புதிய சிறுகதை
சூயஸ் கால்வாயைத் தடுத்து நின்றிருந்த அந்தக் கப்பல் பிடிபட்ட திமிங்கலம் ஒன்றைப் போலிருந்தது

தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தபடியே திரையில் தெரியும் அந்தக் கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபால் ரத்னம்.
மணி மூன்றைக் கடந்திருந்தது. பின்னிரவில் பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எதற்காக இப்படிச் சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவருக்கே புரியவில்லை.
ஆனால் அந்தக் கப்பல் அவரைச் சில நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அதை எப்போது மீட்பார்கள். எப்போது அது மீண்டும் தனது பயணத்தைத் துவங்கும் எனக் காத்துக் கொண்டேயிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியைப் பற்றிக் கவலைப்படுவது போல அது நிஜமானதாக இருந்தது
எங்கோ ஒரு கப்பல் சிக்கிக் கொண்டது தன்னை ஏன் இப்படி அலைக்கழிக்கிறது. ஏன் சதா அதைப் பற்றியே ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தனக்கும் அந்தக் கப்பலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே. பின் ஏன் இந்தப் பதற்றம்.
காரணங்கள் தெரியாத போதும் அவர் செவ்வாய்க்கிழமை முதல் எவர்கிரீன் கப்பலால் பாதிக்கப்பட்டார். கப்பல் நடுவழியில் சிக்கிக் கொண்டதைப் போல அவரும் அந்தச் செய்தியில் சிக்கிக் கொண்டுவிட்டார். கப்பல் மீட்கப்பட்டால் தான் அவராலும் அதிலிருந்து வெளியேற முடியும்
சப்தமேயில்லாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த அறையில் மகளும் மருமகனும் பேரனும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கப்பல் விபத்து பற்றிக் கவலையில்லை.
தொலைக்காட்சி வந்தபிறகு உலகம் மிகச்சிறியதாகிவிட்டது. சேனலை மாற்றும் போது தோன்றும் வேறுவேறு தேசங்களின் மனித முகங்கள். சாலைகள். இயற்கை காட்சிகள். விளையாட்டுகள் உலகைப் பற்றிய அவரது பயத்தை விலக்கியிருந்தன.
உலகம் ஒரு ஆரஞ்சு பழம் போன்றது. அதன் ஒரு சுளையினுள் தானிருக்கிறோம். மற்ற சுளைகளில் யாரோ வசிக்கிறார்கள். உலகைப் பற்றிய பயம் விலகி எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.

சில நாட்கள் உறக்கமின்றி இரவெல்லாம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பார். வேறு வேறு பாஷைகள் காதில் விழும் ஏதாவது ஒரு நாட்டில் மக்கள் ஒன்றுகூடி ஆரவாரமாக மகிழ்ச்சியினைக் கொண்டாடுவார்கள்.. சிரிப்பும் அழுகையும் உலகெங்கும் ஒன்று போலதானிருக்கிறது. எந்த நாட்டில் மனிதர்கள் சிரித்தாலும் அது உடனே நம்மையும் உற்சாகம் கொள்ள வைத்துவிடுகிறது.
அது போலவே எங்காவது குண்டு வெடிப்பு நடந்திருக்கும். விமானத்தாக்குதல் நடக்கும். போலீஸார் தடியடி நடத்துவார்கள். மக்களின் ஆர்ப்பாட்டம் நடக்கும். அதைப் பார்க்கும் போது உலகம் பற்றி எரிந்து கொண்டிருப்பது போலத் தோன்றும்.
தன்னைப் போலச் சிறிய அறைக்குள் வாழும் மனிதர்களுக்கு எதற்கு இவ்வளவு பெரிய உலகம். இவ்வளவு பிரச்சனைகள். கடற்கரையில் கால் நனைய நிற்கும் சிறுவனை அலைகள் தன் போக்கில் இழுத்து விளையாடுவது போன்ற உணர்வினையே தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் காடுகள் தீப்பற்றி எரிவதைக் காட்டினார்கள். அந்தக் காட்சி அவரைத் தொந்தரவு செய்தது. அவ்வளவு நெருப்பை அதன்முன்பு கண்டதில்லை. அதுவும் கங்காரு குட்டிகள் நெருப்பிலிருந்து தப்பியோடும் காட்சியைக் காணும் போது கலக்கமாகவே இருந்தது.
