இரண்டு முடிவுகள்

பாவ்லோ ஸோரன்டினோ இத்தாலிய சமகால இயக்குநர்களில் முக்கியமானவர். இவரது சமீபத்திய திரைப்படம் லா கிராசியா, 2025ல் வெளியானது.

இத்தாலியின் ஜனாதிபதியான மரியானோ டி சாண்டிஸ் தனது பதவிக்காலம் முடியும் தருவாயில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கிறார். ஒன்று கருணைக்கொலை தொடர்பான சட்டம். அதில் கையெழுத்து இடுவதன் வழியாகத் திருச்சபை மற்றும் எதிர்க்கட்சிகள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்துத் தயங்குகிறார். ஆகவே அதனை நீண்டகாலமாகவே கையெழுத்துப் போடாமல் தவிர்த்து வருகிறார்.

இரண்டு மரணதண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் விஷயத்திலும் இது போல அவரால் முடிவு எடுக்க முடியவில்லை.

மரியானோ டி சாண்டிஸ் மனைவியை இழந்தவர். அவரது மனைவி அரோரா எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்,  அந்த நினைவுகளின் அலைக்கழிப்பிலே வாழுகிறார். அவர் எந்த அளவிற்கு மனைவியைக் காதலித்தார். அன்பு காட்டினார் என்பதற்கான அடையாளமாக நினைவில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வந்து போகின்றன

சாண்டிஸ் நீதிபதியாக இருந்தவர். சட்ட நூல்களை எழுதியவர். அரசினை திறம்பட வழிநடத்துகிறார் என அவரை மக்கள் புகழுகிறார்கள். அவரது மகளும் சட்டம் பயின்றவள். தந்தையின் அரசுப்பணிகளுக்கு உதவியாக உடனிருக்கிறாள். மகன் ஒரு இசைக்கலைஞன். தனக்கு விருப்பமான இசைப்பாடல் துறையில் பணியாற்றுகிறான். தந்தையின் நிழல் அவன் மீது படவில்லை.

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதும் மரியானோ டி சாண்டிஸ் மிகவும் தனிமையாக உணருகிறார். பிள்ளைகளுடன் அவருக்கு நெருக்கமில்லை. தனது மனைவி தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக நம்புகிறார். அவரது பொதுவாழ்க்கையும் தனிவாழ்க்கையும் இருதுருவங்களாக இருக்கின்றன.

கருணைக்கொலை தொடர்பான சட்டவரைவை அவரது மகள் டோரோடியா தயாரிக்கிறாள். அதில் தந்தையைக் கையெழுத்து போடும்படி மன்றாடுகிறாள். அவரோ யோசிக்க நேரம் தேவை என மறுக்கிறார். அவரது முகத்திற்கு எதிராகவே நீங்கள் தைரியமற்றவர் எனக் குற்றம் சாட்டுகிறாள். அடுத்த ஜனாதிபதி வந்தால் தைரியமாகக் கையெழுத்து போடுவார் என்று விமர்சனம் செய்கிறாள். இந்த நெருக்கடி மரியானோ டி சாண்டிஸின் மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. அவர் தனது இரக்கத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே ஊசலாடுகிறார்.

மரணதண்டனையை எதிர்நோக்கி இருக்கும் இரண்டு கைதிகளின் வாழ்க்கை குறித்து முடிவு எடுக்க வேண்டிய காலக்கெடு உருவாகிறது. அதில் ஒருவரை விடுதலை செய்யும்படி ஊரே வேண்டுகிறது. அவரது மாணவர்கள் நல்லாசிரியர் என்பதால் அவரை மன்னித்து மரணதண்டனையை ரத்து செய்யும்படி வேண்டுகிறார்கள். இது போல மரணதண்டனைக்குக் காத்திருக்கும் பெண்ணிற்காக அவளது காதலன் சிறைவாசலில் அன்றாடம் காத்திருப்பதை மரியானோ டி சாண்டிஸின் மகள் நேரடியாகக் காணுகிறாள். இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமா என முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்

இந்த நிலையில் விண்வெளிக்கு அனுப்பி வைக்கபட்ட விண்வெளிப்பயணி ஒருவர் திரையின் வழியே அதிபருடன் உரையாடுகிறார். தனிமை. கையறு நிலையான வாழ்வு. என்ன செய்வது எனத் தெரியாத மனத்துயரம் இவற்றுக்கு நடுவே அந்த விண்வெளிப்பயணி கண்ணீர் சிந்துகிறார். அந்தக் கண்ணீர் வைரம் போல மிதந்து உருளுகிறது. அந்தக் காட்சி அதிபரை நெகிழச் செய்கிறது. தன்னையும் அப்படியான கைவிடப்பட்ட பயணியைப் போலவே உணருகிறார். புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் கனவு வருமா என யோசிக்கிறார்.

தனது அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் காட்சியில் தனது பணியாளர்களுக்குப் பரிசளித்து நன்றியுணர்வோடு சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவரது பாதுகாவலர்கள் அவரை நடத்தும் விதம் அற்புதம். படத்தின் மிகச்சிறப்பான காட்சியது.

