உன்னத மனிதர்.

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றின் வாசலில் ஒரு நாய் சோர்ந்து படுத்துகிடந்தது. நோய்மையுற்ற நாய்களின் முகத்தில் விவரிக்கமுடியாத ஒரு பதற்றம் இருப்பதை கண்டிருக்கிறீர்களா. அது சொல்லற்ற வலி. அந்த நாய் காலை வெயிலை கூட அதிகபட்சமான ஒன்றாக நினைத்தது போல அதை விட்டு விலகி ஒரமாக படுத்து கிடந்தது. அருகில் போய் உட்கார்ந்து அதையே பார்த்து கொண்டிருந்தேன்.



நாயின் உடல் சீரற்று நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் காதுகள் மடங்கியிருந்தன. கண்கள் பழுத்து போய் ஒடுங்கியிருந்தது. தெருநாயாக இருக்க கூடும். தெருநாய்கள் நோய்வாய்படுவதை போல துரதிருஷ்டம் உலகில் இல்லை. அவை உடனடியாக வெறுக்கபடுகின்றன. நோய்மையின் போதும் துரத்தப்படுகின்றன. நாயின் நெற்றியை தடவிவிட்டபடியே இருந்தேன். உஷ்ணமான அதன் மூச்சு கைகளில் படிந்தது. உயிரியக்கம் என்பதை மனது அரிதாக தருணங்களில் மட்டுமே உணர்கிறது. அந்த நாயின் உடலில் இருந்து வரும் அதிர்வு என்னையும் பற்றிக் கொண்டது.


நாய் தன் உடலை லேசாக அசைத்து கொண்டது.அப்போது  என் அருகில் வந்து நின்றபடியே ஒரு ஆள் அந்த நாயை பார்த்து என்னடா படுத்துகிடக்குறே. என்ன பண்றது என்று கேட்டார். யாரோ தெரிந்த மனிதனை நடத்துவது போல பேசுகிறாரே என்று நிமர்ந்த போது அவர் புன்னகையுடன் இவனை எனக்கு நல்லா தெரியும். பேரு டுமா. இவன் மட்டுமில்லை. இந்த தெருவில இருக்கிற எல்லா நாய்களையும் தெரியும்.



நான் எங்கே போனாலும் கூடவே வந்துருவாங்க என்றபடியே நோயுற்ற நாய்க்காக அருகாமை டீக்கடையில் சென்று பன் வாங்கி வந்து அருகில் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து போட்டபடியே அதை குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சிக் கொண்டிருந்தார். அந்த மனிதருக்கு ஐம்பது வயதை ஒட்டிய தோற்றம். அடர்ந்த தாடி. ப்ரகாசமான கண்கள். முறுக்கேறிய வில் போன்ற உடல்வாகு. வேஷ்டி சட்டை அணிந்திருந்தார்.


தெருவின் வலதுகோடியிலிருந்து இன்னொரு நாய் வந்து கொண்டிருந்தது. அதை கவனித்தபடியே என்னிடம் சொன்னார். அவன் நடையை பாருங்க. பாலே டான்ஸ் மாதிரி என்ன ஒரு அழகு. கொஞ்சம் திமிர். கொஞ்சம் அலட்சியம். கால் நுனியில் மட்டும் நடந்தா போதும்னு நினைக்கிற எகத்தாளம். இவன் டிசம்பர் 2003ல் பிறந்தவன். இவன் பிறந்த அன்னைக்கு பார்த்திருக்கிறேன். அந்த குப்பை தொட்டிகிட்டே தான் கிடந்தான். என் கையாலே தான் தூக்கி எடுத்துவிட்டேன் என்றபடியே அந்த நாயை பார்த்து உற்சாகமாக கையை அசைத்தார்.