காட்டுத்தீயின் உக்கிரமும் வான் நோக்கி எழும் கரும்புகையும் மனதை அழுத்தியது. உலகில் எங்கே எது நடந்தாலும் கேமிராவின் கண்களிலிருந்து
தப்ப முடியாது. கேமிரா தான் நம் காலத்தின் மிகப்பெரிய வேட்டைக்கருவி. துப்பாக்கியை விடவும் அச்சம் தரக்கூடியது. ஆனால் விளையாட்டாகவே பயன்படுத்துகிறார்கள்.
சூயஸ் கால்வாயினுள் சிக்கி நிற்கும் அந்தக் கப்பல் பற்றிய செய்தியை முதன்முறையாகப் பார்த்தபோது கோவத்தில் பிடிவாதமாகச் சுவரில் முகம் பதித்து நிற்கும் சிறுவனைப் போலவே தோன்றியது.
தான் அப்படித்தான் இருந்தோம். அப்பா ஏதாவது சொல்லிவிட்டால் உடனே சுவரை நோக்கித் திரும்பிக் கொண்டு யாரையும் பார்க்க மாட்டார். பேசமாட்டார். அம்மா முதுகில் அடித்து இழுத்தாலும் முகத்தை விலக்கவே மாட்டார். இந்த கப்பலும் அப்படிப் பிடிவாதமாக நிற்பது போலவே இருந்தது.
சின்ன வயதில் கால்பந்தாடும் போது சண்டையிட்ட முத்துராமனை ஒருநாள் அண்ணன் வீட்டிற்குக் கூட்டிவந்திருந்தான். அப்போது இப்படித்தான் இரண்டுகைகளால் கதவைப் பிடித்துக் கொண்டு உள்ளே விடமாட்டேன் என்று நின்றிருந்தார். பிடிவாதம் நம் உடலை மாற்றிவிடுகிறது. திருகாணிகளைக் காணும் போது அவை பிடிவாதத்தின் அடையாளம் போலவேயிருக்கிறது
முதல்நாள் செய்தியில் எவர் கிரீன் கப்பல் ஈபிள் கோபுரத்தை விடப் பெரியது என்றார்கள். படுத்திருக்கும் போது யானை பெரிதாகத் தெரிவதில்லை. அப்படித் தான் கோபுரமும் அது சாய்ந்துவிடடால் பிரம்மாண்டமாகத் தெரியாது.
அந்தக் கப்பலில் ஏற்றப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு அதை விடவும் அந்தக் கப்பல் சூயஸ் கால்வாயின் போக்குவரத்தை நிறுத்திவிட்டதைப் பற்றித் தான் அதிகக் கவலை கொண்டார்.
பள்ளி வயதிலிருந்தே கப்பலைப் பற்றி அறிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. அதுவும் புதையல் தேடிச் சென்ற கப்பல்கள். யாத்ரீகர்களின் சாகசக் கப்பல்கள். கொள்ளையர்களின் கப்பல்கள், கடலில் மூழ்கிய கப்பல்கள் என நிறையப் புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வாசித்திருக்கிறார்.

சூயஸ் கால்வாய் உருவான விதம். அதன்பிறகு உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும் கூடப் படித்திருக்கிறார்.
வாழ்நாளில் என்றாவது ஒருமுறை சூயஸ் கால்வாயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட இருந்தது. ஆனால் இந்த எழுபது வயதிற்குப் பிறகு அது சாத்தியமேயில்லை. இப்படித்தான் நிறைய ஆசைகள் மனதில் தோன்றி மனதிலே முடிந்துவிடுகின்றன. இவ்வளவு தான் வாழ்க்கை.
சூயஸ் கால்வாயினைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி படத்தைப் பார்த்திருக்கிறார். உண்மையில் இக்கால்வாய் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பெரிய சாதனை தான். மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் அந்தக் கால்வாய் 1869 இல் திறக்கப்பட்ட காட்சி அந்தப் படத்தில் இருக்கிறது. .