அதிபராக இருந்தாலும் அவர் விரும்பியது போன்ற வாழ்க்கை கிடைக்கவில்லை. ஆரோக்கியம் கருதி ஆசைப்பட்ட உணவினை சாப்பிட முடியவில்லை. உதவியாளர்கள் தடுக்கிறார்கள். விரும்பிய இடத்திற்குத் தனியே பயணம் செய்ய முடியவில்லை. தனது பதவிக்காலம் முடிந்தபின்பு அவர் வீடு வரை தனியே நடந்து செல்லும் காட்சி சிறப்பானது.

தனியே அவர் சிகரெட் புகைக்கும் காட்சியும் அப்போது வெளிப்படும் அவரது முகபாவங்களும் அவரது இயலாமையின் வெளிப்பாடுகள். மரணதண்டனைக் கைதியை காணுவதற்காக செல்லும் போது சிறைச்சாலையில் பொதுமக்களுடன் அமர்ந்து அதிபரும் காத்திருக்கிறார். கைதியுடன் அவர் உரையாடும் போது தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவதில்லை. உறைந்து போனவராகவே நடந்து கொள்கிறார். கருணை என்பதை அவரால் முழுமையான வரையறை செய்ய முடியவில்லை. எதனாலும் ஒரு கொலையை நியாயப்படுத்திவிட முடியாது என்றே அப்போது உணருகிறார். அந்த எண்ணம் ஏன் மாறியது என்பதை கடைசியில் விளக்குகிறார்.

அதிபராக டோனி செர்வில்லோ சிறப்பாக நடித்திருக்கிறார். பாவ்லோ ஸோரன்டினோ கவித்துவமாகக் காட்சிகளை உருவாக்க கூடியவர். இப்படத்தில் மழையின் ஊடாக அதிபர் விருந்தினரை வரவேற்க காத்திருக்கும் காட்சி. இசைஅரங்கில் அதிபர் கலந்து கொள்ளும் போது மக்கள் உற்சாக வரவேற்பு தருவது . இரவு உணவுக்காட்சியில் அதிபர் உணர்ச்சி பொங்கப் பாடுவது என மிகுந்த கவித்துவமான காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்.

தனது பதவிக்காலம் முடியப் போகிறது என்பதால் அதிபரால் எதையும் செய்ய முடியவில்லை. புதிதாகச் சட்டம் இயற்ற நேரமோ அல்லது ஆதரவோ இல்லை. இதனால் அவர் மிகுந்த மனச்சோர்வு கொள்கிறார். போப்பை சந்தித்துத் தனது அகப்பிரச்சனைகள் குறித்து உரையாடுகிறார். ஆறுதல்மொழிகளைக் கேட்கிறார். போப் அளிக்கும் பதிலும் வழிகாட்டுதலும் சிறப்பானவை.

அதிபரின் மகனும் மகளும் விடுமுறை பயணம் செல்கிறார்கள். அங்கிருந்து தந்தையைப் போனில் அழைத்துப் பேசுகிறார்கள். அந்தக் காட்சியில் அவர் அதிபரில்லை. பிள்ளைகளைப் புரிந்து கொள்ளாத தந்தை மட்டுமே.

இது போல ஆடைவிளம்பர பத்திரிக்கையின் ஆசிரியருடன் தொலைபேசியில் அவர் உரையாடும் போது தனது நினைவுகளுக்குள் நீந்துகிறார். அழகான காட்சியது

லா கிராசியாவின் திரைக்கதை நான்கு இழைகளால் உருவாக்கபட்டிருக்கிறது. ஒன்ற அதிபரின் பதவி முடியப்போகும் நாட்களையும் அடுத்து அதிபராகப் போகிறவரையும் பற்றியது. இரண்டாவது மனைவியை இழந்த மனிதனின் இடைவிடாத நினைவேக்கங்கள். மூன்றாவது தந்தைக்கும் மகளுக்குமான உறவு. நான்காவது முடிவு எடுக்க முடியாத பிரச்சனைகள். அதற்கான காரணங்களைக் கொண்டது.

இந்த இழைகளை ஸோரண்டினோ பின்னியுள்ள விதம் மிகுந்த பாராட்டிற்குரியது. தேர்ந்த இசையும் அபாரமான ஒளிப்பதிவும் பொருத்தமான கதாபாத்திரத் தேர்வும் படத்தினைச் சிறந்த கலைப்படைப்பாக்குகின்றன.

ஒரு காட்சியில் மரியானோ டி சாண்டிஸ் தான் உண்மையை மிக நெருக்கமாகக் காண்பதாகச் சொல்லுகிறார். அது தான் அவரது தனித்துவம். உண்மையின் குரலை ஒலிப்பதையே தனது வாழ்நாள் சேவையாகக் கொண்டவருக்குக் கடைசியில் உண்மையை நாம் முற்றிலும் அறிந்து கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. வெளியே தெரியும் உண்மையின் அடியில் தெளிவற்ற, தெரியாத நிகழ்வுகள் புதைந்திருப்பதை அவர் உணருகிறார்.

முடிவு எடுக்கத் தயங்கிய மரியானோ டி சாண்டிஸ் இரண்டு முடிவுகளை எப்படி எடுக்கிறார் என்பதைப் படம் அழகாக விளக்குகிறது. திரைப்படத்தின் வழியே ஆழ்ந்த தத்துவத் தேடலையும் அதிகாரத்தின் வரம்புகளையும், தனி நபரின் உளவியல் கொந்தளிப்புகளையும் ஸோரண்டினோ கையாண்டுள்ள விதமே அவரை உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடச் செய்கிறது.

0Shares
0