இருவரும் ரகசியமாக திருமணம் செய்துவிடுகிறார்கள்.


மன்னர் வருவதற்குள் ஹெலனை அழைத்து கொண்டு ஏரளமான செல்வங்களை கொள்ளையடித்து பாரீஸ் மற்றும் அவனது சகோதரன் ஹெக்டார் இருவரும் கப்பலில் டிராய் நகருக்கு திரும்புகிறார்கள்.


ஹெலனை எப்படியாவது காதலிக்க வைப்பேன் என்று முன்னதாக பாரீஸிற்கு அப்ரோடைட் தேவதை வாக்களித்திருக்கிறாள். அதற்கு ஒரு தனிக்கதையிருக்கிறது. பேலீயஸ் மற்றும் தீடஸ் திருமணநிகழ்விற்கு அழைக்கபடாத எரிஸ் என்ற தேவதை ஆத்திரமாகி மிக அழகானவருக்கானது என்று எழுதிய ஒரு தங்க ஆப்பிளை அந்த விருந்தில் போட்டுவிட்டு போகிறாள். விருந்திற்கு வந்தவர்களில் யார் அழகானவர் என்ற பிரச்சனை உருவாகிறது. இதில் அழகிகளான  ஹெரா அதனா மற்றும் அப்ரோடைட் மூவரும் ஆப்பிள் தனக்கு உரியது என்கிறார்கள்.


யார் அழகி என்பதை முடிவு செய்யும் பொறுப்பு பாரீஸிடம் விடப்பட்டது. காரணம் அவன் அழகன் மற்றும் பல பெண்கள் அவள் அழகில் மயங்கியிருக்கிறார்கள். அவன் மூவரையும் அழைக்கிறான். மூவரில் தானே அழகி என்று பாரீஸ் சொன்னால் அவன் காலடியில் எல்லா தேசங்களையும் அடி பணிய வைப்பேன் என்கிறான் ஹெரா. அதனாவோ ஒரு படி மேலே போய் அவன் வேண்டும்மட்டும் பொன்னும் பொருளும் அதிகாரமும் தருவேன் என்கிறாள். ஆனால் அப்ரோடைட் உலகிலே பேரழகியான ஹெலனை அவனுக்கு பரிசாக தருவதாக சொல்கிறான். அப்ரோடைட்டை பாரீஸ் அழகி என்று தேர்வு செய்கிறான். ஆகவே ஹெலனை மயக்கி பாரீûஸ திருமணம் செய்ய வைத்தது அப்ரோடைட் தேவதையே.


டிராய் நகரை அரசாட்சி செய்த பிரியம் தன் மகன் ஹெலனை தன்னோடு கூட்டி வந்ததை பெரிய பிரச்சனையாக கருதவில்லை. ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் மெனலஸ் தன்மனைவியை மீட்டுவருவதற்காக தன் சகோதரன் அகமெனனானின்  உதவியை நாடுகிறான்.  டிராய் நகரை கைப்பற்றும் ஆசை கொண்ட அகமெனன் இதை பயன்படுத்தி  போர் புரிய விரும்புகிறான்.  பெரிய கிரேக்கபடையே ஒன்று திரள்கிறது. இதில் கிரேக்கத்தின் வெவ்வேறு பகுதி மன்னர்களும் இணைந்து கொள்கிறார்கள். அப்படிதான் அக்கிலஸ் யுத்தத்தில் கலந்து கொள்ள செல்கிறான்.  ஒதிசியஸ் இணைந்து கொள்கிறான்.


அக்கிலஸ் ஒரு தெய்வ குழந்தை. அவன் குழந்தையாக இருந்த போது அக்கிலஸிற்கு சாவு வரக்கூடாது என்பதற்காக அவனை நித்யத்துவம் தரும் நதியில் நீராட வைக்கிறாள் அவனது தாய். ஆனால் அக்கிலஸின் குதிங்கால் மட்டும்  தண்ணீரில் நனையவில்லை. ஆகவே அவன் குதிங்காலில் அடிபட்டால் இறந்துவிடுவான் என்ற ஒரேயொரு குறைபாடுடன் மாபெரும் வீரனாக உருவாகிறான். அவனை எதிர்ப்பவர்களை அழித்து ஒழித்து பெரிய வீரனாகிறான்.


