இந்திய சரித்திரக் களஞ்சியம்


தமிழில் வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில் எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும் முறையும் மிகப் பழமையானது.


 வரலாற்றை மீள்பார்வை செய்துவரும் சமகாலச் சூழலில் நவீன பிரக்ஞையுடன் கூட மறுவாசிப்பு நூல்களின் தேவை  அவசியமாக உள்ளது. அந்த வகையில் டி.டி.கோசம்பி, ரொமிலா தாபர், மற்றும் பணிக்கரின் இந்திய வரலாற்று மீள்வாசிப்புகள் முக்கியமானவை.



இவ்வகையில் ப. சிவனடி எழுதி பதிநான்கு தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள  இந்திய சரித்திரக் களஞ்சியம் மிக முக்கியமான தமிழ் நூலாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டுகாலத்தையும் தனியே எடுத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் உலகம் எங்கும் பல்துறைகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்திய சரித்திரத்தை இணைந்து உருவாக்கபட்டுள்ள இந்த நூல் சமகால வரலாற்று புத்தகங்களில் முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். இது போன்ற வரலாற்று பகுப்பு கொண்ட தமிழ் நூல் வேறில்லை.


சிவனடி வரலாற்று ஆசிரியரோ, ஆய்வாளரோ இல்லை. மாறாக தன்னுடைய குடும்ப வரலாற்றின் பத்து தலைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் அதன் கிளைவழிகளை வரிசைபடுத்தவும் முயற்சித்த அவருக்கு மூதாதையர்களின் காலமும் அதன் சரித்திர பின்புலங்களின் மீதும் ஆர்வம் உண்டாகி அதிலிருந்து இந்திய சரித்திரத்தை ஆழமாக கற்க துவங்கியிருக்கிறார்.


அதன்பிறகு இந்திய சரித்திரம் குறித்த பல நூறு முக்கியப் புத்தகங்களைத் தேடி அலைந்து படித்து குறிப்புகளை எடுத்திருக்கிறார். தனது தொடர்ந்த பயணத்தின் ஊடே ஆயிரக்கணக்கான  சரித்திர நூல்களை சேகரித்து கொண்டு  வீட்டிலே பெரிய நூலகம் வைத்திருந்தார்.


1992ல் முன்றில் மா.அரங்கநாதன் வழியாக அவரது அறிமுகம் கிடைத்தது. அசோக்நகரில் இருந்த அவரது வீட்டிற்கு சென்றேன். மிக அமைதியாக பேசக்கூடியவர். வீடெங்கும் சரித்திர புத்தகங்கள். குறிப்புகள். ஒரு ஆவணகாப்பகத்திற்குள் வந்துவிட்டது போலவே இருந்தது. வெகு ஆழமாக சரித்திரத்தை வாசித்திருக்கிறார் என்பது அவர் பேச்சில் வெளிப்பட்டது.


சிவனடி விருதுநகரைச்சேர்ந்தவர். எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.அதாவது அந்த காலத்து நாலாவது பாரம். அத்தோடு படிப்பு நின்று போனது. இரண்டாம் உலகப்போரின் நாட்களில் இந்திய கடற்படையில் சேர்ந்து சில ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு சென்னை திரும்பி ஒரு பதிப்பகத்தில்  பிழைத்திருத்துபவராக வேலை செய்தார். சில காலம் ஒரு செய்தி நிறுவனத்திற்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்


இந்திய சரித்திர களஞ்சியத்தின் முதல்தொகுதியை வெளியிட்ட போது அவரது வயது 60. கடற்பயண அனுபவம் அவரை நிறைய வாசிக்க வைத்திருக்கிறது. பொதுமக்கள் எந்த கடவுள் யாருடைய பிள்ளை. என்ன அவதாரம் எடுத்தார், யாரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதில் காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கு கூட சரித்திரத்தை அறிந்து கொள்வதில் காட்டுவதில்லை. பல பச்சை பொய்கள் சரித்திரம் என்ற பெயரில் உலவிக் கொண்டிருக்கிறது என விமர்சனம் செய்த சிவனடி தனது சரித்திர ஈடுபாடு பல கால வாசிப்பு அனுபவத்தில் உருவானது என்றார்


சிவனடியின் தனித்துவம் அவர் வரலாற்றையும் விஞ்ஞானத்தையும் இணைக்கும் புள்ளி. விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தான் வரலாற்றினை திசைமாற்றம் செய்ததில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. விஞ்ஞானத்தின் வரலாற்றையும் வரலாற்றின் விஞ்ஞானத்தையும் கொண்டதாகவே தனது நூல் எழுதப்பட்டுள்ளது என்று சொன்னார். அது போலவே கலாச்சார சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கலை இலக்கியம் சார்ந்த ஆளுமைகள் உருவான விதம் அவர்களின் பங்களிப்பு வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது என்பதை சிவனடியின் பார்வைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.


முப்பது தொகுதிகளாக 1700 ல் இருந்து 2000 வரையான இந்தியாவின் வரலாற்றை எழுத வேண்டும் என்பதே அவரது கனவு. ஆனால்1831 முதல் 1840 வரையான காலகட்டத்தினை பற்றிய பதிநான்காவது தொகுதியை வெளியிட்டதோடு மரணம் அடைந்தார். அவரது கனவு பாதியிலே துண்டிக்கபட்டு போனது.