சூயஸ் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ். பத்தாண்டுகள் கால்வாய் வெட்டும் பணி நடந்திருக்கிறது. லெஸ்ஸிப்ஸ் புகைப்படத்தைப் பார்க்கும் போது காலேஜ் பிரின்சிபால் போன்ற முகத்தோற்றமே இருந்தது. பெரிய சாதனைகளைச் செய்யும் மனிதர்கள் தனது தோற்றத்தில் எளியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கனவு தான் அவர்களுக்கான விஸ்வரூபத்தைத் தந்துவிடுகிறது
சூயஸ் கால்வாயினுள் ஓராண்டில் ஏறக்குறைய பதினைந்தாயிரம் கப்பல்கள் கடந்து செல்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகும் என்றார்கள்.
வரிசை வரிசையாகக் கப்பல்கள் சூயஸ் கால்வாயினுள் செல்லும் போது கரையோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிலர் கையசைப்பதைக் காட்டுவார்கள். தானும் அதில் ஒருவர் போலவே கருதுவார்
கப்பல் ஏன் இத்தனை வசீகரமாகயிருக்கிறது. நிறையப் பேருக்கு விமானப் பயணம் என்றால் ஆசையாக இருக்கும். அவருக்கு விமானம் பயணத்தில் பெரிய ஈடுபாடு இல்லை. நாலைந்து முறை பயணித்திருக்கிறார். பறக்கும் உணர்வை அது தரவேயில்லை. மாறாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஆப்பிள் அசைவற்று இருப்பதைப் போலவே உணர்ந்தார். ஆனால் கப்பல்கள் அப்படியில்லை. அதில் ஏதோ ஒரு பிரம்மாண்டமும் வசீகரமும் இருக்கிறது.
இரவு நேரம் கடலில் செல்லும் கப்பலின் விளக்குகள் ஓராயிரம் கண்கள் கொண்ட விசித்திர விலங்கினைப் போலவே தோற்றம் தருகின்றன.
ஒரு முறை கப்பல் பயணம் பற்றிய ஒரு திரைப்படத்தில் ஒரு சுண்டெலி கப்பலில் பயணம் செய்வதைக் காட்டினார்கள். அந்த எலி யாரும் இல்லாத நேரம் வெளியே வந்து படியில் ஏறி மேற்தளத்திற்குப் போகும். அங்குமிங்கும் ஒடியலைந்துவிட்டு பின்பு மீண்டும் சமையல் கூடத்திற்குள் போய் ஒளிந்து கொள்ளும். ஒரு எலி கடலில் பயணம் செய்கிறது என்பதே அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அந்த எலிக்குத் தான் கடலில் செல்கிறோம் என்ற உணர்வே இருக்காது. அது ஒரு வீட்டில் இருப்பது போலத் தான் உணர்ந்திருக்கும். அந்தச் சிற்றெலியை போலத் தானும் ஒரு கப்பலில் ஓடியாடி மகிழ ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அதை எவரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை

வணிகக் கப்பல்களின் பிரம்மாண்டத்தைக் காணும் போது அது பேராசையின் வடிவம் என்றே தோன்றும். சில லாரிகளில் இப்படித்தான் ஊதி பெருக்க வைக்கோல் ஏற்றிக் கொண்டு போவார்கள். அந்த லாரி ஒரு பக்கம் சாய்ந்து கொண்டே செல்லும். பெரிய வணிகக் கப்பல்களில் நூற்றுக்கணக்கான கார்கள் ஏற்றப்பட்டுச் செல்கின்றன. பெரிய பெரிய இயந்திரங்கள். இரும்பு பாளங்கள். தானியங்கள். எனப் பல்லாயிரம் பொருட்கள் ஏற்றப்படுகின்றன.
கடலில் தெரியும் கப்பலும் கரையில் காணும் கப்பலும் ஒன்றில்லை. உண்மையில் வணிகக் கப்பல் என்பது ராட்சச திமிங்கலம். எவர் கிரின் கப்பலும் அப்படியானது தான்.