அகமெனனான் தலைமையில் பெரும் படையுடன் டிராய் நகரை முற்றுகையிடுகிறார்கள். டிராய் கோட்டையை உடைத்து உள்ளே போவது எளிதாக இல்லை. அந்த நிலையில் தான் அக்கிலஸின் விருப்பதிற்கு உரிய அழகி பிரிசெûஸ அகமனான் தூக்கி போய்விடுகிறார்.


**


ஹோமரின் இதிகாசம் 24 பகுதிகளாக உள்ளது. ஒவ்வொன்றிலும் ஒரு முக்கிய சம்பவம் விவரிக்கபடுகிறது.  இதில் அக்கிலஸின் கோபமும் பெட்ரோகிளசை ஹெக்டார் கொல்வதும் அதற்கு பழிவாங்க அக்கிலஸ் தனி ஆளாக சென்று ஹெக்டரை கொன்று அவன் பிணத்தை இழுத்து வருவதும், தன் மகனை உரிய முறையில் அடக்கம் செய்வதற்காக மன்னர் இரவோடு இரவாக அக்கிலûஸ தேடி வந்து பிணத்தை யாசிப்பதும், அதில் மனம் இறங்கி அக்கிலஸ் ஹெக்டரின் உடலை ஒப்படைப்பதும், டிராய் நகரில் ஹெக்டருக்கு அரச மரியாதையுடன் இறுதி சடங்குகள் விவரிப்பதையும் இதிகாசம் விவரிக்கிறது.


டிராய் நகரை பெரிய மரக்குதிரை செய்து அதனுள் வீரர்கள் பதுங்கி சென்று  கைப்பற்றியது. அக்கிலஸ் எப்படி இறந்தான் என்பது போன்ற விபரங்கள் இலியட்டில் இடம்பெறவில்லை. அழிவின் துவக்கத்தோடு இதிகாசம் நிறைவு பெறுகிறது. லிட்டில் இலியட் என்ற இன்னொரு சிறிய இதிகாசத்தில் இந்த நிகழ்வுகள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.


கோபமுற்ற கடவுள்களின் விளையாட்டு மைதானம் தான் போர்களம் என்று கூறும் ஹோமர் மனிதவிதியை நிர்மாணிக்கும் சக்திகள் அரூபமானவை என்கிறார்.


**
ஹோமரின் இதிகாசத்தை வாசித்து முடிக்கும்போது அது நிறைய இடங்களில் மகாபாரதத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவேயில்லை. பொதுவில் புராதன மனம் கொண்ட கற்பனைகள்  இவை என்று வகைப்படுத்தலாம். அல்லது வீர சாகசக்கதைகளின் பொதுக்கூறுகள் உலகம் எங்கும் ஒன்று போலவே இருக்கின்றன என்றும் எடுத்துக் கொள்ளலாம்


மகாபாரத்தில் கடவுளின் உதவியால் தான் பாண்டவர்கள் பிறக்கிறார்கள். சூரியனின் அம்சமாக கர்ணன் பிறக்கிறான். இந்திரனின் அம்சமாக அர்ச்சுனன், தர்மதேவனின் வடிவமாக யுதிஷ்ட்ரன், வாயுபுத்திரனாக பீமன், யாகநெருப்பில் தோன்றிய யக்ஞசேனை எனும் பாஞ்சாலி என்று கடவுளின் நேரடி பிரதிநிதிகளாகவே முக்கிய கதாபாத்திரங்கள் சித்தரிக்கபடுகிறார்கள்.


மகாபாரதமும் யுத்தத்தை விரிவாக பேசுகிறது. குறிப்பாக அக்கிலஸ் கர்ணன் இருவரது கதாபாத்திரங்களும் நெருக்கமாகவே உள்ளன. கர்ணன் பீஷ்மரின் மீது தன்னை அவமதித்து விட்டதால் அவர் உயிரோடு இருக்கும் வரை போரில் கலந்து கொள்ள மாட்டேன் என்கிறான். கவச குண்டலங்களுடன் பிறக்கிறான். செஞ்சோற்று கடனுக்காக உயிர்விடுகிறான். இவை யாவும் அக்கிலஸிற்கும் நேர்கிறது. இருவருமே எதிர்த்து போரிட முடியாத பெரிய வீரர்கள். அழிவற்றவர்கள்.