நோய்மையும் உடற்சிரமங்களுக்கும் இடையில் தளராது மொத்தம் ஏழாயிரம் பக்கங்கள், பதிநான்கு தொகுதிகளாக கொண்டு வந்திருக்கிறார். 1910ல் சிங்காரவேலு முதலியார் அபிதாம சிந்தாமணி என்ற மாபெரும் தமிழ் இலக்கியக் களஞ்சியத்தை தனிநபராக உழைத்து 1700 பக்கங்கள்  கொண்டுவந்தார் என்பது  எவ்வளவு பெரிய சாதனையோ அதை விடவும் பன்மடங்கு உயர்ந்த சாதனை சிவனடி செய்திருப்பது. நான் அறிந்தவரை இந்திய வரலாற்றை பற்றி 7000 பக்கங்கள் எழுதியுள்ள ஒரே தமிழ் வரலாற்று ஆசிரியர் சிவனடி என்றே கருதுகிறேன்.


இவ்வளவு முக்கியமான சரித்திர பிரதியை தமிழ் மக்களோ, துறை சார்ந்த அறிஞர்களோ கண்டுகொள்ளவேயில்லை என்பது தான் இதன் துரதிருஷ்டம். தன்னுடைய சொந்த பணத்தில் அழகாக அச்சிட்டு சிவனடியே இந்த தொகுதிகளை வெளியிட்டார். ஆனால் இந்த புத்தகங்கள் கண்டு கொள்ளபடவேயில்லை. அத்தோடு அவரது பல ஆண்டுகால உழைப்பிற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை


நான் தேடிச்சென்று பார்த்த போது என்னுடைய புத்தகம் படித்து தேடி வந்தவர்கள் பத்து பேர் கூட இருக்கமாட்டார்கள். அதில் ஒரு சிலரே அதன் நுட்பங்களை உண்மையில் அறிந்திருக்கிறார்கள். நீங்கள் என்னை தேடி வந்து இத்தனை விபரங்களை பகிர்ந்து கொண்டது சந்தோஷமளிக்கிறது என்றார் சிவனடி. எவ்வளவு துயரமான நிலை பாருங்கள்.


மாணவர்களுக்கான மலிவுபதிப்புகள், கையேடுகள் என்று வரலாற்றை கூவிகூவி விற்று காசு சம்பாதிக்கும் பதிப்பாளர்கள், வரலாற்று போலிகளுக்கு நடுவில் தன்னுடைய சொந்த ஆர்வத்தின் காரணமாக சரித்திரம் தேர்ச்சி கொண்டு அதை பிரம்மாண்டமான களஞ்சியம் போல அழகாக தொகுத்து வெளியிட்டுள்ள சிவனடியின் நூல்கள் அறிஞர்வட்டத்தில் கண்டு கொள்ளபடவேயில்லை. ஒன்றிரண்டு புத்தக விமர்சனங்கள் வெளியானதோடு சரி.


இதில் ஒரேயொரு தொகுதி மட்டுமே மறுபதிப்பு வந்திருக்கிறது. மற்ற பதிமூன்று தொகுதிகளும் முதல்பதிப்போடு நின்று போய்விட்டது.
முப்பது தொகுதிகளுக்குமான தனது அடிப்படை தகவல்கள் மற்றும் எழுதவேண்டிய முக்கிய நிகழ்வுகள்,  சம்பவங்கள், குறிப்புகள் யாவும் அவரிடம் இருந்தன. எந்த எதிர்வினையும் இல்லாமல் தனது உழைப்பும் அக்கறையும் வீணாக போகிறதே என்ற ஆதங்கமும், நோய்மையும் அவரது செயல்களை முடக்கி போட்டது. ஆனாலும் விற்பனையை பற்றி, தன் கைப்பணம் போகிறதே என்பதை பற்றிய கவலைகளை மீறி தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு புத்தகம் வீதம் கொண்டு வந்தார்.


சிவனடி தமிழ் இலக்கியத்தில்  தேர்ந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர். குறிப்பாக சைவ சித்தாந்தம் மற்றும் மெய்யியல் சார்ந்து தீவிர நாட்டம் கொண்டிருந்தார். தமிழ் செவ்விலக்கியங்களில் அவருக்கு இருந்த ஈடுபாடு வரலாற்றின் நூலினை பல இடங்களில் உயர்ந்த கவித்துவ வெளிப்பாடாக மாற்றியிருக்கிறது. இது போலவே ஆங்கில இலக்கிய புலமையும் அவரிடம் சிறப்பாக அமைந்திருந்தது.