கப்பல் எப்படிச் சூயஸ் கால்வாயினுள் மாட்டிக் கொண்டது. அதை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பதை உலகின் எல்லாத் தொலைக்காட்சிகளும் காட்டிக் கொண்டிருந்தன. அரபு சேனல் ஒன்றில் காட்டப்பட்டது போன்ற காட்சிகளை இந்திய சேனல்கள் எதுவும் காட்டவில்லை. எந்தச் சேனலும் கப்பலுக்குள் இருந்தவர்களைக் காட்டவில்லை. அந்தக் கப்பலில் இருபத்தைந்து இந்தியர்கள் இருப்பதாகச் செய்தியில் சொன்னார்கள். யார் அவர்கள். எந்த ஊரைச் சார்ந்தவர். அவர்களின் குடும்பம் இந்நேரம் எப்படியிருக்கும். வீட்டோர் கப்பலின் மீட்சிக்காகப் பிரார்த்தனை செய்வார்களா. ஏன் அவர்கள் திரையில் தோன்றி பேசவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
இயந்திரங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டினை எப்போது இழக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. சாதாரண மிக்சி ஒரு நாள் திடீரெனத் தீப்பற்றி எரிந்துவிட்டது. எப்படி என அவரால் அறியமுடியவில்லை. இவ்வளவு பெரிய கப்பலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது எளிதானதில்லை. ஆனால் தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்டது. மனித தவறுகளை அது செய்வதில்லை. ஆனால் இயந்திரமும் தவறு செய்யவே நேரிடும்.
அந்தக் கப்பலின் உரிமையாளர் ஒரு ஜப்பானியர் என்றார்கள். ஜப்பானியர்கள் என்றாலே கறுப்புக் கோட் போட்ட குள்ளமான உருவம் தான் மனதில் தோன்றுகிறது. சட்டை அணியாத ஒரு ஜப்பானியரை கூட அவர் கண்டதில்லை.
கப்பலின் உரிமையாளர் ஷோயேய் தங்களால் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக ஒரு செய்தி வெளியானது. அது ஜப்பானியர்களின் இயல்பு. அவர்கள் தண்ணீரைப் போல மன்னிப்பை எளிதாகப் பயன்படுத்துகிறார்கள். நாம் மன்னிப்பு கேட்பதை மிகப்பெரிய காரியமாக நினைக்கிறோம்.
கப்பலை இயக்கும் தைவான் நிறுவனம் எவர்கிரீனை மீட்பதற்கான முயற்சிகளை விவரித்துக் கொண்டிருந்தார்கள்.
உடனடியாக மீட்க முடியாது என்பதை வல்லுநர்கள் உறுதியாகத் தெரிவித்தார்கள்.
சிறுவயதில் ஒருமுறை அவர் பொருட்காட்சியில் ஒரு நீராவிக் படகினை வாங்கி வந்தார். அதில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்துத் துணிகள் ஊற வைக்கும் பிளாஸ்டிக் டப்பில் தண்ணீரை நிரப்பி ஒட விட்டார். அந்தப் படகு புகையைக் கக்கிக் கொண்டு ஒடி டப்பின் வளைவில் திரும்பாமல் பறந்து வெளியே வந்து விழுந்துவிட்டது. சிறிய பொம்மைப் படகினைச் செலுத்துவதே எளிதாகயில்லை. எவர் கிரீன் எவ்வளவு பெரிய கப்பல்.
கப்பலை மீட்பதற்கான வழிகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மனிதர்களால் தீர்க்கப்படமுடியாத பிரச்சனைகளே இல்லை. நெருக்கடி தான் மனிதனை மேம்படுத்துகிறது. புதிய வழிகளை உண்டாக்குகிறது. விண்வெளியில் உள்ள ராக்கெட்டின் பிரச்சனையே பூமியிலிருந்தபடியே சரிசெய்துவிடுகிறார்களே. இந்தக் கப்பலை மீட்காமலா போய்விடுவார்கள்.
எப்படிக் கப்பலை மீட்கப்போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளப் பகலிரவாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றிரண்டு நிமிஷங்களுக்கு மேலே இதைப்பற்றிய செய்தியில்லை. ஆனால் சர்வதேச ஆங்கிலச் செய்திகளில் கப்பலை மீட்கும் பணிகள் விரிவாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.
கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டிருந்த போதும் கப்பலின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கப்பலில் வேலை செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள். எல்லாப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் அவர்களுக்குப் பசிக்கும். சாப்பாடு தேவைப்படும். உறங்குவார்கள். போர்வீரனும் கூடச் சாப்பாட்டினை எடுத்துக் கொண்டுதானே போகிறான். கப்பலின் சமையற்காரனுக்கு நிச்சயம் ஓய்விருக்காது. அவனுக்குக் கப்பல் கால்வாயினுள் மாட்டிக் கொண்டது விஷயமேயில்லை. பதற்றமான நேரங்களில் மனிதர்களின் பசி அதிகமாகிவிடுகிறது. அந்தக் கப்பலிலிருந்தவர்களில் சிலர் நிச்சயம் அதிகம் சாப்பிட்டிருப்பார்கள். அப்படித் தானே நடந்து கொள்ள முடியும்.
எவர்கிரீன் கப்பலின் உரிமையாளர் ஷோயேய் கிசேன் இந்த நேரம் உறங்கிக் கொண்டிருப்பார். ஜப்பானியர்கள் அப்படித் தான். அவர்கள் புற உலகின் பிரச்சனையைத் தனதாக்கிக் கொள்ள மாட்டார்கள். அவர் வேலை செய்த தொழிற்சாலைக்கு வருகை தந்த ஜப்பானியர்கள் கூட இப்படித் தானே நடந்து கொண்டார்கள்.
மீட்புக்குழுவினர் வியாழக்கிழமை தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தனர். கால்வாயிலிருந்து கப்பலை திசைமாற்றம் செய்யப் புதிய வழிகளைத் திட்டமிடுகிறார்கள் என்று செய்தி சொன்னது. எவர்கிரீன் சிக்கிக் கொண்டதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணம் செய்ய இயலாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சாலையில் நடக்கும் போராட்டத்தால் தான் ஒருமுறை இரண்டுமணி நேரம் ரோட்டில் பைக்கில் நின்ற நாள் அவரது நினைவில் வந்து போனது. பெரிய அனுபவங்களின் வழியே சிறிய அனுபவங்கள் மீட்கப்படுகின்றன.
சூயஸ் கால்வாய் முடக்கபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. உலக வர்த்தகம் சரிந்து கொண்டிருக்கிறது. பங்கு சந்தை தடுமாறுவதாகச் சொன்னார்கள். வணிகக் கப்பல் என்பதால் தான் உலகம் இவ்வளவு கவலைப்படுகிறது. பயணிகள் கப்பல் என்றால் நடந்திருப்பது வேறு.
அவர்கள் சொல்லும் கோடிகளை அவரால் எழுதி கூடப் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ போலவே அந்தக் கப்பலின் பாதிப்பும் நீண்டு கொண்டே போனது.
இவ்வளவு பெரிய பாதிப்பினை ஏற்படுத்திய செய்தியைப் பற்றிச் சேனலில் விவாதிக்கும் ஒருவர் முகத்தில் கூடச் சிறு துயரமில்லை. அவர்கள் ஆபரேஷன் செய்யும் மருத்துவர் நோயாளியினைப் பற்றிப் பேசுவது போல இயல்பாக, எளிதாக, இவ்வளவு தான் விஷயம் என்பது போலப் பேசினார்கள். அதிலும் ஒரு பெண் மாலுமி புதிது புதிதாக யோசனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். அவள் ஒரு வணிகக் கப்பலைச் செலுத்துகிறாள்.