அவர் சொன்னபடியே ஒய்யாரமாக வந்த அந்த தெருநாய் அவரை பார்த்த மாத்திரம் ஆசையோடு அருகில் வந்து நின்று வாலாட்டியது. எங்கடா அந்த கருப்பன். குதிரை. குள்ளன் எல்லாம் என்று கேட்டார். அவைகளும் தெருநாய் போலும். ஒரு சிறுவனை அள்ளி தூக்குவதுபோல அந்ததெருநாயை தூக்கி கொஞ்சி இறக்கிவிட்டு போய் அவங்களையும் கூட்டிகிட்டு வா என்று சொன்னார். நானும் அவரும் பழைய புத்தக கடையினுள் சென்றோம். அவர் நிறைய படிக்க கூடியவர் என்பது புத்தகங்களின் தலைப்பை பார்த்த மாத்திரத்தில் சொன்ன அபிப்ராயங்களில் இருந்துதெரிந்தது.


அடுத்த ஐந்தாவது நிமிசத்தில் இன்னும் இரண்டு மூன்று தெருநாய்கள் வந்திருந்தன. அவர் சிரித்தபடியே கூட்டிட்டு வந்துட்டான் பாத்தீங்களா. நான் சொன்னா இவங்களுக்கு புரியும். இந்த ஏரியாவில் இருக்கிற எல்லா தெருநாயும் என் ப்ரண்ட்ஸ். நிறைய குட்டியில் இருந்து கவனிச்சிகிட்டு வர்றேன். அதுகளுக்கு என்மேல ஒரு ப்ரியம். ஏன்னா நானே ஒரு தெரு நாய். இதுகள் போல தான் நானும் அலைந்துகிட்டே இருக்கேன். என்றபடியே நாய்களை அருகாமை கடைக்கு அழைத்து போய் ஏதோ வாங்கி கொடுத்து கொண்டிருந்தார்.


பழைய புத்தக கடைக்காரர் நான் கேட்காமலே சொன்னார். இவரு நாய்பூனை எல்லாத்தோடையும் பேசுவார். அதுகளும் இவர் சொன்ன கேட்குது சார். இவரை பார்த்து ஒரு நாய் குலைஞ்சி நான் பார்த்ததேயில்லை. எந்த நாயா இருந்தாலும் இவரை பார்த்தா போதும் பெத்தபிள்ளை மாதிரி வந்து ஒட்டிகிடுது. இவர் கிட்டே என்னமோ சக்தி இருக்கு. ஆள் நிறைய படிச்சிருக்கார். எதை பத்தி கேட்டாலும் பேசுவார். நீங்களே பேசிப்பாருங்க என்றார்


தெருநாய்களை அனுப்பிவைத்துவிட்டு வந்து என்னிடம் மேற்கத்திய இசையின் வரலாறு பற்றிய புத்தகம் ஒன்றை எடுத்து நீட்டியபடியே ஆல்பிரட் ஸ்வெஷ்சர் எவ்வளவு பெரிய இசை மேதை. அவர் பாஹ் இசையில் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார் என்று சொல்ல துவங்கினார். அடுத்த நிமிசம் அதிலிருந்து மாறி இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பிய ஒரு ஹங்கேரிய பாதிரியின் உண்மைகதையை பற்றி பேச ஆரம்பித்தார். அப்படியே பேச்சு மாறி உபநிஷத் பற்றி திரும்பியது. அத்துடன் எனது தேசாந்திரியில் வரும் ஒரு கட்டுரையை படிக்கும் போது ஹெலன் ஹெல்லரின் ஒரு குறிப்பு எப்படி நினைவிற்கு வந்தது என்று மடை திறந்தாற் போல பேசிக் கொண்டேயிருந்தார். விசாலமாக படித்திருக்கிறார்.


இவ்வளவு ஆழ்ந்த படிப்பும் அறிவும் கொண்ட ஒருவர் எதற்காக தெருநாய்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார் என்ற யோசனை உருவானது. அதை அறிந்துகொண்டவர் போல சொன்னார் தெருநாய் மட்டுமில்லை, பூனை. ஆடு மாடு எல்லாத்தோடும் பேசுவேன். அதுகளும் என்னை கண்டா ஒட்டிகிடும். சொன்னா ஆச்சரியப்படுவீங்க. என்னை பார்க்க ஒரு யானை கூட வர்றது உண்டு. நான் பேசுறது அந்த யானைக்கு புரியும். ஜீவராசிகள் ஒரு மனிதனை நெருங்கிவரணும்னா அவன் பொய் பித்தாலட்டம் பண்ணாதவனா இருக்கணும். மனதில கள்ளம் இருக்க கூடாது. என் மனசில கள்ளம் இல்லை. நான் பொய் சொன்னது கிடையாது. ஏமாத்திற புத்தி இருந்தா நாய் கண்டுபிடிச்சிரும் என்றார். வியப்பாக இருந்தது. என்னோடு வருகிறீர்களா என்று கூடவே அழைத்து கொண்டு போனார்.