சிவனடியின் சரித்திரக் களஞ்சியத்தின் சிறப்பம்சம் வேறு எந்த வரலாற்று நூலிலும் காணமுடியாத நுட்பமான, அரிதான தகவல்கள், எளிமையான சொல்லும் முறை. எந்த பொருள் பற்றி பேச முற்படுகிறாரோ அதை பற்றிய அவரது சுயமான பார்வை மற்றும் இடைவெட்டாக பிற துறைகளின் முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடத்தக்க புத்தகங்களை பொருத்தி காட்டும் பாங்கு.குறிப்பாக தமிழ்வாசகர்களை மனதில் கொண்டு அவர்கள் அறிந்த உதாரணங்களின் வழியே காலத்தை சுட்டிகாட்டும் வெளிப்பாட்டு முறை.


உதாரணத்திற்கு ஒரு நூலை விளக்குகிறேன். 1831 முதல் 40  வரையான இந்திய சரித்திர காலத்தை விளக்கும் சிவனடி மெக்காலே பற்றிய விபரங்களுடன் துவங்குகிறார்.  இன்னொரு பக்கம் மருத்துவ துறையில் மயக்கமருந்து எனப்படும் குளோராபார்ம் கண்டுபிடிக்கபட்டதை குறிப்பிட்டு சொல்கிறார்; கூடவே குணங்குடி மஸ்தானின் வாழ்வும் சூபி கருத்துகளும் இடம்பெறுகின்றன.


ரயில்வே பணி நடைபெற்ற விபரங்களை தருகிறார். கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையில் ஏற்பட்ட மாற்றம், அடிமை முறையில் அளிக்கபடும் தண்டனைகளை பட்டியலிடுகிறார். கூடவே தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட சமையல்கலை நூலினையும் சுட்டிகாட்டுகிறார். திவாகரம் தமிழில் அச்சிடப்பட்ட விபரங்களும் காணகிடைக்கிறது. இப்படி அறிவு களஞ்சியம் போல தொடத்தொட விரிந்து கொண்டே போகிறது சிவனடியின் நூல். 


வரலாற்று ஆய்வு  என்பது சாமான்யர்கள் படிப்பதற்கானது அல்ல. அது அறிவாளிகளின் வேலை என்று பயமுறுத்தாமல் எளிய முறையில் வாசகனை படிக்க வைக்கமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த சரித்திர களஞ்சியம்


இன்றுள்ள எந்த கணிப்பொறி வசதியும் பயன்படுத்தாமல் கையால் குறிப்புகள் எழுதி பல ஆயிரம் பக்கங்கள் வைத்திருந்தார் சிவனடி. அந்த வாசிப்பு அனுபவத்தின் திரட்சியே சரித்திர களஞ்சியமாக வெளிப்பட்டிருக்கிறது.


சிவனடியின் மறைவிற்கு பிறகு இந்த நூல்கள் வெளிவருவது நின்று போனதோடு அதன் விற்பனை ஆகாத பிரதிகள் விற்பனைக்கு கிடைப்பதும் கூட முடங்கி போனது. சிவனடி உரிய முறையில் அங்கீகரிக்கபடவில்லை என்ற ஆதங்கம் அவர் குடும்பத்திற்கு இருக்க கூடும். ஆனால் அவரது நூல்கள் முடக்கபட்டுவிடக்கூடாது.


நாட்டுடமை ஆக்கபடும் புத்தகங்கள் குறித்து இன்று பலத்த சர்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கவனிக்கபடாமல் முடங்கி போன சிவனடியின் நூல்களை நாட்டுடமை ஆக்கினால் அது மிக பெரிய அங்கீகாரமாக அமையும். எதிர்கால தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும். அல்லது விருப்பமான பதிப்பாளர்கள் எவராவது அவர்களது குடும்பத்தின் அனுமதி பெற்று புதிய பதிப்புகளாக அவற்றை மீள்பிரசுரம் செய்து கொண்டுவரலாம்.


7000 பக்கம் எழுதிய சிவனடி தனது புகைப்படத்தை கூட எங்கும் வெளியிட்டுக் கொண்டது கிடையாது. தன்னை எதிலும் முன்நிறுத்திக் கொண்டதுமில்லை. சாதனையாளர்களை புறக்கணிப்பதும் அறைகுறைகளை கொண்டாடுவதும் தான் தமிழின் தொடர்ந்த தலைவிதியா?


பெரியசாமி தூரனின் கலைக்களஞ்சியம், சிவனடியின் இந்திய சரித்திரக்களஞ்சியம், போன்ற அரிய தமிழ் நூல்கள் முடங்கிப் போவது தமிழின் அறிவு வளர்ச்சியை முடக்குவதேயாகும். கோடிக்கணக்கில் பணம் ஒரு நாள் நடத்தப்படும் கேளிக்கை விழாக்களுக்கும் அரசியல் விளம்பரங்களுக்கும் செலவிடப்படுகின்றன.


ஆனால் தமிழ் அறிவுத்துறை வளர்ச்சிக்கு காட்ட வேண்டிய அக்கறையோ மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது.


***
சிவனடியின் நூல்கள் சித்தார்த்தன் பதிப்பகம் 103, நான்காவது அவின்யூ, அசோக்நகர் சென்னை. 3  வெளியிடப்பட்டிருக்கின்றன. தற்போது சென்னை தி. நகரில் உள்ள நியூ புக்லேண்ட் புத்தக கடையில் சில தொகுதிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
***


 


 


 

0Shares
0