அக்கிலஸின் குதிங்காலில் அம்புபட்டு இறப்பது போன்றே மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் காலில் ஜரா என்ற வேடனால் அம்பிடப்பட்டு இறக்கிறான்.
இரண்டு இதிகாசங்களும் பெண்ணை மையமாக கொண்டது. அவர்களை இழப்பதும் மீட்பதும் முக்கிய சம்பவங்களாக விவரிக்கபடுகின்றன.


மகாபாரதம் போர்களத்தில் என்ன வியூகம் அமைத்தார்கள். எவ்வளவு வீரர்கள் கலந்து கொண்டார்கள் என்ன ஆயுதம் பயன்படுத்தபட்டது. போரின் விதிமுறைகள் யாவை. போரில் தந்திரமாக வெல்வது எப்படி,  பத்மவியூகத்தில் நுழைந்த அபிமன்யூவை எப்படி கொன்றார்கள் என்பது போன்ற விபரங்கள் மிக விரிவாக உள்ளது.


அதே போலவே இலியட்டிலும் என்ன ஆயுதங்களை வீரர்கள் பயன்படுத்தினார்கள். எது போன்ற குத்தீட்டி பயன்படுத்தபட்டது, எத்தனை கப்பல்கள் வந்தன. அவை எந்த திசையில் பயணம் செய்தன, எவ்வளவு வீரர்கள் இறந்து போனார்கள். அவர்களின் உயிர் அவலம் எப்படியிருந்தது என்பதை இலியட் மிக விரிவாக சொல்கிறது


உலகெங்கும் உள்ள இதிகாசங்கள் பொதுகுணங்கள் நிரம்பியவை. அவை மனிதவாழ்வின் புதிரை அவிழ்க்கவும் புதிய முடிச்சுகளை உருவாக்கவுமே முயற்சிக்கின்றன.


**
இலியட்டின் தனிச்சிறப்பு அதன் கவித்துவ உச்சநிலைகள். ஹோமர் அக்கிலஸ் வழியாக வெளிப்படுத்தும் பார்வைகள் மிகச்சிறப்பானவை.  இசையோடு கூடிய பாடலாக இவை கிரேக்க  வீதிகளில் பாடப்பட்டிருக்கின்றன. ஆங்கில மொழியாக்கத்தில் அதை வாசிக்கும் போதும் கூட நாம் அந்த இசைத்தன்மையை அறிய முடிகிறது.


இன்றுள்ள மிக நவீனமாக கதைசொல்லல் முறை இலியட்டில் அதிகம் காணப்படுகிறது. சம்பவங்களை  அது நேரடியாக விவரிப்பதில்லை. அது போலவே நிகழ்வின் கடந்த காலம் மற்றும் எதிர்காலம் குறித்து அதிகம் கவனம்கொள்வதுமில்லை.


விதி தான் கிரேக்க இதிகாசத்திலும் மூலச்சரடாக உள்ளது. கிரேக்க மொழியில் விதி என்பதை குறிக்கும் சொல் moira  அதன் பொருள் பகுதி. அதாவது ஒரு பங்கு. வாழ்வின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியே விதி.


அக்கிலஸ் போரில் கலந்து கொள்ள மறுக்கும் போது அவனை சமாதானம் செய்ய ஒதிசியஸ் அவனோடு பேசுகிறான். அப்போது தனக்கு பயமே இல்லை என்று அக்கிலஸ் கூறுகிறான். உடனே ஒதிசியஸ் பயம் நிறைய நேரங்களில் தேவைப்படுகிறது. அது உபயோகமானது. பயத்தை விலக்க வேண்டியதில்லை. கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்கிறான். இது போலவே  அக்கிலûஸ தேடி வந்து இறந்து போன தன் மகன் உடலை யாசகம் கேட்கும் பிரியம் மன்னர் அவனிடம்  சாவு பாரபட்சமற்றது. எவன் அதை உருவாக்குகிறானோ அவனையும் அது காவு வாங்கிவிடும் என்கிறார்.