கப்பல் என்றாலே ஆண்களின் உலகம் என்று மனதில் இருந்த எண்ணம் அவளைப் பார்த்த மாத்திரம் மாறத்துவங்கியது. வருஷத்தில் எட்டுமாதங்கள் அவள் கடலில் வாழுகிறாள். இளம்பெண். தோளில் தலைமயிர் புரளுகிறது. கண்களில் அத்தனை உற்சாகம். தன் மகளின் வயது தானிருக்கும். ஆனால் தன் மகளுக்கு நீந்தக் கூடக் தெரியாது, கடற்கரையில் நிற்பதற்கே பயப்படுவாள். தன்னால் மகளைத் தைரியமாக வளர்க்க முடியவில்லை
இந்தப் பயம் குழப்பம் எல்லாம் அவரிடமிருந்து தானே அவளுக்கு வந்திருக்கும். மனதில் பல்வேறு வயதின் கவலைகள். பயங்கள் தரை தட்டி நிற்கின்றன. அவற்றை எளிதில் அகற்றிவிட முடியாது
எவர்கிரீன் கப்பலின் மீட்பு பணிகளை பார்வையிட ஒரு ஹெலிகாப்டர் வானில் சுற்றிக் கொண்டிருந்தது. பிரம்மாண்டமான ஒரு சிலை ஹெலிகாப்டரில் வைத்துத் தூக்கிக் கொண்டு பறப்பதை முன்பு டிவியில் பார்த்திருக்கிறார். கப்பலை அப்படித் தூக்கிக் கொண்டு பறந்துவிட முடியாதே. தரை தட்டி நிற்கும் கப்பலைப் பறவைகள் காண்பது போலதான் இதுவும். பறவைகளும் மரக்கிளையும் கப்பலும் ஒன்று தான். பிரம்மாண்டத்தைக் கண்டு பறவைகள் வியப்பதில்லை. ஒதுங்குவதில்லை.
கப்பலை மீட்கும் வழிகள் மாறிக் கொண்டேயிருந்தன. இந்தக் கவலையால் தானோ என்னவோ வழக்கமாகச் சூடாகச் சாப்பிடும் காபியை ஆறவைத்துக் குடித்தார். இரவில் சாப்பிட எடுத்து வைத்த வாழைப்பழத்தை தொடவேயில்லை. மகளும் மருமகனும் வேலைக்குப் போன பிறகு சப்தமாகச் செய்தியைக் கேட்டார். ஒரு காகிதத்தில் அந்தக் கப்பலைப் படம் வரைந்து கூடப் பார்த்தார். மகளின் கம்ப்யூட்டரில் அந்தக் கப்பல் பற்றிய தகவல்களை வாசித்தார். கனவிலும் இந்தக் காட்சிகள் வந்து போயின.
நான்காம் நாள் இதிலிருந்து விடுபடுவதற்காக மகளும் மருமகனும் வேலைக்குப் போன பிறகு வீட்டைப் பூட்டிக் கொண்டு மார்க்கெட் வரை நடந்து போய் வந்தார். அந்த நகரில் அவருக்குத் தெரிந்த மனிதர்களே இல்லை. யாரிடமாவது இதைப் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. பெங்களூரில் அவருக்கு ஒருவர் கூட நண்பர் கிடையாது. சென்னையில் இருந்திருந்தால் வாக்கிங் போகிற நண்பர்களிடம் இதைப்பற்றிப் பேசலாம்.
ஆனால் மகள் வீட்டிற்கு வந்தபிறகு தனது பழைய நண்பர்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை. அவர்களும் தன்னை நினைக்கவேயில்லை. யாரிடமிருந்தாவது போன் வரும் எனச் சில நாட்கள் நினைப்பதுண்டு. இந்த இரண்டு ஆண்டுகளில் ஒருவர் கூடப் போன் பேசவில்லை. இத்தனை ஆண்டுகள் ஒன்றாகப் பழகியிருக்கிறோம். தன்னைப் பற்றி ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை. ஒருவேளை தானும் இப்படித் தரை தட்டி நிற்கும் கப்பல் தானோ.
பழங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும் டிவியைப் போட்டார்.
கப்பலின் நின்ற கோலம் மாறவேயில்லை.. கரையிலிருந்த மணலை இயந்திரம் மூலம் அகற்றிக் கொண்டிருந்தார்கள் இன்னொரு சேனலில் போர் கப்பலை இயக்கிய இரண்டு மாலுமிகள் ஏதோ ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிரிட்ஜிலிருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தபடியே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.
திடீரென அந்தக் கப்பலுக்கு என்ன வயது என்ற சந்தேகம் மனதில் தோன்றியது. மூன்று வருஷங்களே ஆனதாகக் கூகிள் சொன்னது. பொதுவாக இருபது வருஷம் தான் கப்பல் பயன்படுகிறது. அப்படியானால் பத்து வயது பையனைப் போன்றது தான் எவர்கிரீன் கப்பல் தான் நினைத்தது சரி தான் அவன் ஒரு விளையாட்டு பையனே தான்.
