இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் மறைவு தாங்கமுடியாத இழப்பு, தீவிர இலக்கியங்களை தேடித்தேடி வாசித்த படிப்பாளி அவர், ஈழத் தமிழ் மக்களின் மீது தீவிர அக்கறை கொண்ட உணர்வாளர், எப்போது சந்திக்கும் போதும் என்ன படித்தீர்கள் என்று தான் முதலில் கேட்பார், சிற்றிதழ் படைப்பாளிகள் பலருக்கும் அவர் உதவி செய்திருக்கிறார்,
1998ல் போர்ஹே பற்றிய புத்தகம் ஒன்றினை பதிப்பிக்க வழியின்றி நானே வெளியிட்டிருந்தேன், விருதுநகரில் இருந்த எனது இல்லமுகவரிக்கு மணிவண்ணன் தொடர்பு கொண்டு அதை தான் வாங்கி படித்து வியந்த விபரங்களை சொல்லியதோடு தனக்கு நூறு பிரதிகள் வேண்டும் என்று உடனடியாக பணம் கொடுத்து வாங்கி அதை நண்பர்கள் பலருக்கும் பரிசாக அளித்தார், அப்போது வரை அவரை நான் நேரில் சந்தித்தவனில்லை, பின்பு சென்னைக்கு வந்து நேரில் சந்தித்த போது உங்களுக்கு எழுத இடம் வேண்டும் என்றால் என் வீட்டில் தங்கிக் கொண்டு எழுதுங்கள், ஏதாவது உதவி வேண்டும் என்றால் எப்போதும் கேட்கலாம், நாம் எல்லோரும் தோழர்கள் இல்லையா என்று உரிமையுடன் சொன்னபோது கலங்கிப்போனேன்,
என்னைப் போலவே தமிழின் முக்கிய படைப்பாளிகள் பலருக்கும் அவர் தந்த ஊக்கமும் பாராட்டுகளும் ஒரு போதும் மறக்கமுடியாதவை
ஒரு மூத்தசகோதரனைப் போல வாஞசையுடன் பழகிய அந்த அற்புத மனிதரின் இழப்பிற்கு கலங்கிய கண்களுடன் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்
***