அவர்கள் சொன்னது உண்மை. தெருநாய்கள் எதுவும் அவரை பார்த்து குரைக்கவேயில்லை. வழி முழுவதும் வேடிக்கையான பேச்சு. அதன் ஊடே ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்தும் பாங்கு. பேக்பைப்பரின் இசை கேட்டு எலிகள் மயங்கி வந்ததாக கதையில் படித்தது நிஜம் என்று கண்முன்னே தெரிந்தது.


தெருவோரம் ஒரு ஆடும் குட்டிகளும் படுத்து கிடந்தன. அவர் அந்த ஆட்டிடம் போய் ஏதோ பேசினார். பிறகு இருங்கள் என்று சொல்லிவிட்டு ஆட்டுகுட்டிகளையும் ஆட்டையும் கடைக்கு அழைத்து போய் வாழைபழங்கள் வாங்கி தந்தார். ஆடு அதை சாப்பிட்டுவிட்டு பின்னாடியே வந்தது. நீ போய் படுத்துக் கோ என்று அதற்கு ஆலோசனை வழங்கிவிட்டு என்னை அருகில் உள்ள அவரது இருப்பிடத்திற்கு அழைத்துபோனார். சேரிப்பகுதி போன்ற குடியிருப்புகளின் நடுவில் இருந்தே பழைய அபார்ட்மெண்ட்.


சிங்கள் பெட்ரூம் அபார்ட்மெண்ட். உள்ளே நிறைய பூனைகள். பூனைகள் சாப்பிடுவதற்காக வாங்கி வைக்கபட்டிருந்த ரொட்டி துண்டுகள். பால்ஊற்றுவதற்காக தட்டுகள்.  இருபது முப்பது பூனைகள் இருப்பதாக சொன்னார். வீடு முழுவதும் புத்தகங்கள் குவிந்து இருந்தன. எப்படியும் மூவாயிரம் புத்தங்களுக்கு மேலாக இருக்க கூடும். அத்தனையும் அரிய புத்தகங்கள். தத்துவம் விஞ்ஞானம் இலக்கியம் வானவியல், சினிமா என்று பல்வேறு துறை சார்ந்த சிறந்த அறிவு சேமிப்பு அது. படுக்க இடமில்லாதபடி புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.


இறந்து போன தன் அம்மாவின் புடவை ஒன்றை பாதூகாப்பாக வைத்திருக்கிறார். அது ஒன்று தான் தனது ஒரே அரிய பொக்கிஷம்  என்றபடியே புத்தகம் படிப்பது, உயிரினங்களுக்கு உணவிடுவது, தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வது தான்  தன்னுடைய வாழ்க்கை என்றபடியே தன்னிடம் உள்ள அரிய புத்தங்கங்களை எடுத்து காட்ட துவங்கினார். அவரிடமிருந்த சில புத்தங்கங்களை பல வருசமாக தேடியிருக்கிறேன். அவர் அதை என் கையில் தந்ததோடு அதை தான் படித்து புரிந்துகொண்டதை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.


நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது நாலைந்து பூனைகள் உள்ளே நுழைந்து அவர் அருகில் நின்றன. அதில் ஒன்றை தூக்கி கொஞ்சினார். பிறகு என்னை அடுத்த அறைக்கு அழைத்து போனார். புறாக்கள்,காகம், குருவிகளுக்கு போடுவதற்கான உணவு. பூனை சாப்பிடுவதற்காக தனியே அடுக்கி வைக்கபட்ட ரொட்டி பாக்கெட்டுகள். ஆடுகளுக்கு போடப்படும் கீரைகள். இவ்வளவிற்கும் ஏது அவரிடம் பணம் என்று கேட்டேன். அவர் சிரித்தபடியே தனது சகோதரன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.அவன் தரும் பணம் முழுவதும் இப்படி தான் செலவாகிறது. தான் எந்த வேலையும் செய்யவில்லை. கையில் கிடைக்கும் காசு முழுவதையும் இப்படி செலவழித்துவிடுவேன் என்றார்.


மனிதர்களை தவிர எல்லா உயிரினங்களும் அற்புதமானவை தான். அவைகளோடு பழக துவங்கினால் மனது அதிக சந்தோஷம் கொள்கிறது. இதனால் நான் என் வீட்டை பூட்டுவதே கிடையாது. அதுஎப்போதும் திறந்தே கிடக்கிறது. யாரும் வந்து எதையும் எடுத்து போவதில்லை என்று சிரித்தபடியே எனக்கு ஒரு புத்தகத்தை பரிசாக தந்தார்.


பூனைகளுக்கு தான் ஹோட்டலில் போய் மீன்வாங்கி வந்து சாப்பிட தரவேண்டும் என்றபடியே வெளியே கிளம்ப தயார் ஆனார்.


உங்கள் பெயர் என்ன? எப்படி உங்களை தொடர்பு கொள்வது என்று கேட்டேன்.
நாய் அல்லது பூனை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.  ஏன் உங்களுக்கு என பெயர் வைக்கவில்லையா என்று மறுபடி கேட்டேன்


பெயர் தேவையில்லை என்றார். அப்பா அம்மா வைத்த பெயர் என்ன என்று கேட்டதும் அதை அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று பரிகசித்தார். உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று கேட்டதும் நான்தெருநாய் ஏதாவது ஒரு தெருவில் அலைந்து கொண்டிருப்பேன். திட்டமிட்டு சந்திக்க வேண்டும் என்று அவசியமில்லை. முடிந்தால் மறுபடி சந்திக்கலாம் என்று விடை தந்தார்.


வீதி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வாகன நெரிசல். போக்குவரத்தில் ததும்பும் மனிதர்கள். புகைபடிந்து போன மரங்கள்.  சென்னை ஒரு கோடி மக்களின் நகரம். சென்னையில் வாழ்வதற்குஒவ்வொருவருக்கும் ஒரு காரணமும் போராட்டமும் இருக்கிறது.


 அந்த ஜனத்திரளில் இருதுந்து விலகிய ஒரு மனிதர் இந்த இயக்கத்தின் எதிர்திசையில் சென்றபடியே ஜீவராசிகளை தன்னுயிர் போல நினைத்து கொண்டாடியபடியே அதை பெரிய விஷயமில்லை என்று இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது பெயர் தெரியாது. இருப்பிடத்திற்கு எப்போது வருவார் என்றும் தெரியாது. தன்னைப் பற்றி எதையும் அவர் யாரிடமும் பிரஸ்தாபிப்பதுமில்லை.படிப்பும் அன்பும் மட்டுமே அவரது இரண்டு ஆதர்ச சக்திகள்.


மனிதர்களிடம் அரிதாகிப் போய்விட்ட சகஉயிர்களின் மீதான அக்கறையை இந்த ஒரு மனிதர் பூரணமாக வெளிப்படுத்துகிறார். யாரையும் தேடி எதையும் சொல்லாத அந்த மனிதர் என்னை பார்த்த மாத்திரத்தில் பிடித்து போய் தன்னுடன் அழைத்து சுற்றியது  மறக்க முடியாததாக இருந்தது.


நீண்ட பல வருசங்களுக்கு பிறகு அசலான ஒரு மனிதரை சந்தித்த சந்தோஷம் மனதில் நிரம்பியது.செயல்கள் தான் மனிதர்களை உன்னதமாக்குகிறது என்பதை மறுபடியும் அன்று உணர்ந்தேன்.


***


 


 

0Shares
0