வேறு சேனலை மாற்றி எவர்கிரீன் மீட்பது பற்றி ஏதாவது புதிய செய்தி வந்திருக்கிறதா என்று தேடினார். அதே காட்சிகள். அதே மீட்பு முயற்சிகள். ஒரு சேனலில் கரை தட்டி நின்ற கப்பலை ஒட்டிய கரையில் ஒரு நண்டு ஒடிக் கொண்டிருந்தது. நண்டினை கேமிரா பின்தொடர்ந்தது. அது வேகமாக ஒடி வளையினுள் மறைந்துவிட்டது
அந்தக் காட்சி அவருக்குப் பிடித்திருந்தது. எத்தனை நாட்களுக்குத் தான் அதே கப்பலைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். நண்டினை படம் பிடித்த அந்தக் கேமிராமேனை மனதிற்குள் பாராட்டிக் கொண்டார்.
ஆறு நாட்களுக்குப் பிறகு எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதாகச் செய்தி ஒளிபரப்பானது. அந்தக் கப்பல் திரும்பும் காட்சியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். கப்பல் அசைந்து திரும்புவதைக் காணும் போது கண்ணில் நீர் கசிந்தது. அவரை அறியாமல் கைதட்டினார். அவசரமாக எழுந்து போய் மூத்திரம் பெய்து வந்தார். அப்போது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தார்.
பேரன் பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் அவனுக்காக ஒரு வெள்ளைப் பேப்பரை மடித்து அழகான காகிதக் கப்பல் ஒன்றைச் செய்து டைனிங் டேபிள் மீது வைத்திருந்தார்.
மாலையில் பள்ளிவிட்டு வந்த பேரன் அகில் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. நேராகப் பிரிட்ஜிற்குப் போய்ச் சாக்லெட் எடுத்துச் சாப்பிட்டான்.

காகிதக் கப்பலை கையில் எடுத்துக் கொண்டு போய் அவனிடம் நீட்டினார்
“பேப்பர் போட் எனக்குப் பிடிக்காது“ என்றான்
“இதை தண்ணியில விட்டா மிதக்கும்“ என்றார் கோபால் ரத்னம்
“பிளாஸ்டிக் பக்கெட்ல மிதக்க விடலாமா“ என்று கேட்டான் அகில்
தலையாட்டினார். அவன் பாத்ரூமில் இருந்த சிவப்பு வாளி நிறையத் தண்ணீரைப் பிடித்து அதில் காகிதக்கப்பலை மிதக்க விட்டான். கப்பல் நகரவேயில்லை
கோபத்தில் அதைக் கையால் அழுத்தி ஒட வைக்க முயன்றான். காகிதக்கப்பல் தண்ணீருக்குள் மூழ்கிப் போனது.
“இதை எடுத்து ஒட வை“ என்று தாத்தாவை நோக்கி கத்தினான்
“நனைஞ்சிட்டா அது ஒடாது“ என்றார்
“நீ ஒரு ஸ்டுபிட் தாத்தா“ என்றபடியே அவன் கோபத்துடன் ஹாலை நோக்கி நடந்தான்.
அவர் மௌனமாகப் பேரனை பார்த்துக் கொண்டிருந்தார்
தொலைகாட்சியில். எவர் கிரீன்கப்பல் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டு நஷ்ட ஈடு வசூலிக்கபடும். அந்தக் கப்பலில் பணியாற்றியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அடுத்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. இது எளிதில் முடியாது. கப்பல் நிறுவனம் இனி இந்த வழக்கை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்
தொலைக்காட்சியை அணைத்துவிட்டுச் செய்தியில் காட்டப்பட்ட நண்டு தனது வளைக்குள் ஒடி ஒளிந்து கொள்வது போல அவர் தனது அறைக்குள் போய்த் தாழிட்டுக் கொண்டார்.
அந்த ஆறு நாட்களில் அவருக்கு அதிக வயதாகிவிட்டது போல ஏனோ தோன்றியது
••
.