கடவுள் பல நேரங்களில் மனிதர்களை பார்த்து பொறாமைபடுகிறார்கள் காரணம் மனிதர்கள் எந்த நிமிசத்திலும் அழிந்து போக கூடியவர்கள். ஒவ்வொரு நிமிசமும் அவர்கள் வாழ்க்கை அற்புதமானவை. இந்த ஒரு நிமிசம் போல இன்னொரு நிமிசம் மனிதவாழ்நாளில் திரும்ப வரப்போவதேயில்லை என்று அக்கிலஸ்  ஒரு இடத்தில் சொல்கிறான்.


இப்படி நூற்றுக்கணக்கான வரிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.


**
இலியட் கதையைத் தாண்டி பல தளங்கள் கொண்டது. போர்கள வெற்றி, என்றென்றும் நிலைத்து நிற்கும் புகழ், விதியின் விளையாட்டு, அவமானம் அதற்கு எதிரான பழிவாங்குதல் என்று பல்வகை இழைகளால் பின்னி உருவாக்கபட்டிருக்கிறது.


சில வேளைகளில் அதன் குரல் மனிதவாழ்வின் அர்த்தமின்மையை பேசுகிறது. பல நேரங்களில் அது வாழ்வின் அர்த்தமே மற்றவர்களுக்காக மடிந்து போவது தான் என்பதை வலியுறுத்துகிறது. இப்படி இதிகாசம் வெளிப்படுத்தும் நுட்பமான தருணங்கள் எண்ணிக்கையற்றவை.


**
டிராய் நகரின் வெற்றிக்கு பிறகு யூலிசியஸ் வீடு திரும்பும் கடற்பயணத்தை விவரிக்கிறது  ஹோமரின் ஒடிஸி. அது இலியட்டில் இருந்து மிகவும் மாறுபட்டது. மிகுந்த உளவியல் தன்மை கொண்டது. வெற்றி ஒரு மனிதனை என்ன செய்கிறது என்பதையும், போர் காலங்களில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணின் அகஉளைச்சல்களையும் வெளிப்படுத்துகிறது.


**
ஹோமரின் இலியட்டில் இருந்து உந்துதல் பெற்று ஷேக்ஸ்பியர், மார்லோ துவங்கி ஜேம்ஸ் ஐôய்ஸ் வரை பல முக்கிய படைப்பாளிகள் தங்களது புனைவை உருவாக்கியிருக்கிறார்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட முறை இலியட் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது.  திரும்ப திரும்ப இலியட் வாசிக்கபட்டும் விவாதிக்கபட்டும் வருகிறது.


**
இப்படி ஒரு வருசம் செலவு செய்து  இதிகாசம் படிக்க என்னால் முடியாது என்பவர்கள் எளிதில் இதிகாசங்களை வாசிப்பதற்கு குறைந்தபட்சம் கிரேக்க கடவுள்கள் மற்றும் கிரேக்க மன்னர்களின் வரலாற்றை மட்டுமாவது வாசிக்கலாம். அதற்கு இன்று இணையத்தில் நிறைய இணையதளங்கள் பிரதிகள் இலவசமாக கிடைக்கின்றன. எளிமையான அறிமுகபுத்தகங்கள் உள்ளன.


இதிகாசங்களை வாசிக்கையில் மனித மனது காலம் காலமாக எதன்மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.எதில் சார்பு கொண்டு வாழ்வு இயங்கிக் கொண்டிருக்கிறது. வெற்றி தோல்வி மானம் அவமானம், இச்சை மறுப்பு, அடையாளம் அடையாளமின்மை, குடும்பமாக இருந்தல் துறத்தல் போன்ற இருநிலைகளை மிக ஆழமாக புரிந்து கொள்வதோடு அதன் இயங்குதளங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.


யாவும் தாண்டி வாசித்தலின் உயர் அனுபவத்தை தருகிறது என்பதற்காகவே படிக்கலாம். 


ஆகவே விருப்பம் இருந்தால் நீங்களும் ஏதாவது ஒரு இதிகாசத்தை வாசித்து பாருங்கள். ஹோமரின் ஒடிஸி பற்றி விரிவாக இன்னொரு பதிவு எழுதுகிறேன்.


**

0Shares
0